05) ஜின்களின் ஆற்றல்
5) ஜின்களின் ஆற்றல்
ஜின்கள் மனிதர்களை விட பன்மடங்கு ஆற்றல் உள்ள படைப்பாகும். மனிதனால் செய்ய முடியாத பெரும் பெரும் காரியங்களை ஜின்கள் சர்வசாதாரணமாக செய்து முடிக்கவல்லவை.
கண் மூடி திறப்பதற்குள் நெடு தொலைவில் உள்ள இடத்திற்குச் சென்று பொருளை எடுத்து வரக்கூடிய ஆற்றல் ஜின்களுக்கு உண்டு. இந்தப் பணியை சுலைமான் (அலை) அவர்களுக்கு ஜின்கள் செய்து கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
“பிரமுகர்களே! அவர்கள் கட்டுப்பட்டு என்னிடம் வருவதற்கு முன்னால் அவளது சிம்மாசனத்தை என்னிடம் கொண்டு வருபவர் உங்களில் யார்?” என்று (ஸுலைமான்) கேட்டார்.
“உங்கள் இடத்திலிருந்து நீங்கள் எழுவதற்கு முன்னால் அதை உங்களிடம் நான் கொண்டு வருகிறேன். நான் நம்பிக்கைக்குரியவன்; வலிமையுள்ளவன்” என்று இப்ரீத் என்ற ஜின் கூறியது.
கண் மூடித் திறப்பதற்குள் அதை நான் உம்மிடம் கொண்டு வருகிறேன் என்று வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்றது (ஜின்) கூறியது. தன் முன்னே அது வந்திருக்க அவர் கண்டதும் “நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.
பிரம்மாண்டமான கட்டிடங்களையும் சுலைமான் நபிக்குத் தேவையான பொருட்களையும் வியக்கத்க்க விதத்தில் ஜின்கள் செய்துகொடுத்தது. கடலில் மூழ்கி முத்தெடுக்கும் சிரமமான பணியையும் ஜின்கள் செய்தன.
சுலைமான் விரும்பிய போர்க்கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக ஜின்கள் செய்தன.
ஷைத்தான்களில் அவருக்காக முத்துக்குளிப்போரையும், அது தவிர வேறு பணியைச் செய்வோரையும் (வசப்படுத்திக்) கொடுத்தோம். நாம் அவர்களைக் கண்காணிப்போராக இருந்தோம்.
ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். “இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!” (என்று கூறினோம்.)
ஜின்களின் விண்ணுலகப் பயனம்
வாகனங்களின் துனையின்றி விண்ணில் வானவர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் சென்று வருகின்ற ஆற்றலை ஜின்கள் பெற்றிருந்தன.
72:8 وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا
72:9 وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ فَمَنْ يَّسْتَمِعِ الْاٰنَ يَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
விண்கலங்களின் துணையுடன் வானம் பூமியின் எல்லையைக் கடந்து செல்லும் வாய்ப்பை விஞ்ஞான வளர்ச்சியால் இன்று மனிதன் பெற்றுக்கொண்டான். ஆனால் ஜின்களோ விண்கலங்களின் உதவி இல்லாமல் வெறுமனே விண்ணுலக பயனத்தை மேற்கொள்ளும் ஆற்றலை பெற்றிருந்தன.
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.
ஒட்டுக்கேட்ட ஜின்கள்
பின்வரும் வசனங்களும் ஹதீஸ்களும் வானுலக ஆட்சியைப் பற்றிக் கூறுகின்றன. வானவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றிப் பேசும் போது, ஜின்கள் வானத்தின் அருகே சென்று அங்கு பேசுவதை செவியுறக் கூடியவர்களாக இருந்தனர். இறைவனும் இதைத் தடுக்காமல் இருந்தான்.
நபிகள் நாயகம் அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்ட பிறகு இவ்வாறு ஒட்டுக் கேட்பதை விட்டும், வானுலக இரகசியத்தை செவியேற்பதை விட்டும் ஷைத்தான்கள் தடுக்கப்பட்டனர்.
