4) நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?

நூல்கள்: மரணித்தவருக்கு ஆற்றல் உண்டா?

நபிமார்கள் கப்ரில் தொழுகிறார்களா?

நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் கொண்டு நபிமார்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர். நபிமார்கள் கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தில் அறிவிக்கப்படும் செய்திகளில் மூஸா நபி தொடர்பான செய்தியைத் தவிர மற்ற அனைத்தும் தவறான அறிவிப்புகளாகும்.

மூஸா நபி அவர்கள் கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் ஹதீஸ் மட்டுமே ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அமைந்துள்ளது.

மிஃராஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியை கப்ரில் தொழுவதாகவும் பார்த்தார்கள். மறுவினாடி பைத்துல் முகத்தஸிலும் பார்த்தார்கள். அதற்கு அடுத்த வினாடி வின்னுலகிலும் பார்த்தார்கள். எனவே இது எடுத்துக்காட்டுவதில் அடங்கும். எடுத்துக் காட்டுதல் என்றால் என்ன என்று பின்னர் விளக்கப்பட்டுள்ளது.

மெய்யாகவே மூஸா நபி கப்ரில் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இறந்தவர்கள் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பதற்கோ, இவ்வுலக மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுக்கிறார்கள் என்பதற்கோ ஆதாரமாகாது. கப்ரில் அவர்கள் தொழுகிறார்கள் என்பதற்கு மட்டுமே அது ஆதாரமாகும்.

மற்ற ஹதீஸ்களைப் பார்ப்போம்.

ஹதீஸ் 1

நபிமார்கள் நாற்பது நாட்களுக்கு மேல் தங்கள் கப்ருகளில் விட்டு வைக்கப்பட மாட்டார்கள். எனினும் அல்லாஹ்வின் சூர் ஊதப்படும் வரை தொழுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : ஹயாதுல் அன்பியா

ஹதீஸ் 2

நபிமார்கள் தங்கள் கப்ருகளில் உயிரோடும், தொழுது கொண்டும் இருக்கிறார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்கள் : ஹயாதுல் அன்பியா, பஸ்ஸார், ஃபவாயித்

இது போல் இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. பலமான அறிவிப்பாளர்களைக் கொண்டு அறிவிக்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும் இது சமாதி வழிபாட்டுக்காரர்களுக்கு எதிரான ஆதாரமாகவே உள்ளது.

ஆன்மாக்களின் உலகில் நபிமார்கள் உயிருடன் தொழுது கொண்டு இருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் இவை தருகின்றன. அவர்கள் சூர் ஊதப்படும் வரை அதாவது உலகம் அழிக்கப்படும் வரை தொழுது கொண்டே இருப்பார்கள் என்றால் அவர்களுக்கும், இவ்வுலகுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது தான் பொருள்.

தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை அழைப்பதும் கூடாது. அந்த அழைப்புக்கு அவர்கள் பதில் சொல்வதும் கூடாது. எனவே அவர்கள் இவ்வுலகிற்கு வர மாட்டார்கள் என்பது உறுதியாகிறது. மேலும் இதை ஆதாரப்பூர்வமான செய்தி என்று எடுத்துக் கொண்டால் நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இந்த நிலை கூட இல்லை என்பது தெரிகிறது.

மிஃராஜின் போது இறந்தவர்களைப் பார்த்தது எப்படி?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் வின்னுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் உயிருடன் தான் உள்ளனர் என்று வாதிடுகின்றனர்.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மரணித்து விட்ட நபிமார்கள் மட்டுமின்றி இதர நல்லடியார்களும், கெட்டவர்களும் கூட ஆன்மாக்களின் உலகில் உயிருடன் உள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை. அவர்களால் இவ்வுலகுக்கு வரமுடியுமா? இவ்வுலகில் தொடர்பு கொள்ள முடியுமா என்பது தான் பிரச்சனை.

