40) வேண்டாமே வீண் தர்க்கம்

நூல்கள்: நாவை பேணுவோம்

வேண்டாமே வீண் தர்க்கம்

இஸ்லாத்தில் கூறப்படும் கருத்துக்களை விவாதம் செய்ய அனுமதியுண்டு. தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை அல்லது கருத்துதான் சரியானது என்பதை விவாதத்தின் மூலம் நிரூபிக்கலாம். இதற்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. ஆனால் அந்த விவாதம் அழகிய முறையில் இருக்க வேண்டும் என்பதே இறைவனின் நிபந்தனை. இந்த வழியை இறைவன் தான் கற்றுத்தருகின்றான். 

வேதக்காரர்களிடம் மிக அழகிய முறையிலன்றி நீங்கள் தர்க்கம் செய்ய வேண்டாம்.

(அல்குர்ஆன்: 29:46) 

நம்ரூத் எனும் மன்னன் நான் தான் கடவுள் என்று மக்களுக்கு மத்தியில் கூறிக் கொண்டும் மக்களை துன்புறுத்திக் கொண்டும் இருந்தான். இக்கால கட்டத்தில் இப்றாஹீம் நபி தனியொரு ஆளாய் நின்று ஏகத்துவப்பிரச்சாரத்தின் மூலம் மக்கள் அனைவரையும் ஓரிறைக்கொள்கையின் பால் அழைப்பு விடுத்தார்கள்.

அந்த கொடிய மன்னனுக்கும் ஏகத்துவ கொள்கையை எடுத்து அவனின் முகத்திரையை கிழித்தெறிவதற்கும் ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்கும் விவாதம் எனும் ஆயுதத்தையே ஏகத்துவத்தந்தை கையில் எடுத்தார் என்று இறைவன் கூறுகின்றான். 

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? என் இறைவன் உயிர் கொடுப்பவன், மரணிக்கச் செய்பவன் என்று இப்ராஹீம் கூறிய போது நானும் உயிர் கொடுப்பேன், மரணிக்கச் செய்வேன் என்று அவன் கூறினான் அல்லாஹ் கிழ்க்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய் என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான்.

இது போன்று நாமும் நம்முடைய கொள்கையை நிலைநிறுத்த வாதம் எனும் ஆயுதத்தை பயன்படுத்தலாம். இறைவனும் இதற்கு அனுமதி வழங்கியுள்ளான் என்பதை மேற்கண்ட இறைவசனங்கள் உறுதிபடுத்துகின்றன.

ஆனால் வீண் விவாதம் செய்ய இஸ்லாத்தில் எள்ளவும் அனுமதியில்லை. இஸ்லாமியர்களில் பலரும் தேவையற்ற விஷயத்தை கையிலெடுத்து அதில் வீண்தர்க்கம் செய்து கொண்டிருக்கின்றனர். சில சமயங்களில் தங்களின். வரட்டு கெளரவத்திற்காக பயனுள்ள விஷயங்களையும் வீண் தர்க்கமாக மாற்றிவிடுகின்றனர்.

வாதத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படும் வீண் வாதத்தினால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை. ஒரு கருத்தில் தெளிவாக இருக்கின்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும் வேலையையே இந்த வீண் தர்க்கம் செய்யும். எனவே தான் பயனற்ற மோசமான வீண்தர்க்கத்தை செய்யுமாறு ஷைத்தான்தான் தூண்டுவான் என இறைவன் கூறுகின்றான்.

திண்ணமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களுடன் (இது தொடர்பாக வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் நீங்கள் அவர்களுக்கு வழிப்பட்டால் நிச்சயமாக நீங்களும் (அவர்களைப் போன்றே) இணைவைப்போர்தாம்.

(அல்குர்ஆன்: 6:21)

நல்ல விஷயங்களை செய்யுமாறு ஷைத்தான் ஒரு போதும் தூண்டமாட்டான். இறைவனின் கோபத்தையும். சாபத்தையும் பெற்றுத்தருகின்ற வழிகேட்டில் கொண்டு சேர்க்கின்ற காரியத்தை செய்யுமாறே ஷைத்தான் தூண்டுவான். இதிலிருந்து வீண் தர்க்கத்தில் ஈடுபடுவது இறைவனுக்கு விருப்பமான-காரியமல்ல. வெறுப்பிற்குரிய காரியமே என்பதை புரியலாம்.

வீண் தர்க்கம் என்பது இறைவனுக்கு மட்டுமல்லஇறைத்தூதருக்கும் பிடிக்காத காரியமே தன்னிடம் யாராவது இந்த தொனியில் பேசுவது போல் தெரிந்தால் நபிகளார் உடனே அந்த தீயவற்றிலிருந்து தன்னை தற்காத்துக் கொண்டார்கள். யாராக இருந்தாலும் அவரிடம் தனது கண்டனத்தை பதிவு செய்யவும் தவறவில்லை. இதற்கு பின்வரும் சம்பவம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்

(அல்குர்ஆன்: 18:54)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா (ரலி அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா என்று கேட்டார்கள். நான். அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான் என்று சொன்னேன்.

நான் இப்படிச் சொன்னபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தமது தொடையில் தட்டிக்கொண்டே மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான் என்று சொல்லி கொண்டிருந்ததை நான் கேட்டேன். 

அறிவிப்பவர்: அலீ (ரலி)

(புகாரி: 7347)