04) அர்ரஹ்மான் – அர்ரஹீம்
4) அர்ரஹ்மான் – அர்ரஹீம்
ரஹ்மான், ரஹீம் ஆகிய இரு சொற்களும் ரஹிம என்ற மூலத்திலிருந்து பிறந்ததாகும். ரஹிம என்ற சொல்லின் பொருள் அருளினான் அல்லது இரங்கினான் என்பதாகும். ஒரே மூலத்திலிருந்து இவ்விரு சொற்களும் பிறந்தாலும் இரண்டு சொற்களுக்கும் அருள் புரிவான் என்ற பொதுவான கருத்து இருந்தாலும் சிறிய வித்தியாசமும் உள்ளது.
வேண்டியவன், வேண்டாதவன், விருப்பமானவன், விருப்பமில்லாதவன் என்ற பாகுபாடு இன்றி அருள் புரிபவன் ரஹ்மான் என்றும், வேண்டியவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அருள் புரிபவன் ரஹீம் என்றும் அரபு மொழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வுலகில் ரஹ்மானாகவும், இரு உலகிலும் ரஹீமாகவும் இருப்பவனே என்று அல்லாஹ்வைக் குறிப்பிடும் வழக்கம் இருந்து வந்தது.
இவ்வுலகைப் பொருத்தவரை அவன் அருள் புரியும் போது நல்லவன், கெட்டவன் என்ற அடிப்படையில் செய்வதில்லை. அவனை மறுக்கக் கூடியவர்களுக்கும் இவ்வுலகில் பாக்கியங்களை வழங்கி வருகிறான். எனவே இவ்வுலகைப் பொருத்தவரை அவன் ரஹ்மானாக உள்ளான்.
அதே சமயம் தனது நல்லடியார்களுக்கு மட்டும் மறுமையில் பிரத்யோகமான அருளை வழங்குவான். இம்மையிலும் கூட வேண்டியவர்களுக்கு மட்டும் பிரத்யோகமாக அருள் புரிகிறான். அதனால் தான் இரு உலகிலும் ரஹீமாக இருப்பவனே என்று குறிப்பிடப்படுகிறது. சுருக்கமாக கூறுவதென்றால் ரஹ்மானுக்கு அளவற்ற அருளாளன் என்றும், ரஹீமுக்கு நிகரற்ற அன்புடையவன் என்றும் பொருள் கொள்ளலாம்.
அருள், இரக்கம் என்பது வேண்டியவன் வேண்டாதவன் என்ற அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. ஒரு பிச்சைக்காரனுக்குக் கூட அருள் செய்யலாம். அவன் நமக்கு வேண்டியவனோ, தெரிந்தவனோ கிடையாது. ஏன் நாய்க்குக் கூட அருள் – இரக்கம் காட்டலாம். இதனால் அதை நேசிக்கிறோம் என்று பொருள் இல்லை.
அன்பு என்பது வேண்டியவர்கள் மீது மட்டுமே ஏற்படுவதாகும். நண்பனுக்கு ஒரு பொருளை நாம் கொடுக்கும் போது அன்பும் உள்ளது. அருளும் உள்ளது. அதையே ஒரு பிச்சைக்காரனுக்குப் போடும் போது அருள் மட்டுமே உள்ளது. ரஹ்மான் என்பதற்கும், ரஹீம் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு இது தான்.
எல்லா மனிதர்களுக்கும் அவன் ரஹ்மானாகவும் – அளவற்ற அருளாளனாகவும் – நல்ல மனிதர்களுக்கு மட்டும் ரஹீமாகவும் – நிகரில்லா அன்பு உடையவனாகவும் இருக்கிறான் என்பது அர்ரஹ்மானிர் ரஹீம் என்ற சொற்றொடரின் பொருளாகும். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஏன் கூற வேண்டும் என்பதற்கு இப்போது கூடுதல் விளக்கம் கிடைக்கிறது.
அவன் ரப்புல் ஆலமீனாக இருப்பதனாலும், அவன் ரஹ்மானாக இருப்பதனாலும், அவன் ரஹீமாக இருப்பதனாலும், அவனுக்கே புகழனைத்தும், என்று காரணத்துடன் விளங்கிக் கொள்கிறோம்.
