45) சோதனைக் காலம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

சோதனைக் காலம்

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«بَادِرُوا بِالْأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ، يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا، أَوْ يُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا، يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا»

இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்) செயல்கள் புரிந்து கொள்ளுங்கள் (அக்குழப்பங்களின் போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறை மறுப்பாளனாக மாறி விடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்று விடுவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 186)

விளக்கம்:

உலகம் அழியும் காலம் நெருங்கும் போது இவ்வுலகில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் பெருகத் துவங்கி விடும் அந்நேரத்தில் வாழ்பவர்கள் மிக மிக எச்சரிக்கையுடன் வாழ வேண்டும். காலையில் இறை நம்பிக்கையாளனாக இருப்பவன், மாலையில் தன் உயர்ந்த கொள்கையான இஸ்லாத்தை விட்டுப் போய் விடுவான். இது போன்று மாலையில், இறை நம்பிக்கையாளனாக இருப்பவன் காலையில் இஸ்லாத்தை விட்டுப் போய் விடுவான். இப்படி உயர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு விட்டுப் போகும் நிலை ஏற்படும்.

மேலும் இவ்வுலக அற்ப சுகங்களுக்காக மார்க்கத்தை விற்க வேண்டிய நிலை வந்தால் அதை விற்கவும் தயங்க மாட்டார்கள். இந்நிலை இன்று பரவலாகக் காணப்படுகிறது. எம்.எல்.ஏ ஆவதற்காக, எம்பி ஆவதற்காக, மந்திரி ஆவதற்காக மனிதனின் காலில் விழும் அவல நிலை இன்று தமிழகத்தில் இருக்கிறது இறைவனைத் தவிர வேறு எவருக்கும் தலை வணங்கக் கூடாது என்ற உயர்ந்த கொள்கையை விட்டு விட்டு, முஸ்லிம்கள் பதவிக்காக ஆண் பெண் என்று பாகுபாடு இல்லாமல் தலைவர்களின் கால்களில் விழுகின்றனர். இதுபோன்ற நிலையைக் காணும் போது அதிகமதிகம் நற்காரியங்களில் ஈடுபட்டு மறுமை வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.