42) தீர்ப்பு
தீர்ப்பு
நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
விளக்கம்:
சட்டப் பிரச்சனைகள் வரும் போது திருக்குர்ஆன் நபிமொழிகளை முன் வைத்துத் தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பு வழங்கும் போது சில பிரச்சனைனகளில் நேரடியான விளக்கம் திருக்குர் ஆனில் அல்லது நபிமொழிகளில் கிடைத்து விடும். அப்போது அந்த விளக்கத்தையே தீர்ப்பாக வழங்கிவிடலாம்.
சில நேரங்களில் நவீன காலப் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்யும் போது திருக்குர் ஆன், நபிமொழிகளில் நேரடியான விளக்கம் இருக்காது. அப்போது இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும் போது ஏதாவது திருக்குர்ஆன் வசனத்தின்படி நபிமொழியின்படி இதற்குத் தீர்வு காண முடியுமா? என்று ஆய்வு செய்து இறையச்சத்தின்படி ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும்.
அவ்வாறு ஒருவர் தீர்ப்பளித்தால் அது உண்மையில் சரியான தீர்ப்பாக இருந்தால் அந்த நீதிபதிக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பு உண்மையில் தவறாக இருந்தால் அவர் குற்றவாளியாக ஆக மாட்டார். ஆய்வு செய்ததன் காரணத்தால் அவருக்கு ஒரு கூலி கிடைக்கும். எனவே இது போன்ற நிலைகளில் தவறான தீப்புக்காக அவரைக் கடிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.