5) விண்ணகத்திலும் உயிரினங்கள்

நூல்கள்: திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்-2

விண்ணகத்திலும் உயிரினங்கள்

இந்த அத்தியாயத்தில் நாம் இதுவரை குறிப்பிட்ட விபரங்களைப் பார்க்கும்போது பேரண்டத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் உயிரினங்கள் வாழ்வதில்லையா எனும் கேள்வி எழுவது இயல்பு. இந்த கேள்விக்கும் அற்புதத் திருமறை அழகாக பதிலளிக்கிறது. அந்த பதில் வருமாறு :

42:29 وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَآبَّةٍ‌ ؕ وَهُوَ عَلٰى جَمْعِهِمْ اِذَا يَشَآءُ قَدِيْرٌ‏

வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதும் அவ்விரண்டிலும் உயிரினங்களை பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அவன் விரும்பும்போது அவைகளைத் திரட்டுவதற்கு ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன்: 42:29)

மேற்கண்ட திருமறை வசனத்தின் வாயிலாக பூமியில் மட்டுமின்றி பேரண்டத்தில் பற்பல இடங்களிலும் அல்லாஹ் உயிரினங்களைப் பரவச் செய்துள்ளான் என்பதை ஐயத்திற்கிடமின்றி திருக்குர்ஆன் கூறிக்கொண்டிருப்பதைப் பார்க்கி றோம். இது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளே என நிரூபிப்பதற்காக காத்திருக்கும் எதிர்கால அறிவியல் கண்டு பிடிப்பைக் சார்ந்ததாகும்.

துருவப் பிரதேச ஆய்வின்போது செவ்வாயிலிருந்து பூமியில் விழுந்து பனியில் புதைந்து கிடந்த பாசிலைப் பற்றிய செய்திகள் உண்மையாக இருப்பின் மேலே குறிப்பிட்ட திருமறை வசனத்தை (அல்குர்ஆன்: 42:29) முதலாவதாக நிரூபித்த பெருமை அந்த பாசிலையும், அதற்காக உழைத்த விஞ்ஞானிகளையும் (அவர்கள் அதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்) சாரும்.

இந்த பாசிலைப் பற்றிய ஆய்வு முன்னொரு காலத்தில் செவ்வாயில் சூட்சும உயிரினங்கள்(Micro-Organism) வாழ்ந்தன என்பதையே கூறுகிறது. ஆனால் எதிர்காலத்தில் பேரண்டத்தின் தொலைதூர பிரதேசங்களில் முன்னேறிய உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப் பட்டாலும் பூமி தொடர்பாக நாம் ஆய்வு செய்த வசனங்களுக்கு அது எதிரானதல்ல.

ஏனெனில் புவிவாழ் மனிதனுக்கு அவனுடைய உயிரியல் மற்றும் இயற்பியல் குணங்களுக்கு ஏற்ற வசிப்பிடம் பேரண்டத்தில் வேறு எதுவும் இல்லை என்பதே நாம் கண்ட விளக்கமாகும். எனவே புவிவாழ் மனிதனிலிருந்து வேறுபட்ட முன்னேறிய உயிரினங் கள் பேரண்டத்தில் வேறு எங்கேனும் வாழ்வது நாம் எடுத்துக் கொண்ட விளக்கத்திற்கு எதிரானதல்ல. மேலும் அவ்வாறான நிகழ்ச்சிகள் திருக்குர்ஆனின் அறிவியலை (42:29) வலுவாக நிரூபிக்கும் சான்றாகவே அமையும்.

சான்றாக நாம் `கரிமம் அடிப்படையாகக் கொண்ட உயிரினங்களாக (Cabom Based Organism)படைக்கப்பட் டுள்ளோம். இதற்கு பதிலாக பேரண்டத்தின் மற்றொரு கோளில் சிலிக்கன்(Silicon) அல்லது கந்தகம் (Salphur) அல்லது அவை போன்ற வேறு ஏதேனும் தனிமத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கோள்களில் புவிவாழ் மனிதர்களாகிய நாம் ஒருபோதும் வாழ முடியாது. நமக்குரிய வசிப்பிடம் இந்த பேரண்டத்தில் இந்த பூமி மட்டுமே ஆகும் என்பதே பூமி தொடர்பான வசனங்களுக்கு நாம் வந்து சேர்ந்த விளக்கமே அன்றி பேரண்டத்தில் வேறெங்கும் உயிரினங்கள் இல்லை என்பதில்லை.