மிஃராஜில் பல நபிமார்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்தது தீய கொள்கையுடையவர்களுக்கு ஆதாரமாக ஆகாது. இவ்வுலகை விட்டு வேறு உலகத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அழைத்துச் சென்றதாலேயே அவர்களால் பல நபிமார்களைக் காண முடிந்தது. நபிகள் நாயகத்துக்குப் பின்னர் எந்த முஸ்லிமும் வின்னுலகம் அழைத்துச் செல்லப்பட மாட்டார். எனவே அவர் எந்த நபியையும் காண மாட்டார் என்பதற்குத் தான் இது ஆதாரமாக உள்ளது.

அடுத்து அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் வின்னுலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தவை அனைத்தும் அல்லாஹ்வால் எடுத்துக் காட்டப்பட்டவையாகும். நேரடிச் சந்திப்புக்கும், எடுத்துக் காட்டப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நமது வீட்டில் நம்மோடு வசிக்கும் உறவினரை நாம் கனவில் காண்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைக் கனவில் நாம் காண்பதால் அவர் நம்மைக் கண்டார் என்று ஆகாது. காலையில் எழுந்து அவரை நாம் சந்தித்தால் உங்கள் கனவில் நான் நேற்று வந்தேனே என்று அவர் கூற மாட்டார். உங்களைக் கனவில் நான் கண்டேன் என்று நாம் கூறினால் தான் அவருக்கே அது தெரியும். ஏனெனில் கனவில் அவர் நமக்கு எடுத்துக் காட்டப்பட்டாரே தவிர  அவரையே நாம் சந்திக்கவில்லை.

மிஃராஜ் என்பது கனவல்ல என்றாலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டவை அவர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டவை தான் என்பதை மிஃராஜ் சம்மந்தமான ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.

சொர்க்கவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தல்!

நல்லோர்கள் சொர்க்கத்தில் இருப்பதையும், தீயோர்கள் நரகத்தில் இருப்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்று மிஃராஜ் தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري مشكول 3241 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا سَلْمُ بْنُ زَرِيرٍ، حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

(புகாரி: 3241)

صحيح البخاري 349 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
” فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي، فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، قَالَ جِبْرِيلُ: لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ، قَالَ: مَنْ هَذَا؟ قَالَ هَذَا جِبْرِيلُ، قَالَ: هَلْ مَعَكَ أَحَدٌ؟ قَالَ: نَعَمْ مَعِي مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ، وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ لِجِبْرِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا آدَمُ، وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ اليَمِينِ مِنْهُمْ أَهْلُ الجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ، فَقَالَ لِخَازِنِهَا: افْتَحْ، فَقَالَ لَهُ خَازِنِهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ: فَفَتَحَ، – قَالَ أَنَسٌ: فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ، وَإِدْرِيسَ، وَمُوسَى، وَعِيسَى، وَإِبْرَاهِيمَ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ، وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ، قَالَ أَنَسٌ – فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِدْرِيسَ قَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، فَقُلْتُ مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِدْرِيسُ، ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا مُوسَى، ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا عِيسَى، ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ، فَقَالَ: مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالِابْنِ الصَّالِحِ، قُلْتُ: مَنْ هَذَا؟ قَالَ: هَذَا إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “، قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ، كَانَا يَقُولاَنِ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوَى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ»، قَالَ ابْنُ حَزْمٍ، وَأَنَسُ بْنُ مَالِكٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” فَفَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ، حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى، فَقَالَ: مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ؟ قُلْتُ: فَرَضَ خَمْسِينَ صَلاَةً، قَالَ: فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُ، فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى، قُلْتُ: وَضَعَ شَطْرَهَا، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ: ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ، فَقَالَ: هِيَ خَمْسٌ، وَهِيَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ القَوْلُ لَدَيَّ، فَرَجَعْتُ إِلَى مُوسَى، فَقَالَ: رَاجِعْ رَبَّكَ، فَقُلْتُ: اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي، ثُمَّ انْطَلَقَ بِي، حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ المُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ؟ ثُمَّ أُدْخِلْتُ الجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ وَإِذَا تُرَابُهَا المِسْكُ “

