34) மாலிக்காபூர்

நூல்கள்: முஸ்லிம் தீவிரவாதி (?)

34) மாலிக்காபூர்

கி.பி.1296 முதல் 1316 வரை டில்லியைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் அலாவுதீன் கில்ஜி. இவரது தென்னாட்டுப் படையெடுப்பு நமது பாடப் புத்தகங்களில் பக்கம் பக்கமாக வர்ணிக்கப்படுகிறது.

அதில் முக்கிய இடத்தைப் பிடிப்பது அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூர் இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் கொடுமைகள்.

வழக்கம்போல்இதிலும் சரித்திர ஆசிரியர்கள் தடவிய மசாலாக்களே அதிகம். குறிப்பாக மாலிக்காபூரால் இடித்துச் சிதைத்து தரைமட்டமாக்கப்பட்டதாகக் கூறப்படும் சீர்காழி, சிதம்பரம், ஸ்ரீரங்கம், கங்கை கொண்ட சோழபுரம் சமயபுரம், மதுரை, இராமேஸ்வரம் என அனைத்துக் கோவில்களுமே தற்போதைய தமிழகத்தின் பிரபலமான வழிபாட்டுத் தலங்கள். எனவே மாலிக்காபூரின் வரலாறு தமிழர்களின் பார்வையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

மாலிக்காபூரின் வரலாறு மற்றும் படையெடுப்புகள் குறித்து அறிந்து கொள்ள அவரது சமகால கவிஞர் அமீர் குஸ்ரு பார்சி மொழியில் எழுதிய தாரிக்கி அலாய் அல்லது கஸைனுல் புஸ்த் என்ற நூலே மூல ஆதாரமாகப் பயன்படுகிறது.

அதன் பிறகு அங்கிருந்து வேறு சில பார்சி மொழி நூல்கள் அவற்றின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் மிக நீண்ட தகவல்களோடு பேராசிரியர் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய south india and her muhammadhan invaders ஆகிய நூல்கள் பயன்படுகின்றன என்கிறார் மாலிக்காபூர் குறித்து ஆய்வு நூல் வெளியிட்டுள்ள டாக்டர் ஜெ.ராஜா முகம்மது.

அய்யங்காருக்குப் பிறகு வந்த ஆய்வாளர்கள்அனைவரும் மாலிக்காபூரின் கோவில் இடிப்பு மற்றும் கொடூரத் தாக்குதல் என தங்களின் எழுத்தோவியத்திற்கு அய்யங்காரையே சாட்சியாக்குகிறார்கள்.

அமீர் குஸ்ருவின் நூல்களை ஆதாரமாகக் காட்டும் அய்யங்காரின் எழுத்துக்களில் குழப்பத்திற்கு மேல் குழப்பம். மாலிக்காபூர் வந்து சென்ற பாதையிலிருந்து சென்று வந்த இடங்கள் வரை தெளிவில்லாமலே இறுதி வரை பயணிக்கிறார்.

மர்கத்புரி, பிரமாஸ்திபூர், ஜலகோட்டா, காம், காந்தூர் என குஸ்ரு குறிப்பிடும் பல ஊர்கள் எவை என்றே தெரியவில்லை? எந்த ஊரைக் குறிக்கின்றன என்ற தெளிவும் இல்லை. இந்நிலையில் அய்யங்கார் அவர்கள் தம்முடைய கற்பனைக்கு ஏற்ப, தனது கருத்தைத் திணிப்பதற்கேற்ப அவற்றிற்கு விளக்கமளித்துள்ளார்.

அவற்றை எழுதிய அமீர் குஸ்ருவே குழப்பத்தில் எழுதியுள்ளார். ஏனெனில் இந்தச் செய்திகளை அவர் நேரில் பார்த்து எழுதவில்லை. மாலிக்காபூரின் படையெடுப்பில் அவர் பங்கேற்கவும் இல்லை என்கிறார் அவரது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எலியட்.

பிரமஸ்த்புரி அல்லது பிரமாஸ்திபூர் என்பது சிதம்பரத்தைத்தான் குறிக்கிறது என்று பல்வேறு சான்றுகளை வைத்து முடிவுக்கு வருகிறார் அய்யங்கார். அதை முடித்து அடுத்த சில பக்கங்களிலே அது ஸ்ரீரங்கமாகவும் இருக்கலாம் என்கிறார்.

அதற்கு சில வாதங்கள். இன்னொரு இடத்தில் அதை சீர்காழி என்கிறார், இல்லை அது இராமேஸ்வரமாகவும் இருக்கலாம் என்கிறார்.

