29) மாப்பிள்ளா முஸ்லிம்களும் மகத்தான தியாகங்களும்
29) மாப்பிள்ளா முஸ்லிம்களும் மகத்தான தியாகங்களும்
விடுதலை வரலாற்றில் வீரத்தின் விளைநிலமாய் ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தவர்கள் கேரளத்து மாப்பிள்ளா முஸ்லிம்கள். மாப்பிள்ளா என்ற பெயரின் பின்னணி குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. வெளியூரிலிருந்து வந்து மலையாளப் பெண்களை மணந்து கொண்டதால் (நம்மூரில் அழைக்கப்படுவதைப் போல) மாப்பிள்ளை என்றழைக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர்.
அவர்களின் வாழ்விடம் நீர் சூழ்ந்த பகுதி. வணிகமும் ஆரம்பத்தில் கடல் மீதே இருந்திருக்கிறது. அவர்களில் பலரும் அரபு நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக வந்திருந்தனர்; ஆகையால் அரபியில் நீரைக் குறிக்கும் சொல்லான மா வுடன் பிள்ளா சேர்ந்து மாப்பிள்ளா என்றானது என்கின்றனர் சிலர்.
மாப்பிள்ளாக்கள் கேரளாவின் ஆதிக்க வர்க்கமான நம்பூதிரி, நாயர் எனும் உயர்சாதிப் பார்ப்பனர்களின் நிலங்களை குத்தகைக்குப் பெற்று பயிர் செய்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயில் கொஞ்சத்தை எடுத்துக் கொண்டு மிச்சத்தை உரிமையாளருக்கு கொடுத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின் ஆதிக்க சாதியினரின் அதிகாரம் கைமாறியது. ஆங்கிலேயரை எதிர்த்து நிற்க முடியாமல், செய்ய வேண்டிய அடிமைச் சேவகத்தை அட்சரம் பிசகாமல் செய்து கொடுப்பதாகவும் வாக்களித்தனர். அதை ஏற்றுக் கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களின் அடிமைப் பணியாளர்களாக அவர்களையே நியமித்தனர்.
குத்தகை நிலங்களின் வரிவிகிதத்தை மாற்றியமைத்தனர். உழைத்தவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்ற வகையில் அவனது இரத்தமும், வியர்வையும் ஒட்ட உறிஞ்சப்பட்டது. உறிஞ்சும் பொறுப்பு நாயர், நம்பூதிரி ஜமீன்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புது வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ஜமின்களும் ஆட்டம் போட்டனர். உழைக்கும் மக்களின் கஷ்டங்களைப் பற்றி துளி கூட எண்ணிப் பாராமல் புதிய எஜமானர்களுக்குத் தம் விசுவாசத்தை வெளிப்படுத்துவதிலே குறியாய் இருந்தார்கள்.
வருமானம் குறைந்தாலும் சரி. தங்களுக்குச் செலுத்த வேண்டிய வரியை மட்டும் குறைத்து விடக் கூடாது என வற்புறுத்தினார்கள். கடன் வாங்கியாவது வரியைக் கொடு, வரி கட்ட முடியாவிட்டால் நிலத்தைக் கொடு. இதுவே அவர்களின் செயல் திட்டமாக இருந்தது.
மலபார் மாவட்ட நிர்வாக ஆவணத்தின்படி 1813 – 1821க்கு இடைப்பட்ட காலத்தில் வரி கட்ட முடியாத காரணத்தால் விவசாயிகளிடமிருந்து பிடுங்கப்பட்ட வயல்களின் எண்ணிக்கை 1225.
மாவட்ட கலெக்டராக இருந்த லோஹன் நடத்திய ஆய்வின்படி மலபாரில் இருந்த குத்தகைதாரர்கள் 7994 பேர். அதில் கடனாளிகள் 4401 பேர். இவர்கள் செலுத்த வேண்டிய தொகை வட்டியுடன் சேர்த்து 17 லட்சம் ரூபாய்.
1862 முதல் 1880 வரையிலான காலகட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நிலங்களை விட்டும் அப்புறப்படுத்தப்பட்ட விவசாய தினக்கூலிகள் மட்டும் 91,720 பேர்.(1885 லோகன் மலபார் நீதிபதி தலைமைச் செயலாளருக்கு எழுதியதில் ஜூன் 30/1885,மெட்ராஸ் நீதிமன்ற நடவடிக்கைகள் மெ.நீ.ந1830 ஜூலை 13 1886 பக்35, மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் கான்ராட் உட் அலைகள் வெள்யீட்டகம் 2014 கான்ராட் உட் மொழிபெயர்ப்பு இக்பால் அஹமது பக் 20 )
ஆங்கிலேயர்களின் வரி விதிப்பில் நிகழ்த்தப்பட்ட கொடுமைக்கு இந்தப் புள்ளி விபரமே போதுமான சான்றாகும்.