ரஹ்மான் என்ற திருப்பெயர் எந்தச் சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் குர்ஆனிலோ நபிமொழிகளிலோ, நபித்தோழர்களின் பேச்சுக்களிலோ பயன்படுத்தப்பட்டதே இல்லை. அல்லாஹ் என்ற சொல் எவ்வாறு எந்தச் சந்தர்ப்பத்திலும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லையோ அதே போல் ரஹ்மான் என்பதும் வேறு எவருக்கும் பயன்படுத்தப்படவில்லை.
அல்லாஹ்வின் திருப்பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா?
ரஹீம் என்ற திருப்பெயரும் அல்லாஹ்விற்குரிய பெயரேயாகும். ஆனால் ரஹீம் என்ற இந்தச் சொல் அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கும் சில சமயங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு. திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இதற்குச் சான்றுகள் உள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் புகழ்ந்துரைக்கும் போது ரஹீம் என்ற அடைமொழியை(அல்குர்ஆன்: 9:128) ➚வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறான்.
ரஹீம் என்ற தன் பெயரையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதால் அல்லாஹ்வைப் போலவே அவர்களும் நிகரற்ற அன்புடையவர்கள் தாம் என்று சில அறிவீனர்கள் எண்ணுகின்றனர்.
ரஹீம் என்ற சொல்லுக்கு நிகரற்ற அன்புடையவன் என்று பொருளிருப்பதைப் போல் இரக்க குணம் உள்ளவர் என்ற பொருளும் உண்டு. அல்லாஹ்வுக்கு அதைப் பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு நிகரற்ற அன்புடையவன் என்ற பொருளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அந்த வார்த்தை பயன்படுத்தப்படும் போது இறைவனின் அந்தஸ்தைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காக இரக்க குணம் கொண்டவர் என்ற பொருளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட இத்தகையோர் உணர்வதில்லை.
ரஹீம் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் தான் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான் என்று இவர்கள் எண்ணிக் கொண்டதே இவர்களின் தவறான விளக்கத்துக்கு காரணமாகும். ரஹீம் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும், நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதை இவர்கள் அறியவில்லை.
முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே (ரஹீம்களாகவும்) இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர்.
இவ்வசனத்தில் நபித்தோழர்களை ரஹீம்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் ரஹீம்களாக (இரக்கம் மிகுந்தவர்களாக) உள்ளவர்களுக்கே அருள் புரிகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
(புகாரி: 1284, 5655, 6655, 7377, 7448)
மனிதர்கள் அனைவரும் ரஹீம்களாக இருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே கூறியுள்ளார்கள். நபித்தோழர்களும், மனிதர்கள் அனைவரும் நிகரற்ற அன்புடையவர்கள் என்று இவர்கள் பொருள் கொள்வார்களா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்று நினைத்துக் கொண்டு அல்லாஹ்வுக்குச் சமமாக அவர்களைக் கருதினார்கள். முடிவில் ரஹீம் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமின்றி நபித்தோழர்களுக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தச் சிறப்பும் இல்லாமல் இவர்கள் ஆக்கிவிட்டார்கள்.
பொதுவாக அல்லாஹ்வின் பண்புகளைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கு சில வரையறைகள் உள்ளன. அவற்றை விளங்காத காரணத்தினாலேயே இப்படியெல்லாம் கூறுகின்றனர்.
அல்லாஹ்வின் பண்புகளில் ஸமீவுன் என்பதும் ஒன்று. செவியுறுபவன் என்பது இதன் பொருள். இதே பண்பு மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் செவியுறுபவன் என்று தான் பொருள். எனவே அல்லாஹ்வும், மனிதனும் ஒன்று தான் எனக் கூறக் கூடாது. வார்த்தையை மட்டும் பார்க்காமல் யாருக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அவர்களது தகுதியையும் கவனத்தில் கொண்டு தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனக்கு நிகராக யாருமில்லை என்று அல்லாஹ் திட்டவட்டமாக அறிவித்து விட்டதால் அல்லாஹ்வை ஸமீவுன் என்று குறிப்பிடும் போது அவனது தகுதிக்கேற்ப அதைப் புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை ஓசைகளையும் ஒரே நேரத்தில் கேட்பவன், எவ்வளவு தொலைவிலிருந்தாலும் கேட்பவன், எந்த நேரத்திலும் கேட்பவன், சுருங்கச் சொன்னால் அனைத்தையும் செவியுறுபவன் என்று கூறலாம்.
மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன் என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது. இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும். இதை விளங்காதது தான் குழப்பத்திற்குக் காரணமாகும்.
ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை(அல்குர்ஆன்: 76:2) ➚வசனத்தில் காணலாம்.
ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை(அல்குர்ஆன்: 11:59, 14:15, 40:35) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை(அல்குர்ஆன்: 17:14) ➚வசனத்தில் காணலாம்.
ஃகபீர் என்ற தனது பண்பை(அல்குர்ஆன்: 25:59) ➚வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.
ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை(அல்குர்ஆன்: 12:42, 12:50, 12:23) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை(அல்குர்ஆன்: 12:30, 12:51, 12:78, 12:88) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை(அல்குர்ஆன்: 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28) ➚ஆகிய வசனங்களில் காணலாம்.
அலீ என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) மாற்றவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபியிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.
அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.
அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.
கருணைக் கடல்
அல்லாஹ் தன்னை ரப்புல் ஆலமீன் என்று கூறியது மட்டும் போதாதா? அத்துடன் ஏன் இந்த இரண்டு பண்புகளையும் தொடர்ந்து கூற வேண்டும்? என்பதை இப்போது ஆராய்வோம்.
ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி என்று அல்லாஹ் தன்னை அறிமுகம் செய்யும் போது, மனித உள்ளங்களில் அல்லாஹ்வைப் பற்றி சில தப்பான அபிப்பிராயங்கள் தோன்றுவது இயல்பு.
அகில உலகுக்கும் அதிபதி (ரப்புல் ஆலமீன்) என்ற அறிமுகத்தைச் செவியுறும் மனிதன் சாதாரண அதிகாரம் படைத்த தலைவர்களே கொடூரமானவர்களாக இருக்கும் போது, அகில உலகுக்கும் அதிபதியாகிய அல்லாஹ் எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கும் அல்லாஹ் இவர்களை விடவும் கொடூரமானவனாக இருப்பானோ? என்று எண்ணலாம்.
இப்படிப்பட்ட எண்ணம் மனித உள்ளங்களில் தோன்றாமலிருக்கவும், ஏற்கனவே தோன்றி இருந்தால் அதை நீக்கவும் ரப்புல் ஆலமீன் என்ற பண்பைத் தொடர்ந்து அர்ரஹ்மான், அர்ரஹீம் என்ற அழகிய திருப்பெயர்களை அல்லாஹ் கூறுகிறான்.
நான் ரப்புல் ஆலமீன் அகில உலகுக்கும் அதிபதி. எனக்கு மேல் எந்த சக்தியும் கிடையாது. நான் எது செய்தாலும் எவரும் என்னிடம் கேள்வி கேட்க முடியாது. உங்களின் சின்னஞ்சிறு தவறுகளையும் கூட நான் விசாரித்துத் தண்டனை வழங்க முடியும். ஆனாலும் நான் அப்படிச் செய்ய மாட்டேன். ஏனெனில் நான் அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) நிகரற்ற அன்புடையவன் (அர்ரஹீம்)
நீங்கள் பார்த்து பழகிய உங்கள் தலைவர்களை விட என்னிடம் அதிகாரமும், ஆற்றலும், வல்லமையும் இருந்தாலும் நான் அர்ரஹ்மானாகவும், அர்ரஹீமாகவும் இருக்கிறேன் என்று பொருத்தமான இடத்தில் இந்தப் பண்புகளையும் அமைத்து விடுகிறான் அல்லாஹ். இவ்வாறு அளவற்ற அருளாளனாக இருப்பது எவரது வற்புறுத்தலுக்காகவோ, அல்லது வேண்டுகோளுக்காகவோ அல்ல. மாறாக தன் மீது தானே இதை விதியாக்கிக் கொண்டதாக இன்னொரு இடத்தில் குறிப்பிடுகிறான்.
