54) பட்டிமன்றம் நடத்தலாமா?
கேள்வி: எமது நாட்டில் அரபு மத்ரஸாக்களுக்கு மத்தியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒரு தனியார் நிறுவனத்தின் அனுசரனை யுடன் வாரம் தோறும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. ஹாரூன் ரஷீதுடைய காலத்திலும் இது போன்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது என்று சொல்லிக் கொண்டு பல தலைப்புக்களிலும் பட்டி மன்றம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவின் பட்டிமன்றம் போலவே இதன் முறை அமைந்திருக்கின்றது. இதற்கு நடுவராக இந்தியர் ஒருவரே இருக்கின்றார். இந்தியத் தமிழ் பட்டி மன்றம் போன்று இது அமைந்திருப்பதும், இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இது இருந்திருக்கின்றது, பின்னர் தான் இது விடுபட்டுப் போயுள்ளது என்று சொல்வதெல்லாம் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்ற மாக உள்ளது போன்று தோன்றுகிறது. குர்ஆன், ஹதீஸை வைத்து இருசாரரும் ஒட்டியும் வெட்டியும் பேசுவதைக் கேட்கும் போது எனக்கு அசிங்கமாகத் தோன்றுகிறது.
இதையொரு தவறான போக்காகக் காணும் எனக்கு அதைப்பற்றி போதுமான விளக்கம் என்னிடத்தில் இல்லை. எனவே தங்களிடத்தில் இதற்குரிய விளக்கத்தை வேண்டுகிறேன்.
பதில்: பட்டிமன்றங்களை இரண்டு வகைகளாக நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.
ஒன்று மார்க்கம் சம்பந்தப்பட்ட கொள்கை, கோட்பாடு, சட்டதிட்டங்கள் பற்றியவை. இவற்றைப் பட்டிமன்றமாக ஆக்கக் கூடாது.
இஸ்லாம் வலியுறுத்தும் இரண்டு விஷயங்களை எடுத்துக் கொண்டு இரண்டில் எது முக்கியம் என்று வாதிடுவது, இது தான் முக்கியம் என்று வயுறுத்துவதற்காக இன்னொன்றை குறைத்துப் பேசுவது, பொய் என்று தெரிந்து கொண்டே பொய்க்காக வாதிடுவது போன்றவை மாபெரும் குற்றமாகும். ஹாரூன் ரஷீதே இதை நடத்தியிருந்தாலும் மார்க்கத்தில் விளையாட எவருக்கும் அதிகாரம் இல்லை.
விதியைக் குறித்து வருகின்ற மாறுபட்ட இருவகை யான வசனங்களை எடுத்துக் கொண்டு எதிரெதிராக நபித்தோழர்கள் வாதிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஒன்றுடன் ஒன்றை மோதவிட்டதால் தான் முந்தைய சமுதாயத்தினர் அழிக்கப் பட்டனர் என்று கூறினார்கள். (அஹ்மத்: 6381) இதன் மூலம் இத்தகைய பட்டிமன்றம் பற்றி தெளிவான தீர்ப்பைத் தந்து விட்டனர்.
மற்றொன்று சமுதாயப் பிரச்சனைகள்! இவற்றில் இரண்டு பார்வைகள் இருக்கலாம். இது போன்ற விவகாரங்களைப் பட்டிமன்றமாக்கினால் பிரச்சனையின் ஆழம் புரியலாம்.
நி வரதட்சணைக்கு ஆண்கள் அதிகம் காரணமா? பெண்களா?
நி சமுதாயச் சீர்கேட்டுக்குக் காரணம் மத குருக்களா? தலைவர்களா? போன்ற தலைப்புகளில் வாதிடும் போது குர்ஆன் ஹதீஸ்களில் மோதல் ஏற்படுத்தும் நிலை ஏற்படாது. ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் எப்படிக் காரணமாக இருக்கிறார்கள் என்பதை ஒருசாரார் ஆய்வு செய்வர்.
பெண்கள் எப்படிக் காரணமாக இருக்கிறார்கள் என்பதை மறுசாரார் ஆய்வு செய்வார்கள்.
இதனால் அந்தத்தீமை நன்கு மனதில் பதியும்.
உங்கள் நாட்டு பட்டிமன்றங்கள் மார்க்கத்தில் தலை யிடாமல் சமுதாயப் பிரச்சனைகளை அலசுவதாக இருந்தால் அதைத் தடுக்க எந்த ஆதாரமும் நமக்குத் தெரியவில்லை.