அதிகரித்துக் கொண்டே சென்ற இக்கொடுமைகள் முஸ்லிம்களின் பொறுமையைச் சோதித்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜமின்களுடன் உரசல்கள் வெடிக்க ஆரம்பித்தன. நேரடி எதிரிகளான அதற்குக் காரணமான ஆங்கிலேயர்களும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.
எறநாடு, செம்பரச் சேரி, பந்திக் காடு, வாண்டூர், வள்ளுவநாடு, பொன்னானி, பாலக்காடு, சிரக்கல், கோட்டயம், குறும்பிரநாடு, கோழிக்கோடு என மாப்பிள்ளாக்கள் வாழ்ந்த மலபார் முழுவதும் பதட்டம் நிறைந்த பகுதியாக மாறியது.
1836-ல் துவங்கிய உரசல்கள் 1921ல் தாங்கமுடியத பேரெழுச்சியாக பொங்கி வழிந்தது.
பள்ளிவாசல்களில் இமாம்கள் தமது உரைகளின் வழியாக, புரட்சியின் வேர்களுக்கு நீர் வார்த்தனர். வரியம் குன்னத்து குன் அஹமது ஹாஜியும், காலத்திங்கல் முஹம்மதும், சித்தி கோயா தங்கலும், இம்பிச்சிக் கோயா தங்கலும் புரட்சிப் படைக்கு தலைமை தாங்கி வழி நடத்தினர்.
வீட்டிலிருந்த கத்திகளும், தெருவில் கிடக்கும் கற்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதங்களாக உருமாறின. காவலர்கள் தாக்கப்பட்டனர். ஆங்கிலேயக் குடியிருப்புகளும், ஜமின்களின் வாசஸ்தலங்களும் வரைமுறையின்றி தாக்குதலுக்கு உள்ளாயின.
விவசாயக் கூலிகளுக்கு எதிராக ஜமின்களிடமிருந்த பத்திரங்களும் இன்னபிறஆவணங்களும் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டன. ஆங்கில துரைகளும் அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த நம்பூதிரி, நாயர்களும் பொதுமக்களால் பிழிந்து எடுக்கப்பட்டனர்.
சுதந்திரப் போர் வரலாறு இவர்களுக்கு இணையான நெஞ்சுரம் கொண்ட போராளிகளைக் கண்டதே இல்லை என்று அடித்துச் சொல்லும் அளவுக்கு மாப்ளாக்களின் மாவீரம் வெளிப்பட்டது. அவர்களின் மதநம்பிக்கையும் அதற்கொரு முக்கிய காரணமாக அமைந்தது .
மாப்ளாக்கள் பள்ளிவாசல்களை வெறும் இறைவழிபாட்டுத் தலமாக மட்டும் பயன்படுத்தாமல் போராட்ட களத்தின் தலைமையிடமாகவும் ஆக்கிக் கொண்டார்கள். அங்கு தான் திட்டங்கள் தீட்டப்பட்டன.
புறப்படுவதற்கு முன் சண்டையிலே ஷஹீத்(உயிர் துறக்க வேண்டும்) ஆக வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இறந்தவர்களுக்கு அணிவிக்கப்படுவதைப் போன்று வெண்ணிற ஆடையை அணிந்து கொள்வார்கள். மரண சாசனங்களைச் செய்து கொள்வார்கள்.
தமது மனைவியரைமணவிலக்கு செய்து விட்டுப் படைக்குப் புறப்படுபவர்களும் அவர்களில் உண்டு (மெட்ராஸ் ஆளுநர் குழு உறுப்பினர் ஜே.டி.சிம். என்பவரின் பதிவேடுகள் மெ.நீ.ந1606-ஏ28 ஆகஸ்ட் 1974, மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் கான்ராட் உட் அலைகள் வெள்யீட்டகம் 2014 கான்ராட் உட் மொழிபெயர்ப்பு இக்பால் அஹமது பக் 17)
மாப்ளாக்கள் குறித்து ஆய்வு செய்து லண்டனில் முனைவர் பட்டம் பெற்ற கான்ராட் உட், மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் என்ற தனது நூலில் எழுதுகிறார்:
மாப்ளாக்கள், ஆயுதம் தரித்து எழுந்து விட்டால் எதிரிகளை அழித்தொழிக்க வேண்டும், அதிலே தாமும் உயிர் துறக்க வேண்டும். இரண்டும்தான்அவர்களின் லட்சியமாக இருக்கும். மரணத்தை நேசிப்பதே அவர்களின் தனித்தன்மை என்கிறார்.
