3) விண்ணில் ஆடும் மண் தொட்டில்
விண்ணில் ஆடும் மண் தொட்டில்
ஈர்ப்பாற்றலைப் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் சில திருமறை வசனங்களை முன் அத்தியாயங்களில் கண்டோம். அவ்வசனங்களில் பூமி ஆகாயத்தில் ஓய்ந்திருக் கும் பொருளன்று எனவும் அது விண்ணில் அமித வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பொருளே எனும் அறிவியல் உண்மை அவ்வசனங்களில் மிக வலுவாகத் தொக்கி நிற்பதையும் கண்டோம்.
நமது பூமி சூரியனை ஓயாமல் சுற்றிவரும் ஒரு கோள் என நான்கு நூற்றாண்டுகளுக்கு முன் கோபர் நிக்கசால் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் இந்த சுற்றுப் பயணம் திரும்பத் திரும்ப ஒரே பாதையில் நடைபெற்றுக்கொண் டிருக்கிறது. பூமியின் ஒரே பாதையிலான இந்த ஓட்டம் ஒரே பாதையில் நகரும் ஊஞ்சலைப் போன்று முன்னும் பின்னுமா கவோ அல்லது சரியான வட்டப் பாதையில் சுழலும் ரங்க இராட்டினம் (Whirligig) அல்லது இராட்டைச் சக்கரம் (Spinnig Wheel) போன்றோ இல்லை. பூமியின் சுற்றுப்பாதை நீள் வட்டப்பாதை (Ellipse) போன்றே அமைந்துள்ளது.
ஆயினும் அதற்கேற்ற ஓர் உவமானச் சொல் இல்லை என்பதால் பூமியின் சுற்றோட்டத்தை ரங்க இராட்டினத்துடனோ அல்லது இராட்டைச் சக்கரத்துடனோ ஒப்பிடலாம். ஆயினும் திருக்குர்ஆனுடைய இலக்கியப் பார்வையில் பூமியின் சூரிய வலத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரு உவமான ஒற்றுமை(Analogue) அற்புதமானது. அது வருமாறு :
பூமி நமக்கொரு தொட்டில் :
“பூமியைத் தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?உங்களை ஜோடிகளாகப் படைத்தோம் உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
மேற்கண்ட திருமறை வசனத்தில் பூமியின் சூரிய வலம் தொட்டிலோடு ஒப்பிடப்பட்டுள்ளது. ரங்க இராட்டினத்தை விட அல்லது இராட்டையை விட அறிவியல் நோக்கில் மிகச் சிறப்பாகப் பொருந்தும் எடுத்துக்காட்டே இந்தத் தொட்டில் எனும் ஒற்றுமை உவமானமாகும். ஏனெனில் தொட்டில் ஆட்டப்படும்போது அது ரங்க இராட்டினம் அல்லது இராட்டையைப் போன்று சரியான வட்டத்திலோ அல்லது ஊஞ்சலைப் போன்று ஒரு நேர்கோட்டுப் பாதையில் முன்னும் பின்னுமாக நகரவோ செய்வதில்லை. அதற்கு மாறாக தொட்டிலின் இயக்கம் ஒரு நீள் வட்டப்பாதையில் இயங்குவதைப் போன்ற இயக்கமாகவே இருக்கும்.
ஊஞ்சல்கள் பொதுவாக இரண்டு, இரண்டு தொங்கு தளங்களிலிருந்து தொங்க விடப்படுகின்றன. இதனால் ஊஞ்சல்கள் ஆட்டப்படும்போது இயல்பாகவே இது முன் சென்ற தடத்திலேயே திரும்பி வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக அதன் நகர்வு நேர்கோட்டுப் பாதையிலேயே அமைந்தாக வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக தொட்டில் என்பது ஒரே ஒரு தளத்திலிருந்து மட்டுமே தொங்க விடப்படுவதால் அது ஆட்டப்படும்போது அதன் முன்பக்க ஆட்டத்தின் முடிவிலும் பின்பக்க ஆட்டத்தின் முடிவிலும் இயல்பாகவே சிறு சிறு வளைவுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருப்பதால் தொட்டிலின் ஆட்டம் நீள் வட்டமாக அமைந்து விடுகிறது.
எவ்வளவு அற்புதமான ஈடற்ற ஒற்றுமை உவமானம் இது! எவ்வளவு அற்புதமாக பூகோளத்தின் விண்ணில் நகர்வின் (Spatial Motion) அறிவியல் அமைப்பைப் பயன்படுத்தி தேன் சொட்டும் இலக்கியம் படைக்கிறது வான்மறைக் குர்ஆன்! திருமறையின் நம்பிக்கையாளர்கள் ஓரளவு அறிவியல் அறிமுகமும் இலக்கிய வேட்கையும் உடையவர்களாக இருந்தால் அணுவுக்குள் அண்டம் எனும் அற்புதம்போல் அவ்வளவு மகத்தான அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனின் இவ்வளவு சின்னஞ் சிறிய வசனங்களில் அடங்கி இருப்பதைக் கண்டு வியப்பெய்துவதோடன்றி அந்த அற்புதமான அறிவியல் உண்மைகள் பண்டைக்கால மக்களின் அறிவியல் அறியாமையால் புரிந்து கொள்ள முடியாது என்பதால் அவை இலக்கிய வேடத்தின் அலங்காரத்திற்குள் புதைந்து தேடுவோர் கண்களுக்கு மட்டும் புலப்படும்படி நிசப்தமாக வீற்றிருக்கும் பாங்கினைக் கண்டு உடல் சிலிர்க்கும் அனுபவத்தைப் பெற்றிருப்பர்!
தொட்டிலின் ஆட்டமே பிள்ளையின் தூக்கம் :
திருமறை பயன்படுத்தி இருக்கும் தொட்டில் எனும் ஒற்றுமை உவமானத்தின் (Analogue)இலக்கிய நயம் மேலும் ஆழமான அறிவியலைத் தன்னகத்தே கொண்டதாகும். இதை விளங்கிக்கொள்ள இன்றும் கூட உலகின் கோடிக்கணக்கான வர்களால் வினவப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வினாவை எடுத்துக் கொள்வோம்.
