3) இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார்
.lஇறந்த பின் எதையும் அறியாத நல்லடியார்
முந்தைய காலத்தில் ஒரு மனிதருக்கு அல்லாஹ் ஏற்படுத்திய அதிசய அனுபவத்தைப் பின்வரும் வசனத்தில் எடுத்துக் காட்டுகிறான்.
அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.
நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். மரணித்தபின் அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே கிடந்தது. பின்னர் அவருக்கு உயிர் கொடுத்து அல்லாஹ் எழுப்பி எவ்வளவு நாளை இந்த நிலையில் கழித்திருப்பீர் என்று கேட்கிறான். அதற்கு அவர் அளித்த பதில் என்ன? ஒரு நாள் அல்லது அதைவிட குறைவான நேரம் என்று அவர் பதிலளிக்கிறார். இப்படி அல்லாஹ்வால் மரணிக்கச் செய்யப்பட்டவர் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியாராகத் தான் இருக்க முடியும்.
இப்ராஹீம் நபியவர்கள் இறைவா மரணித்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிக்கிறாய் என்று எனக்குக் காட்டு எனக் கேட்டார்கள். அல்லாஹ் பறவைகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிக் காட்டினான். இந்தச் சம்பவம் இதற்கு அடுத்த வசனத்தில் கூறப்படுகிறது.
இறந்தவர்களை அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிய நல்லடியார்கள் ஆவல் கொள்ளும் போது அவர்களுக்கு அல்லாஹ் செய்முறை விளக்கம் அளித்துள்ளான். இதுபோல் தான் இந்தச் சம்பவத்தில் கூறப்படுபவரும் நல்லடியாராகத் தான் இருக்க முடியும். அதனால் தான் அவருடன் அல்லாஹ் உரையாடி தனது வல்லமையை அவருக்குப் புரிய வைக்கிறான். நல்லடியாராக இருந்தும் தற்காலிகமாக மரணமடைந்த அவர் நூறு ஆண்டுகளைக் கடந்துள்ளதை அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவர் மரணித்து விட்டார் என்பதுதான்.
ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மேலும் இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும்.
குகை வாசிகளுக்கு ஒன்றும் தெரியவில்லை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். பதுங்கிய அவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தான். அந்தத் தலைமுறையினர் அழிந்த பின்னர் அவர்களை அல்லாஹ் எழுப்பினான் என்ற வரலாறைத் திருக்குர்ஆன் கூறுகிறது. அந்த வரலாறும் நல்லடியார்கள் தூங்கும் போது எதையும் அறிந்து கொள்ள முடியாது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
18:19 وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِيَتَسَآءَلُوْا بَيْنَهُمْ ؕ قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ؕ قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ ؕ قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ ؕ فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَى الْمَدِيْنَةِ فَلْيَنْظُرْ اَيُّهَاۤ اَزْكٰى طَعَامًا فَلْيَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا
18:20 اِنَّهُمْ اِنْ يَّظْهَرُوْا عَلَيْكُمْ يَرْجُمُوْكُمْ اَوْ يُعِيْدُوْكُمْ فِىْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا
அவர்கள் தங்களிடையே விசாரித்துக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களை உயிர்ப்பித்தோம். “எவ்வளவு (நேரம்) தங்கியிருப்பீர்கள்?” என்று அவர்களில் ஒருவர் கேட்டார். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி தங்கினோம்” என்று (மற்றவர்கள்) கூறினர். “நீங்கள் தங்கியதை உங்கள் இறைவன் நன்கு அறிந்தவன். உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் நகரத்துக்கு அனுப்புங்கள்! தூய்மையான உணவு வைத்திருப்பவர் யார் என்பதைக் கவனித்து அதிலிருந்து அவர் உணவை உங்களுக்காக வாங்கி வரட்டும். அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்! உங்களைப் பற்றி அவர் யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றும் கூறினர். அவர்கள் உங்களைக் கண்டு கொண்டால் உங்களைக் கல்லால் எறிந்து கொல்வார்கள்! அல்லது அவர்களின் மார்க்கத்தில் உங்களை மீண்டும் சேர்த்து விடுவார்கள். அப்போது ஒருக்காலும் வெற்றி பெற மாட்டீர்கள்!
இவர்கள் மிகச் சிறந்த நல்லடியார்களாக இருந்தும் எத்தனை ஆண்டுகள் உறக்க நிலையில் இருந்தனர் என்பதை அவர்கள் அறியவில்லை. அதற்கு நெருக்கமான கால அளவைக் கூட அவர்கள் கூற முடியவில்லை. ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நாட்கள் தான் நாம் தூங்கி இருப்போம் என்று கூறுகின்றனர்.
மேலும் தமது காலத்து மக்கள் அனைவரும் மரணித்து அடுத்த தலைமுறை மக்கள் தான் தற்போது ஊரில் உள்ளனர் என்பதையும் அறியவில்லை. ஊருக்குள் யாரும் அறியாவண்ணம் சென்று உணவு வாங்கி வருமாறு கூறுகின்றனர். தமது ஊரில் என்ன நடக்கிறது என்பதும் தாம் எந்தக் காலத்தில் வாழ்கிறோம் என்பதும் இவர்களுக்குத் தெரியவில்லை.
உறக்க நிலையில் உள்ள போது இந்த நல்லடியார்களுக்கு உலகில் நடப்பது ஒன்றும் தெரியவில்லை எனும் போது மரணித்தவர்கள் எப்படி உலகில் நடப்பதை அறிய முடியும்?
மரணித்தவர்களுக்கு இவ்வுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவ்வளவு தெளிவாக அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவுபடுத்திய பின்பும் மரணித்தவர்கள் நமக்கு உதவுவார்கள் என்றும், அவர்களை நினைவு கூறும் சபைக்கு வருகை தருவார்கள் எனவும் சிலர் வாதிடுகின்றனர். சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஆனால் அவை இவர்களின் வாதத்தை நிறுவ உதவாது என்பதே உண்மை. அவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களையும், வாதங்களையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.
இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?
நன்மக்கள் மரணித்தாலும் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற தவறான கொள்கையுடையோர் பின்வரும் வசனங்களைத் தமது தீய கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்.
3:169 وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ
3:170 فَرِحِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْۙ اَ لَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۘ, 3:171 يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۙ وَّاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நற்பேறு மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது எந்தக் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை சாதாரண அறிவு படைத்தவனும் அறிந்து கொள்ள முடியும்.
அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற சொல் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைச் சொல்கிறது. கொல்லப்பட்ட பின் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டது, அவர்களின் சொத்துக்களை அவர்களின் வாரிசுகள் பிரித்துக் கொண்டது, அவர்களின் மனைவிமார்கள் மறுமணம் செய்து கொண்டது ஆகிய அனைத்தும் அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கும் போது இறந்தவர்கள் என்று சொல்லக் கூடாது என்று கூறப்பட்டால் அது வேறு அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வுலகைப் பொருத்தவரை அவர்கள் மரணித்து விட்டாலும் ஆன்மாக்களின் உலகில் அல்லாஹ்விடம் அவர்கள் வேறு விதமான உயிருடன் உள்ளனர் என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது பளிச்சென்று தெரிகின்றது. நல்லடியார்கள் மட்டுமின்றி கெட்டவர்களும் ஆன்மாக்களின் உலகில் வேதனை செய்யப்பட்டுக் கொண்டு உள்ளனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அப்படியானால் அவர்களும் உயிருடன் தான் உள்ளனர்.
மரணித்த யாராக இருந்தாலும் அவர்கள் இவ்வுலகைப் பொருத்த வரை மட்டுமே மரணித்தவர்கள். ஆன்மாக்களின் உலகில் வேறு விதமான உயிர் பெற்றவர்களாக உள்ளனர். இந்த அடிப்படையை விளங்காமல் இவ்வசனங்களைத் தமது தவறான கொள்கைக்கு ஆதாரமாக காட்டி வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர்.
இந்த வசனங்களுக்குள்ளேயே இதன் கருத்து என்ன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
(அல்குர்ஆன்: 2:154) ➚வசனத்தில் “அவர்கள் உயிருடன் உள்ளனர்” என்பதுடன் “எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்பதுதான் இதன் கருத்தாகும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது..
(அல்குர்ஆன்: 3:169) ➚வசனமும், அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.
(அல்குர்ஆன்: 3:169) ➚வசனம் “தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்” எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் என்பது இதன் கருத்தாகும்.
அடுத்த வசனங்களில் (அல்குர்ஆன்: 3:170-171) ➚ அவர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள பாக்கியங்களை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
மறுமை வாழ்க்கையில் அல்லாஹ் வழங்கும் இன்பங்களை அனுபவித்துக் கொண்டுள்ளனர் என்பது தான் இதன் கருத்து என்பதும், இது போன்ற இன்பங்கள் கிடைக்க உள்ளதால் அல்லாஹ்வுக்காக உயிர் தியாகம் செய்ய முஸ்லிம்கள் தயங்கக் கூடாது என்பதைச் சொல்வதற்காகவே இவ்வசனம் அருளப்பட்டது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.
இவ்வசனத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.
صحيح مسلم 121 – (1887) حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، كِلَاهُمَا عَنْ أَبِي مُعَاوِيَةَ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، وَعِيسَى بْنُ يُونُسَ، جَمِيعًا، عَنِ الْأَعْمَشِ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ، وَاللَّفْظُ لَهُ، حَدَّثَنَا أَسْبَاطٌ، وَأَبُو مُعَاوِيَةَ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ:
அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்டபோது “அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)
நியாயத் தீர்ப்புக்குப் பிறகுதான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். ஆனால் உயிர்த்தியாகிகள் மட்டும் இறந்த உடன் சொர்க்கம் சென்று விடுவார்கள். ஆனால் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக இதை விளக்கிய பிறகும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு சிலர் நேரடிப் பொருள் செய்து வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை. அல்லாஹ்வின் பாதையில் தான் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இவர்கள் கொடுக்கும் அர்த்தம் முற்றிலும் தவறு என்பது உறுதியாகிறது.
அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
(இது குறித்து விரிவாக அறிய இறை நேசர்களை அறிந்து கொள்வது எப்படி என்ற நமது நூலைப் பார்க்கவும்.)
இறந்தவர்களை நோக்கி நபிகள் பேசியது ஆதாரமாகுமா?
பத்ருப் போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களில் 24 தலைவர்கள் கிணற்றில் போடப்பட்டார்கள். கிணற்றில் போடப்பட்ட அவர்களை நோக்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசினார்கள் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பது தெரிகின்றதே என்றும் சமாதி வழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர். அவர்களின் வாதம் சரியா என்பதை விபரமாகப் பார்ப்போம்.
صحيح البخاري 3976 – حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، سَمِعَ رَوْحَ بْنَ عُبَادَةَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، قَالَ: ذَكَرَ لَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، عَنْ أَبِي طَلْحَةَ،
பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாட்கள் தங்கிச் செல்வது அவர்களது வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம்முடைய வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது.
பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களுடைய தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ தமது தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள்.
(கிணற்றோரம் நின்றிருந்த) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களுடைய பெயர்களையும், அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் அடைந்து கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்ததை நீங்கள் அடைந்து கொண்டீர்களா?” என்று கூறினார்கள்.
உடனே (அருகிலிருந்த) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை இவர்களை விட நீங்கள் நன்கு செவியேற்பவர்களாக இல்லை” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதல்ஹா (ரலி)
உயிருடன் உள்ளவர்களை விட பாழுங்கிணற்றில் போட்டப்பட்டவர்கள் நன்கு செயுறுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் இறந்தவர்கள் இவ்வுலகில் பேசுவதைச் செவியுறுகிறார்கள் என்பது சமாதி வழிபாட்டுக்காரர்களின் வாதமாகும். இது குறித்து இந்த ஒரே ஒரு ஆதாரம் மட்டும் இருந்து இதற்கு மாற்றமாக வேறு ஆதாரம் ஏதும் இல்லாவிட்டால் இறந்தவர்கள் செவியுறுவதற்கு ஆதாரமாக இதைக் கருதலாம்.
ஆனால் இறந்தவர்கள் இவ்வுலகில் நடக்கும் எதையும் அறிய மாட்டார்கள் என்றும், எதையும் செவியுற மாட்டார்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுவதை முன்னர் நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அதற்கு முரணில்லாத கருத்தில் தான் இதைப் புரிந்து கொள்ள முடியும்.
அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.
உர்வா பின் ஸுபைர் அவர்கள் கூறியதாவது: “குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகின்றார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள். இது ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் இவர் வேதனை செய்யப்படுகிறார். அவருடைய குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று சொன்னார்கள்.
(மேலும்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இது எப்படியிருக்கிறதென்றால், “இணை வைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அவர்களிடம், “உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது) “நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும்.
ஆனால், “நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்” என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.)
பிறகு, ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்:
(நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது.
(நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்ய முடியாது.
அறிகிறார்கள் என்பதற்கும், செவியுறுகிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
செவியுறுகிறார்கள் என்றால் நபிகள் நாயகம் பேசியது அவர்களின் காதுகளில் விழுந்தது என்று பொருள். செவியேற்க மாட்டார்கள் என்ற வசனத்துக்கு முரணாக இது அமைகிறது. அறிகிறார்கள் என்றால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுபவித்து உணர்ந்தார்கள் என்று பொருள். செவியேற்க மாட்டார்கள் என்பதற்கு இது முரணாக அமையாது.