26:210 وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ
26:211 وَمَا يَنْۢبَغِىْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَؕ
26:212 اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَؕ
இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.
72:8 وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ
72:9 وَّاَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ؕ فَمَنْ يَّسْتَمِعِ الْاٰنَ يَجِدْ لَهٗ شِهَابًا رَّصَدًا ۙ
வானத்தைத் தீண்டினோம். அது கடுமையான பாதுகாப்பாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டுள்ளதைக் கண்டோம். (ஒட்டுக்) கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்வோராக இருந்தோம். இப்போது யார் (ஒட்டுக்) கேட்கிறாரோ அவர் காத்திருக்கும் தீப்பந்தத்தை தனக்கு (எதிராக) காண்பார்.
ஜின்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டதால் மறைவான விஷயங்கள் எதுவும் அவர்களால் அறிந்துகொள்ள முடியாது. இதை ஜின்களே கூறுகின்றன.
பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் “உக்காழ்’ எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப் பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்கள் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்கüடம்) திரும்பி வந்தன.
அப்போது தலைவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், “வானகத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டு விட்டது; எங்கள் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன” என்று பதிலüத்தனர். “புதியதொரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும்.
எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்கüலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்” என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.
“திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது “உக்காழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு “ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள். அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர்.
அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) “வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது. எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, “(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்…” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருளினான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
மேலுள்ள ஆதாரங்கள் ஒட்டுக்கேட்பதை விட்டும் ஜின்கள் தடுக்கப்பட்டுவிட்டனர் என்று தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஜின்களும் குறிகாரர்களும்
வானுலகத்தில் பேசப்படும் விஷயங்களை சர்வ சாதாரணமாக செவியேற்பதை விட்டும் ஜின்கள் தடுக்கப்பட்டுவிட்டனர். என்றாலும் ஒட்டுக்கேட்க நினைக்கும் ஜின் கடும் போராட்டத்திற்கு மத்தியில் ஓரிரண்டு விஷயங்களை ஒட்டுக்கேட்டு குறிகாரனுடைய செவிக்கு சேர்த்துவிடுகிறது.
இதனால் தான் குறிகாரர்களின் கூற்றில் 99 பொய்கள் இருந்தாலும் சில நேரத்தில் ஒரு உண்மை வெளிப்படுகிறது. இந்த ஒரு உண்மையை வைத்துத் தான் அவன் கூறுகின்ற அனைத்தும் உண்மை என்று பாமர மக்கள் ஏமாறுகிறார்கள். ஓரிரு விஷயங்களை ஜின்களால் ஒட்டுக்கேட்க முடியும் என்று பின்வரும் வசனங்கள் கூறுகிறது.
முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம். கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் பாதுகாப்பாக (அவற்றை ஆக்கினோம்). (வானவர்கள் எனும்) உயர்ந்த கூட்டத்தினரிடமிருந்து (ஓரிரு சொற்களை) ஒட்டுக் கேட்பவனைத் தவிர அவர்கள் செவியுற முடியாது. விரட்டப்படுவதற்காக ஒவ்வொரு பகுதியிலிருந்து அவர்கள் மீது எறியப்படும். அவனைப் பிரகாசமான தீப்பந்தம் விரட்டும். அவர்களுக்கு நிலையான வேதனையுமுன்டு.
விரட்டப்பட்ட ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் ஒட்டுக் கேட்பவனைத் தவிர மற்றவர்கள் அதை நெருங்காதவாறு பாதுகாத்துள்ளோம். அவனை ஒளி வீசும் தீப்பந்தம் விரட்டும்.
