03) குர்ஆன் தெளிவானது
3) குர்ஆன் தெளிவானது
திருக்குர்ஆனில் சில வசனங்கள் திருக்குர்ஆன் பற்றிய அறிமுகமாக அமைந்துள்ளன. குர்ஆன் தன்னை அறிமுகம் செய்யும் போது குர்ஆன் தெளிவானது எனவும், முழுமையானது எனவும் கூறுகிறது. இது போன்ற கருத்துள்ள வசனங்களைத் தமக்குச் சாதமான ஆதாரங்களாகக் காட்டி ஹதீஸ்களை மறுக்கின்றனர்.
குர்ஆன் தெளிவாகவும், முழுமையாகவும் இருக்கும் போது இன்னொன்று தேவை இல்லை என்பது இவர்களின் வாதம். அவர்கள் ஆதாரமாகக் காட்டும் அது போன்ற சில வசனங்களைப் பாருங்கள்.
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
(இது) வேதமாகும். நன்கறிந்த, ஞானமுடையவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானம் நிரப்பப்பட்டு, பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.
இது வேதமாகிய தெளிவான குர்ஆனின் வசனங்கள்.
அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.
உங்களிடம் ஒரு வேதத்தை அருளினோம். அதில் உங்களுக்கு அறிவுரை இருக்கிறது. நீங்கள் விளங்க வேண்டாமா?
மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
உமக்கு இவ்வேதத்தை நாம் அருளி, அது அவர்களுக்குக் கூறப்படுவது அவர்களுக்குப் போதவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் அருளும், அறிவுரையும் உள்ளது.
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
இந்த வசனங்களும், இது போன்ற கருத்திலமைந்த வசனங்களும் குர்ஆனை விளங்குவது மிக எளிதான ஒன்று எனவும், குர்ஆன் மட்டும் போதும் எனவும் கூறுகின்றன. எனவே ஹதீஸ்கள் தேவை இல்லை என்று இவர்கள் வாதிடுகின்றார்கள். குர்ஆன் தெளிவானது; விளங்குவதற்கு எளிதானது என்று குர்ஆன் கூறுவது உண்மை தான்.
குர்ஆனை எவ்வாறு விளங்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றதோ அந்த முறைப்படி விளங்கினால் தான் குர்ஆன் தெளிவானதாக இருக்கும்.
ஒரு மருந்து குறிப்பிட்ட நோயைக் குணமாக்கும் என்றால் நம் இஷ்டத்துக்கு அந்த மருந்தை உட்கொள்ளலாம் என்பது அதன் பொருள் அல்ல. மாறாக அந்த மருந்தைக் கண்டு பிடித்தவன் எந்த முறையில் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனக் கூறுகிறானோ அப்படிப் பயன்படுத்தினால் தான் அது அந்த நோயைக் குணப்படுத்தும். அந்த முறைக்கு மாற்றமாகப் பயன்படுத்தினால் நோயை நீக்குவதற்குப் பதிலாக மோசமான விளைவுகளை அம்மருந்தே ஏற்படுத்தி விடும்.
குர்ஆனில் கூறப்பட்ட எந்த விஷயத்தைப் பற்றி விளங்குவதாயினும் அது பற்றிக் கூறப்படும் ஒரு வசனத்தை மட்டுமோ, சில வசனங்களை மட்டுமோ பார்த்துவிட்டு முடிவுக்கு வரக் கூடாது. மாறாக அந்த விஷயம் பற்றி குர்ஆன் முழுதும் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைத் திரட்டி எந்த வசனத்தையும் மறுத்து விடாமல் ஒன்றுடன் ஒன்றை இணைத்து முடிவுக்கு வர வேண்டும்.
இது குர்ஆனுக்கு மட்டும் உள்ள விதி அல்ல. எந்த நூலாக இருந்தாலும் இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டே அந்த நூலை விளங்க வேண்டும்.
இந்த அடிப்படையை மறந்து விட்டு, அல்லது புறக்கணித்து விட்டு ஒன்றிரண்டு வசனங்களை மட்டும் நுனிப்புல் மேய்வது போல் பார்த்துவிட்டு விளங்க முற்பட்டது தான் இவர்களின் குழப்பத்துக்குக் காரணம். இவர்கள் மேற்கண்ட வசனங்களை விளங்கியது போல் மற்ற வசனங்களை விளங்க ஆரம்பித்தால் என்னவாகும் எனப் பார்ப்போம்.
உதாரணமாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயத்தில் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தை எடுத்துக் கொள்வோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்றால் யாரிடமும் எந்த உதவியும் தேட மாட்டோம் என்பது இதன் கருத்து. இதை மட்டும் மேலோட்டமாகப் பார்த்தால் என்ன முடிவுக்கு நாம் வர வேண்டும்.
எந்த மனிதனிடத்திலும் எந்த உதவியும் நாம் கேட்கக் கூடாது என்ற முடிவுக்குத் தான் வர வேண்டும். யாரிடமாவது ஏதாவது நாம் உதவி கேட்டால் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற உறுதி மொழியில் நாம் பொய் உரைத்தவர்களாகி விடுவோம். குர்ஆன் தெளிவானது என்பதை மட்டும் பார்த்துவிட்டு ஹதீஸ் தேவை இல்லை என்று இவர்கள் விளங்கியது போல் உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தை விளங்குவதாக இருந்தால் இப்படித் தான் விளங்க வேண்டும்.
இந்த வசனத்தை விளங்கும் சரியான முறை என்ன? உதவி தேடுதல் பற்றி திருக்குர்ஆன் முழுதும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைத் தொகுத்துப் பார்த்து எந்த வசனத்தையும் நிராகரிக்காமல் அனைத்து வசனங்களுக்கும் மத்தியில் இணக்கமான முடிவைக் கண்டறிவதே சரியான முறையாகும்.
அவ்வாறு தொகுத்துப் பார்க்கும் போது மனிதர்களிடம் உதவி தேடுவதை அனுமதிக்கும் வகையில் பல வசனங்கள் இருப்பதைக் காணலாம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தை அந்த வசனங்களுடன் இணைத்துப் பார்க்கும் போது இதன் சரியான பொருள் நமக்கு விளங்குகிறது.
கடவுள் என்ற நிலையில் வைத்துக் கேட்கப்படும் உதவிகளை அல்லாஹ்விடம் மட்டும் கேட்க வேண்டும். மனிதர்கள் என்ற நிலையில் வைத்து தேடப்படும் உதவிகளை மனிதர்களிடம் தேடுவது இவ்வசனத்துக்கு முரணாக ஆகாது என்று விளங்கிக் கொள்கிறோம்.
நிராகரிப்பவர்களைக் கொல்லுங்கள் என்ற கருத்தில் சில வசனங்கள் உள்ளன. இது போன்ற வசனங்களை மட்டும் பார்த்துவிட்டு முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியின் கீழ் முஸ்லிமல்லாதவர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று வாழ்ந்ததையும், இம்மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்ற கருத்தில் அமைந்த வசனங்களையும், முஸ்லிமல்லாத மக்களுக்கும் உதவ வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஏராளமான வசனங்களையும் ஒருங்கிணைத்து இவ்வசனம் அருளப்பட்ட நேரத்தையும் கருத்தில் கொண்டு விளங்கினால் போர்க்களத்தில் கடைப்பிடிக்க வேண்டிய போர் தர்மம் பற்றியே இவ்வசனம் கூறுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இது போலவே குர்ஆன் தெளிவானது; முழுமையானது என்ற கருத்துடைய சில வசனங்களை இவர்கள் எடுத்துக் காட்டி வாதிடுகின்றனர். இந்த விஷயம் குறித்து அருளப்பட்டுள்ள அனைத்து வசனங்களையும் தொகுத்து ஒருங்கிணைத்து விளங்க முயற்சி செய்திருப்பார்களானால் குர்ஆன் மட்டும் போதும்; நபிவழி அவசியம் இல்லை என்ற முடிவுக்கு இவர்கள் நிச்சயம் வந்திருக்க மாட்டர்கள்.
காரிஜிய்யாக்கள் போல் அரைகுறையாக குர்ஆனை அணுகுவதாலேயே நபிவழி அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுவதாக எண்ணிக் கொண்டனர்.
