28) பறிபோகும் நன்மைகள்

நூல்கள்: நாவை பேணுவோம்

பறிபோகும் நன்மைகள்

சபிப்பதன் மூலம் நரகிற்கு செல்வதாக இருந்தால் பெண்கள் தான் செல்வார்கள். ஆண்களாகிய நாம் தப்பித்துக் கொள்ளலாம் ஆண்களாகிய நாம் திட்டியிருந்தால் அதற்கு குறைந்தபட்ச தண்டணைதான் கிடைக்கும். நரகம் அதற்கு தண்டனையாய் ஒரு காலத்திலும் கிடைக்காது என்று தப்புக் கணக்கு போட்டுவிடாதீர்கள் பெண்களை தனியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது விஷயத்தில் எச்சரித்துள்ளார்கள் என்றாலும். ஆண்களாகிய நாமும் பிறரை திட்டுகின்ற விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். சில சமயம் பிறரை நாம் திட்டியிருந்தது நம்மை நரகில்நுழைக்க காரணமாகிவிடும் என்று நபிகளார் நம்மையும் சேர்த்தே எச்சரித்துள்ளார்கள்

ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார்கள் மக்கள் யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர் என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை நோன்பு ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர்மீது அவதூறு சொல்லியிருப்பார் ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார்.

ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும் இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்) என்று கூறினார்கள். 

அறிவிப்பவர் ஆஹூரா (ரலி)

(முஸ்லிம்: 5037)

ஒருவரை நாம் திட்டுவது. நம்முடைய நன்மைகள் பறிபோவதற்கும் அதனால் நரகில் விழுவதற்கும் காரணமாக அமைகின்றது. நம்மிடம் நன்மைகள் இல்லை எனும் போது நாம் யாரை சபித்தோமோ அவரின் தீமைகளை நாம் சுமக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகின்றது. இதை எப்போதும் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும் இதற்கு அஞ்சியதன் காரணத்தினாலே நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் மிகவும் ஜாக்கரதையாக நடந்து கொண்டார்கள். தன்னை ஒருவர் சபித்து விட்டால் அதற்கு பதிலளிக்கையில் கூட மிகவும் நாகரீகாமாய் பதிலளித்துள்ளார்கள்

யூதர்கள் (சிலர்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும் என்று முகமன்) கூறினர். உடனே நான் (அது உங்களுக்கு நேரட்டும். மேலும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி உங்கள் மீது அல்லாஹ் கோபம்கொள்ளட்டும் என்று (அவர்களுக்கு பதில்) சொன்னேன். (அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா நிதானம் (எதிலும்) நளினமாக நடந்துகொள். மேலும். வன்மையுடன் நடந்துகொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன் என்று சொன்னார்கள்.

அப்போது நான் அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்கவில்லையா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள். நான் (அவர்களுக்கு அளித்த பதிலை) நீ கேட்கவில்லையா? (அஸ்ஸாமு எனும் சொல்லைத் தவிர்த்து வஅலைக்கும் – அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று அவர்களுக்கு நான் பதிலளித்துவிட்டேன் அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும் எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தன ஏற்றுக்கொள்ளப்படாது என்று சொன்னார்கள்

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 6030)

தவறு செய்த ஒருவரை கண்டிக்கும் போது கூட அநாகாரீகமான வார்த்தைகளை அள்ளி வீசியதில்லை. கட்டுப்பாடற்று போய் காட்டுமிராண்டித்தனமான சொற்பிரயோகத்தை நபிகளார் பயன்படுத்தியதில்லை. மிக நாகரீகமாகவே பேசுவார்கள் கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ சாபமிடுபவராகவோ ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூடஅவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள்

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 6046)

நபிகளார் கண்டிக்கின்ற வாசகத்தை எழுதிட முடியும் கோடிக்கணக்கில் மக்கள் கூடியிருக்கின்ற சபையில் சற்றும் தயங்காமல் கூறமுடியும். நாம் பிறரை கண்டிக்கின்ற வாசகத்தை இவ்வாறு எழுதிட முடியுமா? எதிலும் எழுத தகாத எந்த சபையிலும் சொல்லத்தகாத வார்த்தைகளை நாம் சொல்லி கொண்டிருக்கின்றோம். நாம் மிக அசிங்கமாய் சபித்துக் கொண்டு இருக்கிறோம். கெட்டவார்த்தைகளை அள்ளிக் கொட்டும்படியான சூழ்நிலை நமக்கு ஏற்படுமாயின் ஷைத்தானிடமிருந்து பாதுகாவல் தேடியவர்களாக அதை விட்டும் விலகிட வேண்டும். அதுவே ஒரு முஸ்லிமின் பண்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டனர். அவர்களில் ஒருவருக்கு மிகக் கடுமையான கோபம் ஏற்பட்டு அவரது முகம் புடைத்து நிறம் மாறிவிட்டது அப்போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய (கோபமான)து போய்விடும் என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில்) ஒருவர் (கோபத்திலிருந்த) அந்த மனிதரை நோக்கி நடந்து நபி (ஸல்) அவர்கள் கூறியதை எடுத்துக் கூறி ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு என்றார். அதற்கு அம்மனிதர் (கவலைப்படும்படி) பிணி ஏதேனும் எனக்கு ஏற்பட்டுவிட்டதாக நினைக்கிறீரா? நான் என்ன பைத்தியக்காரனா? (உமது வேலையைக் கவனிக்கச்) செல்! என்றார்.

அறிவிப்பவர்: சுலைமான் பின் ஸுரத் (ரலி)

(புகாரி: 6048)