ஒட்டுக்கேட்ட ஜின்கள் வேறு ஜின்களுக்கு தகவலை கடத்துவதற்கு முன்போ அல்லது தகவலை கொண்டு சென்ற பிறகோ தீப்பந்தத்தால் அழிக்கப்படுகின்றன. ஒட்டுக்கேட்ட ஜின் தகவலை கடத்திய பிறகு அழிக்கப்படும் போது தான் குறிகாரனிற்கு தகவல் வந்ததைடகிறது. தகவலை கடத்துவதற்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டால் அந்த செய்தி குறிகாரனை வந்தடைவதில்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாகத் தம் சிறகுகளை அடித்துக்கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை,) பாறை மேல் சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள். அப்போது வானவர்கள் பீதிக்குள்ளகிறார்கள்.) பின்னர், அவர்களின் இதயங்களிலிருந்து பீதி அகற்றப்படும்போது (அல்லாஹ்விற்கு நெருக்கமான வானவர்கüடம்) “நம் இறைவன் என்ன சொன்னான்?” என்று வினவுகின்றார்கள்.
அதற்கு அவர்கள் வினவியோரிடம், “(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான் -அவன் உயர்ந்தவன்; பெரியவன்”- என்று கூறுவர். உடனே அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்களும் (அவர்களிடமிருந்து) ஒட்டுக் கேட்பவர்களும் ஒருவர் மற்றவர் மேலே இவ்வாறு இருந்துகொண்டு செவியேற்று விடுகின்றனர்.
இதைக் கூறும்போது (அறிவிப்பாளர்) சுஃப்யான் (ரஹ்) அவர்கள், தம் விரல்களைச் சாய்த்து அவற்றுக்கிடையே பிரித்துக்காட்டி (ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி) விளக்கிக் காட்டினார்கள்.
ஆக, முதலில் ஒட்டுக் கேட்டவர் அந்த உரையாடலைத் தனக்குக் கீழேயிருப்பவரிடமும், பிறகு அவர் தமக்குக் கீழேயிருப்பவரிடமும், இறுதியில் (கேட்டவர்) சூனியக்காரனின் அல்லது குறிசொல்பவனின் நாவில் போட்டுவிடுகின்றார்கள்.
சில நேரங்கüல் அந்த உரையாடலை அடுத்தவரிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே (முதலில் ஒட்டுக்கேட்டவரைத்) தீச் சுவாலை சென்றடைந்து (கரித்து)விடுவதுண்டு. இன்னும் சில நேரங்கüல் தீச் சுவாலை சென்றடைவதற்கு முன்பே அந்த உரையாடலை (அடுத்தவரிடம்) சேர்த்துவிடுவதுமுண்டு. (இவ்வாறு ஒருவர் பின் ஒருவராக பூமியிலுள்ள குறிகாரன் வரை அது போய்ச்சேர்கிறது.)
அவன் அதனுடன் நூறு பொய்களை(க் கலந்து மக்களிடம்) பேசுகின்றான். அப்போது (இதைக் கேட்கும் மக்களிடையே) இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென அவர்(குறிகாரர்) நம்மிடம் (முன்னறிவிப்பாக) சொல்லிவிட்டிருக்கவில்லையா?” என்று பேசப்படும். இப்போது வானத்திலிருந்து செவியேற்கப்பட்ட அந்த வார்த்தையினால் (குறி சொல்லும்) அவர் உண்மை சொல்லிவிட்டதாகக் கருதப்படுவார்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
ஜின்கள் ஓரிரு விஷயங்களை ஒட்டுக்கேட்பது கூட மனிதர்களை சோதிப்பதற்காகவே இறைவனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. குறிகாரர்களிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் நமது நல்லறங்கள் அழிந்துபோய்விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.
அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)
ஜின்களை வசப்படுத்த முடியுமா?
ஜின்களை வசப்படுத்த முடியும் என்று கூறி பலர் பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். நாம் நினைக்கின்ற காரியங்களை ஜின்களால் செய்து கொள்ள முடியும் என்ற தவறான எண்ணம் தான் மக்கள் ஏமாறுவதற்குக் காரணமாகும். இறைவன் நமக்கு வழங்கிய அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார்த்தால் ஜின்களை மனிதனால் ஒருபோதும் வசப்படுத்த முடியவே முடியாது என்பதை சந்தேகமற புரியலாம்.