விளங்குவதற்கு குர்ஆன் எளிதானது என்பதன் சரியான பொருள் என்ன? எப்படி விளங்க வேண்டும் எனக் குர்ஆன் கூறுகிறதோ அப்படி விளங்கினால் தான் விளங்கிட எளிதானது. குர்ஆன் கூறும் வழிமுறைக்கு மாற்றமாக குர்ஆனை விளங்கினால் குர்ஆன் கூறாததைத் தான் விளங்குவார்களே தவிர குர்ஆனை விளங்கியவர்களாக மாட்டார்கள்.
குர்ஆனை எப்படி விளங்க வேண்டும் என்பதைப் பின்வருமாறு அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.
மனிதர்கள் சிந்திப்பதற்காகவும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவதற்காகவும் குர்ஆனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அருளியதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். அதாவது குர்ஆனை விளங்கிட இரு வழிகள் உள்ளன என்று இவ்வசனம் கூறுகிறது.
குர்ஆன் வசனங்களை நாம் சிந்தித்து விளங்க வேண்டும்.
நமது சிந்தனைக்கு விளங்காத பட்சத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தின் துணையுடன் விளங்க வேண்டும். இது தான் குர்ஆனை விளங்குவதற்கு அல்லாஹ் கற்றுத் தரும் சரியான முறையாகும். குர்ஆனில் இரு விதமான வசனங்கள் உள்ளன. சில வசனங்கள் வாசித்த உடன் விளங்கிவிடும். வாசித்தவுடன் விளங்காவிட்டாலும் கொஞ்சம் சிந்தனையைச் செலுத்தி வாசித்தால் விளங்கி விடும். இது ஒரு வகை.
இன்னும் சில வசனங்கள் வாசித்தவுடன் பொருள் விளங்கிவிடும் என்றாலும் அதன் கருத்து முழுமையாக விளங்காது; சிந்தனை வட்டத்துக்குள் அது வராது. அது போன்ற வசனங்களின் கருத்து என்ன என்பதை அவனது தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள். அவர்களின் விளக்கத்தின் துணையுடன் அவ்வசனங்களை விளங்கினால் தான் அதன் கருத்து முழுமையாக விளங்கும்.
இது நமது சொந்த ஊகம் அல்ல. மேற்கண்ட வசனத்துக்குள் அடங்கியுள்ள கருத்து இது தான். நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம் என்பதற்கு இதைத் தவிர வேறு பொருள் இருக்க முடியாது.
குர்ஆனை வாசித்தவுடன் அல்லது சிந்தித்தவுடன் முழுமையாக விளங்கிவிடும் என்றால் அதை மட்டும் அல்லாஹ் இங்கே கூறியிருப்பான். நீர் விளக்குவதற்காக என்று அல்லாஹ் கூறியிருக்க மாட்டான்.
குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடுவோரிடம் நாம் கேட்க விரும்புவது இது தான்!
- நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வசனத்தின் கட்டளையை ஏற்று இவ்வேதத்துக்கு விளக்கம் அளித்தார்களா? இல்லையா?
- விளக்கம் அளித்தார்கள் என்றால் அவ்விளக்கத்தை நாம் ஏற்றுச் செயல்பட வேண்டுமா? கூடாதா?
- அவர்கள் விளக்கம் அளித்தார்கள் என்றால் அந்த விளக்கம் என்ன? அவர்கள் அளித்த விளக்கத்தை நாம் எப்படி அறிந்து கொள்வது?
- நபிவழியை ஏற்றுக் கொண்டால் தவிர வேறு எந்த வழியிலும் அந்த விளக்கத்தை எடுத்துக் காட்டவே முடியாது.
இந்தக் கருத்தை மற்றொரு வசனத்திலும் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே தவிர உமக்கு இவ்வேதத்தை நாம் அருளவில்லை. (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர் வழியாகவும், அருளாகவும் உள்ளது.
நீர் விளக்குவதற்காக இதை அருளினேன் என்று கூறுவதை விட நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை என்பது அழுத்தம் நிறைந்ததாகும். நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்ற கருத்தை இவ்வாசக அமைப்பு தெளிவாக அறிவிக்கின்றது. நபிகள் நாயகத்தின் விளக்கம் எந்த அளவு முக்கியமானது என்பதற்கு இவ்வசனம் மிக முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது.
