37) விதைக்கப்படும் விஷ முத்திரை

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

37) விதைக்கப்படும் விஷ முத்திரை

முஸ்லிம்களெல்லாம் தீவிரவாதிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக வரலாறுகள் எப்படியெல்லாம் வளைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.அதுபோல நிகழ்காலச் செய்திகளைத் தாங்கி வரும் ஊடகங்கள், தேசத்தின் தலைமையேற்கும் ஆட்சியாளர்கள், அவர்களை வழிநடத்தும் அதிகாரிகள் எனப் பலரும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துப் பரவலுக்குக் காரணமாக இருக்கின்றனர். அவற்றை இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

தீர்ப்பு சொல்லும் தீவிரவாதிகள்

ஒரு பயங்கரவாதச் செயல் நடந்த இடத்தில் உடனடியாக புலனாய்வு அமைப்புகள்கூட வந்திருக்க மாட்டார்கள். அதற்குள் மீடியாக்கள் வந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருப்பார்கள். அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தைப் பற்றிய முழு விபரத்தையும் திரட்டியிருப்பார்கள்.

உடனடியாகக் கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் என அனைத்தையும் முடித்து அடுத்த அரை மணி நேரத்தில் முழு நீளத் திரைப்படத்தையே மக்களுக்கு முன்னால் காண்பித்துக் கொண்டிருப்பார்கள்.

சாதாரண திருட்டு, கொலை போன்ற குற்றத்தில் துப்புத் துலக்கவே மாதங்கள் பல தேவைப்படுகிறது. சில நேரங்களில் வருடங்கள்கூட ஓடி விடுகிறது. அப்படியிருக்க இவ்வளவு சீக்கிரமாக நீங்கள் எப்படி அறிந்து கொண்டீர்கள் என்ற கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது.

கேட்டால் எஸ்.எம்.எஸ். வந்தது,; ஈ-மெயில் வந்தது என்று உங்களுக்குத் தெரிந்த பெயர்கள் தெரியாத இயக்கங்கள் என வரிசை கட்டி அடுக்குவார்கள்.

இந்தியன் முஜாஹிதீன் இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டது என்பார்கள். அந்த இயக்கம் எங்குள்ளது? அதை இயக்குபவர்கள் யார்? அதன் தலைவர் யார்? எப்போது உருவான அமைப்பு? என்று எத்தனை கேள்வி கேட்டாலும் கல்லுளி மங்கனாக இருந்து காரியம் சாதிப்பார்கள்.

ஆனால் ஒன்றில் மட்டும் தெளிவாக இருப்பார்கள். நாம் சொல்கின்ற இயக்கமும் அதில் சம்பந்தப்பட்ட பெயர்களும் முஸ்லிம்களாக மட்டுமே இருக்க வேண்டும். மறந்தும்கூட மக்களின் பார்வை மற்றவர்களின் பக்கம் திரும்பிவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள்.

இயன்றால் அதிகாரிகளையும் ஆட்சியாளர்களையும் தங்களது கருத்தின் பால் இழுத்து அவர்களையும் தவறான பாதையில் வழி நடத்துவார்கள்.

2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் நாள் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரின் கொனார்க் தியேட்டர் அருகில் மாலை 7:10 மணிக்கு ஒரு குண்டு வெடித்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆனந்த் ஹோட்டலில் இரண்டாவது குண்டு. அதற்கடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் வெங்கடாத்திரி தியேட்டரில் மூன்றாவது குண்டு வெடித்தது. 15க்கும் மேற்பட்டவர்கள் மரணம், 115க்கும் மேற்பட்டவர்கள் காயம்.

நகரமே பரபரப்பானது. மத்திய மாநில அரசின் படைகள் விரைந்தன. நஷ்டயீடு, ஆறுதல் என வழக்கம் போல அனைத்துக் காட்சிகளும் அரங்கேறின. மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயும், மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டியும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர். அதிகாரிகளிடமிருந்து தகவல்களைக் கேட்டு ஆய்வு செய்து கொண்டிருந்தனர். இடையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

இதுவரை எந்த அமைப்பும் குண்டுவெடிப்பிற்குப் பொறுப்பேற்கவில்லை என்கிறார் அமைச்சர் ஷிண்டே. இந்த குண்டு வெடிப்பிற்கும் அக்பருத்தீன் உவைசிக்கும் சம்பந்தம் உண்டா?? எனக் கேட்கிறார் ஒரு செய்தியாளர் அப்படி எதுவும் தெரியவில்லை என பதிலளிக்கிறார் அமைச்சர்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் எத்தனை விஷமத்தனமான கேள்வி இது. இந்தக் கேள்வியின் மூலம் அமைச்சர்கள் அதிகாரிகள் புலனாய்வுத் துறையினர் பொது மக்கள் என அனைவரின் பார்வையையும் ஒரு முஸ்லிமை நோக்கியும் முஸ்லிம் அமைப்பை நோக்கியும் திருப்ப நினைக்கிறார் என்பதைத் தவிர இதற்கு வேறென்ன விளக்கமளிக்க முடியும்?

ஒருவேளை அதற்கு முன் நடந்த குண்டு வெடிப்புகளில் இவருக்கு தொடர்பிருந்தால், அல்லது சந்தேகத்திற்குரிய வேலைகளை அவர் செய்திருந்தால் செய்தியாளரின் கேள்வியில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். அப்படி எந்தச் சூழலும் இல்லாத நிலையில் கேட்கப்பட்ட இந்தக் கேள்வி முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக் கேட்கப்பட்ட திருட்டுத்தனமான கேள்வியாகத் தானே இருக்க முடியும்?

இந்தியாவின் முன்னால் தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது இந்தியப் பிரஸ் கவுன்ஸிலின் (பத்திரிக்கைத் துறை) தலைவராக இருப்பவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு. இவர் C.N.N. & I.B.N.. தொலைக்காட்சியின் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூறிய தகவல்கள் இந்த உண்மைக்கு மேலும் வலுவூட்டுகின்றன.

மக்களின் நலனை முன்னிறுத்தி செயல்பட வேண்டிய மீடியாக்கள் சில நேரங்களில் மக்கள் விரோதியாக செயல்பட்டு அவர்களிடையே பிளவை உண்டா?க்கி விடுகின்றன.

ஒரு ஊரில் குண்டு வெடித்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாங்கள் தான் குண்டு வைத்தோம் என்று இந்தியன் முஜாதீன் கூறுகிறது அல்லது ஜய்ஷே முஹம்மது கூறுகிறது அல்லது ஹர்கதுல் ஜிஹாத் கூறுகிறது என ஏதோ ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரைக் கூறுகிறார்கள். ஈ மெயிலையும் எஸ்.எம்.எஸ்.ஸையும் அதற்கு ஆதரமாகக் காட்டுகிறார்கள். எஸ்.எம்.எஸ்.ஸும் ஈ மெயிலும் யார் வேண்டுமானாலும் போடலாம். யாருடைய பெயரிலும் போடலாம். அது ஒரு ஆதாரமா?

எந்தவித அறிவும் ஆராய்ச்சியும் இல்லாமல் இவ்வாறு வெளியிடப்படும் செய்தியால் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. இ

து செய்தியாளர்களின் கவனக் குறைவாலோ அல்லது தவறுதலாகவோ நடப்பது கிடையாது. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்படும் சதிவேலையாகவே நான் கருதுகிறேன் என்று கூறினார்.