33) நபிகளாருக்கு சூனியம் – ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?
33) நபிகளாருக்கு சூனியம் – ஆறு மாத கால ஹதீஸ் பலவீனமா?
நபிகள் நாயத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் நபியவர்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டதாகவும் புகாரி உள்ளிட்ட சில நூல்களில் பதிவாகியிருக்கும் செய்திகளை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் நாம் மறுக்கிறோம்.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் செய்தான். அதன் காரணமாக அவர்கள் செய்யாததைச் செய்ததாக அவர்களுக்குப் பிரமை ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. தம் மனைவியரிடம் உடலுறவு கொள்ளாமலே உடலுறவு கொண்டதாக அவர்கள் நினைக்கும் அளவுக்கு இந்தப் பாதிப்பு முற்றிப் போய் இருந்தது என்றெல்லாம் அந்தச் செய்திகளில் சொல்லப்பட்டுள்ளது.
ஒரு மனிதன் தான் செய்யாததைச் செய்ததாகச் கருதிக் கொண்டு இருப்பது மனநோயின் ஒரு வகையாகும். மேலும் மனைவியுடன் சேராமல், சேர்ந்ததாக நினைப்பது கடுமையான மனநோயாகும். இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு சூனியத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது என்று இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.
ஆனால் நபிகள் நாயகத்திற்கு மனநோயின் துளி பாதிப்பு கூட இருக்காது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.
‘நீங்கள் இருவர் இருவராகவோ, தனித் தனியாகவோ அல்லாஹ்வுக்காக சற்று நேரம் ஒதுக்கி பின்னர் “உங்கள் தோழருக்கு (எனக்கு) பைத்தியம் எதுவுமில்லை; கடுமைய hன வேதனைக்கு முன் அவர் உங்களுக்கு எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தையே உங்களுக்குப் போதிக்கிறேன்” எனக் கூறுவீராக!
எனவே (முஹம்மதே!) அறிவுரை கூறுவீராக! உமது இறைவனின் பேரருளால் நீர் சோதிடர் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர்.
அவர்களின் தோழருக்கு (முஹம்மதுக்கு) எந்தப் பைத்தியமும் இல்லை என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அவர் தெளிவான எச்சரிக்கை செய்பவரே.
நபிகள் நாயகத்திற்குச் சூனியம் வைக்கப்பட முடியாது என்றும் அவ்வாறு கூறுவோர் அநியாயக்காரர்கள் என்றும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.
‘அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்’ என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
சூனியம் என்றால் பொய், பித்தலாட்டம் என்று அல்லாஹ் கூறுவதாலும்,
கட்டளை மூலமாகக் காரியமாற்றும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது என்பதாலும்,
நபிகள் நாயகத்திற்கு எந்த மனநோயும் வராது என்று திருக்குர்ஆன் கூறுவதாலும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதை திருக்குர்ஆன் மறுக்கிறது என்பதாலும்,
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாக நம்புவது திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதாலும் சூனியத்தை நம்பக் கூடாது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதாலும்,
இப்படி பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் மோதுகிற காரணங்களால் நபிகள் நாயகத்திற்குச் சூனியம் வைக்கப்பட்டதாக வரும் செய்திகளை நாம் மறுக்கிறோம்.
இது பற்றி விரிவாக அறிய பி.ஜே அவர்கள் எழுதிய பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம் எனும் நூலில் பார்க்கலாம்.
ஆறு மாதம் பற்றிய செய்தி
சூனியம் வைக்கப்பட்டதால் நபிகளாருக்கு ஏற்பட்ட மனக்குழப்ப பாதிப்பு ஆறு மாத காலம் நீடித்தது என்று அஹ்மதில் ஒரு செய்தி இடம்பெறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிலை ஆறு மாதங்கள் நீடித்தது.