திருக்குர்ஆனை மக்களிடம் கொடுத்தவுடன் அல்லது வாசித்துக் காட்டியவுடன் அவர்களுக்கு விளங்கி விடும் என்றிருந்தால், நீர் விளக்குவதற்காகவே தவிர இதை அருளவில்லை என்று அல்லாஹ் கூறியிருப்பானா? விளக்காமலே விளங்குவதை யாரேனும் விளக்குவார்களா? நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் இத்தகைய வேண்டாத வேலையைச் செய்வானா?
எனவே நபிகள் நாயகத்தின் விளக்கத்தின் துணையோடு அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு திருக்குர்ஆனை விளங்கினார்களோ அதே விளக்கத்தின் துணையோடு தான் நாமும் திருக்குர்ஆனை விளங்க வேண்டும். விளங்க முடியும். இதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு வசனத்தை மட்டும் இந்த இடத்தில் எடுத்துக் காட்டுகிறோம்.
(இது போல் அமைந்த இன்னும் பல வசனங்கள் தனித் தலைப்பில் தரப்பட்டுள்ளது.
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
இந்த வசனத்தில் கூறப்படும் பல விஷயங்கள் யாருடைய விளக்கமும் இல்லாமல் விளங்கி விடுகிறது. மாதங்களின் எண்ணிக்கை 12 என்பது எளிதாக விளங்குகிறது. நான்கு மாதங்கள் புனிதமானவையாக உள்ளதால் அம்மாதங்களில் போர் செய்யக் கூடாது என்பதும் விளங்குகிறது.
ஆனால் அந்தப் புனித மாதங்கள் எவை என்பது இந்த வசனத்திலிருந்து விளங்காது. வாழ்நாள் முழுதும் ஒருவர் சிந்தித்தாலும் அந்த மாதங்கள் யாவை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இது சிந்தனை வட்டத்துக்குள் வரக் கூடியது அல்ல. எந்த இறைவன் அம்மாதங்களைப் புனிதமானவை என அறிவித்தானோ அவன் அறிவித்தால் தவிர அதை நம்மால் அறிய முடியாது.
அந்த நான்கு மாதங்கள் யாவை என்பது இந்த வசனத்தில் கூறப்படாவிட்டாலும் வேறு வசனங்களில் அது பற்றி கூறப்பட்டுள்ளதா என்றால் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. நான்கு மாதங்களில் போர் செய்யக் கூடாது என்று கூறப்படுவதால் அந்த நான்கு மாதங்கள் யாவை என அறியும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது.
குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோர் கியாம நாள் வரையிலும் அந்த நான்கு மாதங்களைக் குர்ஆனிலிரிருந்து எடுத்துக் காட்ட முடியாது. குர்ஆன் முழுமையானது எனக் கூறுகிறீர்களே? அந்த நான்கு மாதங்கள் குர்ஆனில் கூறப்படாவிட்டால் குர்ஆன் முழுமையானது அல்ல என்று ஆகிவிடுமே? என்று கேட்டால் இவர்களிடம் பதில் இல்லை.
ஆனால் குர்ஆனில் சில விஷயங்கள் பொதுவாகக் கூறப்பட்டுள்ளன. அதன் கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்குவார்கள் என்று 16:44, 16:64 ஆகிய வசனங்கள் கூறுவதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை விளக்கி விட்டார்கள். எனவே குர்ஆன் முழுமையானது தான் என்று நம்மால் பதில் சொல்ல முடியும்.
போர் செய்வதைத் தடை செய்யும் நான்கு மாதங்களைக் குர்ஆனிலிருந்து அவர்கள் எப்போது எடுத்துக் காட்ட முடியவில்லையோ அப்போதே அவர்களின் கொள்கை அறியாமை மீது நிறுவப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகி விடுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்று குர்ஆனே கூறிவிட்ட பிறகு ஹதீஸ்கள் தேவை இல்லை என்று யாராவது கூறினால் அவர்கள் ஹதீஸ்களை மட்டும் மறுக்கவில்லை.(அல்குர்ஆன்: 16:44, 16:64) ➚ஆகிய வசனங்களை மறுத்ததன் மூலம் குர்ஆனையே மறுக்கிறார்கள்.
சமுதாய மொழியே தூதரின் மொழி
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.
குர்ஆன் மட்டும் போதும் நபிவழி அவசியம் இல்லை என்போரின் வாதத்துக்குள் வேதத்தைக் கொண்டு வந்து தருவதோடு இறைத் தூதர்களின் பணி முடிந்து விடுகிறது என்ற கருத்து உள்ளடங்கி இருக்கிறது.
