37) இறைவனை சபிக்காதீர்

நூல்கள்: நாவை பேணுவோம்

இறைவனை சபிக்காதீர்

படைத்த இறைவனை சபிப்பது கற்பனையிலும் எண்ணிப்பார்க்கவே முடியாத ஒரு தீமையாகும். ஆனால் அதை இஸ்லாமியர்கள் உள்பட ஒட்டு மொத்த உலகமும் செய்து கொண்டு தான் இருக்கின்றது. பெரும் பெரும் இயற்கை சீற்றங்கள் சுனாமி பூகம்பம் போன்ற பேரழிவுகள் ஏற்பட்டு விட்டால் இறைவனேஉனக்கு கண்ணில்லையா? இரக்கமற்றவனே என்பன போன்ற கடும் கண்டணத்திற்குரிய வாசகங்களை போஸ்டர் அடித்து ஒட்டுகின்றனர்

இறைவனை நம்பாதவர்கள் இது போன்ற கயமத்தனத்தை செய்தால் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை இறைவனை நம்பி வழிபடுபவர்கள் தான் இதை செய்கின்றார்கள் எனும் போது இவர்களின் இறை நம்பிக்கையின் லட்சணம் தெளிவாக புரிகின்றது தாங்கள் செய்யும் செயலின் மூலம் இறைவனை கொடூரனாக சித்தரிக்கும் மாற்று மதத்தவர்கள் இது போன்ற வார்த்தைகளை வெளியிடலாம்.

பேரிரக்கமுடையவன் எனும் சித்தாந்தத்தில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாறு வெளியிடலாமா ? இறைவன் என்பவன் நிகரில்லா நமது குடும்பத்தில் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டாலும் இது போன்று இறைவனை வம்பிழுக்கின்றனர். இறைவா உனக்கு என் பிள்ளை தான் கிடைத்தானா? என இறைவனின் அதிகாரத்தை கையிலெடுக்கும் பெரும் பாவத்தை செய்கின்றனர்.

யார் உயிரை எடுக்க வேண்டும் என்று இறைவனுக்கே கற்று கொடுக்கும் பாவ செயலை புரிகின்றனர். இது போன்ற சமயத்தில் தான் நம் நாவு கட்டுப்பாடு இழந்து விடுகின்றது. ஷைத்தான் நம்மை பாவ காரியத்தில் தள்ளி விடுகின்றான். சிறிய வயதுடைய தன் பிள்ளையை இழக்கும் சோதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையிலும் நபிகளார் சுயகட்டுப்பாடு இழந்து தாறுமாறான வார்த்தைகளை வெளிப்படுத்தவில்லை. இறைவன் விரும்பாத எந்தவொரு வார்த்தையையும் நவில மாட்டோம் என்று சபதம் எடுக்கின்றார்கள். இதே சபதத்தை இஸ்லாமிய சமூகமும் எடுத்துக் கொண்டால் மிகவும் சந்தோஷமே!

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்துவந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத்: தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்தது நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப்பொழியலாயின.

இதைக் கண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவ்ஃபின் புதல்வரே! என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது எளினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம் இப்ராஹீமே நிச்சயமாக நாங்கள் அதிகக் கவலைப்படுகிறோம் என்றார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1305)