செய்யாததைச் செய்ததாக நினைக்கும் அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒரு நாள் ஏற்பட்டால் அதை மனப்பாதிப்பு என்று சொல்ல முடியாது எனலாம். ஆனால் ஆறு மாதகாலம் கடும் பாதிப்பு ஏற்பட்டதாக இந்த இந்த ஹதீஸ் சொல்கிறது எனில் சந்தேகமற இது மனக்குழப்ப பாதிப்பு தான் என்று இந்த செய்தியைக் குறிப்பிட்டு வாதிட்டிருந்தோம்.
இந்த வாதத்தில் திடுக்கிட்டு, விக்கித்துப் போன சலபுக்கும்பல் ஆறு மாத காலம் பாதிப்பு நிலை நீடித்தது என்றால் அது மனநோயல்லாமல் வேறு என்ன என்பதை உணர்ந்து இந்த வாதத்தை நீர்த்துப்போகச் செய்ய திரிபு வேலைகளில் இறங்கினர்.
அதில் ஒன்றாக நபிகள் நாயகத்திற்கு சூனியத்தினால் பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான். ஆனால் ஆறு மாதங்கள் எல்லாம் நீடிக்கவில்லை. ஆறுமாத காலம் பாதிப்பு ஏற்பட்டதாக வரும் செய்தி பலவீனமானது என்று வாதம் வைக்கின்றனர்.
இவ்வாதத்தை அவர்கள் வைப்பதன் நோக்கம் சூனியத்தினால் நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்டது மனநோயல்ல, மறதி, நோய் போன்ற சாதாரண பாதிப்பு தான் என்பதை நிறுவுவதற்கே.
ஆறு மாதம் பாதிப்பு தொடர்ந்தது என்றால் அது மனநோய் என்பது முற்றிலும் உண்மையாகி விடும் எனவே நபிகளாருக்கு ஏற்பட்ட பாதிப்பு ஒரு நாள் தான் இருந்தது போன்ற பொய்த்தோற்றத்தை ஏற்படுத்தி விட்டால் அது மனநோய் என்று சொல்ல முடியாது போகும். அதற்காகவே இத்தகைய வாதத்தை முன்வைக்கின்றனர்.
நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். ஆறு மாதம் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்ற செய்தி பலவீனமானது என்றால் கூட நமது வாதம் உடைந்து போகாது.
ஏனெனில் சூனியத்தினால் நபிகள் நாயகம் பாதிக்கப்பட்டதாக புகாரி முஸ்லிமில் வரும் செய்திகள் கூட ஒரு நாள் தான் அந்தப் பாதிப்பு இருந்தது என்று தெரிவிக்கவில்லை. மாறாக நீண்ட நாட்கள் மனக்குழப்ப பாதிப்பு நீடித்தது என்றே தெரிவிக்கின்றன.
இதைப் பற்றி விரிவாக சில உதாரணங்களுடன் அறிந்து கொள்வோம்.
‘கான” எனும் சொல்லின் பொருள்
நபிகளாருக்கு ஏற்பட்ட சூனிய பாதிப்பை சொல்லும் மூலத்தில் கான| என்ற சொல் உள்ளது. இச்சொல்லுடன் வருங்கால வினைசொல்லைக் கொண்ட வாக்கியத்துடன் சேரும் போது ஒரு செயல் நீடித்து இருந்தது என்ற கருத்தைத் தரும். இந்த நிலையில் நீடித்தார்கள் என்பது இதன் கருத்தாகும். உதாரணத்திற்கு கான என்ற சொல் இடம்பெற்றுள்ள சில ஹதீஸ்களை காண்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வஹீ-வேதஅறிவிப்பு) அருளப்பெறும் போது (தம்மைத் தாமே) மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார்கள்; (வேதவசனங்களை மனனமிட வேக வேகமாக) தம் உதடுகளை அசைத்துக் கொண்டிருப்பார்கள்.