சுருங்கக்கூறின் ஏனைய கோள்கள் மற்றும் துணைக் கோள்கள் எதிலும் செய்யப்படாத மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் பூமியில் மட்டுமே செய்யப்பட்டுள்ளது எனப் பொருளுணர்ந்த திருக்குர்ஆன் வசனங்களின் நிரூபனங் களே மேற்கண்ட அறிவியல் உண்மைகளாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறை ஞானத்தின் வெளிப்பாடே என்பதை ஐயமின்றித் தெரிந்து கொள்ளலாம்.

தப்பமுடியாத வானிலிருந்து தப்பிச் சென்ற ஈதர்

பேரண்டத்தில் இருக்கக்கூடிய எண்ணிறைந்த கோள் களுக்கிடையே நாம் வசித்துக்கொண்டிருக்கும் பூகோளம் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற விதத்தில் தனிச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் தகவலை திருக்குர்ஆனில் நாம் பார்த்தோம். நவீன வானியல் கண்டுபிடிப்புகள் அதை நிரூபித்துக்கொண்டு வருவதையும் நாம் பார்த்தோம். இதைத் தொடர்ந்து பூமியைச் சூழ்ந்துள்ள வானத்தைப் பற்றியும் திருக்குர்ஆன் மிக முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. அது வருமாறு :

40:64 اَللّٰهُ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ قَرَارًا وَّالسَّمَآءَ بِنَآءً

“அல்லாஹ்வே உங்களுக்கு இந்த பூமியை வசிப்பிடமாகவும், வானத்தை கூரையாகவும் அமைத்தான்.

(அல்குர்ஆன்: 40:64)

இந்த வசனத்தில் பூமியைச் சூழ்ந்திருக்கும் ஆகாயம் பூமிக்கு ஒரு கூரையாக அமைக்கப்பட்டுள்ளது எனும் செய்தியைத் திருக்குர்ஆன் கூறுகிறது. திருக்குர்ஆனுடைய இந்தக் கூற்று அண்மைகாலம் வரையிலுமே விமர்சிக்கப்பட்டு வந்துள்ள செய்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகாயம் என்பது என்ன பொருள்?

பூமிக்கு மேலே நீலநிற பட்டு போன்று வளைந்து காணப்படும் விண்ணின் தோற்றம் ஒரு திடப்பொருள் என்றே பண்டைகால மக்கள் எண்ணிக்கொண்டனர். அந்த திடப்பொருளே வானம் என்றும் அதன்மீது ஒளிரும் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் எல்லாம் அவர்களின் தெய்வங்களே என்ற நம்பிக்கையும் அவர்களில் பலரிடம் இருந்து வந்தது. காலம் செல்லச்செல்ல மக்களின் அறிவியல் பார்வை படிப்படியாக வளரத் துவங்கி அரிடாட்டில்,டாலமி, கோபர் நிக்க போன்றவர்களையெல்லாம் தாண்டி நியூட்டன் யுகத்தை அடைந்தபோது ஆகாயத்தைப் பற்றிய பழைய தப்பெண்ணம் மங்கிப் போய் புதிய எண்ணம் தோன்றத் துவங்கியது.

ஆகாயம் என்பது ஒன்றுமே இல்லை. விண்ணகப் பொருட்களை எதுவும் தாங்கி நிறுத்தவில்லை. அவை சூன்யத்தில், ஈர்ப்பு விசையில் மிதக்கின்றன. விண்ணகப் பொருட்களுக்கு இடையிலாயினும் அதற்கு அப்பாலாயினும் எல்லையற்ற சூன்ய பெருவெளியே நிலவுவதாக ஆகாயத் தைப் பற்றிய புதிய எண்ணம் தலைதூக்க ஆரம்பித்தது.

