30) தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர்
30) தலைவராக அங்கீகரிக்கப்பட்டவர்
நபி (ஸல்) அவர்கள் இறந்த உடன் அடுத்த ஆட்சியாளர் யார் என்பதில் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகள் (தமது) பனூ சாயிதா சமுதாயக் கூட்டத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) சஃத் பின் உபாதா (ரலி) அவர்களிடம் எங்களில் ஒரு தலைவர் உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்) என்று பேசிக் கொண்டார்கள். அப்போது அபூபக்ர் உமர் பின் கத்தாப் அபூ உபைதுல்லாஹ் பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர்.
உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். ( இதைப் பிற்காலத்தில் நினைவு கூறும் போது) உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நான் பேச முயன்றது எதற்காக என்றால் நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன் என்று கூறி வந்தார்கள்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உறை நயமிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில் (குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாய் இருப்போம். (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாக இருங்கள் என்று சொன்னார்கள். உடனே (அன்சாரியான) ஹப்பாப் பின் முன்திர் (ரலி) அவர்கள் இல்லை அல்லாஹ்வின் மீதாணையாக இதற்கு நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம்.
எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் உங்களிடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் இல்லை நாங்களே தலைவர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள். ஏனெனில் குரைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவைச்) சேர்ந்தவர்களும் சிறந்த செயல் திறன் மிக்கவர்களும் ஆவர்.
ஆகவே உமர் பின் கத்தாப் அல்லது அபூ உபைதுல்லாஹ் பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் இல்லை. நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர். எங்களில் சிறந்தவர். எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாய் இருந்தவர்கள் என்று சொல்லிவிட்டு அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர் சஃத் பின் உபாதா அவர்களைப் (புறக்கணித்து அவரது கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள் என்று சொன்னார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் தான் அவரைக் கொன்று விட்டான் என்று பதில் சொன்னார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுவதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது அன்சாரிகள் எங்களில் ஒரு தலைவரும் உங்களில் ஒரு தலைவரும் (நியமிக்கப்பட வேண்டும்) என்று கூறினார்கள். அவர்களிடத்தில் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழவைக்குமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டது உங்களுக்குத் தெரியாதா? எனவே அபூபக்ரை முந்துவதற்கு உங்களில் எவரது உள்ளம் விரும்பும்? என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள் அபூபக்ரை முந்துவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் நாங்கள் பாதுகாவல் தேடுகிறோம் என்று கூறினார்கள்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறு நாள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பனூ சாயிதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து பைஅத் செய்த பிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தபடி உமர் (ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியுற்றேன். உமர் (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நமக்கெல்லாம் இறுதியாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள். அது வரை உயிர் வாழ்வார்கள் என்றே எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். ஆனாலும் மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் என்னும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நேர்வழி காண்பித்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மழைக் குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூபக்ர் (ரலி) அவர்களே உங்களின் (ஆட்சி அதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர். எனவே அன்னாரிடம் (ஆட்சிப் பொறுப்பை) ஒப்படைத்து விசுவாசப் பிரமாணம் செய்து கொடுங்கள். நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாயிதா மண்டபத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்து விட்டிருந்தார்கள்.
ஆனால் பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது. அன்றைய தினம் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். இறுதியில் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடையில் ஏற அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
பனூ சாயிதா எனும் இடத்தில் மக்கள் அனைவரும் திரண்டிருக்கவில்லை. அலீ (ரலி) ஸுபைர் (ரலி) மற்றும் இன்னும் பல நபித்தோழர்கள் இல்லாத நிலையில் குறைந்த அளவு மக்கள் தான் அங்கே திரண்டிருந்தார்கள். அங்குள்ள எல்லோரும் அபூபக்ர் (ரலி) அவர்களைத் தலைவராக ஏற்றுக் கொண்ட பிறகு மறு நாள் அங்கு வராத எல்லோரும் அபூபக்ர் (ரலி) அவர்களை ஏக மனதாக ஏற்றுக் கொண்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த மனிதர் என்பதால் அவர்களுக்கு எதிராக யாரும் கிளம்பவில்லை. அனைவரும் கட்டுப்பட்டனர். இது போன்ற சிறப்பு எல்லோருக்கும் கிடைக்காது என்று உமர் (ரலி) அவர்கள் பிற்காலத்தில் சுட்டிக் காட்டினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் இறந்து விட்டால் நான் இன்னாரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பேன் என்று உங்களில் யரோ சொன்னது என்னை வந்தடைந்துள்ளது. அபூபக்ரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்யப்பட்டது குறைந்த மக்களைக் கொண்டு தான் (எனவே உமருக்குப் பிறகு குறைந்த மக்கள் ஒருவரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்தாலே தலைவரை தேர்வு செய்துவிடலாம்) என்று கூறி யாரும் ஏமாந்து விட வேண்டாம்.
