04) இல்லத் (மறைமுக குறையுள்ள) ஹதீஸ்கள்

முக்கிய குறிப்புகள்: ஹதீஸ் கலை

முஅல்லல்

ஒரு ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது எவ்விதக் குறைபாடும் இல்லாததைப் போன்று இருக்கும். ஆனால் ஆழமாக ஆய்வு செய்யும் போது ஹதீஸின் நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் குறை காணப்படும். இத்தகயை செய்திக்கே முஅல்லல் என்று கூறப்படும்.

அதாவது குறையானது மறைமுகமாகவும், பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

இல்லத் என்றால் என்ன?

மறைமுகமானதாகவும், ஹதீஸின் நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தக் கூடியதாகவும் உள்ள குறைகளுக்கே ”இல்லத்” என்று கூறப்படும்

இது போன்ற குறைகளை அறிகின்ற வழிமுறைதான் ஹதீஸ் கலையில் மிக மிக முக்கியமானதும், நுட்பமானதும் ஆகும். ஹதீஸ் கலையில் மிக ஆழ்ந்த ஞானமுடையவர்களுக்கே தவிர வேறு யாரும் இது போன்ற நுட்பமான குறைகளைக் கண்டறிய முடியாது. இமாம் புகாரி, இப்னுல் மதீனி, அஹ்மத், அபூ ஹாதிம், தாரகுத்னீ போன்ற இமாம்கள்தான் இத்துறையில் மிகவும் ஆழ்ந்த ஞானம் மிக்கவர்கள்.

இல்லத் எவ்வாறு கண்டு பிடிக்கப்படும்?

ஒரு அறிவிப்பாளர் மற்றவர்களுக்கு மாற்றமாக தனித்து அறிவிப்பதைக் கொண்டு இது போன்ற மறைமுகமான குறைகள் கண்டறியப்படும்.

நபித்தோழர் விடுபட்ட முர்ஸலான ஒரு செய்தியை , நபித்தோழர் விடுபடாமல் ”மவ்சூலாக” ஒரு அறிவிப்பாளர் அறிவித்துவிடுவார்.

அல்லது நபித்தோழரின் சொந்தக் கூற்றாக (மவ்கூஃப்) உள்ள செய்தியை நபி கூறியதாக (மர்ஃபூவு) அறிவிப்பாளர் அறிவித்திருப்பார்.

அல்லது இரண்டு வெவ்வேறு ஹதீஸ்களின் வாசகங்களை கலந்து ஒரே ஹதீஸாக அறிவித்து விடுவார்.

அல்லது இது போன்ற வேறு ஏதாவது தவறினைச் செய்திருப்பார்.

இவ்வாறு தவறாக அறிவித்த அறிவிப்பாளரின் அறிவிப்பே ”முஅல்லல்” எனப்படும்.

அனைத்து அறிவிப்புகளையும் ஒன்றிணைத்து, அறிவிப்பாளர்கள் எவ்வாறு முரண்படுகின்றனர் என்பதையும், பலமான அறிவிப்பாளர் யார்? பலவீனமான அறிவிப்பாளர்கள் யார்? என்பதையும் அறிவதின் மூலமே தவறிழைத்த அறிவிப்பாளரைக் கண்டறிய முடியும்.

பெரும்பாலும் இது போன்ற ”இல்லத்” அறிவிப்பாளர் தொடரில்தான் நிகழும். இது பற்றி நாம் மேலே விளக்கி விட்டோம்.

சில நேரங்களில் ஹதீஸின் கருத்திலும் இது போன்ற மறைமுகமான, நம்பகத்தன்மையில் பாதிப்பு ஏற்படுத்தும் தவறுகள் நிகழ்ந்து விடும். உதாரணமாக நபியவர்கள் தொழுகையில் கிராஅத்தைத் துவங்குவதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள். அதை இரகசியமாகக் கூறுவார்கள் என்றும் வந்துள்ளது. ஆனால் ஒரு அறிவிப்பில் நபியவர்கள் பிஸ்மில்லாஹ் கூறமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அறிவிப்புகளையும் இணைத்துப் பார்க்கும் போதே இந்தக் குறை கண்டறியப்படும்.

இது போன்ற மறைமுகமான, பாதிப்பு ஏற்படுத்தும் குறைகளை உடைய ஹதீஸே ”முஅல்லல்” எனப்படும்.