ஜின்கள் என்பவர்கள் மிருகங்களை போன்று பகுத்தறிவு வழங்கப்படாதவர்கள் இல்லை. மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்டவர்களாவர். மனித ஆற்றலோடு ஜின்களுக்கு வழங்கப்பட்ட ஆற்றலை ஒப்பிட்டுப் பார்த்தால் ஜின்களின் ஆற்றல் பன்மடங்கு உயர்ந்ததும் வியக்கத்தக்கதுமாகும்.
மனிதனை விட வலுமையான படைப்பான ஜின்களை பலவீனமான மனிதனால் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை யோசித்தால் ஜின்களை வசப்படுத்துவதாக கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம்.
சுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பு
ஜின்களை மனிதர்களால் வசப்படுத்த முடியாது. இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே ஜின்களை வசப்படுத்திக் கொடுத்திருந்தான் என்று திருக்குர்ஆனும் திருநபி (ஸல்) அவர்களின் போதனையும் கூறுகிறது. இறைவன் வசப்படுத்திக் கொடுத்த ஒரே காரணத்தால் தான் ஜின்கள் சுலைமான் நபிக்கு கட்டுப்பட்டு நடந்தன. இறைவன் வசப்படுத்தித் தராமல் சுயமாக ஜின்களை வசப்படுத்த முடியுமா என்றால் இது சுலைமான் (அலை) அவர்களாலும் முடியாது.
காற்றை வசப்படுத்துவது எறும்புகளின் பாஷையை அறிவது இதுவெல்லாம் எந்த மனிதனாலும் முடியாத காரியமாகும். ஆனால் இவற்றை இறைவன் சுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டும் வழங்கினான். சுலைமான் நபிக்கு ஜின்கள் கட்டுப்பட்டு நடந்ததும் இந்த அடிப்படையில் தான்.
“என் இறைவா! என்னை மன்னித்து விடு! எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு! நீயே வள்ளல்” எனக் கூறினார். அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.
ஷைத்தான்களில் கட்டடம் கட்டுவோரையும், முத்துக் குளிப்போரையும், விலங்கிடப்பட்ட வேறு சிலரையும் (அவருக்கு) வசப்படுத்திக் கொடுத்தோம். “இது நமது அருட்கொடை! கணக்கின்றி மற்றவருக்குக் கொடுக்கலாம்! அல்லது நீரே வைத்துக் கொள்ளலாம்!” (என்று கூறினோம்.)
எனக்குப் பின் யாருக்கும் கிடைக்காத ஆட்சியை எனக்கு வழங்கு என்று சுலைமான் (அலை) பிரார்த்தனை செய்கிறார்கள். சுலைமான் (அலை) அவர்களுக்குப் பிறகு வேறு யாரருக்கும் ஜின்களை வசப்படுத்தும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை என்பதை அவர்கள் கேட்ட பிரார்த்தனை ஆணித்தரமாக விவரிக்கிறது.
முஹம்மது (ஸல்) அவர்களால் கூட வசப்படுத்த முடியாது
நபி (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருந்த போது அவர்களின் தொழுகையை முறிப்பதற்காக ஜின் ஒன்று இடஞ்சல் கொடுத்தது. அந்த ஜின்னுடைய கெடுதலை களைவதற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு பிரத்யேக ஆற்றலை வழங்கினான். இந்த ஆற்றலின் மூலம் கெடுதல் செய்த ஜின்னை நபி (ஸல்) அவர்கள் அடக்கினார்கள்.
