25) சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?
25) சுலைமான் நபிக்கு மறைவான அறிவு உண்டா?
சுலைமான் நபி தொடர்பில் புகாரியின் இடம் பெறும் கீழுள்ள செய்தியும் திருமறைக் குர்ஆனின் கருத்துக்கு நேர்மாற்றமாக அமைந்திருக்கின்றது. மட்டுமன்றி இஸ்லாத்தின் அடிப்படை செய்திகள் ஒன்றான மறைவானவை பற்றிய அறிவு அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு என்பதை தகர்த்து நபி சுலைமானுக்கும் மறைவான அறிவு உண்டு என்ற விபரீதமான கருத்தைத் தரும் வகையில் அமைந்திருக்கின்றது. இது பற்றிய விபரமாக ஆராய்வோம்.
قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ عَلَيْهِمَا السَّلاَمُ: لََطُوفَنَّ اللَّيْلَةَ بِِائَةِ امْرَأَةٍ، تَلِدُ كُلُّ امْرَأَةٍ « : هُرَيْرَةَ، قَالَ غُلاَمًا يُقَاتِلُ فِ سَبِيلِ الَّلِ، فَقَالَ لَهُ المَلَكُ: قُلْ إِنْ شَاءَ الَّلُ، فَلَمْ يَقُلْ وَنَسِيَ، فَأَطَافَ بِهِنَّ، وَلَْ تَلِدْ لَوْ قَالَ: إِنْ شَاءَ الَّلُ لَْ يَْنَثْ، « : قَالَ النَّبُِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ « مِنْهُنَّ إِلَّ امْرَأَةٌ نِصْفَ إِنْسَانٍ “ وَكَانَ أَرْجَى لَِاجَتِهِ
இன்று இரவு நான் நூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பார்கள். அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று சுலைமான் நபி கூறினார். அப்போது வானவர் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள்” என்று கூறினார்.
ஆனால் சுலைமான் நபி கூறவில்லை. மறந்து விட்டார். அவர் கூறியவாறு நூறு பெண்களுடன் உடலுறவு கொண்டார். அவர்களில் ஒருத்தியும் குழந்தை பெறவில்லை. ஒரே ஒருத்தி மட்டும் பாதி மனிதனைப் (குறைப் பிரசவம்) பெற்றெடுத்தார்.
சுலைமான் நபிக்கு நூறு மனைவிகளோ, நூறு அடிமைப் பெண்களோ இருந்ததாக வைத்துக் கொண்டாலும் ஒரு இரவில் அனைவருடனும் உடலுறவு கொள்வது சாத்தியமற்றதாகும். இது சாத்தியமற்றதா அல்லவா என்ற சர்ச்சையைத் தவிர்த்து விட்டு மார்க்க அடிப்படையில் மட்டும் இதனை ஆய்வு செய்வோம்.
காரணம் இதனை விட குர்ஆனின் கருத்துடன் மோதும் பல செய்திகள் குறித்த செய்தியில் இடம் பெற்றுள்ளன. இறைத் தூதராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விஷயங்கள் உள்ளன.
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்: நுட்பமானவன்.
தனது நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று சுலைமான் நபியவர்கள் நிச்சயம் கூறியிருக்க முடியாது. ஏனெனில் கருவில் உருவாகும் உயிர்கள் தொடர்பில் இறைவனுக்குத் தான் தெரியும் என்பதினால் அதில் இறைத் தூதர்கள் கருத்துச் சொல்ல மாட்டார்கள். அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தில் எந்த இறைத் தூதரும் மூக்கை நுழைக்க மாட்டார்கள்.
நூறு மனைவிகளும் கருவுறுவார்கள் என்று இறைவன் சுலைமான் நபிக்கு அறிவித்துக் கொடுத்திருக்கலாம் அல்லவா?” என்று சிலர் விளக்கம் கூறுவது கேலிக் கூத்தாகும். இறைவன் அறிவித்துக் கொடுத்திருந்தால் நூறு மனைவிகளும் நூறு ஆண் குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு நடக்காததால் சுலைமான் நபி தன்னிச்சையாகத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்ற கருத்தைத் தான் மேற்கண்ட ஹதீஸிலிருந்து பெற முடியும். இறைவன் அறிவித்துக் கொடுக்காத இந்த விஷயம் குறித்து எந்த நபியும் இவ்வாறு தன்னிச்சையாக கூறியிருக்க மாட்டார்கள். இதற்கு நபி ஸக்கரிய்யா அவர்களின் வரலாறு சான்றாக அமைகின்றது.
