27) வட்டி
வட்டி
வட்டி வாங்கக் கூடாது
நம்பிக்கை கொண்டோரே! பன் மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள். (ஏகஇறைவனை) மறுப்போருக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள நரகத்தை அஞ்சுங்கள்! அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான்
அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
வட்டி அல்லாஹ்விடம் வளராது
மனிதர்களின் செல்வங்களைப் பெருக்கிக் கொள்வதற்காக நீங்கள் வட்டிக்கு கொடுப்பது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை. அல்லாஹ்வின் முகத்தை நாடி ஜகாத் கொடுப்பீர்களானால் இத்தகையோரே பெருக்கிக் கொண்டவர்கள்.
வட்டி வாங்குவது அல்லாஹ் ரசூலுக்கு எதிரான போர்
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது. அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்விடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படும் நாளை அஞ்சுங்கள்! பின்னர் ஒவ்வொருவருக்கும், அவர்கள் உழைத்தது முழுமையாக வழங்கப்படும்.265 அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
வட்டி வாங்கியதால் யூதர்கள் தண்டிக்கப்பட்டார்கள்
யூதர்கள் செய்த அநீதியின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அதிகமானோரை அவர்கள் தடுத்ததன் காரணமாகவும், வட்டியை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டிருந்தும் வட்டி வாங்கியதாலும், மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் அவர்கள் சாப்பிட்டதாலும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த தூய்மையானவற்றை அவர்களுக்கு விலக்கினோம். அவர்களில் (நம்மை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
வட்டி வாங்கியவரின் மறுமை நிலை
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
வட்டியில் தொடர்புடைய அனைவரும் சமம்
என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்.)
3258. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்” என்று கூறினார்கள்.
வட்டி பெரும்பாவம்
‘அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை எவை?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)’ என்று (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
வட்டி என்றால் என்ன?
ஒரே இனத்தை சார்ந்த பொருளைக் கொடுத்து அதை விடக் கூடுதலாக வாங்கினால் அல்லது உடனேயே அல்லது தாமதப்படுத்தியோ வாங்கினாலும் அது வட்டி தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபருக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?” என்று கேட்டார்கள்.
அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாஉவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாஉக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉவையும் நாங்கள் வாங்குவோம் எனக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக! எனக் கூறினார்கள்.
அபூ ஹுரைரா(ரலி) அபூ ஸயீத்(ரலி) இருவரும் அறிவித்தார்கள்:
நபி(ஸல்) அவர்கள் கைபர் பகுதியில் ஒரு மனிதரை அதிகாரியாக நியமித்தார்கள். அவர் ‘ஜனீப்’ என்னும் தரமான பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்), அவர்கள் ‘கைபரில் உள்ள எல்லாப் பேரீச்சம் பழங்களும் இதே தரத்தில்தான் இருக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இரண்டு ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் ஒரு ஸாவையும், மூன்று ஸாவு சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களைக் கொடுத்து இதில் இரண்டு ஸாவுகளையும் நாங்கள் வாங்குவோம்!’ எனக் கூறினார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘அவ்வாறு செய்யாதீர்! சாதாரண வகைப் பேரீச்சம் பழங்களை வெள்ளிக் காசுகளுக்கு விற்றுவிட்டு அந்தக் காசுகளின் மூலம் உயர்ந்த பேரீச்சம் பழங்களை வாங்குவீராக!’ என்றார்கள். நிறுத்தலளவையிலும் இது போன்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பொருளுக்கு பொருள் மாற்றும் போது
வியாபாரம் செய்யும் முறை
அபூ ஸயீத்(ரலி) கூறியதாவது; பலதரப்பட்ட பேரீச்சம் பழங்களின் கலவை எங்களுக்கு வழங்கப்படும்; அதை ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவு என்ற அடிப்படையில் நாங்கள் விற்பனை செய்வோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘ஒரு ஸாவுக்கு இரண்டு ஸாவும் கூடாது; இரண்டு திர்ஹங்களுக்கு ஒரு திர்ஹமும் கூடாது!’ என்று கூறினார்கள்.
பொருளுக்கு பொருளை மாற்றும் போது
இரண்டும் சமமாக இருக்க வேண்டும்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர. வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும் வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.’
அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி)
அபூ பக்ரா(ரலி) கூறுயதாவது : நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்கு சரியாகத் தவிர விற்கக் கூடாது என்று தடைவிதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.
மேற்கண்ட ஹதீஸிலிருந்து பொருளுக்கு பொருளை மாற்றும் போது இரண்டும் சமமாக இருக்க வேண்டும் நமக்கு தெளிவாகிறது.
ரொக்கமாக ஒரு விலை தவணையாக
ஒரு விலை கூடாது
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்கச் சரியாகவே தவிர வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றை விட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!
அறிவிப்பவர் : அபூ ஸயீத்(ரலி)
நாணயம் மாற்றும் முறை
‘நான் நாணய மாற்று வியாபாரம் செய்து வந்தேன்; அது பற்றி(ய மார்க்கச் சட்டத்தை) ஸைத் இப்னு அர்கம்(ரலி), பராஉ இப்னு ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன்.
அதற்கவர்கள், ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் வியாபாரிகளாக இருந்தோம்; அவர்களிடம் நாணயமாற்று வியாபாரம் பற்றிக் கேட்டோம். அதற்கு ‘உடனுக்குடன் மாற்றினால் அதில் தவறில்லை; தவணையுடன் இருந்தால் அது கூடாது!’ என அவர்கள் பதிலளித்தார்கள்!’ என்றார்கள்!’
அறிவிப்பவர் ; அபுல் மில்ஹால்
சுலைமான் இப்னு அபீ முஸ்லிம்(ரஹ்) அறிவித்தார்.
நான் அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணயமாற்று வியாபாரம் குறித்துக் கேட்டேன். அப்போது அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். நானும் என் வியாபாரக் கூட்டாளி ஒருவரும் ஒரு பொருளை (சிறிது) உடனுக்குடனும் (சிறிது) தவணை முறையிலும் வாங்கினோம். அப்போது பராஉ இப்னு ஆஸிப்(ரலி) எங்களிடம் வந்தார்கள். நாங்கள் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டோம்.
அதற்கு அவர்கள், ‘நானும் என்னுடைய கூட்டாளியான ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களும் இந்த வியாபாரத்தைச் செய்து வந்தோம். நபி(ஸல்) அவர்களிடம் இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள், ‘உடனுக்குடன் மாற்றியதை எடுத்துக் கொள்ளுங்கள்; ஆனால், தவணை முறையில் மாற்றிக் கொண்டிருப்பீர்களாயின் அதை ரத்துச் செய்யுங்கள்’ என்று பதிலளித்தார்கள்’ எனக் கூறினார்கள்.
அபூ பக்ரா(ரலி) கூறியதாவது : நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்கு சரியாகத் தவிர விற்கக் கூடாது என்று தடைவிதித்தார்கள். தங்கத்திற்கு வெள்ளியை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் வெள்ளிக்குத் தங்கத்தை நாங்கள் விரும்பியவாறு விற்பதற்கும் அனுமதித்தார்கள்.
தங்கத்துக்கு வெள்ளியை மாற்றுவது சமமாக இருந்தால் தவறில்லை. அதே போன்று தங்கத்துக்கு தங்கமும் வெள்ளிக்கு வெள்ளியையும் சமமான அளவில் உடனே மாற்றுவது தடையில்லை. ஆனால் கடனுக்கு பிறகு மாற்றினால் வட்டியாகும். தங்கத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்துக் கொள்வதற்கு தடையில்லை.