அதே நேரத்தில் எல்லோரும் காணுகின்ற வகையில் அந்த ஜின்னை கட்டி வைக்க அவர்கள் நாடிய போது சுலைமான் நபியவர்கள் கேட்ட பிரார்த்தனையை நினைவு கூறுகிறார்கள். இவ்வாறு செய்வதற்கு தனக்கு ஆற்றல் வழங்கப்படவில்லை என்பதை சுலைமான் (அலை) அவர்கள் கேட்ட பிரார்த்தனையிலிருந்து நபி (ஸல்) அவர்கள் விளங்கிக்கொள்கிறார்கள்.
எனவே ஜின்னை கட்டிப்போட்டு வசப்படுத்துவதற்கு முயற்சிக்காமல் அந்த ஜின்னை விட்டுவிடுகிறார்கள்.
(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள், “நேற்றிரவு முரட்டு ஜின் ஒன்று என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது” என்றோ, அல்லது இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள். பிறகு “அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும் வரை இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க நினைத்தேன். அப்போது “இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காதே ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக” (38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
ஜின்னுடைய கெடுதலிலிருந்து காத்துக்கொள்கின்ற ஆற்றலை மட்டுமே அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கினான். அல்லாஹ் இந்த ஆற்றலை வழங்காவிட்டால் நபி (ஸல்) அவர்களால் கூட இதை செய்திருக்க முடியாது. ஜின்களை வைத்து காரியங்களை சாதிக்க முடியும் என்று வாதிடுபவர்களிடத்தில் சில கேள்விகளை கேட்பதன் மூலம் அவர்களின் ஏமாற்று வேலையை வெளிக்கொணரலாம். ஒரு பொருளை எடுத்து வருவது அல்லது ஒரு பொருளை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வது இது போன்ற வேலைகளை ஜின்களால் செய்ய முடியும்.
இவர்களின் வாதம் உண்மையாக இருந்தால் ஜின்களின் உதவியால் நம் கையில் வைத்திருக்கும் பொருளை பறித்துச் செல்ல இவர்களால் முடியுமா? அல்லது நம் வீட்டில் உள்ள ஒரு பொருளை எந்த மனிதரின் உதவியும் இன்றி நமக்கெதிரே உட்கார்ந்துகொண்டு தீடிரென நம் கண்களுக்கு முன்னால் கொண்டு வர முடியுமா? பாஸ்போர்ட் விசா விமானம் போன்றவை இல்லாமல் வெளிநாடுகளுக்கு ஜின்களின் உதவியால் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? இது போன்ற கேள்விகளுக்கு இந்த ஏமாற்றுப் பேர்வளிகளிடத்தில் எந்த பதிலும் இல்லை.
தங்களின் தேவைகளை ஜின்களின் உதவியால் அடைந்துகொள்ள இயலாதவர்கள் ஜின்களின் உதவியால் நமது தேவைகளை எப்படி பூர்த்தி செய்ய முடியும். அற்பக்காசுகளை நம்மிடம் இவர்கள் எதிர்பார்ப்பதிலிருந்து இது மோசடி வியாபாரம் தான் என்பது தெளிவாகிறது.
அல் ஜின்னு சூராவை ஓதினால் வசப்படுத்த முடியுமா?
குர்ஆனில் அல்ஜின்னு என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இந்த அத்தியாயத்தில் ஜின்களைப் பற்றிய விரிவான விளக்கம் கூறப்படுகிறது. இதை நாற்பது நாட்கள் தொடர்ந்து ஓதினால் ஓதியவருக்கு ஜின்கள் வசப்பட்டுவிடும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகிறது.
இந்த நம்பிக்கை உண்மைக்குப் புரம்பானது என்பதற்கு மேலே நாம் சுட்டிக்காட்டிய விபரங்களே போதுமானதாகும். குர்ஆனில் ஜின் என்று அத்தியாயம் இருப்பதை போலவே அந்நாஸ் (மனிதர்கள்) என்ற அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது. அந்நம்லு (எறும்பு) என்ற அத்தியாயமும் அல்பகரா (பசு மாடு) என்ற அத்தியாயமும் அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயமும் இடம்பெற்றுள்ளது.