(தமிழகத்தில் மாலிக்காபூர் ஓர் ஆய்வு ஜெ.ராஜா முகம்மது பக் 34,35)

ஒரு பெயருக்கு உரிய ஊர் எது என்பதைக் கண்டுபிடிப்பதிலே இத்தனைக் குழப்பம். இந்தக் குழப்பம் மாலிக்காபூர் வந்து சென்ற அனைத்து இடங்களுக்கும் தொடர்கிறது. இந்தக் குழப்பத்திற்கு இடையில்தான் நமது ஆசிரியர்கள் கோவிலை இடித்தார்கள் என குதிரை ஓட்டுகிறார்கள்.மாலிக்காபூரின் தமிழகப் படையெடுப்பு 26.3.1311ல் துவங்கி 1.4.1311ல் முடிவடைகிறது.

மொத்தம் ஏழு நாட்கள். இந்த ஏழு நாட்களுக்குள் அவர் வந்து, கொன்று, வென்று, இடித்து, கொள்ளையடித்து திரும்பியதாகக்கூறப்படும் இடங்களைப் பாருங்கள். எவ்வளவு பொய்களைப் புணைந்திருக்கிறார்கள் என்ற உண்மை, இல்லையில்லை பொய்மை விளங்கும்.

கன்னட நாட்டிலிருந்து புறப்பட்டு வந்த மாலிக்காபூரின் படை திருச்சி முசிறிக்கு அருகில் முகாமிடுகிறது. அங்கிருந்து 175 கி,மீ தொலைவில் உள்ள ஜெயங்கொண்ட சோழபுரத்துக்குப் படை வருகிறது.

இங்குள்ள மன்னன் வீரபாண்டியன் சமயபுரத்துக்கு ஓடி விட்டான் என்ற செய்தி கேட்டு படை மன்னனைத் தேடி சமயபுரம் செல்கிறது. வந்த இடத்தில் கோவிலையும் கொள்ளையடித்தாகி விட்டது. ஆனால் மன்னன் மட்டும் கிடைக்கவில்லை.

மன்னன் இங்கிருந்தும் தப்பித்து விட்டான் என்று தெரிந்ததும் அவனைத் தேடி தென்னாற்காடு மாவட்டம் தேவிக் கோட்டைக்கு படை செல்கிறது. அங்கும் அவனைப் பிடிக்க முடியாமல் படை மீண்டும் சமயபுரம் வருகிறது.

சமயபுரத்தில் வைத்து சிதம்பரம் கோவிலின் செல்வச் செழிப்பு குறித்து கேள்விப்படுகிறான் மாலிக்காபூர். உடனடியாக படை சிதம்பரம் நோக்கி புறப்படுகிறது. அங்கு சென்றதும் கோவில் கொள்ளையடிக்கப்படுகிறது.அது முடிந்ததும் படை முகாமுக்குத் திரும்புகிறது.

(த.மா.ஒ.ஆ) பக் 39 – 41)

இவையனைத்தும் கிருஷ்ணசாமி அய்யங்காரும் அவருக்குப் பின் முன் என பலரும் எழுதியுள்ள ஏட்டுச் செய்திகள்.

இந்தப் பயணத்திற்கு எத்தனை நாட்கள் தேவைப்படும்? இன்று இருப்பதைப் போன்ற மோட்டார் வாகனங்கள் இல்லாத காலம். குதிரை போன்ற விலங்குகளைத் தான் பயன்படுத்தி இருக்க வேண்டும்.

பயணத்தில் இடையிடையே ஓய்வெடுத்திருக்க வேண்டும். எதிரிப் படை வீரர்களோடு ஆங்காங்கே போர் செய்ய வேண்டும். காயமடையும் படை வீரர்களுக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இன்றிருப்பதைப் போல உணவு விடுதிகள் எதுவும் இல்லாத காலம். எனவே சாப்பாட்டு நேரத்தில் பயணத்தை நிறுத்தி உணவு சமைத்து அனைத்து வீரர்களுக்கும் பந்தி பரிமாறி முடித்த பின்னரே பயணம் புறப்பட்டிருக்க வேண்டும். செல்லும் வழியெங்கும் கடுமையான மழை.

எனவே குதிரைகள் பல நேரங்களில் ஓடிச் செல்லவில்லை, நீந்தியே சென்றிருக்கின்றன. சென்றவர்கள் அனைவருமே ஊருக்குப் புதியவர்கள் சரியான பாதையைக் கண்டறிந்து செல்வதில் பெரும் சிரமங்களும் தடங்கலும் ஏற்பட்டிருக்கும்.

இவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து, இத்தனை ஊர்களுக்கும் பயணம் செய்து, அங்குள்ளவர்களோடு போர் செய்து அவர்களை வெற்றி கண்டு ஏழு நாட்களுக்குள் படையெடுப்பை முடித்து விட்டார் என்று இவர்கள் சொல்வார்கள் அதை நாம் நம்ப வேண்டுமாம்.