உதடுகளை அசைத்துக் கொண்டிருப்பார்கள் எனும் தமிழாக்கத்தின் மூலத்தில் கான என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியெனில் பல நாட்கள் இவ்வாறு நடந்துள்ளது என்பது இதன் பொருள்.
நபிகள் நாயகம் தொழுகையில் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பு கோருபவர்களாக இருந்தார்கள் எனும் செய்தியின் மூலத்திலும் கான என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அன்றாடம் இவ்வாறு சொல்லி வந்தார்கள் என்பது இதன் கருத்து. இக்கருத்தை கான என்றே சொல்லே தருகிறது.
அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வே! நான் கப்ரின் வேதனை, நரக வேதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை, மஸீஹூத் தஜ்ஜாலின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” எனப் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
இந்தச் செய்தியிலும் நபிகள் நாயகத்தின் வழமையைக் குறிக்க கான என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு சிறுவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். (அந்தத் தண்ணீரால் அல்லாஹ்வின் தூதர் (ஸ ல்) அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள்.)
நபிகள் நாயகம் கழிவறைக்குச் செல்லும் நேரத்தில் அனஸ் அவர்கள் பாத்திரத்தைச் சுமந்து செல்லும் இந்த நிகழ்வு நீண்ட நாட்கள் இவ்வாறு நடந்துள்ளது என்பது இதன் பொருளாகும். இக்கருத்தைக் குறிக்க இச்செய்தியில் ‘கான” என்ற சொல் வந்துள்ளது.
கடமையான குளிப்புக்காக நபிகள் நாயகம் குளிக்கும் போது முதலில் கை கழுவும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கும் செய்தியிலும் ‘கான” என்ற சொல்லே வந்துள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக குளிக்கும்போது (முதலில்) கைகளைக் கழுவிக் கொள்வார்கள்.
இவ்வாறு கான என்ற சொல்லுடன் ஒரு செயல் குறிப்பிடப்படும் இடங்கள் அனைத்திலும் அது நீண்ட நாட்கள் தொடர்ந்தது அல்லது அது தான் அன்றாட நடைமுறையாக இருந்தது என்ற கருத்து வரும். நபிகள் நாயகத்திற்குச் சூனியம் வைக்கப்பட்டதாக வரும் செய்திகளிலும் நீண்ட நாட்கள் தொடர்ந்தது என்ற கருத்தைத் தரும் கான என்ற சொல் வந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிரமையூட்டப்படுவர்களாக ஆனார்கள். இது(புகாரி: 3175, 3268, 5763, 5765),(முஸ்லிம்: 4406)ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆறு மாத காலம் பாதிப்பு ஏற்பட்டது என்ற செய்தி பலவீனம் என்றால் கூட அந்தப் பாதிப்பு நீண்ட நாள்கள் இருந்துள்ளதாக இவர்கள் நம்பும் இதர ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
(‘இவர்கள் நம்பும”; என்று நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதாகச் சொல்லும் செய்திகள் அனைத்தும் கருத்து அடிப்படையில் பலவீனம் என்பதே எமது வாதம்.) இதன் மூலம் நபிகளாருக்கு ஏற்பட்ட சூனியத்தின் பாதிப்பு ஆறு மாத காலம் நீடித்தது என்ற ஒரு குறிப்பிட்ட வரையறுக்குள் சொல்ல முடியாவிட்டாலும் நீண்ட நாட்கள் நீடித்தது என்பது உறுதியிலும் உறுதியாகிறது.
ஆறு மாதம் பாதிப்பு தொடர்ந்தது என்ற அடிப்படையில் நாம் எழுப்பிய வாதங்கள் அனைத்தும் நீண்ட நாட்கள் அப்பாதிப்பு தொடர்ந்தது என்பதிலும் பொருந்தவே செய்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவராக ஆறு மாதங்கள் இருந்தார்கள் என்று சொன்னால், நம்பினால் அது எவ்வாறு குற்றமோ அது போலவே ஆறுமாதங்கள் எல்லாம் இல்லை, ஆனால் நீண்ட நாட்கள் மன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்தார்கள் என்று சொன்னாலும், நம்பினாலும் குற்றமே.