உங்கள் இறைவன் தன் மீது ரஹ்மத்தை (அருளை அன்பை) விதியாக்கிக் கொண்டான்.
முஆதே! அல்லாஹ்வுக்கு மனிதர்கள் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்? அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். அல்லாஹ்வுடன் எவரையும் இணையாக்காது அவனை வணங்குவதே அந்தக் கடமை என்று கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு மனிதர்கள் இணைவைக்காது இருந்தால் அவர்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை எது என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள் என்றேன். இணைவைக்காத எவரையும் நரகில் நுழையச் செய்யாதிருப்பது தான் அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்றார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
தன் மீது எதுவும் கடமை இல்லாதிருந்தும், எவரும் தன் மீது எதையும் திணிக்க முடியாது என்று இருந்தும் அருளையும் அன்பையும் தன் மீது கடமையாக அல்லாஹ் ஆக்கிக் கொள்கிறான் என்றால் அவனது அளவற்ற அருளையும் நிகரற்ற அன்பையும் என்னவென்பது? திருக்குர்ஆனின் பலநூறு வசனங்களும் நபிகள் நாயகம் (ஸல்) மவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளுக்கு விளக்கவுரைகளாகவே அமைந்துள்ளன.
யாரேனும் நல்ல காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி அதைச் செய்ய இயலாது போனால் (அவன் எண்ணியதற்காக) ஒரு முழுமையான நன்மையை அல்லாஹ் அவனுக்காகப் பதிவு செய்கிறான். நல்ல காரியம் ஒன்றைச் செய்திட எண்ணி, அதைச் செய்து விட்டாலோ (அவரின் எண்ணத் தூய்மைக்கேற்ப) பத்து முதல் எழுநூறு மடங்குகள் வரை அல்லாஹ் நன்மைகளைப் பதிவு செய்கிறான்.
யாரேனும் தீய காரியம் ஒன்றைச் செய்ய எண்ணி (அல்லாஹ்வை அஞ்சி) அதைச் செய்யாது விட்டு விட்டால் அதற்கும் ஒரு நன்மையைப் பதிவு செய்கிறான். தீய காரியத்தைச் செய்ய எண்ணி அதைச் செய்து விட்டால் அதற்காக ஒரு தீமையைத் தான் அல்லாஹ் பதிவு செய்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இந்த நபிமொழியை மீண்டுமொருமுறை படித்துப் பாருங்கள்! அவனது அளவற்ற அருளையும், அன்பையும் இதை விட வேறு வார்த்தைகளில் விளக்க முடியாது. நல்ல காரியம் ஒன்றைச் செய்தால் ஒரு கூலி தருவேன்; செய்ய நினைத்ததற்காக கூலி எதுவும் தர மாட்டேன் என்று அல்லாஹ் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பாதகம் எதுவும் வந்து விடாது.
அவன் அளவற்ற அருளாளன் அல்லவா? அதனால் தான், நன்மையைச் செய்ய எண்ணியதற்கும் கூலி தருகிறான். செய்துவிட்டால் பத்து முதல் எழுநூறு வரை கூலி தருவேன் என்கிறான். தீமையைச் செய்ய எண்ணினால் ஒரு தண்டனை உண்டு என்று அவன் கூறினாலும் அருளாளன் என்ற பண்புக்குப் பங்கம் எதுவும் ஏற்படப் போவதில்லை. இந்த அளவற்ற அருளாளனோ தீமைகளைச் செய்ய எண்ணி அதைச் செய்யாது விட்டால், அதற்காகத் தண்டிக்க மாட்டான் என்பதையும் கடந்து அதற்கும் கூலி தருவேன் என்கிறான்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் ஈடுபட்டிருந்தோம். அப்போது நோயின் காரணமாக போருக்கு வராமல் மதீனாவிலேயே சிலர் தங்கி விட்டனர். இந்த அறப்போருக்காக நீங்கள் மேற்கொண்ட சிரமமான பயணம் மற்றும் போரில் நீங்கள் சந்திக்கும் துன்பம் ஆகியவற்றுக்கு நீங்கள் அடையும் கூலியைப் போல் அவர்களும் பெறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஒரு மூமினான