37) மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

நூல்கள்: அர்த்தமுள்ள கேள்விகள்! அறிவுப்பூர்வமான பதில்கள்

மாற்று மதத்தினரிடமிருந்து பள்ளிவாசலுக்காக அன்பளிப்பு வாங்க தடையிருக்கிறதா?

கேள்வி : எனது மாற்று மத நண்பர் ஒருவர் வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். நான் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காகவும், நோன்புக் கஞ்சிக்காகவும் ஒரு தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தேன். நான் இந்து என்பதால் வாங்க மறுத்து விட்டார்கள். இது சரி தானா? என்று கேட்கிறார்.

எஸ்.ஏ. இர்பான் பாஷா, தர்மபுரி

பதில் : பள்ளிவாசல்களிலேயே சிறந்த பள்ளிவாசல் கஃபா ஆலயம் தான். சிதிலமடைந்த இந்த ஆலயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவராக இருந்த போது மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. புதுப்பித்தவர்கள் அனைவரும் பல கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தான். அவர்களின் பொருட் செலவில் தான் புதுப்பிக்கப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சிறு வயதில் அதற்காக மண் சுமந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் ஆட்சியை நிறுவி கஃபா ஆலயத் தையும் கைவசப்படுத்திய போது முஸ்லிமல்லாதவர்களின் பொருட்செலவில் கட்டப்பட்டதால் அதை இடித்துவிட்டு கட்டவில்லை. இடித்துவிட்டு கட்ட நினைத்தால் அது அவர்களுக்கு மிக எளிதாகவே சாத்தியமாகியிருக்கும்.

முஸ்லிமல்லாதவர்களால் கட்டப்பட்ட அந்தப் பள்ளியில் தான் தொழுதார்கள். அங்கு தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள்.

காஃபாவை இடித்து விட்டு மீண்டும் கட்டவும் அவர்கள் சிந்தித்ததுண்டு, அதற்கு இப்ராஹீம் நபி அவர்கள் கட்டிய வடிவில் கஃபாவை அவர்கள் கட்டவில்லை என்பதைத் தான் காரணமாகக் கூறினார்களே தவிர முஸ்லிமல்லாதவர் களின் பொருட்களால் கட்டப்பட்டதைக் காரணமாகக் கூறவில்லை.

– இப்ராஹீம் நபி கட்டிய கஃபாவுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்) சிறுவராக இருந்த போது கஃபாவைக் கட்டியவர்கள் ஒரு வாசலுடன் கட்டி முடித்திருந்தார்கள்.

– – இப்ராஹீம் நபியின் கஃபா மூன்று பக்கம் நேராகவும், ஒருபக்கம் அரை வட்டமாகவும் இவ்வாறு இருந்தது.

– உலகின் மிகச் சிறந்த ஆலயமே முஸ்லிமல்லாதவர் களின் பொருளுதவியால் கட்டப்பட்டிருந்து, அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தியிருக்கும் போது மற்ற பள்ளிவாசல்களுக்கு பிற மக்களிடம் நன்கொடைகள் பெறுவதில் தவறில்லை.

நன்கொடை கொடுத்ததால் இஸ்லாம் அனுமதிக்காத காரியங்களைப் பள்ளிவாசலில் செய்ய நிர்பந்தம் செய்வார்கள் என்றிருந்தால் மட்டும் அந்தக் காரணத்திற்காக தவிர்க்கலாம்.

நோன்புக் கஞ்சி ஒரு உணவு தான். அது ஒரு புனிதமான உணவு கிடையாது. மற்றவர்கள் தரும் உணவுப் பொருட்களை எவ்வாறு சாப்பிடலாமோ அவ்வாறு அவர்கள் நோன்புக் கஞ்சி காய்ச்சினால் அதையும் உண்ணலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அந்த நண்பர் இவ்வாறு உதவி னால் மறுமையில் பயன் கிடைக்குமா என்பது தனி விஷயம்.

அகில உலகுக்கும் ஒரே கடவுளைத் தவிர வேறு கடவுள் கிடையாது என்பதை நம்பாமல், யார் எந்த நல்லதைச் செய்தாலும் அதற்கான பலன் இவ்வுலகில் கிடைக்குமே தவிர மறுமையில் சொர்க்கத்தைப் பெற முடியாது. ஒரே ஒரு கடவுள் தான் என்று நம்பாவிட்டால் அந்த ஒரு கடவுளிடம் ஏதும் கிடைக்காது.