“நாம் எதன் மீது நிற்கிறோமோ, எதன் மீது நடக்கிறோமோ, எதன் மீது நமது வாழ்க்கையின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோமோ அந்த பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதும், படுவேகத்தில் விண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதும் உண்மையானால் அதை நம்மால் ஏன் உணர முடிவதில்லை என்பதே அக்கேள்வியாகும். படிக்காதவர்கள் மட்டுமின்றி உயர் நிலைப் பள்ளிகளில் இரண்டு மூன்று வருடங்கள் பயின்று பள்ளியைத் துறந்தவர்கள் கூட இக்கேள்வியை இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது இக்கேள்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் செய்தியாகும்.
இன்றைய காலகட்டத்தில் இக்கேள்விக்குரிய பதில் நமக்குத் தெரிந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அப்படி இருந்தும் இக்கேள்விக்குரிய அறிவியல் விளக்கத்தை உள்ளடக்கிய ஒரு ஒற்றுமை உவமானத்தைப் படைக்கும் முயற்சியில் இலக்கிய விற்பன்னர் ஒருவர் முயன்று பார்க்கும்போது நாம் முன்னர் கண்ட திருக்குர் ஆனின் தொட்டில் உவமானத்தில் உள்ளடங்கி இருக்கும் ஆழம் தெரியாத அறிவியல் உண்மை என்ன என்பது அவருக்குத் தெரியவரும். ஆம்! திருக்குர்ஆனின் தொட்டில் உவமானம் நாம் எடுத்துக்கொண்ட உலகம் தழுவிய வினாவின் (Universal question) பதிலை மிக அற்புதமாக உள்ளடக்கியதாகும். அந்த பதில் வருமாறு :
“ஆடிக் கொண்டிருக்கும் தொட்டிலின் ஆட்டத்தை உணராமலே குழந்தைகள் தொட்டிலில் உறங்குவது உண்மை என்றால் பூமியின் சுழலோட்டத்தை உணராமல் நாமும் அதன் மீது நமது வாழ்வியல் நடவடிக்கைகள் யாவும் செய்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மையாகும்.
ஏழாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வரை நீண்ட ஆயிரம் வருடங்களாக திருக்குர்ஆனின் தொட்டில் உவமானத்தில் மிக அமைதியாகக் கண்ணுறங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான அறிவியல் உண்மைகள் எந்த அளவிற்கு அகன்ற, விரிவான பொருட்களைத் தந்து கொண்டிருக்கின்றன என்பது நமக்குச் சிறுகச் சிறுகப் புலனாகி வருகிறதன்றோ? இத்துடன் நின்றுவிடவில்லை இதன் பொருள் விரிவு.
திருக்குர்ஆனின் உவமானங்களில் ஒன்றாகிய இந்த பூமித் தொட்டிலிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் விளக்கங்கள் பாமரனுக்கு மட்டுமின்றி அறிவியல் கல்வியின் தலைசிறந்த விதிகர்த்தாக்களின் வினாவிற்கும் பதிலளித்துக்கொண்டிருக்கின்ற பிரமிக்கச் செய்யும் பேரதிசயத்தையும் நம்மால் அதில் பார்க்க முடிகிறது.
பேரண்டத்தில் பேரளவும் சிற்றளவும் :
இன்றைய உலகின் தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகள் விடை தேடிக்கொண்டிருக்கும் வினாக்களுள் ஒன்று இப்பேரண்டம் ஏன் இவ்வளவு வழ வழப்பாக (Smooth) இருக்கிறது என்பதாகும். ஹாக்கிங் தன்னுடைய நூலிலும் சில இடங்களில் இக்கேள்வியைக் குறிப்பிட்டுக் காட்டியிருப்பதை நாம் பாகம் 1ல் விளக்கியுள்ளோம்.
மற்றோரிடத்தில்“பேரண்டம் பேரளவில் (Large Scale) பார்க்கும்போது ஏன் இவ்வளவு சீராக (Uniform)இருக்கிறது? (பக்கம் :127) எனக் கேட்கிறார். இக்கேள்வியின் சாரத்தை சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு “பேரளவு (Large Scale) மற்றும் சிற்றளவு (Small Scale) எனும் இத்துறையின் கலைச் சொற்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
சான்றாக சூரிய குடும்பத்தின் சுற்றளவு ஏறக்குறைய 3800 கோடி கிலோ மீட்டர்களாகும். இந்தச் சுற்றளவுக்குள் இருக்கும் கோள்கள், மற்றும் துணைக் கோள்கள் போன்ற பருப் பொருட்களின் (Celestial Bodies) கொள்ளளவு சூரிய குடும்பத்தின் பரப்பளவோடு ஒப்பிடும்போது மிகச் சொற்பமானதாகும். சொற்பமாக இருக்கும் இப்பொருட்களின் பொருண்மை, அடர்த்தி, வெப்பநிலை போன்ற மிக முக்கிய மான இயற்பாடுகளில் அவை தங்களுக்குள் வேறுபடுகிறது.
அதே நேரத்தில் சூரிய குடும்பத்தில் பரவிக் கிடக்கும் பேரளவிலான அண்டவெளி அதன் பொருண்மை, அடர்த்தி மற்றும் வெப்பநிலை போன்றவற்றில் ஒரே சீராக ஏற்றக் குறைச்சலின்றிக் காணப்படுகிறது. மேலும்,நிரூபணமாகிக் கொண்டு வரும் “ஃப்ரீடு மன் அவர்களின் அனுமானப்படி நமது சூரிய குடும்பத்தைப் போன்றே இதர சூரிய குடும்பங் களும் பேரளவில் காட்சி தரும் என்பதாகும்.
காலக்சிகளின் நிலையும் இவ்வாறேயாகும். நமது காலக்சி எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏனைய காலக்சி களும் இருக்கின்றன. பேரண்டத்தின் பெரும் பெரும் தனித் தொகுதிகளே காலக்சிகளாகும். காலக்சிகளின் பரப்பளவு பேரண்டத்தின் பரப்பளவில் மிகச் சொற்பமானதாகும்.
