35) காலத்தை ஏசாதீர்
காலத்தை ஏசாதீர்
பொதுவாக மனிதர்கள் யாவரிடமும் ஒரு தீய பழக்கம் உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் நேர்ந்து விட்டால் உடனே காலத்தை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுமாயின் என் கஷ்ட காலங்க எனக்கு மட்டும் இப்படி நடக்குதுங்க என்று தங்களை ரொம்பவும் நொந்து கொள்கின்றார்கள்.
பொன்னு கிடைத்தாலும் புதன் கிடைக்காதுன்னு அப்பவே பெரியவங்க சொன்னாங்க நான்தான் கேட்கல. வியாழக்கிழமை வியாபாரத்தை ஆரம்பிச்சு படாதபாடு படுறேன். எல்லாத்துக்கும் இந்த சனியன் பிடிச்ச வியாழக்கிழமை கான் காரணம் என்பதாக இவ்வாறு பலரும் பலவிதமாக காலத்தை திட்டி ஒலமிடுவதை பார்க்கின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நோவினை செய்கின்றான் (மனிதன்) காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்). என் கையில்தான் இரவு பகல் (இயக்கம்) உள்ளது.
அறிவிப்பவர் அபூஹூரா (ரலி)
தங்களின் வியாபார நஷ்டத்திற்கு தாங்களே காரணமாயிருந்து காலத்தை திட்டுகின்றார்கள். கடுமையான உழைப்புடன் முழு ஈடுபாட்டோடு செயல்படுவோமானால் வெற்றி நிச்சயம் என்பதை மறந்து சோம்பேறிகளாக இருந்து அதன்பழியை காலத்தின் மீது போடுகிறார்கள். ஒரு பொருளின் வடிவமைப்பை திட்டுகிறோம் என்றால் அதை வடிவமைத்தவனை திட்டுகிறோம் என்றே பொருளாகும்.
அது போல் காலத்தை திட்டுவது. அதை படைத்து இயக்குகின்ற இறைவனை திட்டுவதற்கு ஒப்பானது என்று நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். காலத்தை திட்டுவது போன்ற மூடப்பழக்க வழக்கத்தை படைத்த இறைவனயே சபிக்கும் படியான இழிவான குணத்தை ஒழிக்க வேண்டும்.