(அம்பாத் அய்த்ரோஸின் வாக்குமூலம் 16 மார்ச் 1896 எல்/பி/ஜே/6/422/996/96 பக் 15, மாப்ளா கிளர்ச்சியும் அதன் தோற்றுவாயும் கான்ராட் உட் அலைகள் வெள்யீட்டகம் 2014 கான்ராட் உட் மொழிபெயர்ப்பு இக்பால் அஹமது பக் 18,19)
1921 ஆகஸ்ட் முதல் தேதியன்று குறிப்பிட்ட சில ஜமின்களையும் காவல்துறைக் கண்காணிப்பாளர் அம்முவையும் இன்னும் சில அதிகாரிகளையும் காலி செய்வது என்ற திட்டத்தோடு புக்கோட்டூரில் மாப்பிள்ளாக்கள் திரண்டனர். அவர்களின் எண்ணிக்கையும் அவர்களிடம்காணப்பட்ட கொந்தளிப்பும் அரச நிர்வாகத்தை பின்வாங்கச் செய்தது.
நிலைமையை ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி தாமஸ் அரசின் கைகள் பலமிழந்து வருகின்றன. நிலைமை நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. உடனடியாக சிறப்பு ஆயுதப் படைகளை அனுப்புமாறு மாகாணத் தலைமைக்கு தகவல் அனுப்பினார்(மலபார் நீதிபதி மெட்ராஸ் அரசுக்கு எழுதியது 10-8-1921 ஜி.ஆர்.எஃப்.டாட்டன ஹாம் பக் 18, மா.கி.அ.தோ பக் 191).
லீன்ஸ்டெர் எனும் 270 அயர்லாந்து வீரர்களைக் கொண்ட படைப் பிரிவு கிளர்ச்சியை அடக்க புறப்பட்டது. பெங்களூரில் இருந்த 90 வீரர்களைக் கொண்ட இந்தியன் பயோனியர் பட்டாலியனும் தயாரானது. ஆகஸ்ட் 14 இல் கோழிக்கோடில் நடந்த அதிகாரிகள் மாநாட்டில் கலகத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.
அதன்படி மேலும் 80 லீன்ஸ்டெர்கள், 100 ரிசர்வ் காவலர்கள், 60 மலபார் சிறப்பு காவல் படையினர் பல நவீன ஆயுதங்களோடு திருவரங்காடி வந்திறங்கினர்.( மலபார் பகுதியின் இராணுவக் கட்டுப்பாட்டுத் தலைவர் பி.மெக்.என்.ராய்க்கு மலபார் நீதிபதி எழுதியது நடவடிக்கை ஆணை இந்தியா ரகசியம் எல்.ப்.ஜே 6/1782/6735/21,1/22)
அச்சம் துளியுமின்றி அவர்களை எதிர்கொண்ட மாப்ளாக்களைப் பற்றி கான்ராட் உட் இவ்வாறு வர்ணிக்கிறார்.
கத்தி முனைகள் பொருத்தப்பட்ட துப்பாக்கிகளைக்கொண்டு ராணுவத்தினர் தாக்க முற்பட்டனர். முன்னேறி வந்த மாப்ளா கூட்டம் ஒரு அங்குலம்கூட பின் வாங்கவில்லை என்கிறார். அவர்கள் தமது வாட்களாலும், தடிகளாலும் ராணுவத்தினர்மீது எதிர் தாக்குதல் நடத்தினார்கள். காவல் துறையினர் தமது தோட்டாக்களால் மாப்ளாக்களின் உடலைத் துளைக்க ஆரம்பித்தனர்.
இன்னொருபுறம் பரப்பங்காடி இரயில் நிலையம் மாப்ளாக்களால் சேதப்படுத்தப்பட்டது. இரயில் பாதையும் தகர்க்கப்பட்டது. காவல் நிலையங்கள் காணாமல் போயின. மாவட்ட ஆட்சித் தலைவர் தாமஸ் தம்மால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி இராணுவத்திடம் நிர்வாகத்தை ஒப்படைத்தார்.
சோர்வடைந்த இராணுவம் ஆகஸ்ட் 21 அன்று பின்வாங்கி கோழிக்கோடு திரும்பியது. (மலபார் நீதிபதி மெட்ராஸ் அரசுக்கு எழுதியது ஆகஸ்ட் 25,1921, ஜி.ஆர்.எஃப்.டாட்டன ஹாம் பக் 68, மா.கி.தோ பக் 193)
மலபாரின் நான்கு தாலுக்காக்களில் பிரிட்டிஷார் முழுமையாகத் துரத்தியடிக்கப்பட்டனர். அதிகாரம் மாப்ளாக்களின் கைகளுக்கு மாறியது. அலி முஸ்லியார் தலைமையில் சுதந்திர அரசு பிரகடனம் செய்யப்பட்டது. பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கிலாஃபத் கொடிகளை நட்டு வைத்து சுதந்திர அரசின் எல்லைகள் அறிவிக்கப்பட்டன. நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உளவு அமைப்புகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன.
