12) தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

நூல்கள்: இயேசு இறை மகனா?

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.

(நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் கூறுகிறது.

அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து ‘எனக்குப் பின்னாகப் போ சாத்தானே! நீ இடறலாயிருக்கிறாய். தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷனுக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய்’ என்றார்.

(மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்

இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்

கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்.

அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிஷேசங்களும் கூறுகின்றன.

இவ்வளவு மோசமான துன்மார்க்கனுக்கு இயேசு வழங்கிய அந்தஸ்து என்ன தெரியுமா?

‘பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன். பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டு இருக்கும். பூகோலத்தில் நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்’ என்றார்.

(மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்தும் ஐயமற அறியலாம்.