06) உறங்கும் ஒழுங்குகள்

நூல்கள்: இஸ்லாமிய ஒழுக்கங்கள்

உறங்கும் ஒழுங்குகள்

தூங்கும் முன் கடைபிடிக்க வேண்டியவைகள்..

ஜாபிர்(ரலி) கூறினார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்துவிடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக எண்ணுகிறேன்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 74. குடிபானங்கள்

எண்ணெய் விளக்குகளை அணைக்க வேண்டும்..

அபூ மூஸா(ரலி) அறிவித்தார். மதீனாவில் இரவு நேரத்தில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் வீட்டுக்காரர்களும் இருந்தனர். அவர்களின் நிலை குறித்து நபி(ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது ‘நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு ஆபத்தானது ஆகும். எனவே, நீங்கள் உறங்கச் செல்லும்போது நெருப்பை அணைத்து விடுங்கள்’ என்றார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 79. பிரார்த்தனைகள்

தூங்கும் முன் உளூச் செய்ய வேண்டும்..

நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்குச் செய்வது போல் உளூச் செய்து கொள்.

என பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது

விரிப்பை பயன்படுத்தும் முறை..

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 97. ஓரிறைக் கோட்பாடு

 பிஸ்மில்லாஹ் கூறுதல்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் படுக்கைக்குச் சென்றால், உங்களது கீழங்கியின் ஓரத்தால் விரிப்பைத் தட்டிவிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறுங்கள். ஏனெனில், நீங்கள் இல்லாதபோது உங்களது விரிப்பில் என்ன (விஷஜந்து) புகுந்துகொண்டது என்பது உங்களுக்குத் தெரியாது.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 48. பிரார்த்தனைகள்

தூங்கும் முன் ஓத வேண்டியவை..

குர்ஆன் அத்தியாயங்கள்..

ஆயிஷா(ரலி) அறிவித்தார் நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தம் உள்ளங்கைகளை இணைத்து, அதில் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’, ‘குல் அஊது பிரப்பில் ஃபலக்’, ‘ குல் அஊது பிரப்பின்னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரண்டு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தம் உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 66. குர்ஆனின் சிறப்புகள்

குர்ஆன் வசனங்கள்..

ஆயத்துல் குர்ஸி..

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்’

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 59. படைப்பின் ஆரம்பம்

அல்பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்கள்..

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அல்பகரா’ அத்தியாயத்தின் இறுதி இரண்டு (அல்குர்ஆன்: 02:285)– 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.

இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 64. (நபிகளார் காலத்துப்)போர்கள்

திக்ருகள்..

அலீ(ரலி) அறிவித்தார். நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் பெரியவன்’ என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ் – புகழனைத்தும் அல்லாஹ்விற்கே’ என்று முப்பத்து மூன்று முறையும், ‘சுப்ஹானல்லாஹ் – அல்லாஹ் குறைகளிலிருந்து தூய்மையானவன்’ என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதை விடச் சிறந்ததாகும்’ என்றார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 57. குமுஸ்-ஐந்திலொரு பங்கு கடமை..

உறங்கும் ஒழுங்குகள்

தூங்கும் முன் கடைசியாக ஓத வேண்டிய துஆ..

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் சென்றால், வலப் பக்கத்தில் சாய்ந்து உறங்குவார்கள். பிறகு, ‘அல்லாஹும்ம அஸ்லமத்து நஃப்ஸீ இலைக்க, வ வஜ்ஜஹ்த்து வஜ்ஸீ இலைக்க. வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக்க. வ அல்ஜஃத்து ழஹ்ரி இலைக்க, ரஃக்பத்தன் வ ரஹ்பத்தன் இலைக்க. லா மல்ஜஅ வலா மன்ஜா மின்க்க இல்லா இலைக்க. ஆமன்த்து பி கித்தாபிக்கல்லதீ அன் ஸல்த்த. வபி நபிய்யிக்கல்லதீ அர்சல்த்த’ என்று ஓதுவார்கள்.

(பொருள்: இறைவா! உனக்கு நான் அடிபணிந்தேன். என்னுடைய முகத்தை உன்னை நோக்கித் திரும்பினேன். என்னுடைய காரியம் அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்தேன். என் விவகாரங்கள் அனைத்திலும் உன்னையே சார்ந்திருக்கிறேன். உன் மீதுள்ள ஆவலாலும் (அதே நேரத்தில்) உன் மீதுள்ள அச்சத்தாலும் (இதை நான் செய்கிறேன்). உன்னிடமிருந்து தப்பிக்கவும் ஒதுங்கிடவும் உன்னைத் தவிர வேறு போக்கிடமில்லை.

நீ அருளிய உன் வேதத்தையும், நீ அனுப்பிவைத்த உன் நபியையும் நான் நம்பினேன்) மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இவற்றைக் கூறிவிட்டு அன்னைறய இரவே இறந்துவிடுகிறவர் (இஸ்லாம் எனும்) இயற்கை மரபில் இறந்தவராவார்’ என்று கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள்

தூங்கும் போது தவிர்க்க வேண்டியவை..

மல்லாந்து படுத்தல்..

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம் என்றும், ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம் என்றும், ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கும்போது கால்மீது கால் போட்டுக்கொள்ள வேண்டாம் (ஆடை விலகும் வண்ணம் தூங்குவதற்கும்) என்றும் தடை செய்தார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு ( ஆடை விலகாதவாறு தூங்கலாம்) பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் கண்டேன்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 37. ஆடையும் அலங்காரமும்

எனவே ஆடை விலகாதவாறு மல்லாந்து படுத்துத் தூங்கலாம்.