42) முடிந்தவரை சமாதானம்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

42) முடிந்தவரை சமாதானம்

போர்கள் என்றாலே வலிகள், அவமானங்கள், உயிரிழப்புகள், பொருட்சேதங்கள், மரண ஓலங்கள். மொத்தத்தில் மனித நேயத்தை மாண்டு போகச் செய்யும் அனைத்து வகைக் காரியங்களின் மொத்தத் தொகுப்பு என்று கூறிவிடலாம். கொடுமை நிறைந்த இக்கொலைக் களத்தில் கூட புது நெறியைப் புகுத்தி மனித நேயத்தை மலரச் செய்திருக்கிறது இஸ்லாம்.

உண்மையில் போர்களற்ற உலகைத் தான் இஸ்லாம் விரும்புகிறது. இயன்ற வரை போரைத் தவிர்த்திடுங்கள் என்றுதான் அறிவுரைக் கூறுகிறது. தவிர்க்க இயலாத தருணங்களில் மட்டுமே போரை அனுமதிக்கிறது.

இது எதிரியின் கைகள் உயர்ந்து முஸ்லிம்கள் தோற்றுப் போவார்கள் என்று எண்ணுகிற நேரங்களில் அல்ல. முஸ்லிம் படை வலுவுடன் இருக்கும் நேரங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை இதுதான்.

மக்களே! எதிரிகளைக் களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள், அமைதி யையும் நலனையுமே இறைவனிடத்தில் கேளுங்கள். ஒருவேளைப் பகைவரை எதிர் கொள்ள நேர்ந்து விட்டால் பொறுமையோடு போரிடுங்கள். வாட்களின் நிழலில்தான் சுவனம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மிஸ்வர் இப்னு மக்ரமா 

(புகாரி: 2734, 4179, 4181)

(அபூதாவூத்: 2384)

நபிகளார் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரக்கணக்கான தோழர்கள் புடைசூழ மதினாவிலிருந்து உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக மக்கா நோக்கி பயணிக்கிறார்கள்.

செய்தியைக் கேள்விப்பட்ட மக்கா நகர எதிரிகள், எத்தனை உயிர்களை விலையாகக் கொடுத்தாலும், முஹம்மதை உள்ளே வரவிடாமல் தடுத்து விட வேண்டும் என்று மிகப்பெரிய யுத்தத்திற்குத் தயாராகிக் காத்திருந்தார்கள்.

போர் செய்ய விரும்பாத நபியவர்கள் எதிரிப் படையினர் நிற்கும் பாதையில் பயணித்தால் கண்டிப்பாக முட்டிக் கொள்ள வேண்டிய சூழல் வரும் என்பதை உணர்ந்து மாற்று வழியில் சென்று மக்காவிற்கு அருகில் உள்ள ஹுதைபிய்யாவில் தங்கினார்கள்.

தடாலடியாக உள்ளே நுழைந்து விட்டால் ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடலாம் என்று சமாதானப் பேச்சு வார்த்தைக்காக மக்காவிற்குள் தூதர்களை அனுப்பி வைத்தார்கள். பேச்சு வார்த்தைக்கு வந்தவர்கள் கடுமையான பல நிபந்தனைகளை விதித்தார்கள்.

முஸ்லிம்களை சீண்டிக் கொண்டேயிருந்தார்கள். போரைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிபந்தனைகளையும் நபிகளார் ஏற்றுக் கொண்டார்கள்.

பேசப்பட்ட ஒப்பந்தத்தை அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று எழுதத் துவங்கினார்கள். எதிர்தரப்பில் இருந்த சுஹைல் பின் அம்ர் என்பவர் அல்லாஹ்வின் பெயரால் என்று எழுதுங்கள் அளவற்ற அருளாளனை எங்களுக்குத் தெரியாது என்றார். சரியென்று திருத்திக் கொண்டார்கள்.

