57) அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை
57) அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகத்திடம் இல்லை
அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா? என்று கேட்பீராக!
அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் மன்னிக்கிறான். நாடியோரைத் தண்டிக்கிறான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்.
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.