42) குழந்தை பெறும் தகுதியற்றவர்களுக்கு இத்தா’ அவசியமா?

நூல்கள்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

கேள்வி: இஸ்லாமிய மார்க்கத்தில் மாதவிடாய் வரக்கூடிய குழந்தை பெறத் தகுதியுடையவர்கள், கணவன் இறந்த பின்பு இத்தா’ இருப்பது (4 மாதம் + 10 நாள்) ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. ஆனால், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள், மாதவிடாய் பிரச்சனை காரணமாக, கர்ப்பப் பையை அகற்றியவர்கள், தள்ளாத வயதுடைய கிழவி இவர்களுக்கு இத்தா’ அவசியமா!

-பாட்சா பஷீர், அல்-ஜூபைல்.

பதில்: இறந்து போன கணவனின் கருவை மனைவி சுமந்திருக்கிறாரா? என்பதை அறிவது இத்தாவுடைய நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

கணவன் இறந்த சில நாட்களில் மனைவிக்கு மாதவிலக்கு ஏற்பட்டால் அவள் கருவில் குழந்தை வளரவில்லை என்பது உறுதியாகத் தெரிந்து விடும். ஆனாலும், இஸ்லாம் கூறும் சட்டத்தின்படி உடனே அவள் மறுமணம் செய்ய முடியாது. நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழிந்த பிறகு தான் மறுமணம் செய்ய முடியும்.

அவளது கருவறையில் முதல் கணவனின் கரு வளரவில்லை என்பது மாதவிடாய் வந்த உடனேயே தெரிந்துவிடும். அப்படி இருந்தும் நான்கு மாதமும் பத்து நாட்களும் அவள் ஏன் காத்திருக்க வேண்டும்? கரு வளரவில்லை என்பது அவளுக்கு மட்டும் தெரிந் தால் போதாது; உலகம் அறியும் வகையில் வெளிப்படை யாக அது நிரூபிக்கப்பட வேண்டும் என அல்லாஹ் விரும்புவதாலேயே இவ்வாறு கூறியிருக்க முடியும்.

இவ்வாறு வெளிப்படையாக நிரூபிக்க வேண்டும் என்பதற்குப் பல நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும்.

# ஒரு பெண் தனது கருப்பையில் குழந்தை வளர வில்லை என்பதை மாதவிலக்கு வருவதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஆனால், மாதவிடாய் வராமலேயே மாதவிடாய் தனக்கு வந்து விட்டதாக ஒரு பெண் பொய் கூறி உடனடியாக மறுமணம் செய்ய நினைக்கலாம்.

இவ்வாறு செய்தால் இரண்டாம் கணவன் ஏமாற்றப்படுகிறான்.

# மறுமணம் செய்து குறுகிய கால கட்டத்தில் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவன், தனது குழந்தை இல்லையெனக் கருதுவான். தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி அவளையும் வெறுப்பான். இது அவளது எதிர்காலத்துக்கே கேடாக முடியும்.

எனவே தான் தனது வயிற்றில் குழந்தை இல்லை என்பதை அனைவருக்கும் தெரியும் வகையில் அவள் நிரூபிக்க வேண்டும். நான்கு மாதமும் பத்து நாட்களும் கடந்த பின் அவளது வயிறு வெளிப்படையாக பெரிதாகா விட்டால் அவள் வயிற்றில் முதல் கணவனின் வாரிசு இல்லை என்பதற்கு அவளை அறிந்த அனைவரும் சாட்சிகளாக இருப்பார்கள்.

இதனால் தான் நான்கு மாதமும் பத்து நாட்களும் என்ற அதிகப்படியான காலத்தை இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது.

மாதவிடாய் வராமலே வந்து விட்டதாகப் பொய் கூறுவது போல் தனது கர்ப்பப்பை எடுக்கப்பட்டு விட்டதாகவும் பொய் கூறலாம்.

குடும்பக் கட்டுப்பாடு செய்த பலருக்கு அதன் பிறகும் குழந்தை பிறக்க சாத்தியம் உள்ளது. அவ்வாறு சில நேரங்களில் பிறந்தும் இருக்கிறது.

மாதவிடாய் பருவம் முடிந்த பிறகும் அரிதாக குழந்தை பெற்ற பெண்கள் உள்ளனர்.

எனவே சந்தேகத்திற்கு இடமில்லாமல் வெளிப்படையாக நிரூபிப்பது தான் இரண்டாம் கணவன் சந்தேகப்படாமல் மகிழ்ச்சியுடன் அவளை நடத்த துணை செய்யும்.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் மருத்துவ சோதனை மூலம் உறுதி செய்ய முடியும் அல்லவா? அந்த முடிவின் அடிப்படையில் உடனே அவள் மறு மணம் செய்யலாமே? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர். மருத்துவர்களும் மனிதர்கள் தான். அந்தப் பெண் பொய் செல்வது போல் மருத்துவர்களும் பொய் சொல்வார்கள். அனைத்து மருத்துவர்களும் இவ்வாறு பொய் சொல்ல மாட்டார்கள் எனினும் பொய் சொல்லக் கூடிய மருத்துவர்களும் உள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் கண்டுபிடிக்கத் தெரியாத மருத்துவர்களும் இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

விதி விலக்காக நீங்கள் சுட்டிக் காட்டியவர்களும் அரிதாக கருவுறுவதும் நடக்கக் கூடியது தான். விதவை விவாகத்தை இன்றைக்கும் மறுக்கக் கூடியவர் கள் உள்ள நிலையில் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே விதவைகள் மறுமணத்திற்கு வழிகாட்டியது மட்டுமின்றி இரண்டாம் திருமணத்தால் அவளுக்கு சங்கடங் கள் ஏதுவும் விளைந்து விடாமல் தக்க ஏற்பாட்டையும் இஸ்லாம் செய்துள்ளது. அது தான் இத்தா.