அடுத்து அல்லாஹ்வின் தூதர் முஹம் மதிற்கும் மக்கா குரைஷிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் என்று எழுதினார்கள். உங்களை அல்லாஹ்வின் தூதர் என்று நாங்கள் ஒத்துக் கொள்ளவே இல்லை.

ஆகையால், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதிற்கும் என எழுதச் சொன்னார்கள். நீங்கள் மறுத்தாலும், நான் அல்லாஹ்வின் தூதர்தான். ஆயினும், ஒப்பந்தத்தில் மாற்றிக் கொள்கிறேன் என்றார்கள்.

அடுத்து எங்களிடமிருந்து யாரே னும் உங்களிடம் வந்தால் அவர் உங்கள் மார்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்களிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும் என்றார்கள். அதற்கும், நபியவர்கள் ஒத்துக் கொண்டார்கள்.

இந்த ஆண்டு திரும்பிச் சென்று விட்டு அடுத்த ஆண்டு உம்ராவுக்காக வாருங்கள் என்றார்கள். அதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

ஒப்பந்த விதிகளையும், அது எழுதப்பட்ட விதத்தையும் பார்த்த நபியின் தோழர்கள் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள். இத்தனை அவமானகரமான நிபந் தனைகளை நாம் ஏன் ஒத்துக் கொள்ள வேண்டும்? நம்மிடத்திலே சத்தியம் இருக்கிறது. எதிரிகளைச் சாய்க்கத் துடிக்கும் தோள்களும் இருக்கின்றன.

பிறகு ஏன் இந்தப் பின் வாங்கல்? அல்லாஹ்வின் ஆலயத்தை தரிசிப்போம் என அழைத்து வந்து விட்டு இப்போது பாதியிலே திரும்பச் சொன்னால் எப்படி என ஆளாளுக்கு ஆவேசப்பட்டார்கள்.

ஒப்பந்தம் எழுதி முடிக்கப்பட்ட உடன் தற்போது நாம் மக்காவிற்குள் செல்ல முடியாது. ஆகையால், உம்ராவுக்காகக் கொண்டுவந்த பிராணிகளை இங்கேயே அறுத்து பலி கொடுத்துவிட்டு ஊருக்குப் புறப்படுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். கோபத்தில் இருந்த நபித்தோழர்கள் தமது வாழ்வில் முதல் முறையாக மிகப்பெரும் மௌனத்தின் மூலம் நபிகளாரின் அறிவிப்பிற்கு மறுப்பு தெரிவித்தார்கள். இது வரலாறு.

(அல்குர்ஆன்: 5:64)

எதிரிப் படையை தூசி தட்டுவதைப் போல தட்டிச் செல்கிற அளவுக்கு பிரமாண்டமான படை பலத்தோடு சென்றிருந்தபோதும், உடனிருந்த தோழர்கள் அனைவரும் போர் செய்வோம் என்று கோரியபோதும், எதிரிகளும் போர் நடத்தத் தயாராக இருந்த போதும், ஆட்சேபகரமான பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப் பட்ட போதும், அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அடுத்த ஆண்டு வருவோம் என திரும்பியதற்கு என்ன காரணம்?

முடிந்த வரை சமாதானம், முடியாத கட்டத்தில் மட்டுமே போர் இது தான் இஸ்லாத்தின் நிலை. ஹுதைபிய்யா உடன்படிக்கையின் மூலம் நபியவர்கள் கற்றுத்தரும் பாடமும் – படிப்பினையும் இதுதான்.

இதனைத் திருமறைக் குர்ஆன் இரத்தினச் சுருக்கமாக இப்படிக் கூறுகிறது. அவர்கள் போர் நெருப்பை மூட்டும் போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விடுகிறான். அவர்கள் பூமியில் குழப்பம் செய்கின்றனர். குழப்பவாதிகளை அல்லாஹ் விரும்ப மாட்டான்.

(அல்குர்ஆன்: 22:39)