பாழும் கிணற்றில் அவர்கள் போடப்பட்ட பின் அவர்கள் ஆன்மாக்களின் உலகத்துக்குச் சென்று விட்டனர். இவ்வுலகில் தாம் தவறான மார்க்கத்தில் இருந்ததை அப்போது அறிந்து கொள்வார்கள். இதைத் தான் நபியவர்கள் சொன்னார்கள். செவியுறுகிறார்கள் என்று சொல்வது குர்ஆனுக்கு முரணாக உள்ளதால் அவ்வாறு நபியவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள் என்று காரணத்துடன் விளக்குகிறார்கள்.
குர்ஆனுக்கு முரணில்லாத வகையில் இன்னொரு விதமாகவும் விளக்கம் கொடுக்க இவ்வசனத்திலேயே வழி உள்ளது. செவியுற மாட்டார்கள் என்று சொல்லும் வசனங்களில் அல்லாஹ் நாடியவரை செவியேற்கச் செய்வான். மரணித்தவரைச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
தான் நாடும் போது செவியேற்கச் செய்வான் என்று கூறப்படுவதால் மக்காவின் இணைகற்பிப்பாளர்கள் மேலும் இழிவை அடைவதற்காக நபிகள் நாயகம் இவ்வாறு இடித்துரைத்ததைச் செவியேற்கச் செய்தான். அதை வஹீ மூலம் அறிந்து நபியவர்கள் சொன்னார்கள் என்றும் புரிந்து கொள்ளலாம்.
அதாவது இது பாழும் கிணற்றில் போடப்பட்ட இவர்களுக்கு மாத்திரம் உரியது என்று புரிந்து கொண்டால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கு இது முரண்படாது.
மரணித்தவர்களில் அல்லாஹ் நாடும் சிலர் தவிர மற்ற யாரும் செவியேற்க முடியாது. அல்லாஹ் யாருக்கு நாடுகிறான் என்பது வஹீயின் தொடர்பில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர யாரும் அறிய முடியாது.
மேலும் இது மகான்கள் செவியுறுவார்கள் என்பதற்கு ஆதாரமாகாது. அல்லாஹ்வின் எதிரிகளாக மரணித்தவர்களை மேலும் வேதனைப்படுத்துவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பேசியதை அல்லாஹ் கேட்கச் செய்தான் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு மகான்கள் செவியுறுகிறார்கள் என்று முடிவு செய்ய முடியாது.
செருப்போசையைக் கேட்குமா
மரணித்தவனின் உடலை அடக்கம் செய்து விட்டு, மக்கள் திரும்பும்போது அவர்களின் செருப்போசையை மரணித்தவர் செவியுறுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. அதை ஆதாரமாகக் கொண்டு மரணித்தவர்கள் அனைத்தையும் செவியுறுவார்கள் என்று சமாதிவழிபாடு செய்வோர் வாதிடுகின்றனர்.
இது குறித்து விபரமாகப் பார்ப்போம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் -பற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார்.
பிறகு “(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார்.
நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், “எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்” என்பான். அப்போது அவனிடம் “நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனது இரு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.”
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(புகாரி: 1338), 1374
இந்த ஹதீஸ் கூறுவது என்ன? அடக்கம் செய்ய வந்த மக்கள் அடக்கத் தலத்தில் பல விஷயங்களைப் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர் குறித்தும் பேசுவார்கள். அடக்கம் செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கேட்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. செருப்போசையைக் கேட்கும் என்று தான் கூறினார்கள். முஸ்லிமில் உள்ள அறிவிப்பில் அவர்கள் திரும்பிச் செல்லும் போது ஏற்படும் செருப்போசையைக் கேட்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மக்களின் பேச்சுக்களைச் செவியுறுவார்கள் என்று கூறாமல் செருப்போசையைக் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைத்தையும் கேட்பார்கள் என்றால் இப்படி கூறமாட்டார்கள். உயிருடன் வாழும் ஒரு மனிதர் அனைத்தையும் செவியுறுவார் என்பதை நாம் அறிவோம். இவரைப் பற்றி பேசும் போது செருப்போசையைக் கேட்பார் என்று சொல்ல மாட்டோம். அனைத்தையும் கேட்பார் என்பதால் இப்படிக் கூறுவது பொருளற்றதாக ஆகும்.
ஆனால் கூர்மையான கேட்கும் திறன் உள்ளவர் என்பதைக் கூற நாம் விரும்பினால் கேட்க சாத்தியக் குறைவானதைக் குறிப்பிடுவோம். ஊசி விழும் சப்தத்தையும் இவர் கேட்பார் என்போம். இடியோசையைக் கேட்பார் என்று கூறமாட்டோம். அப்படிக் கூறினால் அதைத் தவிர வேறு எதையும் செவியுற மாட்டார் என்று தான் பொருள்.
உயிருடன் உள்ள ஒருவர் மண்ணுக்குள் சில நிமிடம் புதைக்கப்பட்டால் அவரால் மக்கள் பேசுவதைக் கேட்க முடியாது. ஏனெனில் பேசுவதைக் கேட்க காற்றின் ஊடுறுவல் இருக்க வேண்டும். ஆனால் அருகில் கார் ஓடும் போது எழுப்பும் அதிர்வலைகளை அவர் கேட்பார். பூமிக்குள் காற்று புகாவிட்டாலும் கார் ஓடும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாக அதைக் கேட்க முடியும். அதிர்வுகளைக் கேட்டதால் பேசுவதையும் கேட்பார்கள் என்ற அர்த்தம் வராது.
இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பேச்சுக்களைச் செவியுறுவது பற்றிப் பேசாத இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அனைத்தையும் கேட்பார்கள் என்று அறிவுடையோர் வாதிட மாட்டார்கள். செருப்போசை என்பது எந்தக் கருத்தையும் சொல்லாத வெறும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சுக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் சப்தமாகும். மனிதர்களின் பேச்சைக் கேட்பார்கள் என்றால் அதைத் தான் நபியவர்கள் சொல்லி இருப்பார்கள்.
மேலும் செருப்போசையைக் கேட்பார்கள் என்பது கூட எப்போதும் நடக்கக் கூடியதல்ல. அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது எழும் செருப்போசையைக் கேட்பார்கள் என்று தான் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று முஸ்லிம் அறிவிப்பில் உள்ளதால் அந்த ஒரு தடவை மட்டும் தான் அதைக் கேட்பார்கள். அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்ற சொல்லுக்கு இதுதான் அர்த்தமாகும். எப்போதும் செருப்போசையைக் கேட்பார்கள் என்றால் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்று நபியவர்கள் சொல்வார்களா?