‘ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை” (என இறைவன் கூறினான்) ‘என் இறைவா! எனக்கு எப்படி புதல்வன் தோன்றுவான்? என் மனைவியோ பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். நானோஹ முதுமையின் இறுதியை அடைந்து விட்டேன்” என்று அவர் கூறினார்.
‘அப்படித்தான்” என்று (இறைவன்) கூறினான். ‘அது எனக்கு எளிதானது. நீர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் உம்மைப் படைத்தேன்” எனவும் உமது இறைவன் கூறினான்” (என்று கூறப்பட்டது.) ‘என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று அவர் கேட்டார். ‘குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்” என்று அவன் கூறினான்.
ஸக்கரியா நபியின் மனைவியின் கருவறையில் குழந்தை உருவான பின்னரும் கூட அதை ஸக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை. என்று குர்ஆன் கூறும் போது நூறு மனைவியரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று சுலைமான் நபி கூறியிருக்க முடியாது. அவ்வாறு கூற அவர்களுக்கு அதிகாரம் கிடையாது.
நூறு மனைவிகளும் குழந்தை பெறுவார்கள் என்பதை மட்டும் சுலைமான் நபி கூறவில்லை. ஆண் குழந்தையைத் தான் பெற்றெடுப்பார்கள் என்று அடித்துக் கூறுகிறார்கள். அந்த நூறு பேரும் வளர்ந்து பெரியவர்களாகி நல்லடியார்களாக வாழ்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்றெல்லாம் எதிர் காலம் பற்றி பல விஷயங்களை அவர்கள் கூறியதாக அந்த ஹதீஸ் கூறுகிறது.
அவர்கள் கூறியவாறு எதுவுமே நடக்காததால் சுயமாகத் தான் அவர்கள் இவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியெல்லாம் சுலைமான் நபியும் கூற மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகமும் கூறியிருக்க மாட்டார்கள். மேலும் இன்ஷா அல்லாஹ் என்று கூறுமாறு வானவர் சுட்டிக் காட்டிய பிறகும் அவர்கள் கூறவில்லை என்பது ஏற்கும்படி இல்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட இன்ஷா அல்லாஹ் கூற மறந்து விட்டால் யாராவது சுட்டிக் காட்டினால் உடனே திருத்திக் கொள்கிறோம். ஒரு வானவர் நினைவூட்டிய பின்னரும் சுலைமான் நபி அதைச் செய்யவில்லை என்பது அவர்களின் தகுதிக்கு ஏற்புடையதாக இல்லை.
எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கும் வகையில் இது அமைந்திருப்பதால் இதை அறிவிப்பவர்கள் நம்பகமானவர்களாக இருந்த போதும் இதை நாம் ஏற்காது நிறுத்தி வைக்க வேண்டும். இதை உண்மை என நம்பினால் குர்ஆனின் பல வசனங்களை நாம் மறுத்தவர்களாகி விடுவோம்.
இது போக அந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த முடிவை மேலும் உறுதிப்படுத்துகிறது.
- நூறு பெண்களுடன் இன்றிரவு உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 5242, 184, 185)
- எழுபது பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 3424)லும்,
- தொண்ணூறு பெண்களுடன் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 6639, 6720)லும்,
- அறுபது மனைவியரிடம் உடலுறவு கொள்வேன் என்று கூறியதாக(புகாரி: 7469)லும்
பதிவு செய்யப்பட்டுள்ள.
செய்திகளில் கூறப்பட்டுள்ளன. இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹ_ரைரா (ரலி) வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளன. 60, 70, 90, 100 என்று இடம் பெற்றுள்ள முரண்பட்ட எண்ணிக்கை இதில் சந்தேகத்தை அதிகமாக்குகிறது.
இந்தச் செய்திகளை உண்மை என்று நம்பினால் சுலைமான் நபி அவர்களின் தகுதிக்கு அது குறைவை ஏற்படுத்தும். திருக்குர்ஆனின் பல வசனங்களுடனும், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளுடனும் மோதும் என்பதைக் கவனத்தில் கொண்டு நமக்குத் தெரியாத ஏதோ ஒரு குறை இதில் இருக்கலாம் என்று கருதி இதை நிராகரித்து விட வேண்டும். இந்தச் செய்தியை இன்னும் விரிவாக ஆராய்வோம்.