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்து நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் அமர்ந்து கொண்டிருந்தார். அவரது வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் தாம் ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும், இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் சந்ததிகள். அவர்களில் வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான் இவர், வலப் பக்கம் (சொர்க்க வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் (நரகவாசிகளைப்) பார்க்கும் போது வேதனைப்பட்டு அழுகிறார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூதர் (ரலி)

(புகாரி: 349)

இந்த இரு ஹதீஸ்களும் சொல்வது என்ன? மனிதர்கள் சொர்க்கத்துக்குச் செல்வதும், நரகத்துக்குச் செல்வதும் இனிமேல் நடக்கக் கூடியவை. மரணித்தவர்கள் இதுவரை சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லவில்லை. நியாயத் தீர்ப்பு நாளுக்குப் பிறகு தான் இது நடக்கும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் சிலரையும், நரகத்தில் சிலரையும் பார்த்ததாக முதல் ஹதீஸ் கூறுகிறது.

யாருமே சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இன்னும் செல்லாத போது எப்படி அவர்களை சொர்க்கத்திலோ, நரகத்திலோ பார்த்திருக்க முடியும்? இனிமேல் நடக்க உள்ளதை அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும். நேரடியாகவே பார்த்தார்கள் என்று பொருள் வைத்தால் நியாயத் தீர்ப்பு நாளில்தான் இதற்கான தீர்ப்பு அளிக்கப்படும் எனக் கூறும் எண்ணற்ற வசனங்களையும், நபிமொழிகளையும் மறுக்கும் நிலை ஏற்படும்.

இரண்டாம் ஹதீஸில் சொர்க்கத்தில் உள்ளவர்களைத் தமது வலப்பக்கமும், நரகத்தில் உள்ளவர்களைத் தமது இடப்பக்கமும் ஆதம் நபி பார்த்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் மறுமை நாள் வரும் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரும் உள்ளடங்குவர். நாமும் அடங்குவோம். நபிகள் நாயகம் மிஃராஜ் சென்ற போது நாம் தான் பிறக்கவே இல்லையே? பிறகு எப்படி நம்மைக் கண்டார்கள்?

இவை யாவும் இறைவனது வல்லமையால் நபிகளாருக்கு எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்ச்சி தான் என்பது இதிலிருந்து விளங்குகிறது. இனிமேல் படைக்கவுள்ளதை எடுத்துக் காட்டுவது இறைவனின் வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதைப் பின் வரும் வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

7:172 وَاِذْ اَخَذَ رَبُّكَ مِنْۢ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ‌ ۚ اَلَسْتُ بِرَبِّكُمْ‌ ؕ قَالُوْا بَلٰى‌ ۛۚ شَهِدْنَا ‌ۛۚ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ‏
7:173 اَوْ تَقُوْلُوْۤا اِنَّمَاۤ اَشْرَكَ اٰبَآؤُنَا مِنْ قَبْلُ وَكُنَّا ذُرِّيَّةً مِّنْۢ بَعْدِهِمْ‌ۚ اَفَتُهْلِكُنَا بِمَا فَعَلَ الْمُبْطِلُوْنَ‏

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். “நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்றோ, “இதற்கு முன் எங்களின் முன்னோர்கள் இணை கற்பித்தனர்; நாங்கள் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளாக இருந்தோம்; அந்த வீணர்களின் செயலுக்காக எங்களை நீ அழிக்கிறாயா?” என்றோ கியாமத் நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக (இவ்வாறு உறுதிமொழி எடுத்தோம்.)

(அல்குர்ஆன்: 7:172)

மறுமை நாள் வரை வரவிருக்கிற மக்கள் அனைவரையும் ஆதம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் எடுத்துக் காட்டியதாக இவ்வசனம் கூறுகிறது. அவர்கள் அனைவரையும் ஆதம் நபி பார்த்தார்கள் என்றால் நேரடியாகப் பார்த்தார்கள் என்ற பொருளில் அல்ல. இறைவன் எடுத்துக் காட்டிய விதத்தில் பார்த்தார்கள் என்பதாகும். இது போலவே மிஃராஜிலும் நபிகள் நாயகம் அவர்களுக்குப் பல காட்சிகளை அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.

எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பிரத்தியேகமான முறையில் எடுத்துக் காட்டினான். கடந்த காலத்தில் மரணித்தவர்களையும் எடுத்துக் காட்டினான். எதிர்காலத்தில் பிறக்கவுள்ள மக்களை அல்லாஹ் எடுத்துக் காட்டியதால் அவர்கள் பிறந்து உயிருடன் உள்ளார்கள் என்று கருதுவது எந்த அளவு அபத்தமோ, மரணித்தவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று கருதுவதும் அதே அளவு அபத்தமாகும்.

மிஃராஜில் காட்டப்பட்டவை அனைத்தும் எடுத்துக் காட்டுதல் தான் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களும் உள்ளன.

صحيح البخاري 1149 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلاَلٍ: «عِنْدَ صَلاَةِ الفَجْرِ يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الجَنَّةِ» قَالَ: مَا عَمِلْتُ عَمَلًا أَرْجَى عِنْدِي: أَنِّي لَمْ أَتَطَهَّرْ طَهُورًا، فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ، إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «دَفَّ نَعْلَيْكَ يَعْنِي تَحْرِيكَ»

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில்  சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் உளூ)செய்தாலும் அந்த உளூவுக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 1149)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் பிலாலைப் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆனால் பிலால் பூமியில் தான் அந்த நேரத்தில் இருந்தார். அவர் சொர்க்கத்தில் நடந்து சென்றது மெய்யான காட்சி என்றால் அது பிலால் அவர்களுக்குத் தான் முதலில் தெரிந்திருக்கும். அல்லாஹ்வின் தூதர் சொன்ன பிறகுதான் அவருக்கே தெரிந்தது என்றால் அவர் சொர்க்கத்தில் நடந்து செல்லவில்லை. இனிமேல் அவர் சொர்க்கம் செல்வார் என்பதைச் சொல்வதற்காக அவர் நடந்து செல்வது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டியுள்ளான் என்பதைத் தவிர இதற்கு வேறு விளக்கம் கிடையாது.

صحيح البخاري 3679 – حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المَاجِشُونِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
” رَأَيْتُنِي دَخَلْتُ الجَنَّةَ، فَإِذَا أَنَا بِالرُّمَيْصَاءِ، امْرَأَةِ أَبِي طَلْحَةَ، وَسَمِعْتُ خَشَفَةً، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالَ: هَذَا بِلاَلٌ، وَرَأَيْتُ قَصْرًا بِفِنَائِهِ جَارِيَةٌ، فَقُلْتُ: لِمَنْ هَذَا؟ فَقَالَ: لِعُمَرَ، فَأَرَدْتُ أَنْ أَدْخُلَهُ فَأَنْظُرَ إِلَيْهِ، فَذَكَرْتُ غَيْرَتَكَ ” فَقَالَ عُمَرُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ أَعَلَيْكَ أَغَارُ

“நான் என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன். அப்போது நான் மெல்லிய காலடியோசையைச் செவியுற்றேன். உடனே, “யார் அவர்?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), “இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், “இது யாருக்குரியது?’ என்று கேட்டேன். அவர், (வானவர்), “இது உமருடையது’ என்று சொன்னார்.

ஆகவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (ஆகவே, அதில் நுழையாமல் திரும்பி விட்டேன்)” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்” என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

(புகாரி: 3679)

பிலால் (ரலி) அவர்களும், ருமைஸா அவர்களும் உலகில் உயிருடன் இருக்கும் போது அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் இருப்பதாகக் காட்டினான்.