மேலும் எந்தெந்த ஊர்களின் கோவில்களும்சிலைகளும் மாலிக்காபூரால்உடைத்து நொறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதோ அந்த ஊர்க் கோவில்கள் எந்தச் சேதமுமின்றி மிக நல்ல முறையில் இருக்கின்றன. சில கோவில்களில் 14 ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே தொடர்ச்சியான கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.

14ஆம்நூற்றாண்டிற்குப் பிறகு முழுமையாகப் புதிதாகக் கட்டப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லை. பிறகெப்படி அந்த ஊர் கோவில்களையெல்லாம் இடித்தார் என்பதை ஏற்க முடியும்? அல்லது இடித்துவிட்டு இடிக்காத மாதிரி கோவில்களைக் கட்டிக் கொடுத்து விட்டுப் போனாரோ என்னவோ?

(த.மா.ஒ.ஆ பக் 67)

மாலிக்காபூரின் படையெடுப்பின் போது 12,000 வைணவர்கள் ஸ்ரீரங்கத்தில் கொல்லப்பட்டதாக விவரிக்கிறார்கள்வரலாற்று அறிஞர்கள். 1875 ஆம் ஆண்டில் ஸ்ரீறிரங்கத்தின் மொத்த மக்கள் தொகையே 11,271 அதிலிருந்து 550 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற படையெடுப்பில் 12,000 பேர் எப்படி கொல்லப்பட்டிருக்க முடியும்?(A Manual of The Trichinopoly District in The Presidency of Madras மாலிக்காபூர் செ.திவான் விகடன் வெளியீடு பக் 30)

வைஷ்ணவ ஸ்ரீயின் வார்த்தையில்

ஸ்ரீரங்கம் கோவில் இடிக்கப் பட்ட பின்னர் அங்கிருந்த உத்சவரான அழகிய மணவாளரின் சிலை முஸ்லிம் படைவீரர்களால் கொள்ளையடித்துச் செல்லப்பட்டது என்பது பிரபலமான கதை.

அந்தக் கதையில் உள்ள குழப்பங்களைக் கண்ட ஆராய்ச்சி யாளர் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ கூறுகிறார் நம் பெருமாள் கி.பி.1311ஆம் ஆண்டு நடைபெற்ற படையெடுப்பின்போது திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் கி.பி.1323க்கு முன்பாக ஆஸ்தானம் எழுந்தருளினாரா?

அல்லது கி.பி.1311 ஆம் ஆண்டு படையெடுப்பின்போது திருவரங்கத்தைவிட்டு அகன்று 1371இல் மீண்டாரா? அல்லது கி.பி.1323ஆம் ஆண்டு நடந்த உலுக்கான் படையெடுப்பின் போது பிள்ளை லோகாசார்யாரால் எழுந் தருளச் செய்து கி.பி.1371ல் ஆஸ்தானம் எழுந்தருளினாரா?

நம்பெருமாள்தான் சோதிவாய் திறந்து வார்த்தை அருளிச் செய்யக் கூடுமானால் இந்தக் கேள்விகளுக்கான சரியான விடை கிடைக்க வாய்ப்பு உண்டு என எழுதுகிறார். அதாவது பெருமாளே வந்து சொன்னால்தான் இதற்கு விடை கிடைக்கும் என்கிறார். (ஸ்ரீரங்க மகாத்மியம் எனப்படும் ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு மாலிக்காபூர் செ.திவான் விகடன் வெளியீடு பக்94)

உண்மை என்ன?

பேராசிரியர் டாக்டர் என். வெங்கட ரமணய்யாவின் துவக்க காலத்தில் தென் இந்தியாவில் முஸ்லிம்கள் விரிவடைதல் என்ற நூலில் மாலிக்காபூர் தேவகிரியைக் கைப்பற்றினார். மக்களை மிக அன்பாக நடத்தினார். மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தினார்.

கொலை கைது என எந்தவிதமான கொடுஞ் செயலிலும் அவர் ஈடுபடவில்லை. இந்த நடவடிக்கைகள் மூலம் மக்களின் உள்ளத்தில் அமைதியை விதைத்தார். புதிய முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவர்கள் நம்பியதாக எழுதியுள்ளார்.

(The Yearly Muslim Expansion in South India p 73 மாலிக்காபூர் செ.திவான் விகடன் வெளியீடு பக் 83)

முரண்பட்ட தகவல்களே ஒன்றை பொய்யென்று சொல்வதற்கு போதுமான சான்றாகும் என்பார்கள். மாலிக்காபூரின் படையெடுப்பு குறித்த வரலாறுகள் முரண்பாட்டின் மொத்த உருவமாக காட்சி தருகின்றன.

இதில் உள்ள முரண்பாடுகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல் நம்முடைய வரலாற்றாசிரியர்கள் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் சொல்பவர்களின் நோக்கம் என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.