42) முத்திரை பதித்த முன்மாதிரி

நூல்கள்: நாவை பேணுவோம்

முத்திரை பதித்த முன்மாதிரி

நபிகளாரை போன்ற ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியை வரலாற்றில் எவ்வளவு தான் தேடினாலும் கிடைக்க மாட்டார் என்று உறுதியிட்டு கூற முடியும். அனைத்து காரியத்திலும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பதித்த முத்திரை அவ்வளவு ஆழமாய் இருந்துள்ளது நபிகளார் செயலில் மட்டும் ஒழுக்கமானவர்களாய் நடந்து கொள்ளவில்லை. மாறாக பேச்சிலும் மிகச்சிறந்த ஒழுக்கத்தை கடைபிடித்து சென்றுள்ளார்கள். இவ்வளவு நாகரீகமான பேச்சை கொண்ட ஒரு தலைவரை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார். அவ்வளவு நாகரீகம். எந்த தலைவரும் கடைபிடிக்காத அப்படியொரு நாகரீகம். 

நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களிம் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 6031)

ஒரு மனிதரை கண்டிப்பதாக இருந்தால் அவர் கீழே விழட்டும் என்ற பொருள்பட உள்ள வார்த்தையையே பேசுவார்களாம் தன்னுடைய பேச்சில் ஆபாசத்தின் சாயல் அருவருப்பின் வாசம் கூட வீசிவிடக்கூடாது என்பதில் நபிகளார் எவ்வளவு அக்கரை கொண்டுள்ளார்கள் என்பதை இந்த செய்தி தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது. 

நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் பத்துவருடம் சேர்ந்து இருந்த ஒரு நபித்தோழர் நபிகளாரின் பேச்சை பற்றி நற்சான்று வழங்குவதை பாருங்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை “ச்சீ என்றோ இதை ஏன் செய்தாய் என்றோ நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா என்றோ அவர்கள் சொன்னதில்லை

அறிவிப்பவர்: அளஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 6038)

ஒரு வருடமில்லை. இரண்டு வருடமில்லை. 10 வருடங்கள் நபிகளாருடன் சிறு சிறு வேலை செய்வதற்காக இருந்துள்ளார்கள் தான் நபிகளாருடன் இருந்த பத்து வருட காலகட்டத்தில் ச்சீ என்று கூட சொன்னதில்லையாம். சுப்ஹானல்லாஹ். என்ன ஒரு நாகரகம் யாரேனும் ஒருவர் நம்முடன் ஒரு வாரம் இருந்தால் போதும் சே இவனெல்லாம் ஒரு மனுஷனா? என்று நம்மை விட்டு விரண்டோடி விடுவார்கள்.

ஏனெனில் அந்தளவில் மிக மோசமாய் நமது பேச்சு இருக்கும். நபிகளாரின் இந்த பேச்சொழுக்கத்தின் காரணத்தில் தான் இவரிடம் மிக அழகிய முன்மாதிரி இருக்கின்றது என நபிகளாருக்கு இறைவன் புகழாரம் சூட்டுகின்றான். 

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்

(அல்குர்ஆன்: 68:4) 

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஆழகிய முன்மாதிரி இருக்கிறது

(அல்குர்ஆன்: 33:21) 

இந்த ஒப்பற்ற தலைவரின் வழிநடக்கும் இஸ்லாமிய சமூகம் எவ்வளவு அருவருக்கத்தக்க வார்த்தைகளை நாவில் சுமந்து கொண்டு செல்கின்றது. இந்த வகையில் குப்பைத் தொட்டியை விடவும் கேவலமான ஒன்றாக நம் நாவு ஆகிவிடுகின்றது. முஸ்லிம் என்போர்கள் இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்போது தான் நபிகளாரின் (உம்மத்) சமுதாயம் என்பதில் உண்மையான பெருமை கொள்ள முடியும்.