26) நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா?
26) நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனித்திருந்தார்களா?
குர்ஆனுக்கு மாற்றமான கருத்தைத் தருகின்றது என்று நாம் கூறும் செய்திகளில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பான செய்தியும் ஒன்றாகும்.
நபி (ஸல்) அவர்களுடைய ஒழுக்க வாழ்வை கேள்விக்குற்படுத்தும் விதமாக, நபியவர்கள் அன்னியப் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்தார்கள் என்றும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு தலையில் பெண் பார்த்து விட்டார்கள் என்றும் குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.
ஒழுக்கத்தையும், கண்ணியத்தையும், அன்னியப் பெண்களுக்கு மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வரை முறைகளையும் சமுதாயத்திற்கு தெளிவாக கற்றுத் தந்த நபிகள் (ஸல்) அவர்கள் இப்படி நடக்க மாட்டார்கள், நபியவர்கள் இப்படி நடந்தார்கள் என்று நம்புவது நபியவர்களின் உயரிய ஒழுக்கத்திற்கே சந்தேகத்தை உண்டாக்குவதுடன் குர்ஆன் கூறும் செய்திகளுக்கும் இது மாற்றமாக உள்ளது என்று நாம் இந்த செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகின்றோம்.
இதோ இதுதான் குறித்த செய்தியாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபி (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள். தொடர்ந்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தாரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் இந்தக் கடலின் மத்தியில் பயணம் செய்யும் புனிதப் போராளிகளாக எனக்குக் காட்டப்பட்டனர்.
அவர்கள் கட்டில்களில் வீற்றிருக்கும் மன்னர்களாக அல்லது மன்னர்களைப் போன்று இருந்தார்கள் என்று கூறினார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன். அப்போது எனக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) தலையை வைத்து விட்டுப் பிறகு சிரித்தபடி விழித்தெழுந்தார்கள்.
அப்போதும் நான் ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தோரில் சிலர் அல்லாஹ்வின் பாதையில் புனிதப் போர்புரிபவர்களாக எனக்குக் காட்டப்பட்டார்கள் என்று முன்பு போலவே பதிலளித்தார்கள். அதைக் கேட்டு நான் அல்லாஹ்வின் தூ தரே என்னையும் அவர்களில் ஒருத்தியாக ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று சொன்னேன்.
நபி (ஸல்) அவர்கள் நீங்கள் (கடல் பயணம் செய்து அறப்போருக்கு) முதலாவதாகச் செல்பவர்களில் ஒருவராக இருப்பீர்கள் என்று கூறினார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபீ சுஃப்யான் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் கடல் பயணம் மேற்கொண்டார்கள். பின்பு அவர்கள் கடலிலிருந்து புறப்பட்ட போது தமது வாகனத்திலிருந்து கீழே விழுந்து இறந்து விட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் என் சமுதாயத்தினரில் முதலில் கடலில் (சென்று) புனிதப் போர் புரியும் படையினர் (சொர்கம் புகுவதற்கான தகுதியை) ஏற்படுத்திக் கொண்டு விட்டார்கள் என்று கூறினார்கள். இதைச் செவியுற்ற நான் அல்லாஹ்வின் தூதரே நான் அவர்களில் ஒருத்தியா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் நீங்கள் அவர்களில் ஒருவர் தாம் என்று பதிலளித்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் எனது சமுதாயத்தினரில் சீசருடைய நகரத்தின் (பழைய கான்ஸ்டான்டி நோபிள் அல்லது தற்போதைய இஸ்தான்பூலின்) மீது படையெடுக்கும் முதலாவது படையினர் மன்னிக்கப்பட்டவர்கள் ஆவார் என்று கூறினார்கள். அவர்களில் நானும் ஒருத்தியா? அல்லாஹ்வின் தூதரே என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஹராம் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு உணவளித்துவிட்டு அவர்களுடைய தலையில் பேன் பார்த்து விடுவதற்காக உட்கார்ந்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நபி (ஸல்) அவர்கள் தனது தலையை உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் வைத்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
(முஸ்லிம்: 3536)மேற்கண்ட செய்தி
(புகாரி: 2789, 2800, 2895, 2924, 6282, 7002)என்ற இலக்கங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபியவர்களின் ஒழுக்க வாழ்வுக்கு மாற்றமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் புனித இஸ்லாமிய மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்யும் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் ஆண்களாக இருந்தால் கையைப் பிடித்து பைஅத் – உறுதிப் பிரமாணம் பெற்றுக் கொள்வார்கள். பைஅத் பெற்றுக் கொள்வதற்காக வருபவர்கள் பெண்களாக இருந்தால் அவர்களிடம் நபியவர்கள் வாய் மூலம் பைஅத் – உறுதிப் பிரமாணத்தை பெற்றுக் கொண்டு அனுப்பி விடுவார்கள்.
அவர்களின் கைகளைப் பிடித்து பைஅத் – உறுதிப் பிரமாணம் கூட செய்ய மாட்டார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபியே இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் அல்லாஹ்வுக்காக எதையும் இணை வைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்ய மாட்டார்கள் தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்ப மாட்டார்கள் நற்செயலில் உங்களுக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்று உறுதி மொழி அளித்தால் அவர்களிடம் உறுதி மொழி வாங்குங்கள் எனும் (அல்குர்ஆன்: 60:12) ➚ இறை வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள்.
(கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நபி (ஸல்) அவர்களிடத்தில் உறுதிப் பிரமாணம் செய்வதற்காக நான் பல பெண்களுடன் அவர்களிடத்தில் வந்தேன். அப்போது அவர்கள் உங்களுடைய சக்திக்கு உட்பட்டு உங்களால் முடிந்ததை (கடைப்பிடியுங்கள்). நான் பெண்களிடத்தில் கை கொடுத்து (பைஅத்) செய்ய மாட்டேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமைமா (ரலி)
பைஅத் என்பது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் நபி பெற்றுக் கொள்ளும் உறுதிப் பிரமாணமாக இருந்தும் நபி (ஸல்) அவர்கள் பைஅத் பெற்றுக் கொள்வதற்காகக் கூட பெண்களின் கைகளைப் பிடித்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
தமது மனைவியரின் கைகளைத் தவிர வேறு எந்த பெண்ணின் கைகளையும் நபியவர்கள் தொட்டதில்லை என்று மேற்கண்ட செய்தியில் நபியவர்களின் ஒழுக்க வாழ்வு தொடர்பில் நபியின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களே சான்றளிக்கின்றார்கள்.
பைஅத் பெறுவதற்காகக் கூட அன்னியப் பெண்களின் கைகளைக் கூட தொடாத நபி (ஸல்) அவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள் என்றும், அன்னியப் பெண்ணான உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பேன் பார்த்து விட்டார்கள் என்றும் எந்தவொரு உண்மை முஃமினும் நம்ப மாட்டான்.
மட்டுமல்லாமல் பைஅத் எடுக்க வந்தவர்களிடம் நபியவர்கள் சொன்ன செய்தி இங்கு கூர்ந்து கவனிக்கத் தக்கதாகும் அதாவது “உங்களுடைய சக்திக்கு உட்பட்டு உங்களால் முடிந்ததை (கடைப்பிடியுங்கள்). நான் பெண்களிடத்தில் கை கொடுத்து (பைஅத்) செய்ய மாட்டேன்” என்பதுதான் அந்தச் செய்தி. பெண்களின் கைகளைப் பிடித்து நான் பைஅத் செய்யமாட்டேன் என்று நபியவர்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.
அன்னியப் பெண் என்பதினால் கையைப் பிடித்து பைஅத் செய்யமாட்டேன் என்று நபியவர்கள் மறுத்திருக்கும் போது, அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள், பேன் பார்க்க தலையைக் கொடுத்தார்கள் என்றெல்லாம் ஒரு உண்மை முஃமின் நம்பமாட்டான் என்பதே நிதர்சனமானதாகும்.
சிறு சந்தேகத்திற்குக் கூட
வழி வைக்காத உத்தமத் தூதர்
நபி (ஸல்) அவர்கள் தமது ஒழுக்க வாழ்வில் ஒரு சிறு சந்தேகம் கூட மற்றவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார்கள். இதற்கு கீழுள்ள செய்தி சான்றாகும்.
நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃபில் இருந்த போது அவர்களுடைய துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்கள் திரும்பச் சென்ற போது நபி (ஸல்) அவர்களும் (ஸஃபிய்யாவுடன்) (சிறிது தூரம்) நடந்து சென்றார்கள். அப்போது அன்சாரிகளில் இருவர் அவர்களைக் கடந்து சென்றனர். உடனே நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து இவர் (வேறு யாருமல்லர். என் துணைவி) ஸஃபிய்யாதாம் என்று சொன்னார்கள்.
உடனே அவ்விருவரும் அல்லாஹ் தூயவன் (உங்கள் மீதா சந்தேகப்படுவோம்) என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி)
நபியவர்கள் இரவு நேரத்தில் மனைவி ஸபிய்யா (ரலி) அவர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றதை இரண்டு நபித் தோழர்கள் பார்த்து விடுகின்றார்கள். அவர்களிடம் நபியவர்கள் “இவர் எனது மனைவி ஸபிய்யா” என்பதை தெளிவு படுத்துகின்றார்கள். நாங்கள் உங்களை சந்தேகிப்போமா நபிகள் நாயகமே? என்று நபித் தோழர்கள் கேட்டபோது, “மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஊடுருவியுள்ளான்” என்று நபியவர்கள் சொன்ன பதில் இங்கு கவனிக்கத் தக்கதாகும்.
மனைவியுடன் சென்ற நபியவர்கள் மீது வேறு விதமான சந்தேகத்தினை ஷைத்தான் உண்டாக்கி விடுவான் என்பதை அறிந்த நபியவர்கள் உடனே தான் அழைத்து செல்பவர் தனது மனைவி என்று தெளிவுபடுத்துகின்றார்கள். சாதாரணமாக தனது மனைவியை அழைத்துச் செல்லும் போதே ஷைத்தான் ஏதாவது கெட்ட எண்ணங்களை மக்கள் மத்தியில் போட்டு விடுவானோ என்பதில் கரிசனை காட்டிய நபியவர்கள் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் இருந்தார்கள் என்பது எப்படி உண்மையாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டாமா?
அன்னியப் பெண்களுடன் தனித்திருப்பதைத்
தடுத்த நபியவர்கள்
அன்னியப் பெண்களிடம் வந்து செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த விசயத்தில் சமுதாயத்திற்குக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள். எந்த ஒரு கட்டளையிட்டாலும் அதை முதலில் நபி (ஸல்) அவர்கள் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள். இந்நிலையில் சமுதாயத்திற்குத் தான் செய்த உபதேசங்களை மீறக் கூடியவர்களாக ஒரு போதும் நபி (ஸல்) அவர்கள் இருக்க மாட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
(அந்நியப்) பெண்கள் இருக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
கணவனாகவோ அல்லது திருமணம் முடிக்கத் தகாத உறவினராகவோ இருந்தாலே தவிர எந்த ஆணும் எந்தப் பெண்ணிடத்திலும் தங்குவது கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் எவரும் (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனென்றால் (தனித்திருக்கும் போது) ஷைத்தான் மூன்றாவது ஆளாக அவர்களுடன் உள்ளான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
முரண்பாடுகள்
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை வைத்ததாக(முஸ்லிம்: 3536)வது செய்தி கூறுகிறது. உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் உறங்கியதாக(புகாரி: 2800)வது செய்தி கூறுகிறது. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்களுக்கு மனைவியாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராமிடம் வந்து உறங்கியதாக(புகாரி: 7002)வது செய்தி கூறுகிறது.
இந்நிகழ்வு நடந்த பிறகு தான் உபாதா (ரலி) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களை மணந்து கொண்டதாக(முஸ்லிம்: 3536)வது செய்தி கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் படுத்துக் கொண்டிருந்த நிலையில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அமர்ந்து கொண்டு பேன் பார்த்ததாக(முஸ்லிம்: 3535, 3535)வது செய்தியும் கூறுகிறது.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் உறங்கும் போது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தன் தலையைக் கழுவிக் கொண்டிருந்ததாக(அபூதாவூத்: 2131)வது செய்தி கூறுகிறது.
அடிப்படையற்ற விளக்கம்
இந்தச் செய்தியை சரிகாணுவதற்காக சிலர் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடித் தாயாக இருந்தார்கள் என்றும் தாய் அல்லது தந்தை வழியில் பால்குடி அன்னையாக இருந்தார்கள் என்றும் விளக்கம் தருகிறார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்காக இந்நிகழ்வை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விளக்கம் தருகிறார்கள்.
நமது விளக்கம்
இவர்கள் கூறுவது போல் உண்மை நிலை இருந்தால் முதலில் இந்த விளக்கத்தை ஏற்று இதை சரிகாணுபவர்கள் நாமாகத் தான் இருப்போம். ஆனால் உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு சிற்றன்னையாக இருந்தார்கள் என்ற விளக்கத்தை யார் எப்படி கூறினார் என்று பார்த்தால் இந்த விளக்கம் அடிப்படையற்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இப்னு அப்தில் பர் என்பவர் இந்த விளக்கத்தைப் பின்வருமாறு கூறுகிறார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் புகட்டியிருப்பார்கள். இதனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி அன்னையானார்கள் என்று நான் யூகிக்கிறேன்.
நூல் : தம்ஹீத் பாகம் : 1 பக்கம் : 226
இந்த ஹதீஸை சரிகாணுவதற்காக யூகமாக சொல்லப்பட்ட விளக்கம் தான் இது என்பதை மேலுள்ள வாசகம் தெளிவாக கூறுகிறது. எந்தச் சான்றும் இல்லாமல் யூகமாக இந்த விளக்கம் சொல்லப்பட்டதால் இதை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இமாம் இப்னு ஹஜர் அவர்களும் திம்யாதீ என்ற அறிஞரும் இப்னு அப்தில் பர் கூறுகின்ற இந்த விளக்கத்தை சுட்டிக்காட்டி மறுத்துள்ளார்கள்.
எனவே தான் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸை மையமாக வைத்து ஒரு அன்னியப் பெண் விருந்தினருக்குப் பணிவிடைகளை செய்யலாம் என்று சட்டம் கூறியுள்ளார். திம்யாதீ என்ற அறிஞரும் இப்னு அப்தில் பர் கூறிய இந்த விளக்கத்தைக் கடுமையாக எதிர்க்கிறார்.
ஏனென்றால் நபி (ஸல்) அவர்களுக்கு பால் புகட்டிய தாய்மார்கள் யார் யார் என்று வரலாற்று நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அன்சாரி குலத்தைச் சார்ந்தவர்கள். அன்சாரி குலத்தைச் சார்ந்த பெண்களில் அப்துல் முத்தலிபின் தாயாரான சல்மா என்பவரைத் தவிர வேறு யாரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி அன்னையர் கிடையாது.
சல்மாவிற்கும் உம்மு ஹராமிற்கும் மத்தியிலாவது நெருங்கிய உறவு உண்டா என்றால் இல்லை. இருவரும் மிக மிக தொலைவில் பல பாட்டனார்களைக் கடந்து தூரத்து உறவினராக உள்ளார்கள். சல்மா அவர்களுடன் உம்மு ஹராம் பெற்றிருந்த தூரத்து உறவினால் நபி (ஸல்) அவர்களுக்கு உம்மு ஹராம் (ரலி) அவர்கள் திருமணம் முடிக்கத் தடையானவர்களாக ஆக மாட்டார்கள்.
உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இமாம் இப்னு ஹஜர் இமாம் தஹபீ இன்னும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள். இமாம் திர்மிதியும் (1569) வது ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு உம்மு ஹராமைப் பற்றி பேசுகிறார்.
இவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இவர் உம்மு சுலைம் என்பாரின் சகோதரி, உபாதா என்பாரின் மனைவி, அனஸ் (ரலி) அவர்களின் சிற்றன்னை என்று தான் குறிப்பிடுகிறார்களே தவிர நபியவர்களின் பால்குடித் தாய் என்று அவர்கள் சொல்லவே இல்லை.
உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடித் தாயாக இருந்திருந்தால் அதைத் தான் முதலில் இவர்கள் பதிவு செய்திருப்பார்கள். ஆனால் எந்த வரலாற்றுப் புத்தகத்திலும் உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களின் தாய் என்ற விளக்கம் கூறப்படவே இல்லை. இந்த ஹதீஸை சரிகாணுவதற்கு எதிர்த் தரப்பினர்கள் கூறிய முரண்பட்ட விளக்கங்களைக் கவனித்தாலே அது ஆதாரமற்றது என்று எளிதில் உணர்ந்து கொள்ளலாம். உம்மு ஹராம் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடித் தாய் என்று கூறுவதோடு இச்சட்டம் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியது என்ற விளக்கத்தையும் இணைத்துக் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் பால்குடி அன்னையாக உம்மு ஹராம் இருக்கும் போது இச்சட்டம் அவர்களுக்கு மட்டும் உரியது என்று கூறுவது அர்த்தமற்றது. பால்குடித் தாயாக இருந்தால் யார் வேண்டுமானாலும் தன் பால்குடித் தாயிடம் சென்று வரலாம். இதில் நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம் விதிவிலக்குத் தருவதற்கு எந்த அவசியமும் இல்லை.
இந்த ஹதீஸைச் சரிகாணுவதற்கு எதையெல்லாம் சொல்ல வேண்டுமோ அதையெல்லாம் ஆதராமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அந்த விளக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான் இந்த ஹதீஸை நிலைநாட்டப் பார்க்கிறார்களே தவிர ஆதாரத்தை வைத்து நிலைநாட்டுவதற்கு முயற்சிக்கவில்லை.
குர்ஆன் ஹதீஸில் தெளிவாகவோ அல்லது மறைமுகமாகவோ விதிவிலக்கு என்று சொல்லப்படாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டால் அது எல்லோருக்கும் உரியது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். விதிவிலக்கு என்று வாதிடுபவர்கள் தங்கள் வாதத்திற்குரிய ஆதாரத்தைக் காட்டாத வகையில் அவர்கள் விளக்கம் எடுபடாது.
இந்த அடிப்படையை ஏற்காவிட்டால் அவரவர் தன் இஷ்டத்திற்கு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக வரும் செய்திகளை அவர்களுக்கு மட்டும் உரியது என்று வாதிடுவார்கள். மொத்தத்தில் நபியவர்களின் வழிமுறை அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு விடும்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்று இவர்கள் கூறும் விளக்கத்தை மறுத்த அறிஞர்களும் இருக்கிறார்கள். காளீ இயாள் என்பவரும் திர்மிதிக்கு விரிவுரை எழுதிய அப்துர் ரஹ்மான் முபாரக்ஃபூரீ என்பரும் இந்த விளக்கத்தை மறுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு என்ற இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸில் பொருத்தினாலும் இதில் உள்ள சிக்கல்கள் நீங்காது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அன்னியப் பெண்களின் கையைக் கூட தொட்டதில்லை. பெண்கள் விசயத்தில் மிகவும் பேணுதலாக நடந்து கொண்டார்கள்.
அன்னியப் பெண்களிடம் பழகுவதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தால் பைஅத் செய்ய வந்த பெண்களின் கைகளை நான் தொட மாட்டேன் என்று அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக கையைத் தொட்டு பைஅத் செய்திருப்பார்கள்.
ஒரு புறம் நபி (ஸல்) அவர்களிடம் இப்படிப்பட்ட உயர்ந்த குணங்கள் இருக்க இன்னொரு புறம் இதற்கு மாற்றமாக அன்னியப் பெண்களுடன் பழகும் வழக்கம் இருந்தது என்று கூறுவது முரண்பாடானது.
எதில் சலுகை தர வேண்டும் என்பதைக் கூட இந்த அறிஞர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஒரு அசிங்கமான காரியத்தைச் செய்வதில் நபி (ஸல்) அவர்களுக்கு சிறப்புச் சலுகை உண்டு என்று கூறினால் இவ்விளக்கம் மேலும் மேலும் நபியவர்களுக்கு இழிவை ஏற்படுத்துமே தவிர ஒரு போதும் இழிவைத் துடைக்காது.
எனவே நபி (ஸல்) அவர்களின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் இந்த ஹதீஸை அவர்களைக் கடுமையாக நேசிக்கும் எந்த ஒரு முஃமினும் நம்ப மாட்டான். நம்பக் கூடாது.
விமர்சனமும் விளக்கமும்
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினரா? இல்லையா? என்பதை நாம் இங்கு அலசக் கடமைப் பட்டுள்ளோம்.
காரணம் இந்தச் செய்தியை உண்மையானது என்று வாதிடுபவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி உறவினர் என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள். ஆகவே இது தொடர்பாக நாம் விரிவாக ஆராய வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் கூறப்படும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களின் சின்னம்மா ஆவார். அதாவது அனஸ் (ரலி) அவர்களின் தாயாரான உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சகோதரி ஆவார்.
நபி (ஸல்) அவர்கள் குரைஷி குலத்தைச் சார்ந்தவர்கள். இந்தப் பெண்மணி அன்சாரி குலத்தைச் சார்ந்தவர்கள். எனவே வம்சாவழி உறவு அடிப்படையில் பார்த்தால் இந்த நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருக்க முடியாது. இவர் நபி (ஸல்) அவர்களுக்கு அந்நியப் பெண் ஆவார்.
ஒரு ஆண், மஹ்ரமில்லாத அந்நியப் பெண்ணிருக்கும் இடத்திற்குச் செல்வதும் அவருக்கு அருகில் படுப்பதும் ஆணுக்கு பெண் பேன் பார்த்து விடுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்த ஹராமான விசயங்களாகும். அப்படியிருக்க இந்த விதிமுறைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் நடக்க மாட்டார்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
மேற்கண்ட செய்தி நபி (ஸல்) அவர்களின் நற்குணத்திற்கும் நல்லொழுக்கத்திற்கும் ஆண் பெண்ணுக்கு மத்தியில் கடைபிடிக்க வேண்டிய இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும் மாற்றமாக இருப்பதால் இந்தத் தகவல் புகாரியில் இடம்பெற்றிருந்தாலும் இதை ஏற்க முடியாது என்று நாம் கூறினோம்.
புகாரியில் இடம்பெற்ற எந்தச் செய்தியும் தவறானது இல்லை. தவறான கருத்து தரும் செய்திகளைக் கூட எப்படியாவது சரிசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோய் சிலருக்குப் பிடித்திருக்கின்றது. நீண்ட காலம் நமது ஆதாரங்களுக்குப் பதில் சொல்லாத இவர்கள் தற்போது சில அரைவேக்காடுகளை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக களம் இறக்கிவிட்டிருக்கின்றார்கள்.
நம்மை விமர்சனம் செய்பர்கள் இருப்பதைக் கூறி நம்மை விமர்சித்தால் அந்த விமர்சனம் வரவேற்கப்படும். ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி நம்மை மக்களுக்கு மத்தியில் விகாரமாக சித்தரிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
புகாரியின் விரிவுரையான பத்ஹுல் பாரியில் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி உறவின் மூலமாக சின்னம்மா உறவு உள்ளவர். எனவே இவர் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் என்று இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அநியாயமாக உம்மு ஹராம் (ரலி) அவர்களை அந்நியப் பெண்ணாகக் கூறி இந்த செய்தியை மறுக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்வதில் இவர்களுக்கும் நமக்கும் இடையே முரண்பாடு இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்ணுடன் இது போன்று நடக்க மாட்டார்கள் என்பதில் உடன்பாடு உள்ளது. எனவே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினரா? இல்லையா? என்பதை முடிவு செய்துவிட்டால் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளலாமா? கூடாதா? என்பது தெளிவாகிவிடும்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் தொடர்பாக புகாரியில் இடம்பெற்றுள்ள இந்த செய்தியை இன்றைக்கு நாம் மட்டுமே பிரச்சனையாக கருதுவது போன்ற பொய்யான தோற்றத்தை நம்மை விமர்சிப்பவர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்தச் செய்தி நமக்கு முன்பு காலம் காலமாக பிரச்சனைக்குரியதாகவே வரலாற்றைக் கடந்து வந்துள்ளது. இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் இது தொடர்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
இந்த செய்தி பலருக்கு பிரச்சனையாகிவிட்டது.
நூல் : பத்குல் பாரீ பாகம் : 11 பக்கம் : 78
உம்மு ஹராம் (ரலி) பால்குடி உறவுக்காரரா?
நபி (ஸல்) அவர்கள் குழந்தைப் பருவத்தில் இருக்கும் போது அவர்களுக்கு பாலூட்டியவர்கள் யார் என்ற விபரம் வரலாற்று நூற்களில் இடம்பெற்றுள்ளது. சுவைபா, ஹலீமதுஸ் சஃதிய்யா, ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டினார்கள் என்ற தகவல் வரலாற்று நூற்களில் பதிவாகியுள்ளது.
இந்த நூற்களில் எந்த ஒரு இடத்திலும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயாகவோ அல்லது அந்த உறவின் மூலம் மஹ்ரமானவர் என்றோ கூறப்படவில்லை.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி மூலம் மஹ்ரமான உறவு உள்ளவர் என்ற விளக்கத்தை யார் சொல்கிறார்கள் என்று பார்த்தால் இப்படி சொல்பவர்கள் சஹாபியோ அல்லது உம்மு ஹராம் (ரலி) அவர்களை நேரில் கண்ட தாபியியோ கிடையாது.
மாறாக குறித்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை நீக்குவதற்காக சில அறிஞர்கள் தன் புறத்திலிருந்து சுய விளக்கமாகவே இந்தத் தகவலைக் கூறியுள்ளனர். ஒவ்வொரு பிரச்சனையிலும் அறிஞர்கள் பலவாறு கருத்து கூறுவார்கள். அவர்கள் கூறுவதில் எது சரி? எது தவறு? என்பதை பார்த்துத் தான் ஏற்க வேண்டும்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால்குடி உறவு மூலம் சிற்றன்னை என்ற கருத்தை இப்னு அப்தில் பர் என்ற அறிஞர் தான் முன்வைக்கின்றார். அவர் கூறிய வாசகத்தை கவனித்தாலே இது வெறும் யூகம் தான் என்பதை தெளிவாக அறியலாம்.
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பால்புகட்டியிருப்பார்கள். அல்லது அவருடைய சகோதரி உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பால் புகட்டியிருப்பார்கள் என்றே நான் யூகிக்கின்றேன். எனவே இவ்விருவரில் ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி தாயாகவோ அல்லது சிற்றன்னையாகவோ இருப்பார்கள். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் இவர்களிடத்தில் சென்று உறங்கக்கூடியவராக இருந்தார்கள்.
நூல் : பத்குல் பாரீ (பாகம் 11 பக்கம் 78)
நான் யூகிக்கின்றேன் என இப்னு அப்தில் பர் கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.
மேலும் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பால் புகட்டியிருப்பார்கள். அல்லது சின்னம்மாவாக இருப்பார்கள் என்று இப்னு அப்தில் பர் சந்தேகத்துடன் கூறுவதும் கவனிக்கத்தக்கது. எப்படியாவது இந்தச் செய்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவே இப்னு அப்தில் பர் தன்னுடைய யூகத்தைக் கூறியுள்ளார். இதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
இப்னு அப்திப் பர் கூறியதைப் போன்று அவருக்கு முன்னால் யஹ்யா பின் இப்ராஹீம் என்பவரும் இப்னு வஹபும் இதே விளக்கத்தைக் கூறியுள்ளனர். இவர்களும் இந்தக் கருத்தை தங்களுடைய சுய விளக்கமாகவே கூறுகின்றனர். இவர்கள் நபித்தோழர்களோ, நபித்தோழர்களை கண்ட தாபிஈன்களோ கிடையாது.
இந்தச் செய்தியில் உள்ள பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தன் புறத்திலிருந்து இவர்கள் கூறிய விளக்கமே இவை. எனவே தான் இந்த விளக்கத்தைக் கூறிய இப்னு வஹப் இந்த நிகழ்வு ஹிஜாபுடைய சட்டம் வருவதற்கு முன்னால் நடந்திருக்கலாம் என்ற கருத்தையும் கூறியுள்ளார். ஆனால் இப்னு ஹஜர் (ரலி) அவர்கள் இந்தக் கருத்து தவறானது. இந்த நிகழ்வு ஹிஜாபிற்குப் பிறகு தான் நடந்தது என்பதை உறுதிசெய்கிறார்கள்.
இந்த சம்பவம் ஹிஜாபுக்கு முன்னால் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்று இப்னு வஹப் கூறியுள்ளார். ஆனால் இது ஹிஜாபுக்கு பிறகு தான் நடந்தது என்பது உறுதியான தகவல் என்பதால் இந்தக் கூற்று மறுக்கப்படுகின்றது.
நூல் : பத்குல் பாரீ (பாகம் 11 பக்கம் 78)
உண்மையை உடைத்துச் சொன்ன அறிஞர் திம்யாதீ
உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான (திருமணம் செய்ய தடை என்ற அளவுக்குள்ள) உறவு இருந்தது என்ற கருத்தை திம்யாதீ என்ற அறிஞர் ஆணித்தரமாக மறுக்கின்றார்.
மஹ்ரமான உறவு உள்ளது என்று கூறுபவர்களுக்கு எதிராக திம்யாதீ கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வம்சா வழியின் மூலமாகவோ அல்லது பால்குடி உறவின் மூலமாகவோ சிரிய தாய் ஆவார் என்று யார் கூறுகிறாரோ அவர் தவறிழைத்து விட்டார்.
மேலும் மஹ்ரமான உறவு உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் தவறிழைக்கின்றனர். ஏனென்றால் நபி (ஸல்) அவர்களின் வம்சா வழித் தாய்மார்களும் பாலூட்டிய தாய்மார்கள் யார் யார் என்பதும் அறியப்பட்டிருக்கின்றது. இவர்களில் உம்மு அப்தில் முத்தலிப் என்பவரைத் தவிர அன்சாரிகளில் ஒருவர் கூட கிடையாது.
நூல் : பத்குல் பாரீ (பாகம் 11 பக்கம் 78)
அந்நியப் பெண் என்பதை ஏற்றுக் கொண்டு,
மாற்று விளக்கம் கொடுக்க முயன்ற இப்னு ஹஜர் அவர்கள்
மேலே நாம் சொன்ன விபரங்களையும் இன்னும் பல தகவல்களையும் ஒன்றுதிரட்டிய இப்னு ஹஜர் அஸ்கலானீ அவர்கள் கூட இவர்கள் கூறுகின்ற இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சிற்றன்னை ஆவார் என்ற கருத்து சரியானதாக ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் இதை இப்னு ஹஜர் ஏற்றிருப்பார். இது சிலர்களின் யூகம் என்பதால் இதை அவர் ஏற்றுக்கொள்ளாமல் இந்தச் செய்திக்கு வேறொரு விளக்கத்தைக் கூறுகிறார்.
இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார் :
அந்நியப் பெண்ணாக இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டது அவர்களுக்கு மாத்திரம் பிரத்யேகமாகனது என்ற வாதம் 210 211 தான் இந்த செய்திக்குரிய சிறந்த பதிலாகும்.
நூல் : பத்குல் பாரீ (பாகம் 11 பக்கம் 78)
இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார் : அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் பார்ப்பதும் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக அனுமதிக்கப்பட்ட விசயம் என்பது வலுவான ஆதாரங்கள் மூலம் நமக்குத் தெளிவாகியுள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவோ மனைவி என்ற உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றது அவர்களுக்கு அருகில் உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேண்பார்த்து விட்டது தொடர்பாக வரும் சம்பவத்திற்கு இது நபிக்கு மட்டும் உரிய பிரத்யேகமான விசயம் என்பதே சரியான பதிலாகும்.
நூல் : பத்குல் பாரீ (பாகம் 9 பக்கம் 203)
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மனைவியோ மஹ்ரமான உறவோ இல்லை என தௌ;ளத் தெளிவாக இப்னு ஹஜர் தெளிவுபடுத்தியுள்ளார். இதைச் சரியாக படிக்காத சிலர் இப்னு ஹஜர் உம்மு ஹராம் நபியின் சிற்றன்னை என்று கூறியதாக பொய்யான தகவலைக் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் இப்னு ஹஜர் அவர்களுக்கு எதிரான கருத்தையே கூறியுள்ளார்.
இங்கே ஒரு விசயத்தை நாம் சுட்டிக்காட்டுகிறோம். உம்மு ஹராம் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் இல்லை என இப்னு ஹஜர் கூறினார் என்ற தகவலுக்காகவே இப்னு ஹஜர் அவர்களின் இந்தக் கூற்றை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.
அந்நியப் பெண்ணாக இருந்தாலும் நபி மட்டும் இது போன்று நடந்துகொள்ளலாம் என்று அவர் கூறிய கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்தைப் பொறுத்தவரை உம்மு ஹராம் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருந்தார் என்று கூறுபவரின் கூற்றை விட மோசமானதாகவே நாம் கருதுகிறோம்.
ஒழுக்கம் தொடர்பான விசயங்களில் நபி (ஸல்) அவர்கள் மற்ற மனிதர்களை விட மிகவும் பேணுதலாக வாழ்ந்தவர்கள். அவர்கள் ஒழுக்கமாகவும் நெறிமுறைகளைப் பேணியும் வாழ்ந்ததைப் போல் வேறு யாரும் வாழ முடியாது. அப்படியிருக்க இந்த விசயத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை என்ற கூற்றுக்கு இடமே இல்லை.
அறிஞர் அய்னீ
புகாரிக்கு இன்னொரு விரிவுரை எழுதிய அறிஞர் அய்னி என்பவரும் உம்மு ஹராம் (ரலி) தொடர்பான இந்தச் செய்திக்கு அந்நியப் பெண்ணாக இருந்தாலும் இது போன்று நடந்து கொள்வது நபிக்கு மட்டும் உரிய சிறப்புச் சலுகை என்று பதிலளித்துள்ளார். உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமானவர் என்ற கூற்றை இவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகவே இந்தத் தகவலை குறிப்பிடுகின்றோம்.
நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவோ மனைவி என்ற உறவோ இல்லாத நிலையில் அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் சென்றது அவர்களுக்கு அருகில் உறங்கியது உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தலையில் பேன்பார்த்து விட்டது தொடர்பாக வரும் சம்பவத்திற்கு இது நபிக்கு மட்டும் உரிய பிரத்யேகமான விசயம் என்பதே சரியான பதிலாகும்.
நூல் : உம்ததுல் காரிஃ (பாகம் 29 பக்கம் 332)
வம்சா வழியை அறிந்தவர்கள் உண்மையை அறிவார்கள்
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வம்சாவழி மூலமாகவோ பால் குடி உறவின் மூலமாகவோ சிற்றன்னையாக இருந்தார்கள் என்ற கருத்தை இப்னுல் முலக்கன் என்ற அறிஞரும் வலுவாக மறுத்துள்ளார். நபி (ஸல்) அவர்களின் வம்சா வழியையும் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வம்சா வழியையும் அறிந்தவர் இப்படி சொல்ல முடியாது. இந்த அறிவு இல்லாதவரே இவ்வாறு கூறுவார் என இந்த அறிஞர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நபி (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் இடையே மஹ்ரமான உறவு இருக்கலாம் எனக் கூறிய இப்னு அப்தில் பர் அவர்களின் கூற்றை எடுத்து சுட்டிக்காட்டி விட்டு இதற்கு மறுப்பாகவே இவ்வாறு இந்த அறிஞர் கூறுகிறார்.
உம்மு ஹராம் (ரலி)அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினராக இருந்தார்கள் என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது என்ற கூற்று ஆட்சேபனைக்குரியது. நபி (ஸல்) அவர்களின் வம்சா வழியையும் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வம்சா வழியையும் முழுமையாக அறிந்தவர் இவ்விருவருக்கிடையே எந்த மஹ்ரமான உறவும் இல்லை என்பதை அறிவார்.
நூல் : காயத்துல் சவ்ல் (பாகம் 1 பக்கம் 51)
எனவே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மஹ்ரமான உறவினர் என்ற கருத்து இந்த தவறான ஹதீஸை நியாயப்படுத்துவதற்காக தரப்பட்ட ஆதாரமற்ற சுய கருத்தாகும். இதனடிப்படையில் குறித்த செய்தியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மடியில் உறங்கினார்களா?
அடுத்து உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மடியில் உறங்கியதாக எந்த ஹதீஸிலும் வரவில்லை. ஹதீஸில் இல்லாததை நாம் இட்டுக்கட்டுவதாக விமர்சனம் செய்கிறார்கள்.
இங்கே இவர்களின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. உம்மு ஹராம் (ரலி) அவர்களின் நபி (ஸல்) அவர்களுக்கு சிற்றன்னையாக இருந்தார்கள் என்பதற்கு இவர்கள் எந்த அறிஞரின் கூற்றை சுட்டிக் காட்டினார்களோ அதே அறிஞர் தான் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
இப்னு அப்தில் பர் இப்னு வஹப் மற்றும் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ ஆகியோர் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் மடியில் தலை வைத்து உறங்கினார்கள் என்ற கருத்தை கூறியுள்ளனர்.
இப்னு வஹப் கூறுகிறார் :
உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பால்குடி உறவின் மூலம் சிற்றன்னை ஆவார். எனவே தான் நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் உறங்கக் கூடியவராகவும் அவர்களின் மடியில் உறங்கக் கூடியவராகவும் இருந்தார்கள். உம்மு ஹராம் (ரலி) நபிக்கு பேன் பார்த்தும் விட்டார்கள்.
பத்குல் பாரீ : பாகம் 11 பக்கம் : 78
இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானீ கூறுகிறார் :
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் செல்லும் போது அங்கே அவர்களுடன் பணியாள், குழந்தை, கணவன் இவர்கள் யாராவது இருந்திருக்கலாம் என்று சிலர் விளக்கம் தருகின்றார்கள். இந்த விளக்கம் இந்த ஹதீஸில் உள்ள பிரச்சனையை முழுமையாக நீக்காது. ஏனென்றால் பேன் பார்க்கும் போதும் மடியில் உறங்கும் போதும் ஒருவரையொருவர் உரசும் நிலை இருந்துள்ளது.
பத்குல் பாரீ : பாகம் 11 பக்கம் : 78 214 215
எனவே இந்த அறிஞர்கள் ஹதீஸில் இல்லாததைத் துணிந்து இட்டுக்கட்டி விட்டார்கள் என்று நம்மை விமர்சனம் செய்தது போல் இவர்களையும் விமர்சனம் செய்வார்களா?
புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களில் இடம்பெற்ற அறிவிப்புக்களில் மடியில் உறங்கினார்கள் என்ற வாசகம் நேரடியாக வராவிட்டாலும் இந்தக் கருத்து தொனிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கு அருகில் உறங்கினார்கள் என்று புகாரியில் 2800 வது செய்தியில் கூறப்பட்டுள்ளது.(முஸ்லிம்: 3875)வது அறிவிப்பில் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தன் தலையை வைத்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பல அறிவிப்புக்களில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் தலை வைத்தார்கள். உம்மு ஹராம் (ரலி) பேன் பார்த்தார்கள் என்பதை கவனத்தில் கொண்டே இந்த அறிஞர்கள் மடியில் தலை வைத்தார்கள் என்று கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மடியில் தலை வைத்தார்கள் என்ற தகவலுக்கு நேரடியாக ஆதாரம் இல்லை என்றாலும் இதனால் இந்த ஹதீஸை நியாயப்படுத்த முடியாது. அந்நியப் பெண்ணுக்கு அருகில் உறங்கலாமா? அந்நியப் பெண் பேன் பார்த்து விடலாமா? அந்நியப் பெண் இருக்கும் இடத்திற்குச் செல்லலாமா? ஆகிய கேள்விகளுக்கு இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
பேன் பார்த்து விடும் போது தலையைத் தொடாமல் பேன் பார்க்க முடியுமா என்ன? இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது கண்டிப்பாக இது நபியவர்களுடன் தொடர்புபட்ட செய்தியல்ல என்பதை சந்தேகமற நாம் அறியலாம்.
இன்னும், உம்மு ஹராம் (ரலி) தொடர்பாக வரும் ஹதீஸில் குர்ஆனுக்கு முரணில்லாத வேறு பல செய்திகளும் கூறப்பட்டுள்ளது. அவற்றை நாம் மறுக்கவில்லை.
உம்மு ஹராம் (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் மஹ்ரமான உறவு கிடையாது என்கிற போது நபி (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களிடம் முன்பு சொன்னவாறு நடந்தார்கள் என்று கூறினால் இது நபி (ஸல்) அவர்களுக்கு இழுக்கில்லையா? நபி (ஸல்) அவர்கள் இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும்.
மேலும் இந்தத் தகவலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்வதால் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப்போகின்றது? இதைப் படித்த பின் மக்களுக்கு ஈமானும் இறையச்சமும் கூடப்போகின்றதா? அல்லது மறுமையில் அல்லாஹ் நம்மிடம் உம்மு ஹராம் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்து விட்டதையும், அவர்களுக்கு அருகில் உறங்கியதையும் ஏன் நம்பவில்லை என்று கேள்வி கேட்பானா?
தவறுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று ஒரு வார்த்தையில் கூறுவதை விட்டுவிட்டு இதை நியாயப்படுத்துவதற்காக காலத்தைச் செலவழித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
ஒரு நன்மையும் இல்லாத நபியின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் கருத்தை புகாரியில் இருந்தாலும் நாம் நம்ப முடியாது. இமாம் புகாரியின் கண்ணியத்தை விட நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் மலையளவு உயர்ந்தது.
ஹதீஸ் துறை அறிஞர்கள் இதைத் தவறுதலாக பதிவு செய்துவிட்டார்கள் என்று சொல்வதால் இந்த அறிஞர்களின் கண்ணியம் சற்றும் குறையாது. காரணம் அவர்களின் முயற்சியால் இந்த சமுதாயத்திற்கு கிடைத்த நன்மைகள் அதிகமானது. மனிதர்கள் எல்லாம் தவறிழைப்பவர்களே.
நமக்குத் தவறு என்று தெரிவதை தயுவுதாட்சணியமின்றி தவறு என்று சுட்டிக்காட்டுவோம். மற்றவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைக்கமாட்டோம். இது தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு.
ஏன்? எதற்கு? இது மாதிரியான செய்திகளை தவ்ஹீத் ஜமாஅத்தினர் மறுக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொண்டால் நிச்சயம் இதை ஒரு குறையாக யாரும் கூறமாட்டார்கள். நிறையாகவே பார்ப்பார்கள். அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.