لأطوفن الليلة على مائة إمرأة أو تسعٍ وتسعين كلهن يأتي بفارس يجاهد في سبيل الله. فقال له صاحبه: قل إن شاء الله، فلم يقل إن شاء الله، فلم تحمل منهن إلا إمرأة واحدة جاءت بشق رجل. والذي نفس محمدٍ بيده لو قال إن شاء الله لجاهدوا في سبيل الله فرساناً أجمعون
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களின் புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), நான் இன்றிரவு (என்னுடைய) நூறு – அல்லது தொண்ணூற்றொன்பது – மனைவிகளிடமும் சென்று (உடலுறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருத்தியும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பாள் என்று கூறினார்கள்.
அவர்களுடைய தோழர் ஒருவர், (அவர்கள் மறந்திருக்கலாம் என்று கருதி) இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்… என்று சொல்லுங்கள் என்று கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று (தம் வாயால்) கூறாமலிருந்து விட்டார்கள். ஆகவே, (அவர்களின் மனைவிமார்களில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை. அவரும் ஒரு புஜமுடைய பாதி மனிதரைத் தான் பெற்றெடுத்தார்.
முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அவர், இன்ஷா அல்லாஹ் – அல்லாஹ் நாடினால் என்று (தம் வாயாலும்) கூறியிருந்தால் (அந்த நூறு மனைவியரும் கர்ப்பமுற்றுப் பிள்ளைகள் பெற, அப்பிள்ளைகள்) அனைவருமே அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற வீரர்களாய் ஆகியிருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாவூத் (அலை) அவர்களுடைய மகன் சுலைமான் (அலை) அவர்கள், இன்றிரவு நான் எழுபது மனைவிமார்களிடம் செல்வேன். (அவர்களில்) ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் குதிரை வீரரைக் கருத்தரிப்பார்கள் என்று கூறினார்கள்.
அதற்கு அவருடைய தோழர் ஒருவர், அல்லாஹ் நாடினால்… என்று சொல்லுங்கள் என்று கூறினார். சுலைமான் (அலை) அவர்கள், அல்லாஹ் நாடினால்… என்று (மறந்து போய்) சொல்லாமலிருந்து விட்டார்கள். (அவர்கள் அவ்வாறே சென்றும் கூட) தன் இரு புஜங்களில் ஒன்று கீழே விழுந்த ஒரேயொரு குழந்தையைத் தவிர வேறெதையும் அவர்கள் கருத்தரிக்கவில்லை.
இன்ஷா அல்லாஹ்… (இறைவன் நாடினால்) என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியிருந்தால் அவர்கள் (எழுபது பேரும் பிறந்து) அல்லாஹ்வின் பாதையில் போராடியிருப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஷுஐப் (ரஹ்) அவர்களும் இப்னு அபிஸ் ஸினாத் (ரஹ்) அவர்களும் தங்கள் அறிவிப்பில் தொண்ணூறு மனைவிமார்களிடம் செல்வேன் என்று சுலைமான் (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இவர்களுடைய அறிவிப்பு தான் மேற் கண்ட அறிவிப்பை விடச் சரியானது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
அபூஹ_ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் சுலைமான் (அலை) அவர்களுக்கு அறுபது துணைவியர் இருந்தார்கள். சுலைமான் அவர்கள் (ஒரு முறை) இன்றிரவு நான் என் துணைவியர் அனைவரிடமும் தாம்பத்திய உறவு கொள்ளச் செல்வேன்.
ஒவ்வோரு துணைவியாரும் கர்ப்பமுற்று அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்ற குதிரை வீரனைப் பெற்றெடுக்கட்டும் என்று சொல்லிவிட்டுத் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஆனால், அவர்களில் ஒரேயொரு மனைவி தான் குழந்தை பெற்றெடுத்தார். அவரும் பாதி (உடல் சிதைந்த) குழந்தையைத் தான் பெற்றெடுத்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) என்று (சேர்த்துக்) கூறியிருந்தால், அவர்களுடைய துணைவியரில் ஒவ்வொருவரும் கர்ப்பம் தரித்து, அல்லாஹ்வின் பாதையில் போரிடும் குதிரை வீரன் ஒருவனைப் பெற்றெடுத்திருப்பார்.
