40) குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம்

நூல்கள்: அபூபக்ர் (ரலி) வரலாறு

40) குடிமக்கள் அபூபக்ர் (ரலி)க்கு அளித்த பட்டம்

அபூபக்ர் (ரலி) அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் எவரும் அவர்களைப் பற்றி தவறாக குறிப்பிட்டதே இல்லை. மாறாக அவர்கள் மக்களில் எல்லாம் சிறந்தவர் என்று தான் மக்கள் அவர்களுக்கு பட்டம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நிகராக யாரும் அக்காலத்தில் இல்லை என்று அவர்கள் காலத்தவர்களால் சான்றைப் பெறுகின்ற அளவிற்கு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்துச் சென்றார்கள்.

முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது:

நான் என் தந்தை (அலீ (ரலி) அவர்கள்) இடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அபூபக்ர் அவர்கள் என்று பதிலளித்தார்கள். நான் பிறகு யார்? என்று கேட்டேன். பிறகு உமர் அவர்கள் (மக்களில் சிறந்தவர்) என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 3671)

அபூபக்ர் (ரலி) அவர்களுக்குப் பிறகு மூன்றாவது ஆட்சித் தலைவராக வந்த உமர் (ரலி) அவர்கள் தம்மை விட அபூபக்ர் தாம் உயர்ந்தவர் என்று கூறியுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் உங்களுக்குப் பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக நியமிக்கக் கூடாதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது) ஏனென்றால் (எனக்கு முன்பு) என்னை விடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள்.

(எவரையும் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டு விட்டாலும் (அதுவும் தவறாகாகது.) ஏனென்றால் என்னை விடச் சிறந்தவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.

(புகாரி: 7218)

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குத் தான் சிறப்பில் முதலிடத்தை கொடுத்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே நாங்கள் (சிறப்பில் முதவாவது) அபூபக்ர். அடுத்து உமர் அடுத்து உஸ்மான் என்று கூறிக் கொண்டிருந்தோம்.

(திர்மிதீ: 3707, 3640)

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்குச் சமமாக எவரையும் கருதுவதில்லை. பிறகு உமர் (ரலி) அவர்களையும் அவர்களுக்குப் பிறகு உஸ்மான் (ரலி) அவர்களையும் (சிறந்தவர்களாகக் கருதி வந்தோம்.) பிறகு (மீதமுள்ள) நபி (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ஏற்றத் தாழ்வு பாராட்டாமல் விட்டு விட்டோம்.

(புகாரி: 3698)