வேதங்களைக் கொண்டு வந்து மக்களிடம் சேர்ப்பிப்பது மட்டும் தான் இறைத் தூதர்களின் பணி; விளக்கமளிப்பது அவர்களின் பணி அல்ல என்ற மடமைக்கு இவ்வசனம் சம்மட்டி அடியாக அமைந்துள்ளது. இத்தகையோருக்கு மறுப்பு சொல்வதற்காகவே அருளப்பட்டது போல் ஒவ்வொரு வார்த்தையும் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனை மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கத்தையும் ஏற்று நடக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக இவ்வசனமும் அமைந்துள்ளது.
ஒரு சமுதாயம் எந்த மொழியைப் பேசுகிறதோ அந்த மொழியைச் சேர்ந்தவரையே தூதராக அனுப்பியிருப்பதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அப்போது தான் தமக்கு அருளப்பட்ட வேதத்தை மக்களுக்கு அந்தத் தூதர் விளக்க முடியும் என்று இதற்கான காரணத்தையும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் நமக்கு ஒரு கடிதம் வருகிறது. அக்கடிதத்தை நம்மிடம் கொண்டு வந்து தருபவருக்கு தமிழ் தெரியவில்லை என்றால் அக்கடிதத்தை நாம் விளங்குவதற்கு அது தடையாக அமையாது. யாருக்குக் கடிதம் எழுதப்படுகிறதோ அவருக்குக் கடிதத்தில் உள்ளது தானாகவே விளங்கி விடும் என்றால் கடிதத்தைக் கொண்டு செல்பவரின் மொழி பற்றி நாம் கவலைப்பட மாட்டோம்.
ஆனால் அனுப்பப்படும் கடிதம் முழுவதுமோ, அல்லது கடிதத்தில் ஒரு பகுதியோ யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவருக்கு விளங்காது என்ற நிலை இருந்தால் அந்த நிலையில் நாம் என்ன செய்வோம்? கடிதம் யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரது மொழியை அறிந்தவராகவும், நாம் எந்தக் கருத்தில் எழுதினோமோ அக்கருத்தைப் புரிந்து விளக்கம் சொல்லக் கூடியவராகவும் இருப்பவரைத் தேர்வு செய்து கடிதத்தைக் கொடுத்து அனுப்புவோம்.
இது போன்று தான் குர்ஆன் அருளப்பட்டதாக அதை அருளிய இறைவன் கூறுகிறான். குர்ஆனை என் இஷ்டப்படி தான் புரிந்து கொள்வேன்; அதைக் கொண்டு வந்தவரின் விளக்கம் எனக்குத் தேவை இல்லை என்று ஒருவர் கூறினால் அவர் குர்ஆனின் மேற்கண்ட வசனத்தைத் தான் மறுக்கிறார்.
சமுதாயம் பேசுகின்ற மொழி தூதருக்குத் தெரிந்திருந்தால் தான் அவரால் அந்த மக்களுக்கு வேதத்தை விளக்க முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான். வேதத்தை விளங்கிட தூதரின் விளக்கம் அவசியம் என்று அல்லாஹ் கூறும் போது அல்லாஹ் கூறுவதை மறுக்கும் வகையில் குர்ஆன் மட்டும் போதும் என இவர்கள் வாதிடுகிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகின்றது.
வேதங்களை இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி அம்மக்களுக்கு அதில் ஏற்படும் ஐயங்களை விளக்கும் பொறுப்பும் தூதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவ்விளக்கத்தை ஏற்கும் கடமை மக்களுக்கு இருக்கிறது.
உலகம் அழியும் வரை வருகின்ற மக்களுக்குத் தூதராக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த வேதம் எவ்வாறு எல்லாக் காலத்தவர்களுக்கும் தேவையோ அது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் உலகம் அழியும் நாள் வரை தோன்றுகின்ற அனைவருக்கும் தேவையாகும்.