அதுவும் நபித்துவத்தைப் பாதிக்கும் செயலே. அப்போதும் முன்னர் குறிப்பிட்ட பல்வேறு குர்ஆன் வசனங்களுடன் மோதவே செய்கிறது. ஆறு மாதத்திலிருந்து நீண்ட நாட்கள் என்று குறைந்ததால் அந்தச் செய்தி எந்தக் குர்ஆன் வசனத்துடனும் மோதவில்லை என்றாகி விடாது. அப்போதும் முன்னர் குறிப்பிட்ட எண்ணற்ற குர்ஆன் வசனங்களுடன் மோதத்தான் செய்கிறது.
சூனியம் என்றாலே பொய், பித்தலாட்டம் என்று அல்லாஹ் கூறியதற்கும் கட்டளை மூலமாக காரியமாற்றும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது எனும் வசனத்திற்கும் நபிகள் நாயகத்திற்கு எந்த மனநோயும் வராது என்று திருக்குர்ஆன் கூறியதற்கும் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டதை திருக்குர்ஆன் மறுக்கிறது என்பதற்கும் சூனியத்தை நம்பக் கூடாது என்று நபிகள் நாயகம் கூறியுள்ளதற்கும் அப்போதும் முரண்படவே செய்கிறது.
எல்லை தாண்டலாம்
இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நபிகள் நாயகத்திற்கு ஏற்பட்ட சூனிய பாதிப்பு ஆறு மாத காலம் நீடித்தது என்ற செய்தி பலவீனம் எனில் ஆறு மாதம் இல்லை என்றாகி விடும்.
எனினும் நீண்ட நாட்கள் அப்பாதிப்பு தொடர்ந்தது என்பது ஹதீஸின் வாசகத்தில் வந்துள்ளதால் அந்த நீண்ட நாட்கள் என்பது ஆறு மாதத்திற்கு குறைந்த அளவாகவும் இருக்கலாம், அதே வேளை ஆறு மாதத்தைவிட அதிக நாட்களாகவும் இருக்கலாம். இரண்டுக்கும் சாத்தியமுள்ளது என்பதை மறுக்க முடியாது.
தாம் செய்யாததைச் செய்ததாக, மனைவியரிடத்தில் சேராமலேயே சேர்ந்ததாக ஒரே ஒரு நாள் பிரம்மையூட்டப்பட்டிருந்தால் அதை பெரிய நிகழ்வாக சொல்லியிருக்க வேண்டிய தேவையில்லை. நீண்ட நாட்கள் அப்பாதிப்பு தொடரப்போய்த்தான் அது பெரிய நிகழ்வாக சொல்லப்படுகிறது. எனவே அந்த நீண்ட நாள் பாதிப்பு என்பது ஆறு மாதத்தை விட அதிக கால அளவாகவும் இருக்கலாம்.
ஆறு மாத கால பாதிப்பு செய்தி சரி என்று சொல்லும் போதாவது பாதிப்பை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுத்து வைத்திருந்தார்கள். அந்தச் செய்தி பலவீனம் எனில் அது மாதிரி எந்த வரையறையும் இல்லாமல் போகிற விளைவை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும்.
இனி பதறியடித்துக் கொண்டு இல்லையில்லை அது இரண்டு நாட்கள் தான், மூன்று நாட்கள் தான் ஆறு மாதத்தை விடவும் குறைந்த கால அளவு தான் என்று கூப்பாடு போடுவார்கள் எனில் ஸலபுக்கும்பல் தான் அதற்கு தகுந்த ஆதாரத்தைக் காட்ட வேண்டும்.
ஹதீஸ் பலவீனமா?