நடக்காத ஒன்றை எடுத்துக் காட்டுவதாக இது அமைந்துள்ளது போல், மரணித்தவர்களை உயிருடன் உள்ளவர்களைப் போல் அல்லாஹ் எடுத்துக் காட்டியுள்ளான் என்றே பொருள் கொள்ள  வேண்டும்.

ஒருவரையே பல இடங்களில் பார்த்ததாக வருவதும் இது எடுத்துக் காட்டப்பட்ட நிகழ்வுதான் என்பதை மேலும் தெளிவாக்குகிறது.

மூஸா நபியை முதலில் கப்ரில் பார்த்தார்கள் என்று(முஸ்லிம்: 4736)கூறுகின்றது.

கப்ரில் தொழும் நிலையில் மூஸா நபியைப் பார்த்தது போலவே வானத்திலும் மூஸா நபியைச் சந்தித்தார்கள்.

(புகாரி: 349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முந்தைய சமுதாயங்கள் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது மூஸா அலை அவர்களும் கூட இருந்தனர்.

(முஸ்லிம்: 271, 3410)

நேரடியாகப் பார்ப்பதாக இருந்தால் ஒருவரை ஒரு இடத்தில் தான் பார்க்க இயலும். ஒருவரை ஒரே நேரத்தில் பல இடங்களில் பார்த்ததாக வருவதிலிருந்து இது இறைவனால் எடுத்துக் காட்டப்பட்ட காட்சி என்பதை அறியலாம். உலகம் அழிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு நாளில் தீர்ப்பும் வழங்கப்பட்ட பின்னரே நல்லோர்கள் சொர்க்கத்திற்கும், தீயோர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். அதுவரை நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் சொர்க்கம் செல்ல இயலாது.

பிர்அவ்ன், அபூஜஹ்ல்களாகவே இருந்தாலும் நரகத்திற்குச் செல்ல முடியாது. ஆன்மாக்களின் உலகில் தான் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் பல தண்டனைகளை அனுபவிக்கும் நபர்களைப் பார்த்ததாக மிஃராஜ் பற்றிய ஹதீஸ்களில் வருகிறது.

سنن أبي داود 4878 – حَدَّثَنَا ابْنُ الْمُصَفَّى، حَدَّثَنَا بَقِيَّةُ، وَأَبُو الْمُغِيرَةِ، قَالَا: حَدَّثَنَا صَفْوَانُ قَالَ: حَدَّثَنِي رَاشِدُ بْنُ سَعْدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ جُبَيْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
” لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ، قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ

விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்குச் செம்பினால் ஆன நகங்கள் இருந்தன. அந்த நகங்களால் தங்களது முகங்களையும், மார்புகளையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். “ஜிப்ரயீலே! இவர்கள் யார்?” என்று நான் கேட்டேன். “இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சியைச் சாப்பிட்டுக் கொண்டும் அவர்களின் தன்மானங்களில் விளையாடிக் கொண்டும் இருந்தனர்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(அபூதாவூத்: 4878, 4255)

உலகம் இனிமேல் தான் அழிக்கப்படும்.  அதன் பின்னர் அனைவரும் எழுப்பப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். அதன் பிறகே நரகவாசிகள் நரகிற்குச் சென்று தண்டனையை அனுபவிப்பார்கள். அதற்குள் இந்தத் தண்டனைகளைப் பெறுபவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படிப் பார்த்தார்கள்? நரகத்தின் தண்டனை எவ்வாறு இருக்கும் என்று எடுத்துக் காட்டுவதுதான் இதன் கருத்தாகும்.

صحيح مسلم مشكول 164 – (2375) حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ، وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ، قَالَا: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، وَسُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
أَتَيْتُ – وَفِي رِوَايَةِ هَدَّابٍ: مَرَرْتُ – عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத் தலத்தினுள் நின்று தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(முஸ்லிம்: 4736)

மூஸா நபி அவர்களை பைத்துல் முகத்தஸிலும், வின்னுலகிலும் பார்த்தது போல் மண்ணறையில் தொழுது கொண்டு இருந்ததையும் பார்த்தார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. ஒரே சமயத்தில் மூன்று இடங்களில் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துள்ளதால் இவ்வாறு எடுத்துக் காட்டப்பட்டது என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பது ஆதாரமாகுமா?

