45) அனுமதிக்கப்பட்ட புகழ்

நூல்கள்: நாவை பேணுவோம்

அனுமதிக்கப்பட்ட புகழ்

மேற்கண்ட தகவல்களை கண்டவுடன் பிறரை புகழ்வது முற்றிலும் தடை செய்யப்பட்டது என்றோ மாபாதகச் செயல் என்றோ கருதிவிடக் கூடாது. சில வேளைகளில் பிறரை புகழ்ந்து கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் செய்த தியாகம் மக்கள் மத்தியில் மறுக்கப்படும் போது ஒரு நல்லவரை கெட்டவர்களாக கருதும் சூழ்நிலை நிலவும் போது அவர் நல்லவர் மக்களுக்காக உழைத்தவர் என்பதை நிரூபிக்க வரம்புக்குட்பட்டு புகழலாம். இதை நபியவர்கள் செய்து காட்டி நமக்கு தெளிவை ஏற்படுத்துகின்றார்கள். 

நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவுக்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்துவிட்டார். ஆகவே உங்களிடம் வந்தேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களை மன்னிக்க மறுத்துவிட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்று, “அங்கே அபூபக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்க வீட்டார், “இல்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் பயந்துபோய் தம் முழங்கால்களின் மீது மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான்தான் (வாக்குவாதத்தை தொடங்கியதால் உமரைவிட) அதிகம் அநீதியிழைத்த வனாகிவிட்டேன்” என்று இருமுறை கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “(மக்களே!) அல்லாஹ் என்னை உங்களிடம் அனுப்பினான். “பொய் சொல்கிறீர்’ என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்’ என்று கூறினார்; மேலும் (இறைமார்க்கத்தை நிலைநிறுத்தும் பணியில்) தம்மையும் தமது செல்வத்தை யும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்துகொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா?” என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை.

அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரலி)

(புகாரி: 3661)

தியாகச் செம்மல் அபூபக்கரை பற்றி தவறாக கருதும் சூழ்நிலை நிலவுகின்றது. இதை உடைத்தெறிவதற்காக ஆரம்ப காலத்தில் அபூபக்கர் (ரலி) அவர்கள் செய்த தியாகத்தை புகழ்ந்து நபியவர்கள் கூறுகின்றார்கள். இது போன்ற சந்தர்பங்களில் நாமும் மற்றவர்களை மார்க்க வரம்பை மீறாத வகையில் புகழலாம். அது மார்க்கத்தின் பார்வையில் குற்றமாகாது.

சில முஸ்லிம்கள் தன்னைத் தானே நல்லவன் வல்லவன் என்று பிதற்றிக் கொள்கிறார்கள். நாங்கல்லாம்.. என்று ஆரம்பித்து கண்டதையும் கழியதையும் உளறிக் கொட்டுகின்றனர். இதுவும் கண்டிக்கத்தக்க காரியம்.

பிறரையே புகழக்கூடாது எனும் போது நம்மை நாமே புகழக்கூடாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிகின்றது. அதே சமயம் நாம் செய்த உழைப்பு தியாகம் மறுக்கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால் நம்மை நாம் வரம்புக்குட்பட்டு புகழலாம். நாம் செய்த உழைப்பை குறிப்பிடலாம்.மேற்சொன்ன விதிவிலக்கு இதற்கும் பொருந்தும் நபிகளாரை கஞ்சனாக கருதும் சூழ்நிலை ஏற்படும் போது அதை உடைத்தெறிவதற்காக நான் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை நிரூபிக்க தன்னை புகழ்ந்து கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுனைன் போரிலி இருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம)மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள் சமுரா என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது.

ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்: பொய்யனாகவும் காண மாட்டீர்கள்: கோழையாகவும் காண மாட்டீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)

(புகாரி: 2821)

நபிகளாரின் வணக்க வழிபாடுகளை குறைத்து மதிப்பிடும் போது தான் தான் உங்களிலேயே இறைவனை நன்கு அஞ்சுபவன் என்று தன்னை புகழ்ந்து அந்தக்கருத்தை உடைத்தெரிகின்றார்கள். நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர் அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போால் தெரிந்தது.

பிறகு அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு) முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர் (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால் எப்போதும்

இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன் என்றார் இன்னொருவர் நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் கோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் சான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போாகிறேன். ஒருபோதும் ணமுடித்துக் கொள்ளமாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தத்) தோழர்களிடம் வந்து இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே அறிந்துகொள்ளுங்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன் விட்டுவிடவும் செய்கிறேன் தொழுகவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன் மேலும் நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி)

(புகாரி: 5063)