நல்லடியார்கள் ஆழ்ந்த உறக்க நிலையில் வைக்கப்படுகிறார்கள் என்ற ஹதீஸை முன்னர் எடுத்துக் காட்டியுள்ளோம். ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றதால அவர்களால் எதையும் செவியுற முடியாது என்பதையும் விளக்கியுள்ளோம்.
செருப்போசையைக் கேட்பது அவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போவதற்கு முன் நடப்பதாகும் என்று மேற்கண்ட ஹதீஸில் இருந்தே அறியலாம். அடக்கம் செய்து மக்கள் திரும்பிச் செல்லும் ஓசையைச் செவியேற்ற பின்னர் தான் முன்கர் நகீர் எனும் வானவர்கள் விசாரணையை ஆரம்பிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விசாரணைக்குப் பின்னர் தான் அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் வைக்கப்படுகிறார்கள்.
அடக்கம் செய்ததற்கும், வானவர்கள் விசாரணையைத் துவக்குவதற்கும் இடைப்பட்ட குறுகிய நேரத்தில் தான் செருப்போசையைச் செவியேற்கிறார்கள். இப்படிச் சரியான முறையில் புரிந்து கொண்டால் அனைத்து ஆதாரங்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்திப் போகிறது.
மேலும் செருப்போசையைக் கேட்பது என்பது நல்லடியார்களுக்கு மட்டும் உரியது அல்ல. மரணிக்கும் அனைவருக்கும் உரியதாகும். காஃபிர்களுக்கும் உரியதாகும். இது மகான்களை வழிபடுவதற்கும் ஆதாரமாகாது. அனைத்தையும் செவியுறுகிறார்கள் என்பதற்கும் ஆதாரமாகாது.
சலவாத்தும் சலாமும் ஆதாரமாகுமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறுமாறு 33:56 வசனத்தில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
அதிகமதிகம் தன் மீது சலவாத் கூறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஆர்வமூட்டியுள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் சலவாத் கூறுவதில் இருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று தெரிகிறதே என்று தீய கொள்கையுடையோர் வாதிடுகின்றனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூற வேண்டும் என்பது உண்மைதான். அது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்று தான். இதில் எந்த மறுப்பும் நமக்கு இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு இவ்வுலகுடன் தொடர்பில் உள்ளனர் என்பதற்கும், இங்கே வருகை தருவார்கள் என்பதற்கும், நாம் கோருவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதற்கும் இதில் எந்த ஆதாரமும் இல்லை.
சலவாத் என்றால் நபிகள் நாயகத்தை நோக்கி நாம் பேசுவது என்றும், அவர்களிடம் உதவி தேடுதல் என்றும் தவறாகப் புரிந்து கொண்டதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
சலவாத் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டுவது அல்ல. மாறாக அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் என்று நாம் அல்லாஹ்விடம் செய்யும் பிரார்த்தனை தான் சலவாத்.
தொழுகைகளில் அத்தஹிய்யாத் எனும் இருப்பில் நாம் சொல்ல வேண்டிய சலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதை எல்லா முஸ்லிம்களும் தமது தொழுகைகளில் கூறி வருகின்றனர்.
அந்த சலவாத்தின் பொருளைப் பாருங்கள்!
இறைவா! இப்ராஹீம் நபியின் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ எவ்வாறு அருள் புரிந்தாயோ அது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக!
இது தான் இந்த சலவாத்தின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வது தான் சலவாத் என்பதை இந்த அர்த்தமே நமக்குச் சொல்லி விடுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டவுடன் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் என்று சொல்கிறோம். அல்லது அல்லாஹும்ம சல்லி வசல்லிம் வபாரிக் அலைஹி என்று சொல்கிறோம். இதன் பொருள் என்ன? இறைவா அவருக்கு (முஹம்மது நபிக்கு) அருள் புரிவாயாக என்பதுதான் இதன் பொருள்.
எந்த சலவாத்தை எடுத்துக் கொண்டாலும் அனைத்துமே நபிகள் நாயகத்துக்கு நாம் துஆச் செய்யும் வகையில் தான் அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் வழியாகவே இந்த மார்க்கத்தை அல்லாஹ் நமக்கு வழங்கினான். எனவே அவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும்; மதிக்க வேண்டும் என்பது இயல்பாகும். அன்பு செலுத்துகிறோம்; மதிக்கிறோம் என்ற பெயரில் பிற சமுதாய மக்கள் எல்லை மீறியது போல் நாமும் எல்லை மீறக்கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த வழிமுறை தான் சலவாத்.
என்னை மதிப்பதாக இருந்தால் என்னை அழைக்கக் கூடாது; என்னிடம் பிரார்த்திக்கக் கூடாது; எனக்காக அல்லாஹ்விடம் நீங்கள் துஆச் செய்ய வேண்டும். அதுதான் சலவாத் என்று கற்றுத் தந்துள்ளார்கள்.
அவர்களுக்கு நாம் சலவாத் சொல்லும் இந்த நடைமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்காமல் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தைத் தரவில்லை. அவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவார்கள் என்ற கருத்தையும் தரவில்லை. மரணித்த அவர்களுக்காக நாம் தான் துஆச் செய்ய வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையைத் தான் சலவாத் எனும் வணக்கம் அழுத்தமாகச் சொல்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக நாம் சொல்லும் சலவாத் எனும் துஆ அவர்களின் காதில் விழுமா? ஆன்மாக்களின் உலகில் அவர்கள் உயிருடன் இருந்தாலும் நாம் கூறும் சலவாத் அவர்களின் காதுகளில் விழாது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே தெளிவாக்கி விட்டார்கள்.
سنن النسائي
1374 – أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْجُعْفِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ بْنِ جَابِرٍ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள். அன்று தான் மரணித்தார்கள். அன்று தான் உலகத்தை அழிக்க சூர் ஊதப்படும். அன்று தான் எழுப்புதல் நிகழும். எனவே அன்றைய தினம் எனக்காக அதிகம் சலவாத் கூறுங்கள். நீங்கள் கூறும் சலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மக்கிப் போன நிலையில் எங்கள் சலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக் காட்டப்படும் என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபிமார்களின் உடல்களை மண் சாப்பிடுவதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி), நூல்கள் : (நஸாயீ: 1374) , அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்
எனக்காக நீங்கள் செய்யும் சலவாத் எனும் துஆவை நான் செவிமடுக்கிறேன் என்று கூறாமல் எனக்கு எடுத்துக் காட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர். நாம் கூறும் சலவாத்தை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.
சலவாத் என்பது அல்லாஹ்வை அழைத்து பிரார்த்திப்பது என்பதால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவியுறும் அவசியம் எதுவும் இல்லை. எனவே இனின்னார் சலவாத் சலவாத் கூறினார்கள் என்ற தகவல் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகிறது.