இனி மேற்குறிப்பிட்ட ஆறு மாத கால பாதிப்பு தொடர்ந்ததாகக் கூறும் ஹதீஸ் பலவீனமா என்பதைக் காண்போம்.
நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்ட நிகழ்வை ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்து 14 நபர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களில் மஃமர் என்பாரைத் தவிர வேறு யாரும் ஆறு மாதம் பாதிப்பு பற்றி அறிவிக்கவில்லை.
மஃமர் என்பார் ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளில் தவறிழைப்பவர் என இப்னு மயீன் விமர்சித்துள்ளார். எனவே இச்செய்தி பலவீனம் என்று எதிர்த்தரப்பினர் கூறுகின்றனர்.
மஃமர் என்பாரைப் பற்றி இப்னு மயீன் அவ்வாறு விமர்சித்திருப்பது உண்மையே. எனினும் இவ்விமர்சனம் குறிப்பிட்ட அறிவிப்பை முற்றிலும் பலவீனமாக்கக் கூடிய விமர்சனமா? என்பதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
ஏனெனில் மஃமர் என்பவர் ஹதீஸ்களை அறிவிப்பதில் கடைநிலை அறிவிப்பாளர் அல்ல. ஹதீஸ் நூல்களைத் தொகுத்துள்ள, பலராலும் அறியப்பட்ட, பல அறிஞர்களால் புகழ்ந்து சொல்லப்பட்ட நம்பகமான ஒரு அறிவிப்பாளர் ஆவார்.
மஃமரைப் பற்றி மார்க்க அறிஞர், உறுதியானவர், ஹாஃபிழ் என்று இப்னு ஹிப்பான் குறிப்பிட்டுள்ளார்.
ஸிகாத் லி இப்னி ஹிப்பான்
மஃமர் நம்பகமானவர், நல்லவர் என்று இஜ்லி குறிப்பிடுகிறார்.
ஸிகாத் லில் இஜ்லி 2 290
மஃமரைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் காலத்தில் அவரை விட நன்கறிந்த அறிஞர் யாருமில்லை. இவ்வாறு இப்னு ஜூரைஜ் என்பார் புகழ்ந்துள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 8 256
மஃமர் மேலதிக கல்வி ஞானத்தைப் பருகி விட்டார்
அல்ஜரஹ் வத்தஃதீல் 8 256 752
மஃமருடன் வேறு யாரையும் ஒப்பிடாதீர்கள். தன்னை விட (முன்பை விட) மேலும் கல்வியைத் தேடுபவராக மஃமரைக் காண்பாய் என்று இமாம் அஹ்மத் அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 8 257
ஸூஹ்ரியின் மாணவர்களில் இப்னு உயைனா, ஸாலிஹ் பின் கைஸான், யூனுஸ் ஆகியோரை விட மஃமரே சிறந்தவர் என்று இப்னு மயீன் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜரஹ் வத்தஃதீல் 8 257 யஃகூப் பின் அபீஷைபா, நஸாயீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று சான்றளித்துள்ளார்கள்.
தஹ்தீபுத் தஹ்தீப் 10 245
இதன் மூலம் மஃமர் என்பார் பல அறிஞர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட மிக நம்பகமானவர் என்பது உறுதியாகிறது. மேலும் மஃமர் என்பவர் புகாரிஇ முஸ்லிமின் அறிவிப்பாளர் ஆவார்.
இத்தகைய மஃமர் ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளில் தவறிழைப்பவர் என்று இப்னு மயீனும் அவரைப் பின்பற்றி இப்னு ஹஜர் உள்ளிட்டோருமே குறிப்பிடுகின்றனர்.
அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்வதில் இப்னு மயீன் கடுமையான போக்கைக் கடைபிடிப்பவர் என்பது ஹதீஸ்கலை அறிஞர்களிடம் அறியப்பட்ட ஒன்று.
