31) கடன் தள்ளுபடி
கடன் தள்ளுபடி
முன் காலத்தில் மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம், “இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள், அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
விளக்கம்:
இவ்வுலகில் சிரமப்படுபவர்கள் தான் அதிகம். இவ்வாறு சிரமப்படுபவர்களைக் கண்டால் அவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும். அவர்களது சிரமங்களை நம்மால் முடிந்தளவு போக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். மனிதனுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான்” (புகாரி: 7376) என்ற நபிமொழியும் கஷ்டப்படுவர்களுக்கு உதவ வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
கஷ்டத்தினால் அல்லது அவசியத் தேவையின் காரணத்தால் கடன் வாங்கியவர்கள் திருப்பித் தருவதற்குச் சிரமப்படும் போது அவர்களது கடனை நாம் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு நாம் செய்தால் மறுமை நாளில் நமது பாவங்களை அல்லாஹ் தள்ளுபடி செய்வான்.