அடியானுக்கு மிகவும் விருப்பமான ஒருவரை நான் கைப்பற்றிக் கொள்ளும் போது, பொறுமையுடன் என்னிடம் நன்மையை எதிர்பார்த்தால் அவனுக்கு சொர்க்கத்தைக் கூலியாக வழங்கியே தீருவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஒரு அடியான் காலரா நோயினால் தாக்கப்பட்டு, தனது ஊரிலேயே பொறுமையுடனும், நன்மையை எதிர்பார்த்தும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறு எதுவும் தனக்கு ஏற்பட முடியாது என்ற உறுதியான நம்பிக்கையுடனுமிருந்தால் அவனுக்கு ஷஹீத் உடைய கூலி கிடைப்பது நிச்சயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
எனது அடியானின் இரு கண்களையும் நான் (சோதிக்கும் முகமாக) பழுதாக்கி விடும் போது அவன் பொறுமையை மேற்கொண்டால் அவ்விரு கண்களுக்கும் பகரமாக அவனுக்கு சொர்க்கத்தை நான் வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஒரு முஸ்லிமுக்கு நோய், கவலை, தொல்லை மற்றும் முள் குத்துதல் போன்ற துன்பங்கள் ஏற்பட்டால் அவற்றை அவன் செய்த தவறுகளுக்காக பிராயச்சித்தமாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), அபூஸயீத் (ரலி)
இந்த நபிமொழிகளும், இந்தக் கருத்தில் அமைந்துள்ள ஏனைய நபிமொழிகளும் அர்ரஹ்மான், அர்ரஹீம் ஆகிய பண்புகளின் தெளிவுரைகளாகும். மனிதன் விரும்பிச் செய்கின்ற காரியங்களுக்குக் கூலி கொடுப்பது தான் தர்மம். மனிதன் விரும்பாமல், அவனுக்குச் சம்பவிக்கும் துன்பங்களுக்கும் கூட கூலி உண்டென்றால் அவனது அருளையும், அன்பையும் எவ்வாறு வர்ணிக்க முடியும்?
மனிதன் தன்னுடைய மகிழ்ச்சிக்காக செய்கின்ற காரியங்களையும் நல்லறமாக அந்த ரஹ்மான் கருதுகிறான். மனைவியுடன் ஒருவன் கூடும் போது தன்னுடைய இச்சையைத் தணித்துக் கொள்ள வேண்டும்; தனக்கென சந்ததியை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தின் அடிப்படையிலேயே கூடுகிறான்.
இவன் இன்பம் அடைவதற்காக செய்யும் இது போன்ற காரியங்களுக்காக எவரும் கூலி எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. இதற்கும் கூட கூலி தருவேன் என்று சொன்னால் அவனை விட அருளாளன், அன்புடையவன் எவனிருக்க முடியும்?
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் கூடுவதும் நல்லறமே என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! தன் இச்சையைத் தணித்துக் கொள்ளும் (இது போன்ற) காரியங்களுக்கும் கூலி கிடைக்குமா என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அல்லாஹ் தடை செய்துள்ள வழிகளில் இந்த இச்சையைத் தணித்துக் கொண்டால் அதற்காக அவனுக்குத் தண்டனை உண்டல்லவா? அது போலவே அனுமதிக்கப்பட்ட முறையில் அவன் தன் இச்சையைத் தணித்துக் கொள்வதற்கும் கூலி உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
உன் மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற கவள உணவும் நல்லறமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
(புகாரி: 56, 1296, 5668, 5373)
மனிதன் தனது சுய நலனுக்காக மனைவியுடன் நடந்து கொள்கின்ற முறைக்கும் அல்லாஹ் கூலி தருகிறான் என்பது அவனது அளவற்ற அருளை விளக்கிடப் போதுமானதாகும். மனிதன் மிகவும் அற்பமாகக் கருதுகின்ற, செய்வதற்கு எவருக்கும் எளிதில் சாத்தியமாகின்ற காரியங்களுக்குக் கூட அந்த ரஹ்மான் கூலி வழங்குவதாகக் கூறுவதும், அளவற்ற அருளாளன் என்ற பண்பின் வெளிப்பாடேயாகும்.