ஜின் அத்தியாயத்தை ஓதுவதால் ஜின்னை வசப்படுத்த முடியும் என்பது உண்மையாக இருந்தால் அந்நாஸ் (மனிதர்கள்) என்ற அத்தியாயத்தை ஓதி மனிதர்களை வசப்படுத்த முடியுமா? அந்நம்லு (எறும்பு) என்ற அத்தியாயத்தை ஓதுவதால் எறும்பை வசப்படுத்த முடியுமா? அல்பகரா (பசுமாடு) என்ற அத்தியாயத்தை ஓதி பசுமாட்டை வசப்படுத்த முடியுமா? அல்ஃபீல் (யானை) என்ற அத்தியாயத்தை ஓதுவதால் யானை நமக்கு வசப்படுமா? இது அறிவற்ற வாதம் என்பதை இக்கேள்விகள் உணர்த்திக்கொண்டிருக்கிறது.
ஜின்களுக்கு மறைவான ஞானம் கிடையாது
ஜின்கள் மகத்தான் ஆற்றல் உள்ள படைப்பாக இருந்தாலும் மறைவான விஷயங்களை அறிந்து கொள்வதில் மனிதர்களைப் போன்று பலவீனமானப் படைப்பாகும்.
மறைவான ஞானம் என்பது இறைவனுக்கு மட்டும் உரித்தான அம்சமாகும். இந்த அதிகாரத்தை இறைவன் மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் வழங்கவில்லை. இறைவனுடைய தன்மைகளில் ஒன்றான மறைவானவற்றை அறியும் ஆற்றல் ஜின்களுக்கு இருப்பதாக ஒருவர் நம்பினால் அவர் இணைவைத்தவராக ஆகிவிடுவார்.
“வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!
மறைவான ஞானம் தங்களுக்கு இல்லை என்று ஜின்கள் கூறியதை திருக்குர்ஆன் எடுத்துக்கூறுகிறது.
பூமியில் உள்ளவர்களுக்குக் கெடுதி நாடப்பட்டுள்ளதா? அல்லது அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர் வழியை நாடியிருக்கிறானா? என்பதை அறிய மாட்டோம்.
ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் மும்முறமாக ஈடுபட்டிருந்தார்கள். ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார். ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார்.
பிறகு கைத் தடியைக் கறையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகு தான் ஸுலைமான் இறந்து நீண்ட காலமாகிவிட்டது என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிகிறது.
தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஸுலைமான் நபி மரணித்துவிட்டதைக் கூட ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் “நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே” என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.
மறைவானவற்றை அறிகின்ற ஆற்றல் ஜின்களுக்கு இல்லாத காரணத்தால் வானுலகத்தில் பேசப்படுகின்ற விஷயங்களை ஒட்டுக்கேட்கும் செயலில் ஜின்கள் ஈடுபட்டன. ஜின்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் ஒட்டுக்கேட்கின்ற அவசியம் அவர்களுக்கு ஏற்படாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசிக் கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஒட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
இஸ்லாத்தை ஜின்களும் கடைபிடிக்க வேண்டும்
இஸ்லாம் என்ற நேர்வழி மனித குலத்திற்கு மாத்திரம் உரியதல்ல. மாறாக மனிதர்களைப் போன்று பகுத்தறிவு வழங்கப்பட்ட ஜின்களும் இஸ்லாத்தை ஏற்று நடக்க வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜின்கள் இறைவனை ஈமான் கொள்வதாகவும் ஜின்களில் பலர் முஸ்லிம்களாக இருப்பதாகவும் ஜின்கள் கூறியதை குர்ஆன் எடுத்துரைக்கிறது.
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்’ எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது” என (முஹம்மதே!) கூறுவீராக!
அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்க மாட்டோம். எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
நேர் வழியை செவியுற்ற போது அதை நம்பினோம். தமது இறைவனை நம்புகிறவர் நஷ்டத்தையும், அநீதி இழைக்கப்படுவதையும் அஞ்ச மாட்டார்.
நம்மில் முஸ்லிம்களும் உள்ளனர். அநீதி இழைத்தோரும் உள்ளனர். இஸ்லாத்தை ஏற்போர் நேர் வழியைத் தேடிக் கொண்டனர். அநீதி இழைத்தோர் நரகத்திற்கு விறகுகளாக ஆனார்கள். (என்று ஜின்கள் கூறின)
பாம்பு வடிவில் உள்ள சில ஜின்கள் இஸ்லாத்தை தழுவியிருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மதீனாவில் இஸ்லாத்தைத் தழுவிய ஜின்கள் சில உள்ளன. உங்களில் ஒருவர், அவற்றில் எதையேனும் இந்தக் குடியிருப்புகளில் (பாம்பின் உருவில்) கண்டால் மூன்று நாட்கள் அவற்றுக்கு அவர் அறிவிப்புச் செய்யட்டும். அதற்குப் பின்னரும் அது அவருக்குத் தென்பட்டால், அதைக் கொன்றுவிடட்டும்! ஏனெனில், அது ஷைத்தான் ஆகும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
ஜின்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்
மனிதர்களையும் மனிதர்களைப் போன்ற இன்னொரு படைப்பான ஜின்களையும் நல்வழிப்படுத்துவதற்காக இறைத்தூதர்கள் அனுப்ப்பட்டிருக்கிறார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
ஜின் மற்றும் மனித சமுதாயமே! “உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்க விருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?” (என்று இறைவன் கேட்பான்). “எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கி விட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றுவது ஜின்களின் மீது கடமையாகும்
நபி (ஸல்) அவர்கள் உலக மக்களுக்கு இறைத்தூராக இருப்பது போன்று ஜின்களுக்கும் அவர்கள் இறைத்தூதராவார்கள். நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்று அவர்கள் காட்டித் தந்த வழியை கடைபிடிப்பது ஜின்களின் மீது கடமையாகும். இதை பின்வரும் வசனங்களில் அறியலாம்.
46:31 يٰقَوْمَنَاۤ اَجِيْبُوْا دَاعِىَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ يَغْفِرْ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَ لِيْمٍ
46:32 وَمَنْ لَّا يُجِبْ دَاعِىَ اللّٰهِ فَلَيْسَ بِمُعْجِزٍ فِى الْاَرْضِ وَلَيْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءُ ؕ اُولٰٓٮِٕكَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنْ
“எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்குப் பதிலளியுங்கள். அவரை நம்புங்கள்! அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான்.
அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதிலளிக்காதவர் பூமியில் அல்லாஹ்வை வெல்பவராக இல்லை. அவனன்றி அவருக்குப் பாதுகாவலர்களும் இல்லை. அவர்கள் தெளிவான வழி கேட்டிலேயே உள்ளனர்” (என்றும் ஜின்கள் கூறின.)
நபி (ஸல்) அவர்கள் ஜின்களிடம் சென்று இஸ்லாத்தை போதித்துள்ளார்கள்.
நான் இப்னு மஸ்ஊத் (ரலிலி) அவர்களிடம், “ஜின்களின் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உங்களில் யாராவது இருந்தீர்களா?” என்று கேட்டேன். அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: இல்லை; ஆனால், ஒரு நாள் இரவு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது திடீரென அவர்களைக் காணவில்லை. எனவே, பள்ளத்தாக்குகளிலும் மலைக் கணவாய்களிலும் அவர்களைத் தேடிப்பார்த்தோம்.
(அவர்கள் அங்கு கிடைக்காமல் போகவே) “ஜின் அவர்களைத் தூக்கிச் சென்றிருக்கும்; அல்லது மர்மமான முறையில் அவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்’ என்று நாங்கள் பேசிக்கொண்டோம். பின்னர் அன்றைய மோசமான இரவை (ஒரு வழியாக)க் கழித்தோம். அதிகாலையில் நபி (ஸல்) அவர்கள் “ஹிரா’ மலைக் குன்றின் திசையிலிலிருந்து வந்து கொண்டிருந்தார்கள்.