(மேற்கண்ட ஹதீஸில் நபிமார்களின் உடல்களை மண் திண்ணாது என்று சொல்லப்படுகிறது. மண் திண்ணாமல் உள்ளதால் அவர்கள் செவியுறுவார்கள் என்று அர்த்தம் அல்ல. ஒரு நல்லடியாரின் உடல் நூறு ஆண்டுகள் பூமியின் மேற்பரப்பில் மண் திண்ணாத வகையில் கிடந்தது. ஆனாலும் அவரால் எதையும் அறிய இயலவில்லை. உடலை மண் திண்ணாது என்பதால் இவ்வுலகில் நடப்பதை அறிவார்கள் என்று அர்த்தம் இல்லை. இதை இறந்த பின் எதையும் அறியாத நல்லடியார் என்ற தலைப்பில் விளக்கியுள்ளோம்.)
ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் மண் சாப்பிடாது என்று சொல்லத் தேவை இல்லை. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாது.
அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, “நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது” என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.
சலாம் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் இதை உறுதி செய்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சலவாத் சொல்வது போல் சலாமும் சொல்கிறோம். ஒவ்வொரு தொழுகையிலும் அத்தஹிய்யாத் இருப்பில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு – நபியே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும் – என்று கூறுகிறோம். இது அவர்களை அழைத்துப் பேசுவது போல் அமைந்துள்ளது. இதைக் கூட அவர்கள் செவியுற மாட்டார்கள்.
பின் வரும் நபிமொழியில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.
سنن النسائي
1282 – أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ مُعَاذٍ، عَنْ سُفْيَانَ بْنِ سَعِيدٍ، ح وأَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، وَعَبْدُ الرَّزَّاقِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ السَّائِبِ، عَنْ زَاذَانَ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
இப்பூமியில் சுற்றிக் கொண்டிருக்கும் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அவர்கள் என் சமுதாயத்தினரின் சலாமை எனக்கு எடுத்துச் சொல்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்கள் :(நஸாயீ: 1282), அஹ்மத், தாரிமி, ஹாகிம், இப்னு ஹிப்பான், தப்ரானி, அபூயஃலா, பஸ்ஸார்
நபிகள் நாயகத்துக்கு சொல்லப்படும் சலாமை ஆன்மாக்களின் உலகில் உயிருடன் இருக்கும் நபிகள் நாயகத்துக்கு எடுத்துச் சொல்லும் ஒரே பணிக்காக அல்லாஹ் சில வானவர்களை நியமித்துள்ளான். நாம் கூறும் சலாமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவிமடுப்பார்கள் என்றால் அதை எடுத்துச் சொல்லும் அவசியம் இல்லை. சலாமை எடுத்துச் சொல்வதற்காக வானவர்களை அல்லாஹ் நியமனம் செய்திருப்பதிலிருந்து நாம் கூறும் சலாமை அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பது உறுதியாகின்றது.
அவர்களை அடக்கம் செய்துள்ள இடத்தின் அருகில் நின்று அழைத்தாலும் அவர்கள் அதைச் செவியுற மாட்டார்கள். இறந்தவர்கள் இவ்வுலகத்துடன் தொடர்பு கொள்ள முடியாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்தில் நாம் முன்னர் ஆதாரங்களை வெளியிட்டுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இது ஒத்துப் போகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் சலாம், வானவர்கள் எத்திவைப்பதால் தான் அவர்களுக்குத் தெரிய வருகிறது. மற்றவர்களை நாம் ஜியாரத் செய்யும் போது சலாம் கூறுகிறோம். அந்த சலாம் அவர்களுக்கு கேட்காது என்பதும் இதிலிருந்து உறுதியாகின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நாம் கூறும் சலாமை எடுத்துச் சொல்ல வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது போல் மற்றவர்களுக்கு இவ்வாறு நியமிக்கப் படாததால் அவர்கள் அதை அறிந்து கொள்ள மாட்டார்கள்.
மேலும் சலாமை எத்தி வைப்பதற்குத் தான் வானவர்களை அல்லாஹ் நியமித்துள்ளான். அது தவிர வேறு எந்த விஷயத்துக்காக நாம் நபியை அழைக்கவும் கூடாது. அழைத்தாலும் அதைச் செவியுறவும் மாட்டார்கள். இதற்காக வானவர்கள் நியமிக்கப்படாத காரணத்தால் அவர்கள் அறியவும் மாட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்க்கியுள்ளது.
இதற்கு இன்னும் வலுவான ஆதாரமும் உள்ளது.
அத்தஹிய்யாத்தில் அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு என்று நபிக்கு நாம் சலாம் சொல்கிறோம். இப்போது நாம் கூறுவது போல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் நபித்தோழர்கள் தமது தொழுகைகளில் சலாம் கூறினார்கள். ஒரு நேரத்தில் ஏராளமான நபித்தோழர்கள் சுன்னத்தான, உபரியான தொழுகைகளைத் தொழுவார்கள். மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது போல் மேலும் பல பள்ளிவாசல்களில் கடமையான தொழுகைகளையும் அவர்கள் தொழுவார்கள்.
தொழுகையில் கூறும் சலாம் நபியவர்களுக்குக் கேட்கும் என்றால் நபிகள் நாயகம் (ஸல்) வ அலைக்கு முஸ்ஸலாம் என்று ஒவ்வொரு வினாடி நேரமும் பதில் சொல்லிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஏனெனில் சலாம் கூறப்பட்டு அது செவியில் விழுந்தால் அதற்குப் பதில் அளிப்பது அவசியமாகும்.
அப்படி அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கவில்லை என்பதால் நபித்தோழர்கள் கூறிய சலாமை அவர்கள் உயிருடன் இருக்கும் போது செவியுறவில்லை என்று தெரிகிறது. நேருக்கு நேராக வந்து யார் சலாம் கூறினார்களோ அதை மட்டும் கேட்டு பதிலளித்தார்கள். நேருக்கு நேர் வராமல் தொழுகையில் ஏராளமான நபித்தோழர்கள் சலாம் கூறினார்கள். அவற்றில் ஒரு சலாமுக்குக் கூட நபியவர்கள் பதிலளிக்கவில்லை.
உயிருடன் வாழும் போதே யார் அருகில் வந்து நேருக்கு நேராகப் பார்த்து சலாம் கூறினார்களோ அதை மட்டும் தான் கேட்டார்கள். அதற்கு மட்டும் தான் பதில் சொன்னார்கள் என்றால் மரணித்த பின்னர் எப்படி அனைவரின் சலாமையும் செவியுற முடியும்? எனவே இறந்தவரை ஜியாரத் செய்யச் செல்லும் போது நாம் சலாம் கூறுவது அவர்களுக்குக் கேட்கும் என்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும் என்று துஆ செய்வதற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை.