இரண்டு நபர்களுக்கிடையே நீதி வழங்குவதும் நல்லறமே! ஒரு மனிதன் அவனது வாகனத்தில் ஏற உதவுவதும் ஏற்றி வைப்பதும் நல்லறமே! அவனது பொருட்களை அவனுடைய வாகனத்தில் ஏற்றி வைப்பதும் நல்லறமே! நல்ல சொற்களைப் பேசுவதும் நல்லறமே.
தொழுவதற்காக நடந்து செல்லும் போது நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் நல்லறமே! பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதும் நல்லறமே! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது உட்பட எந்த நல்லறத்தையும் இலேசாக நீ எண்ணி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
அல்லாஹ்வின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்! அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூல்கள்:(புகாரி: 2518),(முஸ்லிம்: 119)
இந்த நபிமொழிகள் யாவும் இந்த ரஹ்மான் ரஹீம் ஆகிய இரு பண்புகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும் சான்றுகளாகும். ரப்புல் ஆலமீன் என்றவுடன் என்னைக் கொடூரமானவனாக எண்ணி விடாதீர்கள்! என்னால் எதுவும் செய்ய முடியும் என்றாலும் நான் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன் என்பதைச் சொல்கிறான்.
அர்ரஹ்மான் அர்ரஹீம் ஆகிய அழகுத் திருப்பெயர்கள் மனித உள்ளங்களில் தோன்றுகின்ற மற்றொரு ஐயத்தையும் அகற்றி, இறைவனின் பால் மனிதனை நெருங்கி வருவதற்குத் தூண்டுகின்றன.
பாவிகளுக்கும் அருளுபவன்
எவரிடமிருந்தாவது அளவுக்கதிகமான உதவிகளை ஒருவன் பெற்று விட்டால் அவருக்கு விசுவாசமாக நடக்க வேண்டுமென்று விரும்புகிறான். ஒரு சில சந்தர்ப்பங்களில் அவருக்கு விசுவாசமாக நடந்து கொள்ளஓ தவறி விடும் போது உதவி செய்த மனிதனைச் சந்திப்பதைத் தவிர்க்கிறான். தயக்கம் காட்டுகிறான். எந்த முகத்துடன் அவனைச் சந்திப்பது என்று வெட்கமடைகிறான். இதே கண்ணோட்டத்துடனேயே அல்லாஹ்விடத்திலும் மனிதன் நடந்து கொள்கிறான்.
நான் இறைவனுடைய பல கட்டளைகளைப் புறக்கணித்து வாழ்ந்து விட்டேன். எந்தத் தகுதியைக் கொண்டு நான் இறைவனிடம் என் தேவைகளைக் கேட்பேன்? இதன் காரணமாகவே இறைவனுக்கு நெருக்கமான அடியார்களைத் தேடிப் போய் என் கோரிக்கைகளை முன் வைக்கிறேன் என்று கூறக் கூடியவர்களை வாழ்க்கையில் நாம் சந்திக்கின்றோம்.
இவ்வாறு அவர்களைக் கூறச் செய்வது மேலே நாம் குறிப்பிட்ட அந்த மனநிலையேயாகும். அல்லாஹ்வைப் பற்றி அவனது அடியார்கள் அவ்வாறு கருதிவிடக் கூடாது என்பதற்காகவே ரப்புல் ஆலமீன் என்ற ஆதிக்கப் பண்பைத் தொடர்ந்து அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ் குறிப்பிட்டு மனிதனின் அந்த மனநிலையை மாற்றுகிறான்.
மனிதன் என்ற முறையில் நீங்கள் தவறுகள் செய்பவர்கள்! அதற்காக என்னை விட்டு நீங்கள் வெருண்டோட வேண்டியதில்லை. நான் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறேன் என அழைப்பு விடுக்கிறான். தன்னுடைய அருளும் அன்பும் எந்த அளவுக்கு விசாலமானது என்று மற்றொரு இடத்தில் அவன் கூறுவதைக் கவனிப்போம்.
தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!