அபூபக்ரிடத்தில் விசுவாசப் பிரமாணம் செய்யப்பட்டது அப்படித் தான் (குறைந்த மக்களைக் கொண்டு) இருந்தது. அறிந்து கொள்ளுங்கள். அபூபக்ரின் ஆட்சியில் தீங்கு (அதாவது எதிர்ப்பு) ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாத்துக் கொண்டான். (மக்கள் எதிர்க்காமல் இருப்பதற்கு) இன்றைக்கு அபூபக்ரைப் போன்று சிறப்பில் அனைவரையும் முந்திக் கொள்பவர் உங்களில் யாரும் இல்லை… அபூபக்ர் என்னை விட அறிந்தவராகவும் பொறுமையாளராகவும் கம்பீரமானவராகவும் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் சிறந்த ஆட்சியை நடத்துவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் தான் வாழும் காலத்திலேயே அவர்களால் அங்கீகாரம் தரப்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு வரும் ஆட்சியை விட அவர்களின் ஆட்சியில் தான் குழப்பங்கள் குறைவாக இருக்கும் என்பதை இதன் மூலம் நபியவர்கள் உணர்த்தினார்கள்.
அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
இன்றைக்கு உங்களில் கனவு கண்டது யார்? என்று நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அல்லாஹ்வின் தூதரே) ஒரு தராசு வானத்திலிருந்து இறங்கி வருவதைப் போல் நான் கனவு கண்டேன். அப்போது நீங்களும் அபூபக்ரும் (அதில்) நிறுக்கப்பட்டீர்கள்.
நீங்கள் அபூபக்ரை விட (எடையில்) மிகைத்து விட்டீர்கள். பின்பு அபூபக்ரு (ஒரு தட்டிலும்) உமர் (ஒரு தட்டிலும்) நிறுக்கப்பட்டார்கள். அப்போது அபூபக்ர் (எடையில்) மிகைத்து விட்டார்கள். உமரும் உஸ்மானும் நிறுக்கப்பட்ட போது உமர் மிகைத்து விட்டார்.
பிறகு அத்தராசு உஸ்ர்த்தப்பட்டு விட்டது என்று கூறினார். (தராசு உஸ்ர்த்தப்பட்டு விட்டது என்று கூறும் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் நாங்கள் வெறுப்பைக் கண்டோம்.
பனூ சாயிதா என்ற இடத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது அலீ (ரலி) அவர்கள் அங்கு இல்லை. பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனடியாக ஒரு தலைவரைத் தேர்வு செய்ய வேண்டிய இக்கட்டான நிலை நீடித்தது. எனவே அங்கிருந்த மக்களால் அபூபக்ர் (ரலி) அவர்கள் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தம்மிடத்தில் ஆலோசிக்காமல் தலைவரைத் தேர்வு செய்து விட்டதால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்த பிறகு தம் நிலையை மாற்றிக் கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்த வரையில் அலீ (ரலி) அவர்கள் மீது மக்களிடையே (மரியாதையுடன் கூடிய) தனிக் கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்துவிட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள். எனவே அபூபக்ர் (ரலி) இடம் சமரசம் பேசவும் பைஅத் செய்து கொள்ளவும் விரும்பினார்கள்.
அந்த (ஆறு) மாதங்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. ஆகவே தாங்கள் (எங்களிடம்) வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வர வேண்டாம் என்று அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் ஆளனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததே இதற்குக் காரணம்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லாதீர்கள். (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் என் விஷயத்தில் அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்களிடம் நான் செல்லத் தான் செய்வேன் என்று கூறிவிட்டு அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள். பிறகு (அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி) தங்கள் சிறப்பையும் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை. ஆயினும் இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள்.
ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக்குள்ள உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என்று நாங்கள் கருதி வந்தோம் என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன… அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள் தங்களுக்கு விசவாசப் பிரமாணம் செய்து கொடுக்கும் நேரம் (இன்று) மாலையாகும் என்று கூறினார்கள்.
பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் மீதேறி ஏகத்துவ உறுதி மொழி கூறி இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும் அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும் அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் பாவமன்னிப்புக் கோரிவிட்டு ஏகத்துவ உறுதி மொழி கூறிய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியை கண்ணியப்படுத்திப் பேசினார்கள்.