ஆகாயத்தைப் பற்றிய இப்புதிய சிந்தனையும் திருக் குர்ஆனுக்கு எதிரானது ஆகும். ஆகாயம் எனும் பொருள் உண்மையிலேயே படைக்கப்பட்டிருப்பதாக அதன் ஏராளமான வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பொருள் படைக்கப்பட்டதாக இருந்தால் அதற்கு ஒரு வடிவமும், ஒரு பரிமாணாமும் இருக்க வேண்டும். ஆனால் ஒருவர் ஆகாயம் என்பது எல்லையற்ற சூன்யப்பெருவெளி எனக் கருதினால் அதற்கு எவ்வித வடிவமோ அல்லது பரிமாணமோ (Shape or Dimension) இருக்க முடியாது. நியூட்டனுக்கு பிறகு தோன்றிய வானத்தைப் பற்றிய இந்தப் பொதுவான கருத்து திருக்குர்ஆனுக்கு எதிரானது என்பதை அறியலாம். திருக்குர்ஆன் மற்றொரு வசனத்தில் இவ்வாறு கூறுகிறது :

55:33 يٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا‌ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ‌ۚ

“மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால், கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்

(அல்குர்ஆன்: 55:33)

மேற்கண்ட வசனம் வானம், பூமி ஆகியவைகளின் எல்லைகளைக் குறித்து மிகத் தெளிவாகப் பேசுகிறது. எனவே திருக்குர்ஆனின் அறிவியலைப் பொருத்தவரை அது ஏழாம் நூற்றாண்டில் வழங்கப்பட்டதாக இருந்த போதிலும், வானம் என்பது எல்லையில்லாப் பெருவெளியில்லை. அதற்கு மாறாக வானத்திற்கும் எல்லை உண்டு என்பதே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு. இதிலிருந்து நியூட்ட னுக்குப் பிறகு தோன்றிய வானம் பற்றிய பொதுவான கருத்து திருக்குர்ஆனை ஏற்றுக் கொண்டவர்களால் ஒப்புக்கொள்ள இயலாததாகும் என்பதை அறியலாம். இந்தப் பின்னணியில் திருமறையின் இந்த அறிவியல் இறை மறுப்பாளர்களால் கேலி செய்யப்பட்டே வந்தது.

வானம் எனும் ஈதர்!

வானம் என்ற சொல் பூமிக்கு மேல் குடை பிடித்தார் போன்று தென்படும் வெளிர்நீல முகட்டை குறிப்பதாகவே பண்டைகாலம் தொட்டு மக்கள் எண்ணி வந்தனர். வானம் என்ற சொல்லின் சரியான பொருள் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. பழங்கால நிலை அப்படியென்றால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரையிலும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளால் கூட வானம் என்பதன் சரியான கருத்தை தீர்மானிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர் எனில், இந்த வானம் பற்றிய `மன உரு (Concept)எவ்வளவு சிக்கலானது என்பதை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

வானம் என்றால் என்ன என்பதைப் பற்றி இப்போதும் கூட நம்மால் பரிபூரணமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்படி ஒன்று நிச்சயமாக இருக்கத்தான் செய்கிறது என்பதையும் அதன் கட்டுமானப் பொருட்களில் சிலவற்றையும் இன்று நமக்குத் தெரியும். அந்த அறிவின் தொடக்கம் நியூட்டனுடைய பணியில் இருந்த போதிலும், அதை அவர்காலத்திலும் தொடர்ந்துள்ள ஒன்றரை நூற்றாண்டு வரையிலும் யாராலும் புரிந்துகொள்ள இயலவில்லை. எனவே ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்த அறிவியலாளர்களின் கருத்தும்கூட வானம் என்பது சூன்யம் என்பதாகவே இருந்து வந்தது.

வானம் பற்றிய கருத்தோட்டம் ஒருபக்கம் இவ்வாறு போய்க்கொண்டிருந்தபோது `ஒளியின் ஒரு குறிப்பிட்ட இயற்பியல் பண்பு அறிவியலார்களைப் புதிர் போடச் செய்து கொண்டிருந்தது. பூமிக்கு மேல் காற்று மண்டலம் வெறும் 500 கிலோமீட்டருக்குட்பட்டதே என்றும் அதற்கப்பால் காற்றில்லாத வெறும் வானமே என்பதும் தெரிந்ததே. எனவே வானம் என்பது சுத்த சூன்யமாக (perfect vacuum) இருந்தால் சூரியனிலிருந்தும் அதற்கும் பல்லாயிரக் கணக்கான ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்களிலிருந்தும் அவைகளின் ஒளி பூமிக்கு வருவது எவ்வாறு? ஒளி பயணிப்பதற்கு ஊடகம் எதுவும் இல்லை யென்றால் ஒளியால் எப்படி பயணம் செய்ய முடிகிறது?

