47) நகைச்சுவை பேச்சு

நூல்கள்: நாவை பேணுவோம்

நகைச்சுவை பேச்சு

ஆபாசம் கலந்தோ தீயவைகள் கலந்தோ பேசக்கூடாது என்பதை பார்த்தோம் மீறி பேசினால் அது இறைவனிடம் தண்டனையைபெற்றுத்தரும் என்பதையும் அறிந்தோம் ஆனால் நம்முடைய பேச்சில் நகைச்சுவை கலந்தால் அதில் எவ்வித குற்றமும் இல்லை. ஒரு மனிதர் நகைச்சுவை கலந்து பேசியதால் அவரை குற்றவாளியாக பார்க்கத் தேவையில்லை.

ஏனெனில் இஸ்லாம் நகைச்சுவை உணர்வுக்கு எதிரானது அல்ல நகைச்சுவை என்ற பெயரில் ஆபாசத்தையும் அசிங்கத்தையும் அரங்கேற்றுவதை 24 மணி நேரமும் சிரியோ சிரி என்று சிரித்துக் கொண்டிருப்பதை கண்டிக்கின்றதே ஒழிய நகைச்சுவை பொங்க பேசுவதை ஒரு போதும் கண்டிக்கவில்லை. 

மேலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூட பல்வறே சமயங்களில் நகைச்சுவை பொங்க பேசியுள்ளார்கள்.  ஸஹாபாக்கள் நகைச்சுவையுடன் பேசி சிரித்துக் கொள்வதை அனுமதித்து அதில் தானும் ஒருவராக பங்கெடுத்தும் உள்ளார்கள் இவ்வளவு ஏன் நபித்தோழர்களில் ஒருவர் நகைச்சுவையாக பேசி நபிகளாரை சிரிக்க வைக்க வேண்டும் என்பதை வழக்கமாக கொண்டுள்ளார்களாம்.

அந்நபித்தோழரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் கண்டிக்கவில்லை. மாறாக இறைவனையும் தன்னையும் நேசிப்பவர் என்று நற்சான்று தான் அளித்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார் அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டுவந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்கவைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி (ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள் (போதையிலிருந்த அவர் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப் பட்டார்.

அவரை அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒருவர் இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும் இவர் (குடித்ததற்காக எத்தனை முறை கொண்டு வரப்பட்டுள்ளார்! என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இவரை சபிக்காதீர்கள். ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

(புகாரி: 6780)

நபித்தோழர்கள் நகைச்சுவை கலந்து பேசும் பேசும் போது நபிகள் நாயகம் ஸல் அவர்களும் அதில் பங்கெடுத்த சம்பவங்களில் சில..

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள் (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப்

(முஸ்லிம்: 118)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் கிராமவாசி ஒருவர் தன்னிடம் அமர்ந்திருக்க (பின்வரும் நிகழ்ச்சியை) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன் அவரிடம் நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர் ஆம் நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார்.

(இறைவனும் அவருக்குஅனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும், மலை களைப் போல் விளைந்த குவிந்து போய் விடும். அப்போது இறைவன் எடுத்துக் கொள் ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான். 

(நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்த கிராமவாசி அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குறைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார் இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள்.

அறிவிப்பவர் ஆஹூரைரா (ரலி)

(புகாரி: 2348)

நபிகளாருக்கும் தன் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் ஒரு சமயம் பிரச்சனை ஏற்படவிருந்தது. அச்சூழ்நிலையில் தானே நகைச்சுவையாக பேசி பிரச்சனையை நபிகளார் திசை திருப்பி உள்ளார்கள்

காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

ஒருமுறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி அவர்கள் என் தலைவலியே என்று சொல்ல. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் உயிரோடிருக்கும் போதே உனக்கு அது (இறப்பு ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன் என்று சொன்னார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக நான் (விரைவில்) இறந்து போய்விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று நீங்கள் உங்களுடைய மற்ற துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்துவிடுவீர்கள்) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு) இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது) நான்தான் (இப்போது) என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது.

(புகாரி: 5665)

இன்று எத்தனையோ ஆண்கள் தன் மனைவியிடம் கூட நகைச்சுவை உணர்வோடு பேசுவதில்லை. எதற்கெடுத்தாலும் கோபம் கொப்பளிக்க முழங்குவார்கள். அத்தகையோர் நபிகளாரின் இந்த செயலை படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள். நகைச்சுவையாக பேசுகிறோம் என்ற பேரில் பிறர் மனம் நோகும்படி பேசிவிடக்கூடாது இதில் கவனமாக இருக்க வேண்டும்.