40) வரம்பு மீறாதே

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

வரம்பு மீறாதே

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
«لاَ تُطْرُونِي، كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا عَبْدُ اللَّهِ، وَرَسُولُهُ»

கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈஸாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடியான் தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) அல்லாஹ்வின் அடியார்’ என்றும் ‘அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: உமர் (ரலி)

(புகாரி: 3445)

விளக்கம்:

இவ்வுலகில் இறைவனுக்கு நன்றியுள்ள அடியார்களாக வாழ்பவர்களை அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்களை அளவு கடந்து புகழ்ந்து, இறுதியில் கடவுள் தன்மையை வழங்கி கடவுளாக்கி வணங்க ஆரம்பித்து விடுகின்றனர். முந்தைய காலத்திலும் இது போன்று நல்லவர்கள் இறந்த பின்னர் அவர்களின் அடக்கத்தலங்களில் கட்டடங்களை எழுப்பி அதில் அவர்களின் உருவங்களைப் பொறித்து வழிபாடு செய்து வந்தவர்களைப் பற்றி, ‘இவர்கள் அல்லாஹ்விடம் மிகவும் மோசமானவர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி: 427)

தம் வாழ்நாளுக்குப் பிறகு இது போன்ற நிலை வந்து விடக் கூடாது என்பதற்காக, முந்தைய காலத்தில் எப்படி இறைத் தூதர் ஈஸா (அலை) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து கடவுளாக்கினார்களோ அது போன்று தம்மை ஆக்கி விடக் கூடாது என்று எச்சரித்தார்கள். இன்று மவ்லித் பாடலில் நபியவர்களை நோக்கி, நீங்களே அழித்து விடும் பெரும் பாவங்களை மன்னிப்பவர்’ என்று படிப்பவர்கள் இந்த நபிமொழியைக் கவனத்தில் கொள்ளட்டும்.