எனவே பேரண்டத்தில் விரிந்து கிடக்கும் அண்ட வெளி காலக்சி களின் பரப்பளவை விட பேரளவானதாகும். இதிலிருந்து சிற்றளவான காலக்சிகளுக்குள் சீரற்ற,வழவழப்பற்ற பருப் பொருட்கள் இருக்கின்றபோதிலும் பேரண்டத்தின் பேரள விலான தோற்றம் சீரானதாகவே உள்ளது. இந்த விளக்கம் பேரண்டம் பேரளவில் சீரானது என்பதன் பொருள் என்ன என்பதை ஓரளவு விளக்கக்கூடியதாகும்.
வேகத்திற்கேற்ற வழவழப்பு :
இப்போது மேற்கண்ட விளக்கத்திலிருந்து பேரண்டம் பேரளவில் சீராக இருப்பதன் காரணம் திருக்குர்ஆன் எடுத்துக்காட்டிய, பூமியைக் குறித்து தொட்டில் என்று கூறிய உவமானத்திலிருந்து வெளிப்படுவதை நாம் பார்க்கலாம். தொட்டிலில் கிடத்தப்படும் குழந்தை அமைதியாக தூங்க வேண்டுமானால் இரண்டு முக்கியமான நிபந்தனைகள் உள்ளன. முதலாவது நிபந்தனை தொட்டில் ஒரு சீரான வேகத்திலேயே ஆட்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அதன் ஆட்ட வேகத்தில் திடீர், திடீர் என ஏற்றக் குறைச்சல் ஏற்படுத்தக் கூடாது. அவ்வாறு ஏற்பட்டால் தூங்கும் குழந்தை கூட துயிலுணர்ந்து நிறுத்தாமல் அழத் தொடங்கிவிடும்.
இரண்டாவது நிபந்தனையைச் சரியாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு, ஒரு பேருந்துப் பயணத்தை உதாரணமாகக் கொள்வோம். பேருந்துகளில் நாம் சுகமாகப் பயணம் செய்ய வேண்டுமாயின் அப்பேருந்து ஒரு சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்க வேண்டும் என்பதோடு அதன் வேகத்திற்கேற்றவாறு சாலையின் தரமும் அமைந் திருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியும். சான்றாக ஒரு பேருந்து மிகக் குறைந்த அளவு சீரான வேகத்தில் – மணிக்கு வெறும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் – செல்வதாக இருந்தால் அது செல்லும் சாலை ஓரளவு குண்டும் குழியுமாக இருந்தாலும் அதனால் பயணிகளுக்குப் பெரிய தொல்லை ஏற்படாது. ஆனால் அதே பேருந்து 100 கிலோ மீட்டர் (மணிக்கு) எனும் சீரான வேகத்தில் செல்வதாக இருந்தால் அது செல்லும் சாலை கான்கிரீட் செய்யப்பட்டு வழவழப்பாக இருக்க வேண்டும். இந்த நிலையில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் எனும் சீரான வேகத்தில் செல்லும் ஒரு சூப்பர் சானிக் விமானத்திற்குச் சாலையாகப் பயன்படும் ஆகாயம் எப்படி இருக்க வேண்டும்?
அந்த வேகத்தில் முன்னால் கூறிய கான்கிரீட் சாலையில் இந்த விமானம் சென்றால் முன்னர் வழவழப்பாக இருந்த அதே சாலை இப்போது சொர சொரப்பாக (Rough)மாறிவிடும். அதில் செல்லும் வாகனத்தின் வேகம் கூடியதே அதற்குக் காரணமா கும். இந்தச் சொர சொரப்பு `உராய்வு (Friction) ஆகும். இந்த உராய்வை நீண்ட நேரம் தாங்க முடியாமல் அதன் சக்கரங்கள் வெடித்து அதில் செல்லும் பயணிகள் விபத்திற்குள்ளாகி விடுவார்கள். எனவே விமானங்களுக்கு வாயுமண்டலத்தின் வழவழப்பு தேவையாகிறது. ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்திற்கே இப்படியென்றால் இலட்சத்து எட்டாயிரம் கிலோ மீட்டர் (மணிக்கு) வேகத்தில் சுழன்றோடும் பூமியின் சாலை எவ்வளவு வழவழப்பாக இருக்க வேண்டும் என யூகிக்க முடிகிறதல்லவா!
பூமியின் விண்ணோட்டத்திற்குத் தேவையான இந்த விண்ணின் வழவழப்பைக் கூட பூமிக்குத் தேவையென திருக் குர்ஆன் கூறிக் கொண்டிருப்பதை அது பூமியை உவமித் திருக்கும் தொட்டில் உதாரணத்திலிருந்து அனுமானிக்க முடிகிறதல்லவா! தொட்டில் ஆட்டப்படும் வேகம் சீராக இருந்தால் மட்டும் போதாது. அது ஆட்டப்படும் இடம் குறைந்தபட்சம் வாயு மண்டலத்தின் வழவழப்பைப் பெற்றிருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும்.
அதன் காரணமாகவே தொட்டில்கள் அனைத்தும் வாயுவில் தொங்கவிடப்படுகின்றன. எனவே பூமியைத் திருக்குர்ஆன் தொட்டிலோடு உவமானப்படுத்தியதில் இருந்து பூமி சுழன்றோடும் விண்வெளியும் மிக வழவழப்பாக இருக்க வேண்டிய அவசியம் அதில் வலியுறுத்தப்படுவதை நம்மால் எளிதாக விளங்க முடிகிறதன்றோ!
திருக்குர்ஆனுடைய இலக்கிய நயத்தில் கூட இவ்வளவு அளவிடற்கரிய ஆழமான அறிவியல் உண்மைகள் புதையல் களாக வந்து கொண்டிருப்பது திருக்குர்ஆன் இறை ஞானத்திலிருந்து மட்டுமே தோன்ற முடியும் என்பதை பகுத்தறியும் மாந்தர்க்கு அறிவுறுத்துகின்ற மறுக்க முடியாத சிறந்த ஆதாரங்களாகும்.
