30) தொழிலாளியும் முதலாளியும்

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

தொழிலாளியும் முதலாளியும்

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” قَالَ اللَّهُ
ثَلاَثَةٌ أَنَا خَصْمُهُمْ يَوْمَ القِيَامَةِ: رَجُلٌ أَعْطَى بِي ثُمَّ غَدَرَ، وَرَجُلٌ بَاعَ حُرًّا فَأَكَلَ ثَمَنَهُ، وَرَجُلٌ اسْتَأْجَرَ أَجِيرًا فَاسْتَوْفَى مِنْهُ وَلَمْ يُعْطِ أَجْرَهُ

மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு, அதில் மோசடி செய்தவன். இன்னொருவன் சுதந்திரமான ஒருவரை விற்று, அதன் பணத்தைச் சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக் கொண்டு, கூலி கொடுக்காமல் இருந்தவன்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 2227)

விளக்கம்:

உலகில் பல விதமான மோசடிகள் நடக்கின்றன. அவற்றில் சில மிக மிக மோசமானவையாகும்: கடும் தண்டனைக்குரியதாகும் அவற்றில் ஒன்று, ஒருவரை நம்ப வைப்பதற்காக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றுவதாகும். படைத்தவனின் மீது ஒருவன் சத்தியம் செய்தால் அது உண்மையாக இருக்கும் என்று நம்பி ஒரு பொருளை வாங்குவான், அல்லது கொடுப்பான்.

இறைவனின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றியதால் இவனுக்கு எதிராக அல்லாஹ் வழக்காடுவான். அப்போது இவனது நிலை என்னவாகும். சுதந்திரமாக இருப்பவனை அடிமை என்று கூறி, அவனை விற்று அதன் மூலம் வந்த பணத்தைச் சாப்பிட்டவனுக்கு எதிராகவும் அலலாஹ் வழக்காடுவான்.

ஒரு வேலைக்காரனிடம் முழுமையாக வேலை வாங்கி விட்டு அவனுக்குரிய கூலியைக் கொடுக்காமல் ஏமாற்றியவனுக்கு எதிராக அல்லாஹ் வழக்காடுவான். கொடுக்கும் சம்பளத்தை விடக் கூடுதலாக வேலை வாங்கிக் கொண்டு அந்த வேலைக்காரனின் கூலியை வழங்காமல் மறுக்கும் எத்தனையோ முதலாளிகள் இருக்கின்றனர். இவர்கள் இந்த நபிமொழியை சிந்தித்துப் பார்க்க வேண்டும். வேலைக்காரனிடம் எவ்வளவு வேலை வாங்குகிறோமோ அதற்குத் தகுதியான ஊதியத்தை நாம் வழங்க வேண்டும். இல்லையெனில் இறைவன் நமக்கு எதிராக வழக்காடும் நிலை ஏற்படும்.