قال: قال سليمانُ: لأطوفَنَّ الليلةَ على تسعينَ امرأَة كلٌّ تلدُ غلاماً يقاتلُ في سبيلِ الّلِ، فقال له صاحبهُ، قال سفيان: يعني المَلكَ قل: إن شاءَ الّل! فنَسيَ، فطاف بهن فلم تأتِ امرأةٌ مِنهن بوَلدٍ إلا واحدةٌ بشِقِّ غلامٍ، فقال أبو هريرةَ يَرويهِ قال: لو قال إن شاء الّل لم يَنَثْ وكان دَرَكاً في حاجَتِهِ وقال مَرة: قال رسُولُ الّلِ صلى الله عليه وسلّم لو استَثْنىقال: وحدثنا أبو الزنادِ عن .الأعرَجِ مثل حديثِ أَبي هريرةَ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று (தாம்பத்திய உறவு கொண்டு) வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள்.
அப்போது அவர்களுடைய தோழர் ஒருவர், -அவர் ஒரு வானவர் என அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் – இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று சொல்லுங்கள் எனக் கூறினார். சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று கூற மறந்து விட்டார்கள்: தம் துணைவியரிடம் சென்று வந்தார்கள். ஆனால், அவர்களுடைய துணைவியரில் ஒரே ஒருவரைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை.
அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரையே பெற்றெடுத்தார். (நபி) சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று கூறியிருந்தால் சத்தியத்தை அடையாமல் இருந்திருக்க மாட்டார்கள். தமது தேவையைப் பூர்த்தி செய்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
قال رسولُ الّل صلى الله عليه وسلّم قال سليمانُ: لأطوفنَّ الليلة على تسعينَ امرأة كلهنَّ تأتي بفارسٍ يُاهدُ في سبيل الّل. فقال له صاحبُه قل إن شاء الّل! فلم يقل إن شاء الّل. فطاف عليهنَّ جميعاً، فلم تَملْ منهنَّ إلا امرأةٌ واحدةٌ جاءت بشقِّ رجل. وايمُ الذي نفسُ محمدٍ بيده، لو قال إن شاء الّل لجاهَدوا في سبيل الّل فرساناً أجمعون
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத் தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் (ஒரு முறை), நான் இன்றிரவு (என்னுடைய) தொண்ணூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அவர்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் (குதிரை) வீரன் ஒருவனைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள்.
அப்போது அன்னாருடைய தோழர்களில் ஒருவர் இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்று கூறினார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள் இன்ஷா அல்லாஹ் என்று கூறவில்லை. (மறந்து விட்டார்கள்.) மேலும், தம் துணைவியர் அனைவரிடமும் சென்றார்கள். அவர்களில் ஒரேயொரு மனைவியைத் தவிர வேறெவரும் கர்ப்பமடையவில்லை.
அந்த ஒருவரும் ஒரு புஜமுடைய அரை மனிதரைத் தாம் பெற்றெடுத்தார். (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அவர், இன்ஷா அல்லாஹ் என்று கூறியிருந்தால், (அந்த தொண்ணூறு துணைவியரும் கர்ப்பவதியாகி பிள்ளைகள் பெற்று, அப்பிள்ளைகள்) அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகின்ற (குதிரை) வீரர்களாய் ஆகியிருப்பார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை இறைத் தூதர்) தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறை வழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள்.
அப்போது (சுலைமான் (அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்), இன்ஷா அல்லாஹ்-இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ் என்று கூறவில்லை: மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை.
அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத் தான் பெற்றெடுத்தார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர் இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால் என்று கூறியிருந்தால் அவர் தமது சத்தியத்தை முறித்திருக்க மாட்டார். (சபதத்தை நிறைவேற்றியிருப்பார்.) தம் தேவை நிறைவேறுவதைப் பெரிதும் அவர் நம்பியிருப்பார் என்று கூறினார்கள்
மேற்கண்ட அறிவிப்புக்கள் அனைத்தும் புஹாரியில் இடம் பெற்றிருந்தாலும் இது ஹதீஸ் அல்ல: கட்டுக்கதை என்று நாம் கூறுகிறோம். ஸ_லைமான் நபி மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் இட்டுக்கட்டிச் சொல்லப்பட்ட பொய் என்று நாம் உறுதியாகக் கூறுகிறோம்.
- மேற்கண்ட அனைத்துச் செய்தியிலும் தமது மனைவியர் அனைவரும் குழந்தை பெற்றெடுப்பார்கள் என்று ஸூலைமான் நபி கூறியதாகக் கூறப்பட்டுள்ளது.