ஆயிரக்கணக்கான வருடங்களில் உருவாகி வருவதும், விஞ்ஞான வளர்ச்சியால் கண்டுபிடிக்கப் போவதுமாகிய அறிவியல் உண்மைகளைக் கூட முன் கூட்டியே சுவைமிக்க இலக்கியப் பண்டங்களாகச் சமைத்துப் பரிமாறும் அளவிற்கு அறிவுத்திறன் பெற்ற ஒரு மானிட குலத்தவனைக் கற்பனை செய்வது இயலாத காரியமே என்பதால் திருக்குர்ஆனைப் படைக்கும் அறிவாற்றலும் மானிட குலத்துவனுக்கு இல்லை என்பது உண்மையல்லவா?
ஆகாயக் குன்றும் ஆகாயக் குழியும் :
பூகோளத்தின் வேகம் ஒரு இலட்சத்து எட்டாயிரம் கிலோ மீட்டர் என்பது பூமி சூரியனைச் சுற்றும் வேகமாகும். அதே நேரத்தில் சூரிய குடும்பத்துடன் இணைக்கப்பட்ட நிலையில் அது மணிக்கு ஒன்பது இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நமது காலக்சியின் மைய அச்சைச் சுற்றி வட்டமிடுகிறது. இதைத் தவிர பேரண்டத்தின் பெரும் தொகுதிகளான காலக்சிகளும் பேரண்டத்தின் மைய அச்சைச் சுற்றி முன் கூறிய வேகங்கள் யாவையும் விட மிக மிக வேகத்துடன் சுழன்றோடுகின்றன. ஓட்டத்தின் வேகம் அதிகரிக்க, அதிகரிக்க அதற்கேற்றவாறு விண்ணகத்தின் வழவழப்பும் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அண்டவெளியில் ஏதேனும் ஓரிடத்தில் அதன் அடர்த்தி சற்றே மிகைத்திருந்தாலும் அது ஒரு மோதலை உருவாக்கும்.
இதைப் போன்று வேறோரிடத்தில் அதன் அடர்த்தி சற்றே குறைந்திருந்தாலும் அந்த இடத்தை ஒரு கோளோ, நட்சத்திரமோ அல்லது காலக்சியோ கடந்து செல்ல நேரும் போது ஒரு பள்ளத்தில் வீழ்வது போன்ற நிலைமையை உருவாக்கிவிடும். விண்வெளியில் பரவியுள்ள வெப்ப நிலையில் ஏதேனும் ஏற்றக் குறைச்சல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கேற்ற பாதிப்புக்களை அந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் விண்ணகப் பொருட்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே இந்த அபாயங்களைத் தவிர்க்கும் பொருட்டு நமது பேரண்டம் பேரளவில் இவ்வளவு சீராகவும் வழவழப்பாகவும் இருக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது.
எளிமையைச் சிக்கலாக்கும் அறிவியல் பற்று (?) :
ஏன் இந்த வானம் இவ்வளவு வழவழப்பாக இருக்கிறது எனும் கேள்விக்கு திருக்குர்ஆனிலிருந்து நாம் விளங்கிக் கொண்ட பதில் சிக்கலற்றதும் எளிமையானதுமாகும் என்பதை, சிக்கலேதும் இன்றி வாசகர்களும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். ஆயினும் எவ்வளவு எளிமையான பதிலாக இருந்த போதிலும் இதை ஒப்புக்கொள்வது சில அறிவியலாளர்களுக்கு அவ்வளவு எளிதானதில்லை. ஏனெனில் இதை ஒப்புக் கொண்டால் கடவுளின் தேவையையும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகி விடும்.
அதே நேரத்தில் கடவுளின் பங்கைத் தவிர்த்து விட்டால் பேரண்டத்தை இவ்வளவு வழவழப்பாக அமையும்படி செய்த எவ்விதமான அறிவியல் காரணத்தை யும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடவுளின் பங்கைத் தவிர்க்கப் பார்க்கும் முயற்சிகள் எவ்வளவு பலமான முட்டுச் சந்தை அடைந்து தொடர்ந்து செல்ல வழியின்றித் தவிக்க நேர்கிறது! பரிதாபம்! எனவே அவர்கள் பேரண்டம் இவ்வளவு சீரான வழவழப்புடன் இருப்பதற்கு நம்மால் விவரிக்க முடியாத ஏதோ காரணம் இருந்து விட்டுப் போகட்டுமே எனக் கூறி திருப்தி அடைகிறார்கள்.
ஆப்பிள்களை வீழ்த்தும் முற்கால அறிவியல் (?) :
இப்போது திருக்குர்ஆனுடைய மற்றொரு அறிவியல் வசனத்தின்பால் கவனத்தைச் செலுத்துவோம். நாம் எதன் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அந்த பூமிக்கு ஒரு ஈர்ப்பு விசை இருப்பது உண்மையாக இருந்தால் அதை ஏன் நம்மால் உணர முடியவில்லை எனும் வினா படிப்பறிவற்ற மக்களால் இப்போதும் கேட்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் பூமி என்பது ஒரு குறிப்பிட்ட அளவு சுற்றளவைக் (40,000 கி.மீ.) கொண்டு விண்ணில் சுழன்றோடிக் கொண்டிருக்கும் கோள் வடிவம் கொண்ட ஒரு பொருள் என்பதில் இப்போதும் ஐயம் கொள்ளும் அவர்களது மனப்பாங்கிற்கு முக்கியப் பங்குண்டு.
கோபர் நிக்க, கெப்ளர், கலிலியோக்களுக்குப் பின்னரும் ஏராளமான ஆப்பிள்கள் ஏராளமான அறிவிலாளர்களின் முன்னால் வீழத்தான் செய்திருக்கும். ஆனால் அவர்களிடம் இல்லாத ஓர் இயந்திரவியல் அறிவுத்திறன் (Mechanical Aptitiude) நியூட்டனிடம் இருந்ததால் அவர் பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு எனும் மகத்தான அறிவியல் கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கினார். அதே நேரத்தில் அவருக்கு முன் இருந்த அறிவியலாளர்களுக்கும் கூட ஆப்பிள்கள் வீழ்வதற்கு அவர்களுக்கே உரிய அறியாமைக் காரணம் இருக்கவே செய்தது.
பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் இயல்பாகவே மாறா தன்மை கொண்ட `எடை எனும் இயற்பாடு உண்டு (இது தவறான நம்பிக்கை என்பதை நாம் திருக்குஆனிலிருந்து முன்னர் கண்டுள்ளோம்) என்றும் அந்த எடையை எதேனும் ஒன்று எப்போதும் தாங்கிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்பி வந்தனர். இதன் காரணமாக பிடிமானமில்லாத எல்லாப் பொருட்களும் ஆப்பிள்கள் உட்பட) பூமியில் வீழ்ந்தாக வேண்டும் என்பது இயற்கையே அன்றி அதற்கு வேறு காரணங்கள் எதுவும் தேவை இல்லை என மகத்தான (?) விடை கண்டு திருப்தி அடைந்தனர்.
தரையில் வீழ்ந்த உயிரற்ற பொருட்கள் வீழ்ந்த இடத்திலேயே நகராமல் கிடப்பதும் இறந்து போகும் உயிரினங்களின் உடல் கிடந்த இடத்திலே கிடந்து கொண்டிருப்பதும்கூட இயற்கையின்பாற்பட்டதே – அவற்றின் எடைகளை எதன் மீதாவது தாங்கி இருக்கும்படிச் செய்ய வேண்டும் எனும் நிர்ப்பந்தத்திற்காகவே – அன்றி பூமியின் மீது அவைகளை ஒட்டிக்கொண்டிருக்கும்படிச் செய்வதற்கு வேறு காரணம் ஏதும் தேவை இல்லை என அவர்களின் பேதை மனங்கள் அவர்களிடம் கூறின.
அந்த அறியாமைக்கால எண்ணமே கல்வியறிவற்ற பாமரர்கள் பலரிடம் இப்போதும் இருந்து வருகிறது. இதன் காரணமாகவே“பூமிக்கு ஈர்ப்பு விசை என்ற ஒரு சக்தி இருப்பாதாகக் கூறப்படுவது உண்மையென்றால் நாம் நடக்கும்போதோ, ஓடும்போதோ அல்லது குதிக்கும் போதோ நமது கால்களை எந்த ஒரு சக்தியும் இழுத்துப் பிடிப்பதாக நமக்குத் தெரியவில்லையே? என அவர்கள் கேட்பதற்குக் காரணமாகும்.
இந்த வினாவிற்குரிய அறிவியல் விடையையும் திருக்குர்ஆன் இலக்கியச் சுவையுடன் விளம்பிக்கொண்டிருப்ப தால் அதை எளிதாகப் புரிந்து கொள்ளும் பொருட்டு ஒரு பொருத்தமான உதாரணத்தின் உதவியை நாடுவோம்.
ஈர்த்திழுக்கும் பூகரம் :
ஆறு மாதக் கைக்குழந்தை ஒன்றை மார்போடு அணைத்துக்கொண்டு கடைத் தெரு வழியாக நடந்து செல்கிறாள் ஒரு பெண். அவளின் மற்றொரு பிள்ளையாகிய ஐந்து வயது சிறுவன், அவளுடைய கையைப் பிடித்தவாறு அவளுடன் சென்று கொண்டிருக்கிறான். அவளுடன் நடந்து செல்லும் அந்தச் சிறுவன் தன் தாயின் கைகளைப் பற்றியவாறே கடைவீதிக் காட்சிகளை இரசித்துக்கொண்டே அவளுடன் சுதந்திரமாகச் சென்று கொண்டிருக்கலாம். அதை அவனுடைய தாய் தடுப்பதில்லை. ஆயினும் அவன் எப்போதேனும் கடைகளை நெருங்கிச்சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடைகளை நோக்கி நகரத் தொடங்கினால் அவனுடைய தாயின் கரம் உடனே அவனைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். அப்போது மட்டுமே தனது தாயின் பிடியிலேயே தான் இருந்து வருவதாகவும் தனது அசைவுகள் தனது தாயால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதையும் அவனால் உணர முடிகிறது.
இதைப் போன்றே அந்தத் தாயின் மார்பில் தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையும் கடைத் தெருக் காட்சிகளை இரசிப்பதற்காக தன் உடலைப் பலவாறு திருப்பலாம். அதை அதன் தாய் தடுப்பதில்லை. ஆனால் அக்குழந்தை எப்போதாவது குதூகலத்தால் தாயின் மார்பிலிருந்து துள்ளிக் குதிக்க முயன்றால் அப்போது அந்தத் தாயின் அரவணைப்பு மேலும் சற்று இறுக்கமாகும். அப்போது மட்டுமே அக் குழந்தைக்கு தாமும் தம்முடைய தாயின் அரவணைப்பால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும்.
இதைப் போன்றே நாமும் நமது பூமித்தாயின் அரவணைப்பில் அதனுடன் சென்றுகொண்டிருக்கிறோம். நமது அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளில் அதனுடைய அரவணைப்பை நாம் உணருவதில்லை. ஆயினும் தாயின் மார்பிலிருக்கும் குழந்தை கடைத் தெருவைப் பார்த்துத் துள்ளிக் குதிப்பதைப்போல் நட்சத்திரங்களைப் பார்த்து வானை நோக்கி நாம் குதிக்க முயற்சித்தால் பூமித்தாய் உடனே நம்மை அவள்பால் இழுத்து அணைத்துக் கொள்ளும். குழந்தை வளர்ந்து ஆளான பிறகு அதன் தாய் அதனை சுதந்திரமாக விட்டுவிடுவதைப் போன்று நாமும் அறிவியல் வளர்ச்சி அடைந்து இராக்கெட்டில் ஏறினால் பூமித்தாயும் நம்மை சுதந்திரமாக விட்டுவிடும்.