இந்தக் கோள்வி ஒருபக்கம் தொல்லையைத் தந்து கொண்டிருந்தபோதே மற்றொரு கேள்வியும் அதில் கூட்டு சேர்ந்து கொண்டது. விண்ணகப் பொருட்களெல்லாம் ஓயாமல் ஓட்டம் நடத்துவதாக நியூட்டனுக்குப் பின்பு கண்டறிந்த காரணத்தால் ஒளியின் வேகத்தை எவ்வாறு நிர்ணயிப்பது? என்பதே அந்தக் கேள்வியாக இருந்தது.

இந்த நிலையில் ஹாலந்து (Holland) தேசத்தின் புகழ் பெற்ற வானியல் மற்றும் கணித மேதையுமான `கிரிஸ்டியன் ஹைஜன், Christian Hygens-இவரே பிற்காலத்தில் ஒளியின் அலைவுக் கோட்பாட்டின் (Wave Theory of Light) தந்தை எனச் சிறப்பிக்கப்பட்டார். என்பவர் மேற்கண்ட சிக்கல்களைச் சமாளிப்பதற்கு வானமெங்கும் நிறைந்திருக் கும் `ஈதர் (Ether)எனும் விசித்திரமான பொருளை அறிமுகப் படுத்தினார். இதைப் பற்றி ஹாக்கிங் தனது நூலில் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

“… ஆனால் நியூட்டனுடைய கோட்பாடு சார்பற்ற ஓய்வு (Absolute Rest) எனும் கருத்தை விரட்டியடித்தது. இதன் காரணமாக ஒளியானது ஒரு மாறாத நிலையான வேகத்தில் போவதாகக் கருதினால் அந்த வேகம் எதனைச் சார்ந்து அளக்கப்பட வேண்டும் என்பதும் கூறப்பட வேண்டும். ஆகவே இதற்காக எல்லா இடத்திலும் காலியாக உள்ள வெறும் வானத்தில் கூட (Empty Space)`ஈதர் எனும் ஒரு பொருள் இருப்பதாகக் கருதப்பட்டது. ஒலி அலைகள் காற்றில் செல்வதைப்போன்று ஒளிஅலைகள் ஈதரில் செல்லும் என்பதால் அவைகளின் வேகம் ஈதரைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.

(பார்க்க : பக்கம் 20)

வேகங்களின் சார்பியல் பண்பு

மேல் குறிப்பிடப்பட்ட ஹாக்கிங் அவர்களின் எடுத்துக் காட்டில் கூறப்பட்டிருக்கும் “வேகம் எதனைச் சார்ந்து அளக்கப்பட வேண்டும் எனும் சொற்றொடர்கள் அறிவியல் புத்தகங்களை வாசிக்கும் வழக்கமில்லாதவர்களுக்கு விளங்கிக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். இதை சிறு உதாரணத்துடன் விளக்குவோம்.

ஒரு தொடர் வண்டி (Train) நிமிடத்திற்கு 700 மீட்டர் வேகத்தில் செல்வதாகக்கொள்வோம். அதன் மீது ஒருவர் நிதானமாக நிமிடத்திற்கு 10 மீட்டர் வேகத்தில் நடப்பதாகக் கொள்வோம். இந்த நபர் என்ன வேகத்தில் நடக்கிறார் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்? உங்களால் வெறுமனே எந்த பதிலையும் கூற முடியாது. ஏனெனில் அவருக்கு இப்போது இருவிதமான வேகங்கள் உண்டு. ஒன்று பூமியைச் சார்ந்து அவருடைய வேகம் நிமிடத்திற்கு 710 மீட்டர்களாகவும் தொடர் வண்டியைச் சார்ந்து அவருடைய வேகம் நிமிடத்திற்கு 10 மீட்டராகவும் இருக்கிறது.

எனவே இரயில் வண்டியின் மீது நடப்பவரின் வேகத்தைப் பற்றி வினவப்பட்டால் எதனைச் சார்ந்து என்பதையும் கூறப்பட வேண்டும். அவ்வாறன்றி வேகத்தைக் கூற முடியாது. இதைப்போன்று ஒளியானது, அதை உமிழும் பொருட்களும் அதைப் பெறும் பொருட்களும் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காரணத்தால் அதன் வேகத்தைக் கூறும் போது `எதனைச் சார்ந்து என்பதும் கூறப்பட வேண்டும் என்பதே மேற்கண்ட ஹாக்கிங் அவர்களுடைய மேற்கோளின் விளக்கமாகும்.

ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் என்று கூறும்போது அது ஒளியை உமிழும் அல்லது பெறும் பொருட்களைக் குறித்தன்றி அது பயணம் செய்யும் ஊடக மாம்(Medium) ஈதரைச் சார்ந்தே அந்த வேகத்தில் செல்கிறது என்பதே அதன் பொருளாகும். சுருங்கக்கூறின் ஆகாயம் என்பது அர்த்தமற்ற வார்த்தையோ அல்லது சுத்த சூன்யமோ இல்லை. மாறாக அது ஈதர் எனும் மூலப்பொருளால் உருவாக்கப்பட்டிருக்கும் நிஜப் பொருளாகும் என முடிவு செய்யப்பட்டது.

ஈதரை மறுக்கும் சத்தியத் திருமறை

ஆகாயம் என்பது உண்மையிலேயே ஒரு நிஜப்பொரு ளாகும் எனக் கூறிய திருக்குர்னின் அறிவியலை ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுவரை கற்றவர்களும் மறுத்து வந்த நிலையில் அவர்களின் மறுப்புக்கு ஈதரின் வருகை அக்கால கட்டத்தில் ஒரு பலத்த அடியாக அமைந்தது. ஆயினும் பொய்யின் நிழலைக்கூட தன்னிடம் அண்டவிடாத தூய குர்ஆன், தன்னை நிரூபிக்க வந்த ஈதரைத் தன்னை அண்ட விடாமல் விரட்டி அடித்தது. அந்த அரிய காட்சி இதோ:

51:47 وَالسَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ

வானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயமாக நாம் அதை விரிவாக்கம் செய்பவராவோம்.

(அல்குர்ஆன்: 51:47)

இந்த வசனம் மிகத் தெளிவாக வானம் என்பது ஆற்றலைக்கொண்டே படைக்கப்பட்டது என வெட்டொன்று துண்டிரண்டாக கூறிவிட்டது. இதன் வாயிலாக வானம் என்பது ஒரு அர்த்தமற்ற வெற்று வார்த்தையும் இல்லை. அது படைக்கப்பட்டிருக்கும் மூலப் பொருள்(Raw Material) ஈதரும் இல்லை. மாறாக வானம் ஆற்றல் எனும் மூலப்பொருளால் படைக்கப்பட்டிருக்கும் நிஜப்பொருள் ஆகும் என திருக் குர்ஆன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது!

வானத்தின் இயற்பியல் குணங்களை நமது விஞ்ஞானி கள் இதுவரை முழுமையாகப் புரிந்து கொள்ளாத போதிலும், அப்படி ஒன்று உண்டு என்பதும், அது ஆற்றலின் வடிவமா கவே இருக்கிறது என்பதும், மிக ஆழமானதும், ஐன்டீனின் வருகைக்குப் பிறகு மட்டுமே தெரிய வந்ததுமாகிய அரிய அறிவியலாகும். ஆனால் ஆகாயம் என்பது வெளிர் நீல வண்ணத்தில் பூமிக்கு மேல் குடை விரித்தாற்போன்று காணப்படும் ஒரு திடமான கவசமாகும் என பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருந்தவர்களின் தொன்மையான ஏழாம் நூற்றாண்டின் மத்தியில் தன் பெயரைக்கூட தம் தாய்மொழி யிலும் எழுதத் தெரியாத ஒருவரின் வாயிலிருந்து (அறிவி லிருந்தன்று) ஆகாயம் என்பது ஒரு திடப் பொருளே இல்லை. அது ஆற்றலின் வடிவமாகும் எனும் அரிய அறிவியல் உண்மையை வெளிப்படச் செய்த வியக்கத்தகு செய்தியையே மேற்கண்ட வசனத்தில் நம் கண்ணெதிரே நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

இதுவரை நாம் இந்த அத்தியாயத்தில் மூன்று திருக் குர்ஆன் வசனங்களை ஆய்விற்கெடுத்துக் கொண்டோம். அவற்றுள் (40:64, 55:33, 51:47) குடிகொண்டிருக்கும் அறிவியல் உண்மைகள் மிக அரிதானவைகளும், ஆழமானவைகளுமாகும். அவற்றுள் முக்கியமானவை வருமாறு :

  1. ஆகாயம் என்பது வெற்று வார்த்தையன்றி அப்படி ஒரு பொருள் உண்மையிலேயே அல்லாஹ்வால் படைக்கப் பட்டுள்ளது. (இந்தத் தகவலை திருக்குர்ஆன் பற்பல இடங்களில் இவ்வாறு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறுகிறது:
مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ

“வானங்களையும், பூமியையும் அவற்றுக்கு இடைப் பட்டவற்றையும் உண்மையைக் கொண்டன்றி அல்லாஹ் படைக்கவில்லை….

