32) அநியாயம்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

அநியாயம்

செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல்) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 228)

விளக்கம்:

மனிதன், மனிதனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் தவறும் போது பாதிக்கப்பட்டவன் மன்னிக்காத வரையிலும் இவனது அந்தப் பாவத்தை இறைவன் மன்னிக்க மாட்டான். எனவே மனித உரிமைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவனின் உரிமைகளைப் பாதிக்காத வண்ணம் நமது செயலை அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கடன் வாங்குபவர்கள் குறித்த நேரத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

கடனை திருப்பித் தருவதற்குரிய வசதிகள் வந்த பிறகும் கொடுக்காமல் இழுத்தடிப்பது பெரிய அநியாயமாகும். பணவசதி இருந்தும் இன்று நாளை என்று இழுத்தடிப்பது பாவமாகும். எனவே வசதி படைத்தவர்கள் வாங்கிய கடனை உடன் திருப்பித் செலுத்த வேண்டும். மேலும் கடன் வாங்கியவர், ‘இந்தக் கடனை இவரிடம் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஒரு செல்வந்தரைச் சுட்டிக் காட்டினால், ‘அவரிடம் நாம் வாங்க மாட்டேன்’ என்று கூறாமல் பொறுப்பு சாட்டப்பட்டவரிடம் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.