30) கூட்ஸ் வண்டி கோரச் சாவு
30) கூட்ஸ் வண்டி கோரச் சாவு
மாப்ளாக்கள் மீண்டும் ஒரு கலவரத்தைக் கனவில் கூட கண்டு விடக் கூடாது என்பதற்காகக் கடும்நடவடிக்கைகளை மேற்கொண்டது கம்பெனி அரசு. கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
1400 குடும்பங்கள் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்தத் தீவை மேம்படுத்த, சாலை போட, மரங்களை வெட்ட, பயிர் செய்ய என பல்வேறு வகைகளில் அவர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்.
அவர்கள் அனைவரும் நாடு விடுதலை அடைந்த பின்னர் ஊர் திரும்ப மனமில்லாமல் அங்கேயே தங்கி விட்டனர் என்று அந்தமான் தீவின் வரலாறு கூறுகிறது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி கைதிகள் முகாமில் மாப்ளாக்களைக் கவனிப்பதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு தனிச் சிறையாக மாற்றப்பட்டது. 1570 பேர் அங்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு நாட்டின் பல்வேறு சிறைகளுக்கும் மாப்ளாக்கள் பகுதி பகுதியாகப் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். (சிறை நிர்வாகம் குறித்த அறிக்கை மெட்ராஸ் மாகாணம் 1921 என்,எல்(ஜி), பி.எண் 1588 ஜூன் 27,1992 பக் 30,31, மா.கி.அ.தோ பக் 246)
கைது நடவடிக்கையின் உச்சகட்டடமாக ஒரு கொடுமை அரங்கேறியது. நூற்றுக்கணக்கான மாப்ளாக்களை காற்றுப் புக முடியாத கூட்ஸ் வண்டிக்குள் (சரக்கு இரயில்) அள்ளித் திணித்தது ஆங்கில அரசு.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவர்களை சித்திரவதை செய்வதற்காகவே தயார் செய்யப்பட்டுள்ள தனிமைச் சிறை நோக்கி வண்டி புறப்பட்டது. போகும் வழியெங்கும் மரண ஓலம் ஓங்காரமாய் ஒலித்தது.
அந்த ஒலியின் ஓசை கூட சிறிது நேரம்தான். அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும் அடங்கியது. 1921 நவம்பர் 10 அன்று கோவை போத்தனூர் இரயில் நிலையத்தில் எந்தச் சலனமுமின்றி அமைதியாக வந்து நின்றது மனிதச் சரக்குகளை சுமந்து வந்த இரயில் பெட்டி.
பூட்டப்பட்டிருந்த பெட்டியின் கதவுகளை அழுத்தித் திறந்தார் நிலையப் பொறுப்பாளர். திபுதிபுவென கொட்டியது மனித உடல்கள். வந்து விழுந்த சடலங்களைப் பார்த்து நிலைகுலைந்து போனார் நிலைய அதிகாரி.
அதில் தப்பிப் பிழைத்த ஒருவர் பின்னர் சொன்ன வாக்குமூலத்தில், துப்பாக்கியின் பின்புறத்தால் எங்களைக் குத்தித் தள்ளி வண்டியைத் தாழிட்டார்கள். நான் பெட்டியின் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டேன். யாரும் எங்கும் நகரமுடியாத அளவுக்கு, தலையைக் கூட திருப்ப முடியாத அளவுக்கு நெருக்கியடித்துக் கொண்டு நின்றோம்.
சரியாக என் நாசி துவாரத்திற்கு அருகில் ஒரு ஆணி துவாரமொன்று ஆணி அறையாமல் காலியாக இருந்தது. அதில் மிகச் சரியாக என் மூக்கின் நுனி பொருந்திக் கொண்டது. அதன் வழியாக என் நாசிக்கு சுவாசிக்கக் கொஞ்சம் காற்று கிடைத்தது. என் உயிர் மூச்சை இழுத்துப் பிடிப்பதற்கு எனக்கு அது உதவியாக இருந்தது.
உள்ளிருந்த வெப்பத்தின் அழுத்தம் தாளாமல் சிலருடைய உடல் வெடித்துச் சிதறியது. எந்தக் கட்டுப்பாடுமின்றி மலமும் சிறுநீரும் வெளியேறிக் கொண்டிருந்தது. அவற்றில் நனைந்து நனைந்து பொரிப்பதற்கு தயாரான மசாலா தடவிய மீனைப் போல மாப்ளாக்கள் இருந்தார்கள் என்கிறார்.