இது எவ்வளவு அருள் நிறைந்த அழைப்பு! பாவிகளையே அழைத்து, என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்று கூறுவதென்றால் இந்தத் தாராளத்தை என்னவென்பது? மன்னிப்புக் கேட்கும் போது மன்னிப்பவர்களைப் பார்த்திருக்கிறான் மனிதன். மன்னிப்புக் கேளுங்கள் என்று அழைப்பு விடக் கூடியவன் அந்த ரஹ்மானைத் தவிர வேறெவரும் இருக்க முடியாது.
திருக்குர்ஆனின் எத்தனை இடங்களில் மன்னிப்புக் கேளுங்கள் என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறானோ, அத்தனையும் அவன் அளவற்ற அருளாளனாக (ரஹ்மானாக) நிகரற்ற அன்புடையோனாக (ரஹீமாக) இருப்பதனாலேயே. மன்னிப்புக்கு அழைப்பு விடுக்கும் அத்தனை வசனங்களும் இந்த இரண்டு பண்புகளின் விளக்கவுரைகளேயாகும்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு ஏதேனும் துரோகம் செய்து விட்டு, மன்னிப்புக் கேட்டால் அவன் மன்னிக்கக் கூடும்! மன்னிக்க மறுக்கவும் கூடும்! மன்னிக்கும் போது கூட வேண்டா வெறுப்பாகவே மன்னிப்பது மனித இயல்பு. ஆனால் அந்த ரஹ்மான் இந்த மன்னிப்பை எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதை அறிந்தால் அவனது அருளையும், அன்பையும் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
ஒரு மனிதன் வனாந்திரத்தில் காணாமல் போன தன் வாகனத்துக்காக தவித்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவனது வாகனம் கிடைத்து விட்டால் அவனது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தன் வாகனத்தைக் கண்ட போது ஒருவன் அடையும் மகிழ்ச்சியை விட தன் அடியான் தன்னிடம் பாவ மன்னிப்புக் கோரும் போது பன்மடங்கு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஒரு மனிதன் தன் ஒட்டகத்தின் மீதேறி பிரயாணம் செய்து கொண்டிருக்கிறான், யாருமற்ற வெட்ட வெளியில் அவனது ஒட்டகம் அவனை விட்டு ஓடவிடுகின்றது. அவனது உணவுப் பொருட்களும் குடிப்பதற்கான தண்ணீரும் அந்த ஒட்டகத்தின் மீது தான் இருந்தன. இனிமேல் தன் ஒட்டகம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து நம்பிக்கையிழந்து ஒரு மரத்தடியில் வந்து படுத்து விடுகிறான்.
இந்த நிலையில் திடீரென அவனது ஒட்டகம் அவன் கண் முன்னே நிற்கக் காண்கிறான். அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு இறைவா! நீ எனது அடிமை, நான் உனது எஜமான் என்று மகிழ்ச்சிப் பெருக்கில் என்ன சொல்கிறோம் என்பது கூடப் புரியாமல் கூறி விடுகிறான். இந்த மனிதன் அடையும் மகிழ்ச்சியை விட ஒரு அடியான் பாவ மன்னிப்புக் கேட்கும் போது அல்லாஹ் பெரு மகிழ்ச்சி அடைகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
இறைவனின் பேரருளைப் பெருங்கருணையைப் புரிந்து கொள்ள இதை விடவும் அழகான உவமையைக் கூறவே முடியாது. பாலைவனப் பெருவெளியில் பயணம் செய்பவன் யாருமற்ற வெட்ட வெளியில் தன் வாகனத்தை இழந்து விடும் போதே தன் கதையும் முடிந்து விட்டது என்ற முடிவுக்கு வந்து விடுவான்.
அவனது உணவும், தண்ணீரும் கூட அந்த வாகனத்துடன் காணாமல் போய் விட்டதென்றால் உயிர் பிழைப்போம் என்று எள்ளளவு கூட எதிர்பார்க்க மாட்டான். இத்துடன் எல்லாம் முடிந்தது என கையறு நிலைக்கு வந்த பின் அவனது வாகனம் திடீரென கிடைத்து விடுவது என்பது சாதாரண மகிழ்ச்சி தரும் விஷயமா என்ன?