ஆங்கிலேயர்களே ஆச்சர்யப்பட்டு பாராட்டும் அளவுக்கு மிக நேர்த்தியாக கவனத்தோடு ஒவ்வொரு துறைகளும் சீரமைக்கப்பட்டன. கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.(மா.கி.தோ பக் 250-273)
மலபாரின்நான்கு தாலுக்காக்களில் பிரிட்டிஷார் முழுமையாகத் துரத்தியடிக்கப் பட்டனர். அதிகாரம் மாப்ளாக்களின் கைகளுக்கு மாறியது. அலி முஸ்லியார் தலைமையில் சுதந்திர அரசு பிரகடனம் செய்யப்பட்டது. பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கிலாஃபத் கொடிகளை நட்டு வைத்து சுதந்திர அரசின் எல்லைகள் அறிவிக்கப்பட்டன. நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. உளவு அமைப்புகள் மிகச் சிறப்பாக செயல்பட்டன. ஆங்கிலேயர்களே ஆச்சர்யப்பட்டு பாராட்டும் அளவுக்கு மிக நேர்த்தியாக கவனத்தோடு ஒவ்வொரு துறைகளும் சீரமைக்கப்பட்டன. கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் கம்பெனி அரசு இதை தனக்கேற்பட்ட மிகப்பெரும் அவமானமாகக் கருதியது. படைபலம் கொண்ட மன்னர்களையும், பயிற்சி பெற்ற சிப்பாய்களையும் களத்தில் சந்தித்த ஆங்கிலேயர்களுக்கு எந்தவிதப் பயிற்சியும் இல்லாத, படைபலமும் இல்லாத சாதாரண பொதுமக்கள், அதுவும் கற்களையும் தடிகளையுமே தமது ஆயுதங்களாகக் கொண்டவர்கள் மூலம் ஏற்பட்ட தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆண்டாண்டு காலமாக அந்தப் பகுதியின் எஜமானர்களும் அதிகார வர்க்கமுமான நம்பூதிரிகளின் முழு ஆதரவு இருந்தும்கூட நம்மால் ஜெயிக்க முடியவில்லையே என்பதை நினைக்க நினைக்க அவர்களுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது. எப்படியும் இழந்ததைப் பெற்றே தீருவதென சூளுரைத்தார்கள்.
ஒவ்வொரு மாப்ளாவையும் எதிரியாகத்தான் பார்க்க வேண்டும். இரக்கம் என்பது எவரது உள்ளத்திலும் எட்டிப் பார்க்கவே கூடாது என்று படை வீரர்களுக்குப் பாடம் நடத்தப்பட்டது. 1921 அக்டோபர் 25ல் டோர்செட் படைப் பிரிவினர் மேல்முரி மீது தாக்குதல் நடத்தினர். குடியிருப்புகள் அனைத்தும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.
டோர்செட் படை முழுதாக அழிந்தாலும் மாப்ளாக்களை அழிக்காமல் விடமாட்டேன் என குடிமை அலுவலர் தொடர்ந்து வெறியூட்டினார். (மேல் முரியில் கோல்லப்பட்ட மாப்ளாக்கள் 246 என அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன எஃப்.பி.இவான்ஸின் பகுதி அலுவல் குறிப்புகள் 26 அக்டோபர் 2, நவம்பர் 1921, ஜி.ஆர்.எஃப்.டாட்டன ஹாம் பக் 255-257)
பீரங்கிகளைக் கொண்டு வந்து நிறுத்தி, கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணில் பட்டவர்களையெல்லாம் காலி செய்தார்கள். மக்களை மயானக் குவியலாக்கி மலபாரை மீண்டும் கைப்பற்றினார்கள். அரசின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்களே அந்தக் கொடுமைகளுக்கு சாட்சி சொல்கின்றன.
கொல்லப்பட்ட மாப்ளாக்களின் எண்ணிக்கை 3000. கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் 60,000 என்கிறது அரசின் மெட்ராஸ் பதிவேடுகள். (பதிவேடு) விடுதலைப் போர் குறித்த நீண்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ள எழுத்தாளர் வி.என். சாமி அவர்கள் ஆங்கில அரசு தரும் புள்ளி விபரம் தவறானது என்றும் கொல்லப்பட்டவர்கள் மொத்தம் 10,000 பேர் என்றும் கூறுகிறார்.
(வி.போ.மு பக் 400, இந்திய தலைமை படைத் தளபதி ராபின்சன் பிரபு இந்திய அரசு செயலாளருக்கு எழுதியது, 6 அக்டோபர் 1922 ம.அ.ர.ந.அ. பக் 10)