51) பொறுமையாளன்
பொறுமையாளன்
மன வேதனைக்குள்ளாக்கும் செய்தியைக் கேட்டும் (உடனே தண்டித்து விடாமல்) மிகவும் பொறுமை காப்பவர் அல்லாஹ்வை விட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக் கொண்டிருக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி).
விளக்கம்:
இறைவனால் மன்னிக்க முடியாத பெரும் குற்றமாகக் கருதப்படுவது. அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுவதாகும். அவன் தனித்தவன், அவனுக்கு மனைவியில்லை, குழந்தை இல்லை, அவன் யாராலும் பெறப்படவும் இல்லை. இவ்வாறு இறை நெறிகள் இருக்க அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுவது அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் சொல்லாகும். ஆனாலும் அல்லாஹ் இவ்வாறு சொல்பவர்களை இவ்வுலகில் உடன் தண்டிக்காமல் திருந்துவதற்குக் கால அவகாசத்தைத் தருகின்றான் மனிதன் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தாலும் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அதை அல்லாஹ் மன்னிக்கத் தயாராக இருக்கிறான்.
இறைவனுக்குக் குழந்தை இருப்பதாக ஒருவன் கூறினாலும் அவன் திருந்தி மன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் மன்னிக்கிறான். மேலும் இவ்வுலகில் இவ்வளவு பெரிய பாவ காரியத்தில் ஈடுபட்டவர்களுக்குக் கூட உடல் ஆரோக்கியத்தையும் செல்வத்தையும் கொடுத்து பெருந்தன்மை உள்ளவனாகவும் பொறுமையாளனாகவும் அல்லாஹ் திகழ்கின்றான்.