(அல்குர்ஆன்: 30:8)

  1. அந்த ஆகாயம் நமக்குக் கூரையாக இருக்கிறது.
  2. அந்த ஆகாயம் ஒரு திடப் பொருள் இல்லை.
  3. அந்த ஆகாயம் ஈதர் இல்லை.
  4. அது எல்லையற்ற பெருவெளியில்லை. அதற்கு எல்லை உண்டு.
  5. அந்த எல்லை விரிவடைகிறது.
  6. அதன் எல்லையைத் தாண்டுவதற்கு பெரும் ஆற்றல் தேவை. அந்த ஆற்றல் இல்லாமல் நம்மால் அதன் எல்லை யைத் தாண்ட இயலாது.
  7. அந்த ஆற்றலைப் பெற நம்மால் இயலுமானால் (இதில் ஒரு சவாலின் தொனி கலந்திருப்பதை கவனத்தில் கொள்க!) நாம் இந்த வான் உலகையும் தாண்டி செல்லலாம்.

இங்கு குறிப்பிடப்பட்ட அறிவியல் உண்மைகளில் வரிசை எண் இரண்டில் குறிப்பிட்ட செய்தி 18ம் நூற்றாண் டுக்குப் பின்னரும் ஐன்டீனுக்கு முன்னரும் கண்டுபிடிக்கப் பட்ட அறிவியல் தகவலாகும். மற்றவை யாவும் ஐன்டீ னுடைய காலத்திலும் அதற்குப் பின்னரும் கண்டுபிடிக்கப் பட்டவையாகும். ஆனால் உலகில் தோன்றிய அறிவியல் மேதைகளில் மிகவும் மதி நுட்பம் வாய்ந்த அதே ஐன்டீன் அவர்களே அறிவியல் வளர்ச்சி குன்றிய ஏழாம் நூற்றாண்டில் தோன்றி இருந்தால் திருக்குர்ஆன் கூறியிருக்கும் மேற்கண்ட அறிவியல் உண்மைகளில் எந்த ஒன்றையாவது அவரால் கண்டுபிடித்திருக்க முடியுமா என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்த்து அதன் பிறகு திருக்குர்ஆனில் காணப்படும் பல்வேறு அறிவுகளின் தோற்றுவாய் (Source) எதுவாக இருக்கும் என மதிப்பிடுவீர்களாக.

ஈதரைத் தேடும் விஞ்ஞானிகள்

அறிவியலாளர் ஹைஜன் அவர்கள் வானத்தின் கட்டு மானப் பொருளாக ஈதரை அறிமுகப்படுத்திய விபரத்தையும் திருக்குர்ஆன் அதை பற்பல நூற்றண்டுகளுக்கு முன்னி ருந்தே மறுத்துக்கொண்டிருக்கும் செய்தியையும் நாம் கண்டோம். இந்த நிலையில் அவ்விரு கருத்துகளைப் பற்றிய தற்போதைய அறிவியல் உலகின் நிலை என்ன எனும் வினா எழுகிறது. ஈதரைப் பற்றிய கருத்துரு குறுகிய ஆயுளி லேயே மடிந்து விட்டது என்பதே அதற்குரிய பதிலாகும். `ஒலி மற்றும் `ஒளி என்பவற்றிற்கிடையே சில இயற்பியல் குணங் களில் ஒருசில ஒற்றுமைகள் உள்ளதால் ஒலியானது காற்றில் எவ்வாறு பரவுகிறதோ அதைப்போன்று ஒளியானது ஈதரில் பரவுகிறது என்றெண்ணிக்கொண்டிருந்த அறிவியலாளர் களை வியப்பிற்குள்ளாகும் மற்றொரு நிகழ்ச்சி அரங்கேறியது.