- தமது மனைவியர் அனைவரும் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்று ஸூலைமான் நபி கூறியதாகக் கூறப்படுகிறது.
- அந்தப் பிள்ளைகள் அனைவரும் அல்லாஹ்வின் பாதையில் போராடும் வீரராகத் திகழ்வார்கள் என்று ஸூலைமான் நபி கூறியதாகக் கூறப்படுவதால் அவர்கள் நல்லடியார்களாகத் திகழ்வார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.
- மேலும் போர் வீரராக அனைவரும் திகழ்வார்கள் என்பதில் அவர்களில் ஒருவர் கூட இளமைப் பருவத்துக்கு முன் மரணிக்க மாட்டார்கள் என்ற கருத்தும் அடங்கியுள்ளது.
இவை அனைத்துமே மறைவான விஷயங்கள். அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிந்து கொள்ள முடியாத விஷயங்கள்.
இவ்வாறு அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து அதனடிப்படையில் ஸூலைமான் நபி சொல்லி இருந்தால் தான் இதை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட விஷயங்கள் அல்லாஹ் அறிவித்துக் கொடுக்கவில்லை என்பது மேற்கண்ட செய்திகளிலேயே தெளிவாகத் தெரிகின்றது.
அல்லாஹ் ஒன்றை அறிவித்துக் கொடுத்திருந்தால் அது நிச்சயம் நடந்து விடும். ஸ_லைமான் நபி கூறியதில் ஒன்று கூட நடக்கவில்லை என்பதால் இது பற்றி அல்லாஹ்விடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது உறுதி. இந்த விபரங்களைக் கவனத்தில் கொண்டு மேற்கண்ட ஹதீஸ்களை ஆராய்வோம்.
மேற்கண்ட நான்கு செய்திகளும் மறைவான செய்திகள் எனும் போது அதைப் பற்றி சாதாரண முஸ்லிம் கூட பேச மாட்டார். அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்குப் புரியவைக்க வந்த இறைத் தூதரான ஸூலைமான் நபி இப்படிக் கூறியிருப்பார்களா? அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவது தான் அல்லாஹ்வுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் செயலாகும். அத்தகைய ஒரு வார்த்தையை ஸூலைமான் நபி எப்படி கூறியிருப்பார்கள்?
வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக!(அல்குர்ஆன்: 27:65) ➚மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன் தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை.
இறைத்தூதாராக இருந்தாலும் எந்த மனிதரும் அறிந்து கொள்ள முடியாத ஐந்து விசயங்கள் உள்ளன. எந்தக் கருவறையில் எத்தனைக் குழந்தைகள் உண்டாகும்? கருவறையில் குழந்தை உண்டாகுமா? உண்டாகாதா என்பதும் அவற்றில் ஒன்றாகும். அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்: நுட்பமானவன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.
மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது என்று அல்லாஹ் சொந்தம் கொண்டாடும் ஒரு விஷயத்தில் ஸூலைமான் நபி அவர்கள் வாய் திறந்திருக்க மாட்டார்கள். இப்படி சுலைமான் நபியும் கூறியிருக்க மாட்டார்கள். சுலைமான் நபி கூறியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்க மாட்டார்கள்.
குறிப்பாக ஒருவருக்கு குழந்தை பிறக்குமா என்ற விஷயத்தை அறிய முடியாது என்பதற்கும் தெளிவான சான்றுகள் உள்ளன. இப்ராஹீம் நபியவர்களுக்கு தள்ளாத வயது வரை குழந்தை இல்லை. வயதான காலத்தில் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் நற்செய்தி இறைவன் புறத்தில் இருந்து சொல்லப்பட்ட போது அவர்கள் அதை நம்புவதற்கே தயங்கினார்கள் என்பதைப் பின்வரும் வசனங்கள் மூலம் அறியலாம்.
இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக! அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்” என்றார். நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர்.
எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்?” என்று அவர் கேட்டார். உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்!” என்று அவர்கள் கூறினர். வழி கெட்டவர்களைத் தவிர வேறு யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்?” என்று அவர் கேட்டார்.
அவர்களைப் பற்றிப் பயந்தார்.பயப்படாதீர்!” என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, நான் மலட்டுக் கிழவியாயிற்றே” என்றார். அதற்கவர்கள் அப்படித் தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்” என்றனர்.