உடனே நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் காணாமல் நாங்கள் தேடினோம். நீங்கள் கிடைக்காமல்போகவே அந்த மோசமான இரவை (ஒருவாறு) கழித்தோம்” என்று கூறினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஜின்களில் ஒருவர் என்னை அழைக்க வந்தார். எனவே அவருடன் சென்று ஜின்களுக்குக் குர்ஆனை ஓதிக் காட்டினேன்” என்று கூறினார்கள். பிறகு எங்களை அழைத்துச் சென்று ஜின்கள் விட்டுச்சென்ற அடையாளங்களையும் அவர்கள் பயன்படுத்திய நெருப்பின் தடயத்தையும் காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அல்கமா (ரஹ்)
ஜின்கள் குர்ஆனை செவியுற்றன
திருக்குர்ஆன் மனித குலத்திற்கும் ஜின் இனத்திற்கும் நேர்வழி காட்டியாக அருளப்பட்டதாகும். திருக்குர்ஆன் ஜின்களுக்கும் இறைவேதம் என்பதால் ஜின்கள் குர்ஆனை நம்புவதும் அதன் அடிப்படையில் செயல்படுவதும் அவர்களின் மீது கடமையாகும்.
ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று “நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவி யுற்றோம்’ எனக் கூறியதாக எனக்கு அறிவிக் கப்பட்டது” என (முஹம்மதே!) கூறுவீராக!
(முஹம்மதே!) இக்குர்அனை செவியுறுவதற்காக ஜின்களில் ஒரு கூட்டத்தினரை உம்மிடம் நாம் அனுப்பியதை எண்ணிப் பார்ப்பீராக! அவை அவரிடம் வந்த போது “வாயை மூடுங்கள்!” என்று கூறின. (ஓதி) முடிக்ககபட்ட போது எச்சரிப்போராக தமது சமுதாயத்திடம் திரும்பின.
“எங்கள் சமுதாயமே! மூஸாவுக்குப் பின் அருளப்பட்ட ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துகிறது. உண்மைக்கும் நேரான பாதைக்கும் அது வழி காட்டுகிறது” எனக் கூறின.
“திஹாமா’ எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது “உக்காழ்’ சந்தையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் “நக்லா’ எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு “ஃபஜ்ரு’த் தொழுகையை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார்கள்.அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்ட போது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர்.
அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) “வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்” என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, “எங்கள் கூட்டத்தாரே! திண்ணமாக நாங்கள் ஆச்சரியமானதொரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகின்றது.
எனவே நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்” என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, “(நபியே!) நீர் கூறுக: வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்கüல் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்…” என்று தொடங்கும் இந்த (72ஆவது) அத்தியாயத்தை அருüனான்.
ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி “வஹி’யின் மூலம்தான் நபி (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
ஜின்களுக்கும் வணக்க வழிபாடுகள் உண்டு
இறைவனை வணங்கி வழிபடுவது ஜின்களின் மீதும் கடமையாகும்.
ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) “அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பாளர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
பிரார்த்தனை என்ற வணக்கத்தை ஜின்களும் செய்கின்றன. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே! உங்களில் முற்காலத்தார், பிற்காலத்தார், மனிதர்கள், ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் (தத்தம் தேவைகளைக்) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன். அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை; கடலிலில் நுழை(த்து எடு)க்கப்பட்ட ஊசி (தண்ணீரைக்) குறைப்பதைப் போன்றே தவிர (குறைக்காது)!
அறிவிப்பவர் : அபூதர் (ரலி)
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் கட்டளைகள் உள்ளன
“இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே” என்று கூறுவீராக!
மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.