இரயில் வண்டி, இரயில் நிலையத்தின் நடைதளத்தின் (Railway Platform) வழியாகச் செல்லும்போது குறைந்த வேகத்தில் ஓடிய போதும் அதனால் இரயில் வண்டியைச் சூழ்ந்துள்ள காற்று மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவது நடைதளத்தில் உள்ளவர்களால் உணர முடிகிறது. வினாடிக்கு 10 மீட்டரை விடக் குறைகுறைவான வேகத்தில் இரயில் வண்டி ஓடிய போதும் காற்று மண்டலத்தில் பாதிப்பை உண்டாக்கும்போது வினாடிக்கு30,000 மீட்டர் வேகத்தில் ஓடும் பூமி ஈதரில் பாதிப்பை உருவாக்க வேண்டும் என நியாய மாகக் கருதப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட நுட்பமான சோதனைகளின்போது சோதனைக் கருவிகளில் நகர்வினால் தோன்றிய பாதிப்பைத் தவிர நகர்வின் பொருட்டு ஈதர் எனும் கற்பனை பொருளில் எந்த பாதிப்பும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.

இச்சோதனைகள் மைக்கல்சன் மற்றும் மோர்லி (Michelson and Morley) என்பவர்களால் முதலாவதாகத் தொடங்கப்பட்டது. பிறகு அதுவரை பிரபலமாகாதிருந்த ஐன்டீன் அவர்களும் இது தொடர்பான ஆய்வில் இறங்கினார். இதைப் பற்றி ஹாக்கிங் அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகிறார்.

“மைக்கல்சன் மற்றும் மோர்லி என்பவர்களின் சோதனை களின்போது ஈதரில் நகரும் பொருட்கள் சுருங்குதல் மற்றும் கடிகாரத்தில் நேரம் தாமதமாகுதல் போன்றவைகளை விளக்குவதற்கு 1887க்கும் 1905க்கும் இடைப்பட்ட காலத் தில் ஹாலந்து நாட்டின் ஹென்ரிக் லாரன்ஸ் (Hendrik Lorents) அவர்களின் மிகவும் கவனத்தைக் கவர்ந்த விளக்கம் உட்பட பற்பல முயற்சிகள் செய்யப்பட்டன. இருப்பினும் அதுவரை அறியப்படாதவராக இருந்த விச்சர்லாந்து பேடன்ட் அலுவலக (Swiss Patent Office) எழுத்தாளராக இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1905ல் தன்னுடைய புகழ்பெற்ற தாளின் வாயிலாக “ஒருவர் காலம் சார்பற்றது எனும் கருத்தைக் கைவிடத் தயாராக இருந்தால் ஈதரைப் பற்றிய கருத்தைக் கொண்டிருப்பது முற்றிலும் தேவையற்றதாகும் எனச் சுட்டிக் காட்டினார்.

(பார்க்க : பக்கம் 20)

ஈதரின் மீது நடந்த குண்டுவெடிப்பு

சார்பு நிலையற்ற காலம் (Absolute Time) என்பது எவ்வாறு அறிவியல் அறியாமையாக இருந்ததோ அவ்வாறே ஈதரைப் பற்றிய அனுமானமும் அறிவியல் அறியாமையாகும் என்பது ஐன்டீன் அவர்களின் கூற்றாகும். காலம் சார்பானது எனும் உண்மையை விளங்கிக் கொண்டால் அந்த அறிவியல் அறிவு ஒளியைக் கடத்துவதற்கு ஒரு யாந்திரீக ஊடகம்(Mechanical Medium) தேவையில்லை என்பதையும் விளங்கச் செய்யும் என்பது அவரது கூற்றின் பொருளாகும். ஈதரைப் போன்று ஒளியைக் கடத்துவதற்கு ஒரு யாந்திரீக ஊடகம் தேவையில்லை எனில் வேறு எந்த இடத்தில் அது பரவுகிறது எனும் கேள்வி எழுவது இயல்பே. ஐன்டீன் அவர்கள் இந்தப் புதிரை கீழ்கண்டவாறு விடுவித்தார்.

ஒளி என்பது ஆற்றலின் வடிவமாகும். ஆற்றல் பொருண்மையைக் கொண்டதாகும். எனவே ஒளி பொருண்மையைக் (Mass) கொண்டதாக இருப்பதால் ஈர்ப் பாற்றலின் விதிகளுக்கு இணங்க பொருண்மை உள்ளவை களை ஈர்ப்பாற்றல் ஈர்க்கவே செய்யும். பேரண்டமெங்கும் ஈர்ப்பாற்றல் உள்ளது. எனவே ஒளியானது வேறொரு ஊடகத் தின் துணை இன்றி பேரண்டமெங்கும் ஈர்ப்பாற்றலின் கவர்ச்சியால் பரவிச் செல்கிறது என ஐன்டீன் விளக்க மளித்தார்.