அதிலே செத்துப் போனவர்களின் எண்ணிக்கை மொத்தம் 70. அவர்கள் அனைவரும் கோவை இரயில் நிலையத்தை ஒட்டியே அடக்கம் செய்யப்பட்டனர். விடுதலைப் போரில் முஸ்லிம்கள் சிந்திய இரத்தத்திற்கு அந்தக் கப்ருகள் இன்றும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.
மாப்ளாக்களின் பேரெழுச்சியையும் பெரும் தியாகத்தையும் தி இண்டிபென்டண்ட் பத்திரிக்கை கவர் ஸ்டோரியாக வெளியிட்டு அப்போதே கௌரவித்தது. அந்தக் கட்டுரையில் கிலாஃபத் எழுச்சியின்போது பொக்காத்தூரில் 600 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் பட்டாம்பியில் கொல்லப்பட்டவர்கள் 500 பேர் என்றும் திரூரிலிருந்து கோவைக்கு வரும் சரக்கு இரயிலில் ஏற்றப்பட்டு மூச்சுத் திணறி கொல்லப்பட்டவர்கள் 55 பேர் என்றும் செய்தி வெளியிட்டது.
(B.M. Taunk Non-Co-operation Movement in India 1921 A Historical Study p.106, தியாகத்தின் நிறம் பச்சை பக் 8- இந்திய விடுதலை போரில் தமிழக முஸ்லிம்கள் பக் 77-82, (மா.கி.அ.தோ)பக் 237,238)
கம்பெனிக்குஎதிரான நடவடிக்கையில்முக்கிய பங்காற்றியதாகக் கூறி 160 மாப்ளாக்களுக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது ஆங்கிலேய நீதிமன்றம்.அவர்களுக்கான தண்டனையைமலபாரிலேயே நிறைவேற்றினால்தேவையற்ற பதற்றம் ஏற்படுமென்று அவர்கள் அனைவரையும் திருச்சிக்கு அழைத்து வந்து தூக்கிலிட்டு கொன்றார்கள்.
இதைக் கேள்விப்பட்ட திருச்சி முஸ்லிம்கள் மரண தண்டனையைத் தடுக்க முடியாவிட்டாலும் மரணித்த முஸ்லிம்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது செய்வோம் என்று தீர்மானித்தனர்.
அதற்காக ஒரு இயக்கத்தையும் உண்டா?க்கினர். அதிகாரிகளிடம் பேசி உடலைப் பெறுவதிலிருந்து அடக்கம் செய்து முடிப்பதுவரை அனைத்துக் காரியங்களையும் அந்த அமைப்பின் கீழ் செய்ய வேண்டும் என ஏகமனதாக முடிவெடுத்தனர்.
படே ஹஸ்ரத் என்றழைக்கப்படும் செய்யது முர்துஸா சாஹிப் அவர்களின் தலைமையில் கான் பகதூர் கலீபுல்லா சாஹிப், பாலக்கரை காஜா மைதீன் சாஹிப், முஹம்மது இப்ராஹீம் சாஹிப், ஜின்னாத் தெரு முஹம்மது யூசுப் சாஹிப், ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டு அஞ்சுமனே ஹிமாயதே இஸ்லாம் என்ற பெயரில் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
(திருச்சிராப்பள்ளி மாவட்ட இஸ்லாமியர்களின் அரசியல் சமூக மற்றும் பொருதாரா நிலை குறித்த ஆய்வேடு அ.அக்பர் உசேன் பாரதிதாசன் யுனிவர்சிட்டி பக் 166)
இந்த அமைப்பின் சார்பில் இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்து கிரியைகளும் செய்யப்பட்டன. திருச்சி காஜாமலைப் பகுதியில் அவர்கள் அனைவரும் நல்லடக்கம் செய்யப்பட்டனர். காஜாமலை நினைவு கல்வெட்டிலும் அஞ்சுமனே ஹிமாயதே இஸ்லாம் நினைவு கல்வெட்டிலும் இந்தச் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
கைதிகளைத் தேடி திருச்சிக்கு வந்த மாப்ளாக்களின் குடும்பத்தார் பலரும் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல மனமின்றி அங்கேயே தங்கி விட்டனர். மூதாதையர்களின் நினைவை நெஞ்சில் தாங்கி நிற்கும் அவர்களின் வழித்தோன்றல்களை இன்றும் திருச்சியில் காணலாம்.