நமது உதாரணத்தில் இதுவரை மனிதர்களைப் பற்றிப் பார்த்தோம். மனிதர்கள் மட்டுமன்றி விலங்கினங்களாயினும் அல்லது உயிரற்ற பொருட்களாயினும் பூமியின் மணிக்கு கிட்டத்தட்ட 1800 கி.மீ. எனும் (சுழல்) வேகத்தில் சுழல்வ தால் அதன் மீதிருக்கும் பொருட்கள் உயிருள்ளவையா யினும், உயிரற்றவையாயினும் சிதறடிக்கப்படாமல் அவை களை இருக்கும் இடத்திலேயே இருக்க வைப்பது பூமியின் ஈர்ப்பு விசையே ஆகும். இப்போது இந்த அறிவியலை அற்புதமாக எடுத்துரைக்கும் வான்மறையின் தேர்ந்தெடுத்த வார்த்தைகள் இதோ :
“உயிருடன் உள்ளோரையும் இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக்கூடியதாக பூமியை நாம் ஆக்கவில்லையா?
எவ்வித மறுவிளக்கமும் இன்றி “பூமியை ஈர்ப்பு விசை உள்ளதாகவே இறைவன் உருவாக்கியுள்ளான் என்பதே இந்த சின்னஞ் சிறு வசனங்களின் பொருள் என்பதை விளங்கிக் கொள்வதில் இப்போது யாருக்கும் எவ்விதப் பிரச்னையும் இருக்காதன்றோ?எவ்வளவு மகத்தான அரிய அறிவியல் உண்மைகளையெல்லாம் இறை ஞானத்தின் வெளிப்பாடாக எவ்வித ஆர்பாட்டமோ, ஆராவாரமோ இன்றி முழுமையான அமைதியுடன் திருக்குர்ஆனின் தேர்ந்தெடுக் கப்பட்ட வசனங்களில் இழையோடிக்கொண்டிருக்கிறது என்பதை மிக மிகத் தெளிவாக நம்மால் அடையாளம் காண முடிகின்றதோ!
பூமியின் அணைப்பில் ஆழ்ந்து கிடக்கும் அறிவியல்:
ஒன்றை ஒன்று அணைப்பதற்குத் தேவைப்படும் உறுப்புகளாம் கைகள் இல்லாமலே விந்தைமிகு அறிவியல் கரமாம் ஈர்ப்பாற்றலால் பூமி நம்மை அணைப்பதாக திருக் குர்ஆன் கூறியிருக்கும் இந்த `அணைத்தல் எனும் சொல்லின் இலக்கியச் சுவையின் தித்திப்பு நாம் எடுத்துக் காட்டிய `தாய் – சேய் சான்றில் இருந்து அனுபவித்திருப்பீர்கள். ஆனால் அதன் இலக்கியத்திற்குள் இருக்கும் பச்சையான அறிவியல் மேலும் ஆழமானதே எனும் உண்மையை ஏனைய விண் ணகப் பொருட்களின் ஈர்ப்பு விசை பற்றிய அறிவிலிருந்து நம்மால் பெற முடிகிறது.
பூமி நாம் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்ட ஒரு கோளாகும். இதன் காரணமாகவே அதனுடைய ஈர்ப்பு விசை ஒரு இழு விசையாக நமக்குத் தோன்றாமல் நாம் அணிந்திருக் கும் உடை போன்று ஒரு இதமான அணைப்பாகத் தென்படு கிறது. (நாம் அணியும் ஆடையின் எடையை நாம் ஒருபோதும் உணர்வதில்லை.) இதற்கு மாறாக பூமியின் ஈர்ப்பு விசை நமக்கு ஒரு இழு விசையாகத் தென்பட்டால் நம்மால் இதன் மீது ஒருபோதும் வாழ இயலாது.
சான்றாக ஒருவர் வியாழனுக்குச் சென்றால் அங்கு அவரால் எழுந்து நிற்கக்கூட முடியாமல் சிரமப்படுவார். ஏனெனில் வியாழனில் பூமியில் இருப்பதை விட இரண்டரை மடங்கு அதிகமான ஈர்ப்பு விசை செயல்படுகிறது. நமக்கு இதமான அணைப்பாக விளங்கும் நமது உடையின் எடையை ஒரு சிறு பிராணி – ஒரு குருவி – யின் மீது வைத்தால் அதனால் எப்படி எழுந்து நடமாட முடியாதோ அப்படிப்பட்ட நிலையே நாம் வியாழனுக்குச் சென்றால் ஏற்படக்கூடிய நிலையாகும்.
இப்போது வியாழனுக்குப் பதிலாக சூரியனின் பொருண்மையுள்ள ஒரு கோளுக்கு ஒருவர் செல்ல நேர்ந்தால் அவருக்கு ஏற்படும் நிலைமை ஒரு சிற்றெறும்பின் மீது நமது உடையின் எடையை வைத்தால் ஏற்படும் நிலைமைக்கு ஒப்பாகும். அந்த சிற்றெறும்பு தரையோடு தரையாக அழுந்திப் போவதைப் போன்று அந்த நபர் அக்கோளின் மீது அழுத்தப்பட்டு உடல் தட்டையாக்கப் (Flat)படுவார். ஏனெனில் பூமியின் ஈர்ப்பு விசை போன்று 28 மடங்கு ஈர்ப்பு விசை அக்கோளுக்கு இருப்பதே காரணமாகும்.
நாம் நமது உடையை இப்போது ஒரு யானையின் முது கில் போர்த்துகிறோம். அந்த யானை அதை எப்படி உணரும்? யானையால் அதை ஒரு தழுவலாக உணர முடியாது. அதை வெறும் ஒரு தொடு உணர்வாகவே உணர முடியும். இந்த நிலையே புவி வாழ் மனிதன் ஒருவன் சந்தினுக்குச் சென்றால் ஏற்படும். ஏனெனில் புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே நிலவில் நிலவும் ஈர்ப்பு விசையாகும்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளிலிருந்து பூமியின் ஈர்ப்பு விசை மனிதர்களாகிய நம்மைப் பொருத்தவரை ஒரு `அரவணைப்பைப் (Embracing) போன்றே செயல்படுகிறது எனும் கருத்து நவீன வானவியலின் விரிவான எல்லைகளைத் தொட்டு நிற்கும் ஆழமான அறிவியல் உண்மை என்பதை ஐயமறக் கண்டு தெளிந்தோம்.