ஐன்டீன் அவர்களின் இந்த விளக்கத்தை மிகச் சரியான அறிவியல் கண்டுபிடிப்பாக ஏனைய அறிவிய லாளர்கள் விளங்கிக் கொண்டபோது ஈதரின் மூலமான ஒளியின் யாந்திரீக கடத்தல் (Mechanical Transmission of Light) எனும் அனுமானத்தின் மீது ஐன்ஸ்டீன் அவர்கள் நடத்திய ஒரு `குண்டுவெடிப்பு – Bomb Shell – என அறிவியல் உலகம் அவரது தாளைப் புகழ்ந்துரைத்தது.

சுருங்கக்கூறின், திருக்குர்ஆனுடன் முரண்பட்டு நின்ற ஈதர் எனும் அறிவியல் அனுமானம் வழக்கம்போல் தகர்ந்து போய் திருக்குர்ஆன் கூறியவாறு ஆற்றலே (ஈர்ப்பாற்றல்) ஆகாயங்களின் கட்டுமானப் பொருளாக ஏற்றுக் கொள்ளப் பட்டது! பொய்யையும்,மெய்யையும் பிரித்தறிவிக்கும் திருக்குர்ஆனின் இறை ஞானத்தை எவ்வளவு அற்புதமாக ஈதரின் மறைவும், ஈர்ப்பாற்றலின் அரங்கேற்றமும் சான்றளித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தீர் களல்லவா! இதைப் போன்றதும் இதிலிருந்து வேறு பட்டதுமாகிய ஏராளமான சான்றுகளை முன்னிருத்தியே இந்த மாமறை தன்னை இறைவனின் வேதம் என நிரூபனம் செய்கிறது.

தன்னை நிரூபிப்பதற்கு சான்றளிப்பதற்கென்றே வந்தாலும் அது பொய்யாக இருந்தால் அந்த சான்றுகளை ஏற்காமல் விரட்டியடிக்கும் அதிமகத்தான,ஈடுஇணையற்ற அதி அற்புத வேதம்! எந்த திசையிலிருந்து எவ்விதத் தவறு களையும் தன்னை அண்டவிடாமல் வலிமையுடன் தற்காப்பு செய்யப்பட்ட நேர்மையான இறைவேதம்! இந்தச் சான்றுக ளெல்லாம் தங்களிடம் வந்த பின்னரும் அதைப் புறக்கணித் துச் செல்வோரை கடுமையாக எச்சரிக்கும் வேதம்! அதன் எச்சரிக்கைகளில் ஒன்று வருமாறு:

41:40 اِنَّ الَّذِيْنَ يُلْحِدُوْنَ فِىْۤ اٰيٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَا ؕ اَفَمَنْ يُّلْقٰى فِى النَّارِ خَيْرٌ اَمْ مَّنْ يَّاْتِىْۤ اٰمِنًا يَّوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِعْمَلُوْا مَا شِئْتُمْ‌ ۙ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
41:41 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ‌ۚ وَاِنَّهٗ لَـكِتٰبٌ عَزِيْزٌۙ
41:42 لَّا يَاْتِيْهِ الْبَاطِلُ مِنْۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهٖ‌ؕ تَنْزِيْلٌ مِّنْ حَكِيْمٍ حَمِيْدٍ

நமது வசனங்களை வளைப்போரும் இந்த அறிவுரை தங்களிடம் வந்தபோது மறுத்தோரும் நம்மிடமிருந்து மறைந்து விட முடியாது. நரகில் வீசப்படுபவன் சிறந்தவனா? தீர்ப்பு நாளில் அச்சமற்றவனாக வருபவனா? நினைத்ததைச் செய்யுங் கள்! நீங்கள் செய்பவற்றை அவன் பார்ப்பவன். இது மிகைக்கக் கூடிய வேதம்! இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

(அல்குர்ஆன்: 41:40-42)

திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் தகவல்கள் யாவும் பொய்க்கலப்பற்ற தூய்மையான உண்மைகளாகும். பொய் களை அது தன்னிடம் நெருங்க விடுவதில்லை. பசுத்தோல் போர்த்திய புலியாக ஈதர் திருக்குர்ஆனை நெருங்கியபோது ஐன்டீன் பேனா அதைச் சுட்டுவீழ்த்தியதும் (அவர் அதை நோக்கமாகக் கொள்ளவில்லையாயினும்) மேற்கண்ட திருக் குர்ஆன் வசனத்திற்கு சான்றளிப்பதாகும்.