உங்கள் மீது சலாம் உண்டாகட்டும் என்று நேரடியாக அழைப்பது போல் அமைந்துள்ள சலாம் உயிருள்ளவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் அதைச் செவியுற்று பதில் அளிப்பார்கள் என்பதற்காகச் சொல்லப்படுகிறது. மரணித்தவர்களுக்குச் சொல்லப்பட்டால் அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வதற்காகச் சொல்லப்படுகிறது. இதனால் தான் நாம் கூறும் சலாம் நபிகள் நாயகத்துக்கு வானவர்கள் மூலம் எடுத்துச் சொல்லப்படுகிறது.
குழந்தையைக் கொஞ்சும் போது கண்ணே மணியே என்று கூறுகிறோம். அந்தக் குழந்தையை அழைத்துப் பேசும் வடிவில் இருந்தாலும் அதன் பொருள் அழைப்பதல்ல. ஏனெனில் அந்தக் குழந்தைக்கு இதன் அர்த்தம் விளங்காது. நமது அன்பை வெளிப்படுத்துதல் மட்டுமே இதன் நோக்கமாகும்.
நிலா நிலா ஓடிவா என்றும், அணிலே அணிலே என்றும் நாம் படிப்பது குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவதற்குத் தான். அணிலையும், நிலாவையும் அழைத்துப் பேசுவதற்கு அல்ல. ஏனெனில் இவை பேசாது; நம் பேச்சைக் கேட்காது.
நமது பேச்சைக் கேட்டு புரிந்து கொள்ளக் கூடியவர்களை நோக்கிப் பேசினால் அதற்கு நேரடி அர்த்தம் தான் கொடுக்க வேண்டும். கணவன் மரணித்துக் கிடக்கும் போது என்னை விட்டு போய் விட்டீர்களே என்று மனைவி புலம்பினால் அவரிடமே பேசுவது என்பது அர்த்தம் அல்ல. என்னை விட்டுப் போய்விட்டார் என்பதைத் தான் என்னை விட்டுப் போய்விட்டாய் என்று முன்னிலையாகப் பேசுகிறார்.
எனவே உங்கள் மீது சலாம் உண்டாகட்டும் என்று முன்னிலையாகப் பேசுவதால் அவர்கள் சலாமைச் செவியுறுகிறார்கள் என்பதற்கு ஆதாரமாக ஆகாது. அடுத்து பினவரும் ஹதீஸையும் தீய கொள்கையுடையவர்கள் தமது ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
سنن أبي داود
2041 – حدثنا محمد بن عوف ثنا المقري ثنا حيوة عن أبي صخر حميد بن زياد عن يزيد بن عبد الله بن قسيط عن أبي هريرة : أن رسول الله صلى الله عليه و سلم قال
எனக்கு எந்த அடியான் சலாம் கூறினாலும் அவருக்கு நான் பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனது உயிரை எனக்குத் திருப்பித் தராமல் இருக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இன்னும் பல நூல்களிலும் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆதாரப்பூர்வமானது பல அறிஞர்கள் கூறியிருந்தாலும் இதன் கருத்தில் தெளிவு இல்லை. தனக்குத்தானே இது முரண்படுகிறது. எண்ணற்ற ஆதாரங்களுடன் இது மோதுகிறது. திருக்குர்ஆனுக்கும் முரணாக அமைந்துள்ளது. எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இதில் உள்ள குழப்பங்களை விரிவாகப் பார்ப்போம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மரணித்த அனைவரும் ஆன்மாக்களின் உலகில் எப்போதும் உயிருடன் தான் உள்ளனர். எப்போதும் உயிரற்ற நிலையில் உள்ளதாகவும் சலாம் கூறும் போது மட்டும் உயிர்கொடுக்கப்படுவதாகவும் சொல்வது இதற்கு முரணாகும்.
ஆன்மாக்களின் உலகில் உள்ள உயிரை இது குறிக்கவில்லை. மரணிப்பதற்கு முன் உயிருடன் வாழ்ந்தார்களே அது போன்ர உயிர் கொடுப்பது பற்றி இந்த ஹதீஸ் கூறுகிறது என்று கூறுவார்களானால் அதுவும் தவறாகும். அப்படி இருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது சலாத்துக்குப் பதில் கூறுவது நம் செவிகளில் விழ வேண்டும். அப்படி விழுவதில்லை என்பதால் இந்த வகை உயிரைக் குறிக்கவில்லை என்று ஆகிறது.
உலகில் உள்ள முஸ்லிம்கள் தொழுகையில் கூறும் சலவாத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலே ஒவ்வொரு வினாடியிலும் பல்லாயிரக்கணக்கான சலாம் சொல்லப்படுகிறது. அப்படியானால் பதில் சொல்வதற்காக உயிரைத் திரும்பக் கொடுக்கும் பேச்சுக்கு இடமில்லை. ஒரு வினாடி கூட உயிர் பிரிந்திருக்காது எனும் போது சலாம் சொல்லும் போது மட்டும் பதில் சொல்வதற்காக உயிர் மீண்டும் வழங்கப்படுகிறது என்பது பொருளற்றதாகி விடுகிறது.
இது உண்மை என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு மைக்ரோ செகண்டிலும் நபியவர்கள் சலாமுக்குப் பதில் கூறிக்கொண்டே தான் இருப்பார்கள். எப்போது பார்த்தாலும் வ அலைகு முஸ்ஸலாம் என்று அவர்கள் சொல்வதை நிறுத்த முடியாது. அபடியானால் இது கப்ர் வணங்கிகளுக்கு எதிரான ஆதாரமாகவே அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமது கோரிக்கைகளைச் செவிமடுப்பார்கள் என்றும், அவர்களைப் புகழும் சபைகளுக்கு வருகை தருவார்கள் என்ற வாதம் இப்போது அடிபட்டுப் போகிறது. 24 மணி நேரமும் வ அலைக்கு முஸ்ஸலாம் என்று சொல்வதிலேயே நபியின் முழு நேரமும் முடிந்து போய்விடும்.
ஒரு வினாடியில் பல்லாயிரம் பேர் சலாம் கூறினால் அதை மனிதரால் கேட்க முடியாது. இது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தன்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுகில் உயிருடன் வாழும் போது நபித்தோழர்கள் தொழுகையில் சலாம் கூறியதை அவர்கள் செவியுறவும் இல்லை. அதற்குப் பதில் சலாமும் கூறியதில்லை. இதை முன்னர் விளக்கியுள்ளோம். உயிரைத் திருப்பிக் கொடுத்தாலும் ஒரு நேரத்தில் பல்லாயிரம் ஓசைகளைக் கேட்டு பிரித்தரிவது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதால் அதற்கு முரணாக இது அமைந்துள்ளது.