திருக்குர்ஆனடைய இந்த அறிவியல் அது வழங்கப்பட்ட காலத்தில் வாழ்ந்த தலை சிறந்த அறிவியல் மேதைகளால் கூட கற்பனை செய்ய இயலாத அளவிற்கு ஆழ, அகலங்களைக் கொண்டதே இந்த அறிவியலாகும் என்பதையும் ஐயமறத் தெரிந்து கொண்டோம். இருப்பினும் இந்த அறிவியலை நேருக்கு நேர் பச்சையாகக் கூறினால் அன்று வாழ்ந்த மக்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலால் (Perspicacity) எளிதில் உட்கொள்ள முடியாது என்பதால் அப்படிப்பட்ட அறிவியல் உண்மைகளை இலக் கியச் சுவைமிக்க காப்ஸ்யூல்களில் (Capsules) உட்புகுத்தி அறியாமைக் குழந்தைகளின் அறிவியல் வளர்ச்சிக்காக மருத்துவர்களையும் வெல்லும் பரிவோடு தேவைக்கேற்ப வழங்கிக்கொண்டிருக்கும் திருக்குர்ஆனின் ஈடு இணை யில்லா அதி அற்புத மேதமை இறைஞானத்தின் வெளிப் பாடே அன்றி மானிட ஆற்றலால் இயலாத காரியமே என்பதில் 1300 ஊ.ஊ மூளையைச் சொந்தமாக்கி 21-ம் நூற்றாண்டிற்குள் புகுந்துவிட்ட பின்னரும் ஒருவரால் சந்தேகப்பட முடியுமா?
திருமறையின் வடிவச் சிறப்பு :
திருக்குர்ஆன் பயன்படுத்தி இருக்கும் ஒற்றுமை உவமானங்களிலிருந்து வெளிப்படும் சொற்பொருட்கள் சுட்டும் செய்திகளின் இலக்கியச் சுவையும் அச்செய்திகளால் உவமிக்கப்படும் மையக்கருக்களிலிருந்து வெளிப்படும் அறிவியல் உண்மைகளும் வற்றாத ஊற்றைப்போன்று வந்து கொண்டிருப்பதைக் கருத்தூன்றிப் பயிலும் மானிடரைத் திகைக்க வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். இதைப் போன்று திருக்குர்ஆனின் வடிவ அமைப்பும் (Structure) அபாரமான பொருத்தத்துடன் அழகுற்று விளங்குவதையும் நம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.
சான்றாக, திருக்குர்ஆன் முதல் வரியில் கூறிய`தொட்டில் எனும் சொற்பொருள் சுட்டும் மன சஞ்சலம் இல்லாத அமைதியான உறக்கம் (மனதில் சஞ்லங்களை உருவாக்குவது அதில் பதிந்துள்ள செய்திகளின் தாக்கமாகும். தொட்டில் பிள்ளை கள் மனதில் எதையும் பதியவைக்கும் பருவத்தை அடையாத தால் அவைகளின் தூக்கம் மனச் சஞ்சலங்கள் இல்லாத தூக்கமாகும்) எனும் செய்தி அந்த வசனத்தின் மையக் கருவாம் “அமைதியான வாழ்வுக்கு ஏற்ற பூமியின் இயற்பாடு எனும் கருத்தை தெள்ளத் தெளிவாகப் பிரதிபலித்துக் காட்டும் மிக மிக அற்புதமான உவமானமாகும்.
மிகச் சரியாகப் பொருந்தக்கூடிய பூமியின் மற்றொரு இயற்பாட்டையே மாறுபட்ட அறிவியலாக இருந்த போதும் திருக்குர்ஆனில் அடுத்த வரியில் கூறப்பட்ட“மலைகளை முளைகளாக நாம் ஆக்கவில்லையா? எனும் வசனத்தில் நாம் காண்கிறோம்.
முதல் வரியில் பூமியைத் தொட்டிலாகக் குறிப்பிட்டதன் வாயிலாக வான் அறியலைக் கூறிய திருக்குர்ஆன் அடுத்த வரியில் மலைகளை முளைகளாக்கப்பட்ட செய்தியைக் கூறி புவிசார் அறிவியலுக்கு மாறியது. இருப்பினும் அந்த மாற்றம் திருக்குர்ஆன் முதல் வரியில் கூறிய சொற்பொருள் சுட்டும் செய்தியிலிருந்தும் அச்செய்தியின் மையக் கருத்திலிருந்தும் இம்மியளவும் விலகிப் போகவில்லை.
இரண்டாவது வரியில் கூறப்பட்டிருப்பது புவியியலைச் சார்ந்ததாக இருப்பதால் அது வேறு தொகுதியில் விளக்குவ தற்கே வாய்ப்புள்ளது. இருப்பினும் நமது பூமி அதன் இளம் வயதில் பெரும் அதிர்வுகளையும் பூகம்பங்களையும் ஓயாமல் நிகழ்த்தி வந்தது என்பதைக் கருத்தில் கொள்வது இந்த இடத்திற்குப் போதுமானதாகும்.
அப்போது பூமியின் மேட்டுப் பகுதிகளெல்லாம் திடீர் திடீரெனப் பள்ளங்களாவதும் பள்ளங்கள் மேட்டுப் பகுதிகளாக மாறுவதும் பூகோளத்தின் வழக்கமாக இருந்து வந்தது. பூகோளத்தின் அந்த நடத் தையை படிப்படியாக முடிவுக்குக் கொண்டு வந்த இயற் பாட்டிலிருந்து தோன்றி வந்ததே மலைகளாகும் என்பது அதைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளிலிருந்து தெரியவரும் அனுமானங்களாகும்.