49:7 وَاعْلَمُوْۤا اَنَّ فِيْكُمْ رَسُوْلَ اللّٰهِ‌ؕ

“உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்’.

(அல்குர்ஆன்: 49:7)

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்ற வாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இன்று வரை உயிருடன் உள்ளனர் என்பதற்கு ஆதாரமாகும் என்று வாதிடுகின்றனர். இவ்வசனம் அருளப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களுடன் இருந்தனர் என்பதைத் தான் இவ்வசனம் சொல்கிறது. மரணிக்காமல் இப்போதும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இவ்வசனம் தராது என்பதை அறியாமல் பிதற்றுகின்றனர்.

இவ்வசனம் அருளப்பட்டது முதல் இப்போது வரை உயிருடன் இருக்கிறார்கள் என்றால் உயிருடன் இருக்கும் போது செய்ய வேண்டிய கடமைகளை ஏன் அவர்கள் செய்யாமல் உள்ளனர்? தூதர் என்ற முறையில் உலகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்யும் கடமையை அவர்கள் விட்டிருப்பார்களா?

இன்று சமுதாயம் எழுபத்திரண்டு கூட்டங்களாகப் பிரிந்துள்ள நிலையில் அதை ஏன் தடுக்க வராமல் உள்ளனர்? முஸ்லிம் நாடுகள் தமக்கிடையே போர் செய்து கொண்டு பல்லாயிரம் உயிர்கள் பலியாகிக் கொண்டு இருக்கும் போது அவர்கள் வந்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே? ஏன் அதைச் செய்யவில்லை? தூதருக்கு அதுதானே முதல் கடமை?

அவர்கள் உயிருடன் இருந்தால் அவர்களைக் குழி தோண்டி அடக்கம் செய்வது ஆகுமா? உயிருடன் உள்ளவரைத் தான் நபித்தோழர்கள் அடக்கம் செய்தார்களா? இப்படிச் சிந்தித்துப் பார்த்தால் இது போல் உளற மாட்டார்கள்.

திருக்குர்ஆனில் உலகம் உள்ளளவும் கடைப்பிடிக்க வேண்டிய போதனைகளும் உள்ளன. அருளப்பட்ட காலத்து வரலாறும் உள்ளது. அது அந்தக் காலத்தை மட்டும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும்.

உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற சொல்லுக்கு இவர்கள் கூறுகிறபடி பொருள் கொண்டால் நபித்தோழர்களும் உயிரோடு உள்ளனர் என்று அவர்கள் சொல்ல வேண்டும். உங்களிடையே என்று யாரை அல்லாஹ் அழைத்துப் பேசுகிறார்களோ அவர்களும் உயிருடன் உள்ளனர். அவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கலந்து வாழ்கின்றனர் என்று சொல்ல வேண்டும். அவ்வாறு இவர்கள் சொல்வதில்லை.

மேலும் இவ்வசனத்துக்கு முன்னுள்ள வசனங்களும் இவர்களின் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும் என்று இதற்கு முன்னுள்ள 49:2 வசனம் கூறுகிறது.

நபிகள்  நாயகத்தின் குரலை விட மற்றவர்கள் குரலை உயர்த்தக் கூடாது என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அவர்களின் குரல் எந்த அளவில் இருக்கும் என்பதை அன்றைய காலத்தில் வாழ்ந்த மக்கள் தான் அறிய முடியும். அவர்களின் குரலைக் கேட்டு அதைவிட குரலைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றால் இது அன்றைய காலத்தவர்களுக்குத் தான் பொருந்தும். எனவே இது வரலாற்று நிகழ்வாகச் சொல்லப்படுகிறதே தவிர நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பார்கள் என்ற கொள்கையைச் சொல்லவில்லை என்பது இதில் இருந்து உறுதியாகின்றது.