மேலும் யார் வழியாக மஃமர் அறிவித்தால் அதில் குழப்பம் உண்டு என்று கடும் போக்கை கையாளும் இப்னு மயீன் விமர்சனம் செய்தாரோ அதை வைத்து ஆறுமாத அறிவிப்பை பலவீனம் என்று குறிப்பிட்டார்களோ அதே ஹிஷாம் பின் உர்வாவிடமிருந்து மஃமர் அறிவிக்கும் அறிவிப்புகள் புகாரியிலும் உள்ளன.
(புகாரி: 4027, 3974)ஆகிய ஹதீஸ்கள் மஃமர்இ ஹிஷாமிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளே. அதற்கான அரபு மூலத்தை கீழே தருகிறோம்.
இமாம் முஸ்லிம் அவர்களும் தமது நூலில் மஃமர் ஹிஷாமிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்புகளை முதாபஆவாக பதிவு செய்துள்ளார்.
இது தவிர மஃமர்இ ஸாபித் வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளும் புகாரி முஸ்லிமில் முதாபஆவாக உள்ளது. இந்த அறிவிப்பையும் இப்னு மயீன் குறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை அறிவிப்புகளையும் இப்னு மயீன் அவர்களின் விமர்சனத்தின் அடிப்படையில் பலவீனம் என்று சொல்ல ஸலபுக் கும்பல் தயாரா? இமாம்களின் மீது குருட்டு பக்தி கொள்ளும் ஸலபுக் கும்பல் புகாரி முஸ்லிமின் இத்தனை அறிவிப்புகளும் பலவீனமா என்பதற்குப் பதிலளிக்க வேண்டும்.
இதிலிருந்து மஃமர், ஹிஷாமிடமிருந்து அறிவிக்கும் எல்லா அறிவிப்புகளும் பலவீனம் என்று முடிவு செய்ய முடியாது என்பதை அறியலாம்.
மஃமர் அடிப்படையில் மிக நம்பகமானவர் என்பதாலும் அவரைப் பல அறிஞர்கள் புகழ்ந்து கூறியுள்ளதாலும் அவர் ஹிஷாம் வழியாக அறிவிக்கும் அனைத்து அறிவிப்புகளும் பிரச்சனைக்குரியது என்று சொல்லிவிட முடியாது. மாறாக அவர் தவறாக அறிவித்துள்ளது எங்கே உறுதியாகுமோ அது தான் பிரச்சனை என்று முடிவு செய்ய வேண்டும்.
மஃமர் குறித்து இமாம் தஹபீ குறிப்பிட்ட விமர்சனத்தை முன்வைத்து விட்டு இவ்வாறு முடிவு செய்துள்ளதை அறிகிறோம்.
மஃமர் அவரை விட மிக நம்பகமானவருக்கு மாற்றமாகவோ, அல்லது நம்பகமானவருக்கு மாற்றமாகவோ அறிவிப்பதன் மூலம் அவரது தவறு நமக்கு வெளிப்படையாகத் தெரியும் வரை மஃமரை நாம் ஆதாரமாகக் கொள்வோம்.
அர்ருவாதுஸ் ஸிகாத் 1 166
எனவே மஃமர் எங்கே தவறாக, குழப்பமாக அறிவித்துள்ளாரோ அந்த அறிவிப்பே பலவீனம் என்றாகும்.
ஹதீஸ்கலை அறியா பதறுகள்
ஹிஷாம் பின் உர்வாவின் 14 மாணவர்களில் வேறு யாரும் ஆறு மாதம் என்ற தகவலைக் கூறவில்லை. மஃமர் மட்டுமே கூறியுள்ளார். ஆகவே மஃ மர் இங்கே தவறு செய்துள்ளார், குழப்பமாக அறிவித்துள்ளார் என்று முடிவு செய்வது முற்றிலும் தவறானதாகும். நம்பகமானவர் கூடுதலாக அறிவிக்கும் அறிவிப்பு ஏற்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.