இதிலிருந்து மலைகள் தோன்றவில்லை யெனில் பூமி இப்போதும் பழைய நிலையிலேயே இருந்து கொண்டிருக்கும் என்பது தெளிவு. இப்படிப்பட்ட நிலையில் ஒருவர் பூமியில் வாழ்ந்தால் மனச் சஞ்சலம் இல்லாமல் அவரால் அமைதியாக உறங்க முடியுமா? மேலும் ஊண் உறக்கம் இன்றி விழிப்புடன் இருந்தால் கூட இந்த பூமி அவருக்கு ஒரு வாழ்விடமாக இருக்க முடியுமா? “இல்லை! இல்லை! என்பதில் கருத்து வேற்றுமைகளுக்கும் இடமில்லை! எனவே முதல் வரியின் சொற்பொருள் சுட்டும் செய்தி யோடும் அச்செய்தியின் மையக் கருத்தோடும் இரண்டாம் வரியும் மிக அற்புதமாகப் பொருந்தி விட்டது.
இப்போது திருக்குர்ஆனுடைய ஆய்விற்குரிய வசனத் தொடரின் மூன்றாவது வரியில் கூறப்பட்டிருக்கும் “உங் களை ஜோடிகளாகப் படைத்தோம் எனும் செய்தி வானி யல் மற்றும் புவியியல் ஆகியவைகளிலிருந்து வேறுபட்டு உயிரியலைக் கூறிய போதிலும் முன்னர் நிகழ்ந்தது போன்றே முதல் வரியுடன் மிக அழகாகப் பொருந்துகிறது. மேல் விளக்கங்கள் தேவையில்லாத அளவிற்கு இணையுடனல் லாத உறக்கம் எவ்வளவு சஞ்சலத்தை உருவாக்கும் என்பதும் இணையற்ற வாழ்க்கை எவ்வளவு நரக வேதனையாக இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதேயாகும்.
ஆய்விற்கெடுத்துக் கொண்ட வசனத் தொடரில் கடைசி யாக உள்ள “உங்கள் உறக்கத்தை ஓய்வாக ஆக்கி னோம் எனும் வரி முன்னர் கூறப்பட்ட வானியல், புவியியல், உயிரியல் பிரிவுகளிலிருந்து வேறுபட்டு உளவியல் பிரிவைச் சார்ந்ததாக இருந்த போதிலும் இந்த வரியும் முன் போன்றே வசனத் தொடரின் முதல் வரியோடு முற்றிலும் பொருந்தி நிற்கிறது. மனிதனை இயக்குவது அவனது மனமே என்றும் அந்த மனம் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதேயாகும் என்பதும் விளக்கங்கள் தேவைப்படாத மனித அனுபவங்களாகும்.
இதைப்போல மனித வாழ்க்கைக்கு ஓய்வு தேவை என்பது அந்த ஓய்வு உடலளவில் மட்டுமின்றி உள்ளத் தளவில் இருக்க வேண்டும் என்பதும் மிக இன்றியமை யாததாகும் என்பதும் விளக்கங்கள் தேவையில்லாத மானிட அனுபவங்களாகும். எனவே ஓய்வற்ற வாழ்க்கை ஒரு நரக வேதனையே அன்றி அது உண்மையான வாழ்க்கையாக இருக்க முடியாது என்பதிலிருந்து இந்த வரியிலுள்ள விபரங்களும், அது கூறும் செய்தியின் அறிவியல் பிரிவு மாறிய போதிலும் முதல் வரியில் கூறப்பட்ட “தொட்டில் எனும் சொற்பொருள் சுட்டும் அமைதியான உறக்கம் எனும் செய்தியேயாகும்.
அந்தச் செய்தியின் மையக் கருவாம் அமைதியான உலக வாழ்வு எனும் கருப்பொருளோடும் துல்லியமாகப் பொருந்தி நிற்கும் திருமறை வசனங்களின் வடிவ அழகும் பயில்வோர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அதன் இலக்கியச் சிறப்பம்சங்களாகும்.
அறிவியலுக்கு ஏன் இலக்கியம்?
திருக்குர்ஆனுக்குரிய தெய்வீக ஞானத்தின் சிறப்பம்சங் கள் அனேகமாக இருந்த போதிலும் இந்நூலில் நமது பணி, திருக்குர்ஆனுடைய விஞ்ஞான அறிவை சிறிதளவேனும் விளங்கிக்கொள்ள முயற்சிப்பதே அன்றி அதனுடைய ஈடு இணையற்ற இலக்கியச் சுவையை இனம் காட்டும் பணி யில்லை என்பது தெரிந்ததே. இருப்பினும் இந்த அத்தியாயத் தில் ஆய்வு செய்யப்பட்ட திருமறை வசனங்கள் அக்கால மக்களின் வானியல் அறியாமையைப் போக்கும் மிகக் கசப்பான அறிவியல் மருந்தாக இருந்ததால் அதை இலக்கியச் சுவையில் தோய்த்தெடுப்பதற்குப் பதிலாக அச்சுவையில் ஊறவைத்தே பரிமாறப்பட்டது.
இதன் விளைவாகவே இந்த அத்தியாயத்தில் இலக்கியம் இழையோடும்படி நேர்ந்து விட்டது. ஆனால் திருக்குர்ஆனின் இலக்கியம் ஆழம் காண முடியாததாகும். நமது சிற்றறிவின் காரணமாக அதன் மேற் பரப்பின் கீழே நம்மால் செல்ல இயலவில்லை என்பதே உண்மையாகும். அறிவியலைக்கூட இந்த அளவிற்கு இலக்கிய மாக்கிச் சித்தரிக்கும் அறிவாற்றலை வெளிப்படுத்தும் மற்றொரு நூல் இவ்வையகத்தில் இருப்பதாக நாம் கேள்விப் படவில்லை. இவையாவும் திருக்குர்ஆனுடைய தெய்வீக ஞானத்தின் சிறப்பம்சங்களே!
இந்த அத்தியாயத்தில் விவாதித்த விபரங்களை கருத்தில் கொண்டு திருக்குர்ஆன் யாருடைய நூல் என்பதை வாசகர்களால் எளிதில் மதிப்பிட முடியும். அப்பணியில் இப்போது மெத்தனப்போக்கை கடைபிடித்தால் மற்றொரு நேரத்தில் தங்களைத் தாங்களே குறைகூறும் நிலை ஏற்பட்டு விடும்.