55) சமூகப் பணி
சமூகப் பணி
நடுவழியில் கிடந்து மக்களுக்கு இடையூறு அளித்து வந்த மரமொன்றை ஒரு மனிதர் வெட்டி (அப்புறப்படுத்தி)யதற்காக அவர் சொர்க்கத்தில் நடமாடுவதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
விளக்கம்:
மார்க்கப் பணிகளில் ஈடுபடுவதோடு, பொதுநல விஷயங்களிலும் மக்கள் ஈடுபட வேண்டும். இதுவும் மறுமையில் நன்மையை ஈட்டித் தரும் காரியம் தான் என்பதை நபி (ஸல்) அவர்கள் இந்த நபிமொழியில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். பொதுமக்களுக்கு இடையூறு தரும் வண்ணம் கிடந்த மரத்தை வெட்டி மக்களுக்கு நல்ல பாதையை ஏற்படுத்தித் தந்ததால் ஒருவர் சொர்க்கத்திற்கே சென்றுள்ளார் என்றால் இது போன்ற செயல் எவ்வளவு நன்மையை ஈட்டித் தரும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
பொதுமக்களுக்குப் பயன் தரும் வகையில், தெரு விளக்குகள் அமைத்துக் கொடுத்தல், வீதிகளைத் தூய்மைப்படுத்துதல், சாக்கடைகளைச் சரி செய்தல் என்ற சமூகப் பணிகளைச் செய்து இந்த மனிதர் போல் நாமும் சொர்க்கம் செல்ல முயற்சிக்கலாம்.