வேறு யாரும் ஆறு மாதம் என்பதைக் குறிப்பிடாத போது ஒருவர் ஆறுமாதம் எனும் தகவலையும் சேர்த்துக் குறிப்பிடுகிறார் எனில் அது முரண்பாடு, குழப்பம் என்று யாரும் கருத மாட்டோம். கூடுதல் தகவல் என்றே கருதுவோம்.
அது போலவே ஹிஷாமின் 14 மாணவர்களில் மஃமர் ஆறு மாதம் எனும் வாசகத்தை அறிவிப்பது கூடுதல் தகவலாகவே பார்க்கப்படும். சொல்லப் போனால் மற்றவர்களின் அறிவிப்பை விட மஃமரின் அறிவிப்பே தெளிவாக உள்ளது என்றே அதைக் காணும் யாரும் முடிவு செய்வார்.
மற்றவர்கள் யாரும் காலம் குறிப்பிடாமல் நபிகள் நாயகத்திற்கு சூனியம் வைக்கப்பட்டது என்று குறிப்பிடும் போது மஃமர் ஆறு மாத காலம் அந்தப் பாதிப்பு இருந்தது என்று துல்லியமாக அறிவிக்கிறார் எனில் இது எப்படி முரண்பாடாக, குழப்பமானதாக ஆகும். இது தான் தெளிவான அறிவிப்பு என்றே கருத முடியும்.
13 நபர்கள் இஸ்மாயில் ஜெயிலில் சில காலம் இருந்தார் என்றும் ஒருவர் மட்டும் ஆறு மாதம் காலம் இஸ்மாயில் ஜெயிலில் இருந்தார் என்றும் சொன்னால் இது முரண்பாடா?
13 நபர்கள் ஒருவரைப் பற்றி இவர் சிக்கன் சாப்பிட்டார் என்றும் ஒருவர் மட்டும் அவர் ஆறு சிக்கன் துண்டுகள் சாப்பிட்டார் என்றும் அறிவித்தால் இது முரண்பாடா?
இது போலத்தான் நபிகள் நாயகம் சூனியம் வைக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்று 13 நபர்கள் அறிவிக்க, மஃமர் தெளிவாக பாதிக்கப்பட்ட காலம் ஆறு மாதம் என்று அறிவிக்கிறார். இதை எப்படி முரண்பாடாக கருத முடியும்.
நம்பகமான அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கும் தகவல் ஏற்கப்பட வேண்டும் என்ற ஹதீஸ்கலை விதிப் பிரகாரம் மஃமரின் இந்த அறிவிப்பு ஏற்கப்பட வேண்டும் என்பதே சரியான கருத்தாக இருக்கிறது.
இல்லையில்லை மஃமரின் அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையே என்றால் கூட அப்போதும் நமது வாதத்தில் எந்த பாதிப்பும் இல்லை.
ஏனெனில் ஆறு மாதம் என்று துல்லியமாக குறிப்பிட முடியாதே தவிர நீண்ட நாள்கள் அந்த பாதிப்பு தொடர்ந்ததாக ஹதீஸ்கள் கூறுவது உறுதியான ஒன்று என்பதை முன்னரே விளக்கி விட்டோம். அந்த நீண்ட நாள்கள் என்பது ஆறு மாதத்தை விட அதிக காலஅளவாக கூட இருக்கலாம்.
நீண்ட நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள் என்று கூறினால் மட்டும் அல்லாஹ் எச்சரிக்கும் அநியாயக்கரார்கள் பட்டியலில் இருந்து தப்ப முடியாது என்பதை இந்த ஸ லபுக்கும்பல் புரிய வேண்டும்.
‘அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?” என்றும் ‘சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்” என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர்.
எப்படிப் பார்த்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூனியத்தினால் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறும் அறிவிப்புகள் அனைத்தும் குர்ஆனுக்கு முரணானவேயே என்பதில் துளியும் சந்தேகமில்லை.