ஒரு ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவோர் அதில் அடங்கியுள்ள எல்லா கருத்துக்களையும் ஒப்புக் கொள்ள வேண்டும். அப்படி ஒப்புக் கொள்ள முடியாத வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கும் எண்ணற்ற ஆதாரங்களுக்கும் எதிரான வகையிலும் உள்ளதால் இது ஹதீஸ் அல்ல. இது கட்டுக்கதை தான்.
இவ்வுலகில் வாழும் போது தனக்கு அறிமுகமாக இருந்தவரின் அடக்கத்தலத்தை ஒரு அடியான் கடந்து செல்லும் போது சலாம் கூறினால் இறந்தவர் இவரை அறிந்து கொள்வதுடன் அவரது சலாமுக்குப் பதிலும் கூறுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
தாரீக் அல்கதீப், அல்ஃபவாயித், இப்னு அஸாகிர், தைலமீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸ் முற்றிலும் பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துர் ரஹ்மான் பின் சைத் பின் அஸ்லம் என்பார் பலவீனமானவர். இட்டுக்கட்டுபவர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இது ஆதாரமாக ஆகாது.
இது போல் இப்னு அபித்துன்யா என்பார் தனது நூலில் ஒரு ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். சைத் பின் அஸ்லம் என்பார் அபூ ஹுரைராவிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் சைத் பின் அஸ்லம் அபூ ஹுரைராவைச் சந்தித்ததில்லை என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் ஜவ்ஹரீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.
மேலும் இது வரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு முரணாக உள்ளதால் இது கட்டுக்கதைகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியதாகும்.
ஸியாரத் ஆதாரமாகுமா?
அடக்கத்தலம் சென்று ஜியாரத் செய்வது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட சுன்னத் ஆகும். இறந்தவர்கள் செவியுறுவார்கள்; உதவுவார்கள் என்பதற்கு இதையும் தீய கொள்கை உடையோர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
சியாரத் என்றால் சந்திப்பு என்று பொருள். இது உயிருள்ளவர்களைச் சந்திப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். எனவே மரணித்தவர்கள் உயிருடன் உள்ளனர் என்று இதிலிருந்து தெரிகிறது என்பது தீய கொள்கையுடையவர்களின் வாதம். சியாரத் என்ற சொல் உயிருள்ளவற்றைச் சந்திப்பதற்கும், உயிரற்றவைகளைச் சந்திப்பதற்கும் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்லாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தும், வாகனத்திலும் சென்று குபா பள்ளிவாசலை சியாரத் செய்வார்கள்.
குபா என்பது அடக்கத்தலம் அல்ல. நபியவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஊருக்குள் நுழைவதற்கு முன் ஊரின் எல்லையில் இருந்த குபாவில் சில நாட்கள் தங்கினார்கள். அப்போது அங்கே ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அந்தப் பள்ளியை அவர்கள் அடிக்கடி சியாரத் செய்வார்கள் என்று இதில் கூறப்பட்டுள்ளது. உயிர் இல்லாத பள்ளிவாசலுக்குச் சென்றது சியாரத் என்ற வார்த்தையால் சொல்லப்படுகிறது.
صحيح البخاري
மினாவில் தங்கும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்தை சியாரத் செய்வார்கள்.
உயிர் இல்லாத கஅபா ஆலயத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்றதைப் பற்றி குறிப்பிடும் போது சியாரத் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளனர்.
எனவே சியாரத் என்ற சொல்லை வைத்து மண்ணறையில் உள்ளவர்கள் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று வாதிடுவது அறியாமையாகும். சியாரத் செய்வது அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் நமது தேவைகளைக் கூறி வேண்டுதல் செய்வதற்காக சுன்னத்தாக ஆக்கப்படவில்லை. இரண்டு நோக்கங்களுக்காகவே ஜியாரத் சுன்னத்தாக ஆக்கப்பட்டுள்ளது.
நாமும் மரணிக்கவுள்ளோம் என்ற எண்ணம் அடக்கத்தலம் செல்லும் போது உறுதிப்படும். மறுமையைப் பற்றிய அச்சம் அதிகரிக்கும் என்பது முதல் காரணம்.
மரணித்தவர்கள் எந்த நல்லறமும் செய்ய இயலாத நிலையில் உள்ளனர். அல்லாஹ்விடம் துஆச் செய்யக் கூட முடியாத நிலையில் உள்ளனர். உயிருடன் உள்ள நாம் தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய முடியும். எனவே அடக்கத்தலம் சென்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத்தந்தபடி அவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்பது சியாரத்துக்கான இரண்டாவது காரணம்.
இந்தக் காரணங்களைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மரணித்தவர்கள் மிகவும் பலவீன நிலையில் உள்ளதால் நாம் அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும் என்பதற்காக சியாரத் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, உயிருடன் உள்ளவர்களை விட அவர்கள் அதிக ஆற்றலுடன் உள்ளனர் என்று தலைகீழாக மாற்றிவிட்டனர்.
இதற்குப் பின்வரும் நபிமொழிகள் ஆதாரமாக உள்ளன.
புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
மண்ணறைகளைச் சந்தியுங்கள். ஏனென்றால் அவை மறுமையை நினைவூட்டுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் புரைதா (ரலி)
மறுமையை நினைவூட்டுவதுதான் சியாரத்தின் நோக்கம் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் இறுதி நாட்களில்) என்னுடன் தங்கியிருந்த ஒவ்வோர் இரவின் பிற்பகுதியிலும் (மதீனாவிலுள்ள) “பகீஉல் ஃகர்கத்’ பொது மையவாடிக்குச் செல்வார்கள். அங்கு (பின்வருமாறு) கூறுவார்கள்:
அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ அ(த்)தா(க்)கும் மா தூஅதூன ஃகதன் முஅஜ்ஜலூன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிக்கும் லாஹிகூன். அல்லாஹும்மஃக்ஃபிர் லி அஹ்லி பகீஇல் ஃகர்கத்.
(பொருள்: இந்த அடக்கத்தலத்தில் உள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள் மீது சாந்தி பொழியட்டும்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது (மரணம்) உங்களிடம் வந்து விட்டது. நாளை (இறுதித் தீர்ப்புக்கு) தவனை கொடுக்கப்பட்டுள்ளீர்கள். அல்லாஹ் நாடினால் நாங்கள் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம். இறைவா! பகீஉல் ஃகர்கதில் உள்ளோரை நீ மன்னிப்பாயாக!
இந்த ஹதீஸில் கூறப்பட்ட துஆவும், சியாரத் செய்யும் போது கூறுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த மற்ற அனைத்து துஆக்களும் மரணித்தவர்களுக்காக உயிருடன் உள்ளவர்கள் பாவமன்னிப்புத் தேடும் வகையில் தான் அமைந்துள்ளன.
மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் இறை மறுப்பாளர்களாகவும், இணை வைப்பாளர்களாகவும் இருந்தால் அவர்களின் மண்ணறைகளைப் பார்த்துவிட்டு மட்டும் வருவதற்கு அனுமதியுள்ளது. ஆனால் அவர்களுக்காக பிரார்த்தனை செய்யக் கூடாது. இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!’ என்று கூறினார்கள்.
சியாரத் என்பது இறந்தவர்களின் அருளையும் ஆசியையும் நாம் பெறுவதற்கு அல்ல. மாறாக மரணத்தை நினைவு கூறவும், அனைத்து ஆற்றலையும் இழந்து விட்ட மரணித்தவர்களுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்வதற்கும் தான் சியாரத் சுன்னத்தாக ஆக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறியலாம்.
தர்காக்களுக்குப் போவது ஸியாரத் அல்ல
பொது மையவாடிக்குச் சென்று மண்ணறைகளைப் பார்த்து விட்டு மரண பயத்தையும், மறுமை எண்ணத்தையும் அதிகப்படுத்திக் கொள்வதற்குப் பெயர் தான் ஸியாரத் என்பது. மரணத்தை நினைவுபடுத்தும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு ஜியாரத்தை அனுமதித்தனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவாக அனுமதித்தவைகளை பொதுவாகவும், குறிப்பாக அனுமதித்தவைகளை குறிப்பாகவும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். கப்ரு சியாரத்தைப் பொருத்தவரை அது பொதுவாக அனுமதிக்கப்படவில்லை. மரணத்தை நினைவுபடுத்தும் என்ற காரணத்துடன் தான் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொதுவான அடக்கத்தலங்கள் மரணத்தை நினைவுபடுத்தும் வகையில் உள்ளன. ஆனால் தர்காக்கள் மரணத்தை நினைவுபடுத்துவதற்குப் பதிலாக மரணத்தை மறக்கடிக்கச் செய்யும் வகையில் தான் உள்ளன.
எனவே தர்காக்களுக்குப் போவது ஸியாரத் ஆகாது.
“புவானா என்ற இடத்தில் அறுத்துப் பலியிடுவதாக நான் அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தேன்” என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். “அந்த இடத்தில் இணை வைப்பவர்கள் வழிபடக்கூடியவை ஏதுமுள்ளதா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள். அம்மனிதர் “இல்லை’ என்றார். “இணை வைப்பவர்கள் அங்கே விழா நடத்துவதுண்டா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது “இல்லை’ என்றார். அப்படியானால் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் பின் லஹ்ஹாக் (ரலி)
நூல்: .(அபூதாவூத்: 3313, 2881)
அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகி விடுகின்றது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கே “இணைவைப்பாளர்களின் வழிபாடு, திருவிழா போன்றவை இருக்கக் கூடாது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி காட்டியுள்ளனர்.
ஸியாரத் கட்டாயக் கடமை இல்லை. அது ஒரு சுன்னத் தான். இந்த சுன்னத்தை நிறைவேற்ற இணை வைப்பவர்களின் வழிபாடும், திருவிழாவும் நடக்கும் இடத்திற்கு எப்படிச் செல்ல முடியும்? மரணத்தை நினைவுபடுத்தவே ஸியாரத் அனுமதிக்கப்பட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அவ்லியாக்கள் எனப்படுவோரின் அடக்கத்தலத்தில்
பிரம்மாண்டமான கட்டிடம், கப்ரின் மேல் பூசுதல், மனதை மயக்கும் நறுமணம், கண்களைப் பறிக்கும் அலங்காரங்கள், ஆண்களும் பெண்களும் கலப்பதால் ஏற்படும் கிளுகிளுப்பு, ஆடல், பாடல், கச்சேரிகள் இவற்றுக்கிடையே மறுமையின் நினைவும், மரணத்தின் நினைவும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படாது.
தரைமட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள சமாதிகளை உடைக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையாகும். (இது பற்றி பின்னர் விளக்கப்பட்டுள்ளது.) இவ்வளவு தீமைகள் நடக்கும் இடத்துக்குப் போனால் மறுமை பயம் அதிகமாகாது.
மார்க்கம் தடை செய்த பல அம்சங்களைக் கொண்ட இடமாக தர்ஹாக்கள் விளங்குவதால் அங்கு செல்வது ஹராமாகும். எந்தக் காரணத்திற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸியாரத்தை அனுமதித்தார்களோ அந்தக் காரணம் தர்காக்களில் இல்லை.
விழுந்து கும்பிடுவது, கையேந்திப் பிரார்த்திப்பது, கப்ரைச் சுற்றி கட்டடங்களை எழுப்புவது, பாத்தியா என்று மக்களை ஏமாற்றுதல், தலையில் செருப்பைத் தூக்கி வைத்தல், விபூதி, சாம்பல் கொடுத்தல், மார்க்கம் தடை செய்த கட்டடம், இறந்தவருக்காக நேர்ச்சை செய்வது, கப்ரை முத்தமிடுவது, அங்கே விளக்கேற்றுவது, கப்ர் மீது சந்தனம் தெளிப்பது, பூ போடுவது.
என்று ஏராளமான தீமைகளை தர்காக்கள் உள்ளடக்கியுள்ளன.
صحيح مسلم
தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். இதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.
அங்கே செல்பவர்கள் தமது கைகளால் அத்தீமைகளைத் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இயலாவிட்டால் நாவால் தடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இவ்வாறு நடக்கத் துணிவு உள்ளவர்கள் இந்த இரண்டு வழிகளிலும் அதைத் தடுக்கலாம். அதற்கும் இயலாதவர்கள் மனதால் வெறுத்து ஒதுங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
இந்தக் காரணங்களாலும் தர்காக்களுக்கு ஸியாரத் செய்வதற்காகச் செல்லக் கூடாது. பொது அடக்கத்தலங்களுக்குச் சென்று மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்திக் கொள்வதே சுன்னத்தாகும்.
மறுமையை நினைவுபடுத்திட, ஒவ்வொரு ஊரிலும் எளிமையான அடக்கத்தலம் இருக்கும் போது, செலவும் சிரமமுமில்லாமல் இந்த சுன்னத்தை நிறைவேற்றி அதன் நன்மையை அடைய வழி இருக்கும் போது, தர்காக்களை நாடிச் செல்ல எந்த நியாயமும் இல்லை.
மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் இடத்திற்கு செல்லக்கூடாது என குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.
அல்லாஹ்வின் பல கட்டளைகள் கேலி செய்யப்படும் கேந்திரமாக தர்கா அமைந்துள்ளதால் அந்தத் தீமைகளைத் தடுப்பதற்காக தவிர வேறு நோக்கத்தில் அங்கே செல்வதற்கு அனுமதி இல்லை.