35) திருட்டுக் குற்றம்
திருட்டுக் குற்றம்
திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது. மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.
முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை. கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.
தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக்கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப் பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது.
“பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!” என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். அந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறி கொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?
மகளின் திருமணத்திற்காகக் கொண்டு சென்ற பணத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறான். திருமணம் நின்ற துக்கத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொள்கின்றது. இவர்களுக்காக யார் பரிதாபப்படுவார்கள்?
நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக் கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய குற்றவாளியைப் பார்த்து பரிதாபப்படுகிறார்கள். ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது.