39) நபிகளாரின் வெறுப்பிற்குரியவர்
நபிகளாரின் வெறுப்பிற்குரியவர்
இது போன்ற அர்த்தமற்ற பேச்சுக்களை பேசுபவர்கள் நாம் விரும்புகின்ற நம்முடைய தலைவர் நபிகள் நாயகத்தின் வெறுப்பை சம்பாதித்தவர்களாக ஆவார்கள். அதுமட்டுமல்ல மறுமை நாளில் நபிகளாரின் அருகில் இருக்கும் பாக்கியம் கிடைக்காமல் போய்விடும். இந்த உலகில் பி
ரபலமானவர்களின் அருகில் இருந்து போட்டாவுக்கு போஸ் கொடுக்க முண்டியடிக்கின்றனர்.
இதையே வரும் பாக்கியமாக கருதக்கூடிய அறிவற்ற மக்களும் உண்டு. கேடு கெட்ட இவர்களின் அருகில் நிற்பதையே பாக்கியமாக கருதும் போது இறைத்தூதருக்கு அருகில் மறுமை நாளில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை சிந்தித்து பாருங்கள். இதை வீண் பேச்சில் ஈடுபடுபவர்கள் இழந்து விடுவார்கள் என்பதாக நபிகளார் கூறுகின்றார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:
உங்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானவர் மறுமை நாளில் எனக்கு அருகில் இருப்பவர் உங்களில் நற்குணம் உள்ளவரே. மேலும் உங்களிலேயே எனக்கு வெறுப்புக்குரியவரும் மறுமை நாளில் என்னிலிருந்து வெகு தொலைவில் இருப்பவர் (யாரென்றால்) வழவழவென்று (வீண் பேச்சு) பேசுபவர். இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் பெருமையடிப்பவர் ஆவார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
வீண் பேச்சு என்பது நம்மை நரகில் சேர்க்க ஒரு காரணமாக அமைந்து விடும் என்பதை பின்வரும் இறைவசனத்தில் இறைவன் எச்சரிக்கின்றான்.
குற்றவாளிகளிடம் உங்களை நரகத்தில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும் ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாளில் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது அருகிலிலிருப்பவரிடம் நீ மெளனமாக இரு என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.
ஜூமுஆ உரையின் போது அதை செவிதாழ்த்தி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். பிறரிடம் எந்த ஒரு வார்த்தையும் பேசி விடக்கூடாது. அமைதியாக இருந்து பயனை கேளுங்கள் என்று பிறரிடம் சொன்னாலும் இதுவும் வீண் பேச்சு என நபிகளார் கண்டிக்கின்றார்கள். வார்த்தை நல்லதாக இருந்தாலும் நோக்கம் நல்லதாய் இருந்தாலும் சொல்லும் தருணம் சரியில்லை. இவ்வாறு எல்லாரும் சொல்ல ஆரம்பித்தால் கூச்சல் குழப்பம் ஏற்படும்.
பல இஸ்லாமியர்கள் ஜுமுஆ தொழுகைக்கு மட்டும்? வருபவர்கள் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. இப்பேச்சின் மூலம் தங்களது நன்மையை இழந்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த வீண் பேச்சை தவிர்த்தால் மட்டுமே ஜுமுஆவின் முழு நன்மையையும் பெற முடியும். கடைவீதியில் கூச்சல் போடுவது வீண் பேச்சுக்கள் பேசுவது ஆகியவைகளை விட்டும் தவிர்ந்து இருக்க வேண்டும் என்று நபிகளார் அறிவுறுத்துகின்றார்கள்.
நாங்கள் கடைவீதியில் இருந்த போது நபி (ஸல்) எங்களிடம் வந்தார்கள். இந்த கடைவீதியில் பொய்யும் கூச்சலும் மலிந்து விட்டன. எனவே அவற்றுக்காக தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: கைஸ் பின் கரஜா (ரலி)