தன் உயிரே திரும்பி வந்து விட்டதாக அதைக் கருதுவான். அந்த மகிழ்ச்சியைக் கூட நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவு அழகுற எடுத்துரைக்கிறார்கள்! நான் உனது அடிமை! நீ எனது எஜமான் என்று கூறுவதற்குப் பதில் நான் உனது எஜமான்! நீ எனது அடிமை என்று அவன் கூறுகிறான் என்றால் அவன் தலைகால் புரியாத அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறான்.
இதை விடவும் அதிகமாக அந்த ரஹ்மான் மகிழ்ச்சியடைகிறான் என்றால் அந்தக் கருணையை வர்ணிக்க எந்த மொழியில் தான் வார்த்தைகள் இருக்கும்? அல்லாஹ் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு இந்த மனிதன் என்ன செய்து விட்டான்? பாவம் செய்தவன் மன்னிப்புக் கேட்பது பெரிய சாதனை ஒன்றும் இல்லை. இது பாராட்டப்பட வேண்டிய பெரிய சமாச்சாரமும் இல்லை. மன்னிப்புக் கேட்பதன் மூலம் மனிதன் தனக்கு வருகின்ற தண்டனையைத் தவிர்த்துக் கொள்கிறான்.
இதற்காக அல்லாஹ் மகிழ்ச்சி அடைய என்ன இருக்கிறது? மன்னிக்க முடியாது என்று கூறினாலும் அவனை எதிர்க் கேள்வி கேட்க முடியாது. ஒரு படி மேலே போய் மன்னித்தேன். தொலைந்து போ என்று கூறலாம். அப்படிக் கூறினாலேயே அவனது அளவற்ற அருளுக்கும், நிகரற்ற அன்புக்கும் குறைவு ஏற்பட்டு விடப்போவதில்லை. ஆனால் பெருமகிழ்ச்சி அடைகிறான் என்றால், அந்த ரஹ்மானின் அன்புக்கும் அருளுக்கும் அளவேது?
அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் அருளியுள்ளான் அந்த அத்தியாயம் முழுவதும் அவன் மனித சமுதாயத்திற்கு அளித்துள்ள அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் கூறுகிறான். அந்த அத்தியாயம் முழுமையுமே ரஹ்மான் என்ற பண்பின் விளக்கவுரையாக அமைந்துள்ளதை உணரலாம்.
இன்னும் கணக்கிலடங்கா அருட்கொடைகளை வாரி வழங்கி தனது அளவற்ற அருளை உலகறியச் செய்கிறான். அவனது அருட்கொடைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் வசனங்கள் யாவுமே இந்தத் திருப்பெயர்களின் விளக்கவுரைகளேயாகும்.
ஒரு அடியான் ஒரு ஜான் என்னை நோக்கி வந்தால் நான் அவனை நோக்கி ஒரு முழம் வருகிறேன். அவன் ஒரு முழம் நெருங்கி வந்தால் நான் இரு கைகளையும் விரிக்கும் தூரம் நெருங்கி வருகிறேன். என்னை நோக்கி அவன் நடந்து வந்தால் நான் அவனை நோக்கி ஓடி வருகிறேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இறைவனுடைய அளவற்ற அருளையும், அன்பையும் எண்ணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே வியப்போடு சொல்லிக்காட்டுவதையும் கவனியுங்கள்!
அல்லாஹ்வை நம்பிய மூமினுடைய எல்லாக் காரியங்களும் அவனுக்கு நன்மை பயப்பதாகவே உள்ளன. அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டு அதனை அவன் பொறுத்துக் கொண்டால் அதுவும் அவனுக்கு நன்மை தான். அவனுக்கு நன்மை ஏற்பட்டு அதற்காக நன்றி செலுத்தினால் அதுவும் அவனுக்கு நன்மை தான். மூமினுக்குக் கிடைத்த இந்த நிலை மிகவும் ஆச்சரியமானதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
ரஹ்மான், ரஹீம் எனும் திருப்பெயர்களின் ஆழத்தை அறிந்து கொள்ள இவையே போதுமாகும். இனி மாலிகி யவ்மித்தீன் என்னும் பண்பைப் பார்ப்போம்.