மேலும் அதற்கு அடுத்த வசனத்தைப் பாருங்கள். தீய கொள்கை உள்ளவர்களுக்கு மரண அடியாக அமைந்துள்ளது.

49:4 اِنَّ الَّذِيْنَ يُنَادُوْنَكَ مِنْ وَّرَآءِ الْحُجُرٰتِ اَكْثَرُهُمْ لَا يَعْقِلُوْنَ‏

49:5 وَلَوْ اَنَّهُمْ صَبَرُوْا حَتّٰى تَخْرُجَ اِلَيْهِمْ لَـكَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ

(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள். நீர் அவர்களிடம் வரும் வரை அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்திருந்தால் அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 49:4-5)

நபியின் வீட்டுக்கு வெளியே நின்று அவர்களை அழைக்கக் கூடாது; அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது. அப்படியானால் இவர்கள் மதீனாவுக்குச் சென்று நபியவர்களின் வீடாகிய அவர்களின் அடக்கத்தலத்தின் வாசலில் காத்திருக்க வேண்டும். நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டும். கியாமத் நாள் வரை இவர்களுக்கு வாழ்நாள் அளிக்கப்பட்டு  இவர்கள் காத்திருந்தாலும் நபியவர்கள் வெளியே வந்து இவர்களைச் சந்திக்க மாட்டார்கள்.

இவ்வசனம் அருளப்பட்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்வது வரை வாழ்ந்த முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைத் தான் இவ்வசனம் கூறுகிறது என்பது இதிலிருந்தும் உறுதியாகிறது.

பின்வரும் வசனமும் இது போன்றது தான். இவர்களின் தீய கொள்கைக்கு ஆதாரமாக ஆகாது.

3:101 وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ‌ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்குக் கூறப்படும் நிலையிலும், அவனது தூதர் (முஹம்மத்) உங்களுடன் இருக்கும் நிலையிலும் எப்படி (ஏக இறைவனை) மறுக்கின்றீர்கள்? அல்லாஹ்வைப் பற்றிக் கொள்பவர் நேரான வழியில் செலுத்தப்பட்டு விட்டார்.

(அல்குர்ஆன்: 3:101)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் நடப்பதை எப்போது அறிவார்கள், எப்போது அறிய மாட்டார்கள் என்பதை அல்லாஹ் பின்வரும் வசனங்களில் தெளிவுபடுத்துகிறான்.

13:40 وَاِنْ مَّا نُرِيَـنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَـتَوَفَّيَنَّكَ فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ وَعَلَيْنَا الْحِسَابُ‏

(முஹம்மதே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ (அதைப்பற்றி உமக்கென்ன?) எடுத்துச் சொல்வதே உமது கடமை.81 விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.

(அல்குர்ஆன்: 13:40)

40:77 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِىْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّيَنَّكَ فَاِلَيْنَا يُرْجَعُوْنَ

(முஹம்மதே!) பொறுப்பீராக! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை. எனவே அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நாம் காட்டினால் அல்லது உம்மை நாம் மரணிக்கச் செய்தால் நம்மிடமே அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்.

(அல்குர்ஆன்: 40:77)

அந்த மக்களுக்கு எச்சரித்தவற்றில் சிலதைக் காட்டினால் என்பதற்கு எதிர்ச்சொல்லாக மரணிக்கச் செய்தால் என்ற சொல் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உம்மை மரணிக்கச் செய்யாமல் விட்டு வைத்தால் நீர் அதனைக் காண்பீர். மரணித்து விட்டால் அவர்களுக்கு நேரும் கதியைக் காண மாட்டீர் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லித் தருகிறான். எனவே நபிகள் நாயகத்தை அல்லாஹ் கைப்பற்றிக் கொண்ட பின்னர் இவ்வுலகில் நடப்பதை அறியும் ஆற்றல் நபியவர்களுக்கு அறவே இல்லை என்பதை இவ்விரு வசனங்களும் அழுத்தமாகச் சொல்கின்றன.