வேதத்துக்கு இறைத் தூதர்கள் அளித்த விளக்கம் அவர்கள் வாழ்ந்த காலத்தவர்களுக்கு மட்டும் கிடைத்து பின்னர் வருகின்ற சமுதாயத்திற்கு அவ்விளக்கம் கிடைக்காமல் போனால் அது அநீதியாகும். அல்லாஹ் எந்த மனிதருக்கும் நான் எள்ளளவும் அநீதி இழைப்பவன் அல்லன் என்று திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கு ஏற்படும் சந்தேகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் தெரிந்து கொண்ட யாவும் உலகம் உள்ளளவும் வருகின்ற மக்களுக்கும் உரியதாகும். இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை என்று கூறுவார்களேயானால் இது வரை நாம் எடுத்துக் காட்டிய எல்லா வசனங்களையும் அவர்கள் நிராகரிக்கின்றார்கள்.
இறைத் தூதர்கள், தாம் வாழ்ந்த காலத்தில் விளக்கமளித்தார்கள் என்று ஒப்புக் கொண்டால் – இறைவனின் கட்டளைப்படி அவர்கள் அளித்த விளக்கம் அந்தக் காலத்துடன் முடிந்து விட்டது என்று கூற எந்த வசனம் ஆதாரமாகவுள்ளது என்று எடுத்துக் காட்ட வேண்டும். இவ்வாறு கூறக் கூடிய ஒரு வசனமும் திருக்குர்ஆனில் கிடையாது.
அல்லாஹ் அருளியதையே பின்பற்ற வேண்டும்
குர்ஆன் தெளிவானது என்ற கருத்தில் அமைந்த வசனங்களை ஆதாரமாகக் காட்டியது போல் இறைச் செய்தியை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் அமைந்த வசனங்களையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
திருக்குர்ஆனில் அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற்றுங்கள் என்ற கருத்தில் பல வசனங்கள் உள்ளன. அது போன்ற வசனங்களை எடுத்துக் காட்டி அல்லாஹ் அருளியதை மட்டுமே பின்பற்ற வேண்டும்; அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் தான்; எனவே ஹதீஸ்களைப் பின்பற்றுவது இத்தகைய வசனங்களுக்கு முரணானது என இவர்கள் வாதிடுகின்றனர். இவர்கள் எடுத்துக் காட்டும் அத்தகைய வசனங்கள் சிலவற்றைப் பார்த்துவிட்டு அவர்களின் இந்த வாதம் எவ்வளவு தவறானது என்பதைக் காண்போம்.
அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்! என்று அவர்களிடம் கூறப்பட்டால் எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம் என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா?
எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்குச் சாட்சிகளாகப் பதிவு செய்து கொள்!(எனவும் கூறினர்)
எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக!
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
இது நாம் அருளிய பாக்கியம் பொருந்திய வேதம். எனவே இதைப் பின்பற்றுங்கள்! (நம்மை) அஞ்சுங்கள்! அருள் செய்யப்படுவீர்கள்!
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதையே பின்பற்றுகிறேன். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவாகவும், நேர் வழியாகவும், நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு அருளாகவும் உள்ளதுஎன்று கூறுவீராக!
உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை எனக் கூறுவீராக!
அல்லாஹ் அருளியதையே பின்பற்ற வேண்டும் எனவும், வேறு எதனையும் பின்பற்றக் கூடாது எனவும் இவ்வசனங்கள் அனைத்தும் தெளிவாக அறிவிக்கின்றன. அல்லாஹ் அருளியது என்பது குர்ஆனைத் தான் குறிக்கும்; குர்ஆன் அல்லாத நபிவழியைப் பின்பற்றுவது மேற்கண்ட வசனங்களுக்கு எதிரானது என்பது இவர்களின் வாதம்.
அல்லாஹ் அருளியதை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் தான் என்ற இவர்களின் வாதம் தவறானது.
நபிகள் நாயகத்தின் விளக்கத்துடன் தான் குர்ஆனை விளங்க வேண்டும் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுவதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். எனவே சிந்திக்கும் திறன் சிறிதளவு இருந்தாலே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கமும் அல்லாஹ் அருளியது தான் என்று புரிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகத்தின் விளக்கத்தைப் பின்பற்றுவது அல்லாஹ் அருளியதை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் உள்ள வசனங்களுக்கு எதிரானதல்ல. அல்லாஹ் அருளியது குர்ஆன் மட்டும் அல்ல; குர்ஆன் அல்லாத இறைச் செய்திகளும் உள்ளன என்பதை அல்லாஹ் பல்வேறு வசனங்களில் இன்னும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.