திருக்குர்ஆனில் கூறப்படும் வரலாற்று நிக்ழ்ச்சிகளை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதைப் பின்வரும் வசனத்திலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

5:82 لَـتَجِدَنَّ اَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الْيَهُوْدَ وَالَّذِيْنَ اَشْرَكُوْا‌ ۚ وَلَـتَجِدَنَّ اَ قْرَبَهُمْ مَّوَدَّةً لِّـلَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ قَالُوْۤا اِنَّا نَصٰرٰى‌ ؕ ذٰ لِكَ بِاَنَّ مِنْهُمْ قِسِّيْسِيْنَ وَرُهْبَانًا وَّاَنَّهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! “நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.

(அல்குர்ஆன்: 5:82)

முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களாக கிறித்தவர்களைக் காண்பீர்கள் என்று சொல்லப்படுவதன் கருத்து என்ன? இவ்வசனம் அருளப்படும் போது வாழ்ந்த கிறித்தவர்கள் அப்படி இருந்தார்கள் என்பதுதான் இதன் பொருள்.

காலாகாலம் கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின் கிறித்தவர்கள் முஸ்லிம்களின் முதல் எதிரிகளாக இருந்தார்கள் என்பதை சிலுவைப் போர்களும், இன்றுள்ள கிறித்தவ நாடுகளின் அத்துமீறல்களும் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. எனவே இது அன்றைய காலத்து வரலாற்று நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை. அது போல் தான் உங்களுடன் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்ற வசனத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை மற்றவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

وَلَاۤ اَنْ تَـنْكِحُوْۤا اَزْوَاجَهٗ مِنْۢ بَعْدِهٖۤ اَبَدًا ؕ اِنَّ ذٰ لِكُمْ كَانَ عِنْدَ اللّٰهِ عَظِيْمًا‏

அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்: 33:53)

ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது மனைவியை மணந்து கொள்ளக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை யாரும் மணந்து கொள்ளக் கூடாது என்றால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதுதான் காரணம் என தீய கொள்கை உடையவர்கள் வாதிடுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதையும், அவர்கள் இவ்வுலகில் நடப்பதை அறிந்து கொள்ளக் கூடிய நிலையில் இல்லை என்பதையும் தெளிவான சான்றுகள் மூலம் முன்னர் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்தின் மனைவியரை மற்றவர்கள் மணக்கக் கூடாது என்ற சட்டம் தான் மேற்கண்ட வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இருப்பது தான் அதற்குக் காரணம் என்று சொல்லப்படவில்லை.

இவர்களின் இந்த வாதம் தவறு என்பதை இன்னொரு சட்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

4:22 وَلَا تَنْكِحُوْا مَا نَكَحَ اٰبَآؤُكُمْ مِّنَ النِّسَآءِ اِلَّا مَا قَدْ سَلَفَ‌ ؕ اِنَّهٗ كَانَ فَاحِشَةً وَّمَقْتًا ؕ وَسَآءَ سَبِيْلًا‏

(உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.) 

ஒரு மனிதனின் தந்தை, அவனது தாய் அல்லாத இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்தத் தந்தை இறந்த பின்னர் அவரது மனைவியை மகன் மணந்து கொள்ளக் கூடாது என்று (அல்குர்ஆன்: 4:22) வசனம் கூறுகிறது. 

தந்தைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதை இதனால் கெடும் என்பது தான் இந்தத் தடைக்குக் காரணம் என்று அறிவுடைய மக்கள் விளங்கிக் கொள்வார்கள். இல்லை. அந்தத் தந்தை செத்த பின்பும் உயிரோடு இருக்கிறார் என்பதற்காகத் தான் அவரது மனைவியை அவரது மகன் மணக்க்க் கூடாது என்று சட்டம் போடப்பட்டுள்ளது என்று அறிவுடைய மக்கள் புரிய மாட்டார்கள்.

நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்கக் கூடாது என்பது தான் இதன் பொருள்.

நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.