இது போல் ஸக்கரிய்யா நபி அவர்களுக்கு தள்ளாத வயதில் அல்லாஹ் யஹ்யா எனும் ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக நற்செய்தி கூறினான். ஆனால் ஸக்கரியா நபி அவர்களுக்கு மனைவியின் கருவறையில் குழந்தை உண்டாகி விட்டதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.
அப்போது அவர்கள் இறைவா என் மனைவி குழந்தை உண்டாகி விட்டார் என்பதை நான் அறிந்து கொள்ளும் வகையில் எனக்கொரு அடையாளத்தைத் தா என்று கேட்டார்கள். உன் மனைவி எப்போது குழந்தை உண்டாகி விட்டாரோ அப்போது முதல் மூன்று நாட்களுக்கு உன்னால் பேச முடியாது. அது தான் அடையாளம் என்று அல்லாஹ் கூறினான். பின் வரும் வசனங்களில் இருந்து இதை அறியலாம்.
என் இறைவா! எனக்கொரு அடையாளத்தைக் காட்டு!” என்று அவர் கேட்டார். குறைபாடற்ற நிலையில் நீர் இருந்தும் மூன்று இரவுகள் மனிதர்களிடம் நீர் பேச மாட்டீர் என்பதே உமக்கு அடையாளம்” என்று அவன் கூறினான்.
கருவில் குழந்தை உண்டான பின்பு கூட உடனடியாக் அதை ஸக்கரியா நபியால் அறிந்து கொள்ள முடியவில்லை. அதை அறிந்து கொள்ள அல்லாஹ்விடம் அடையாளம் கேட்கிறார்கள். ஆனால் ஸூலைமான் நபியோ மனைவிகளுடன் சேர்வதற்கு முன் குழந்தை உண்டாகும் என்பதை அறிந்து கொள்கிறார்கள்:
அவை அனைத்தும் ஆண்குழந்தை என்றும் அறிந்து விடுகிறார்காள். அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்றும் அறிந்து கொள்கிறார்கள்: அவர்கள் அற்ப ஆயுளில் மரணிக்க மாட்டார்கள் என்றும் அறிந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு கூறும் இந்த ஹதீஸ்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தகர்க்கவில்லயா? தகர்த்தாலும் இது சரியான் ஹதீஸ் என்று நம்மை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். எத்தனை குர்ஆன் வசனங்கள் மறுக்கப்பட்டாலும் ஸூலைமான் நபி மீது களங்கம் ஏற்பட்டாலும் இதை நம்பச் சொல்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் இது மறைவான விஷயங்களை அறிந்து கொள்ளுதல் என்ற தலைப்பையும் கடந்து இறை ஆற்றலில் போட்டியிடும் வகையில் அமைந்துள்ளது எனலாம். ஸூலைமான் நபி கூறியபடி நடந்திருந்தால் தான் மறைவான விஷயத்தில் தலையிட்டார்கள் என்ற கருத்து கிடைக்கும்.
நடக்குமா? நடக்காதா? என்பது தெரியாத நிலையில் நிச்சயம் இது நடக்கும் என்று கூறினால் இறைவனுக்கு இருப்பது போன்ற ஆற்றல் எனக்கும் உண்டு. நான் சொன்னால் அது நடக்காமல் போகாது என்று ஸூலைமான் நபி வாதிட்டதாகத் தான் அர்த்தமாகும். இத்தகைய மாபாதகச் செயலை ஸூலைமான் நபி செய்திருக்கிறார்கள் என்ற கருத்து கட்டுக் கதையாகத் தான் இருக்க முடியும்.
இந்தச் செய்தி சரியான செய்தி என்றால் இது போல் நாமும் கூறலாமா என்ற கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டும். ‘நான் இன்று என் மனைவியிடம் உடலுறவு கொள்வேன். அவள் ஒரு ஆண் பிள்ளையை நிச்சயம் பெற்றெடுப்பாள். அது நல்லொழுக்கமுள்ள பிள்ளையாக இருக்கும்” என்று ஒருவர் கூறினால் அவரைப் பற்றி நம்மை எதிர்ப்பவர்கள் என்ன பத்வா கொடுப்பார்கள்?
இப்படிக் கூறக் கூடாது என்று கூறி அதற்கு எதை ஆதாரமாகக் காட்டுவார்களோ அந்த ஆதாரமே ஸூலைமான் நபியும் இப்படிக் கூறியிருக்க மாட்டார்கள் என்பதற்குரிய ஆதாரமாகும்.
நபி இன்ஷா அல்லாஹ் சொல்லவில்லையா?
இந்த ஹதீஸில் இன்ஷா அல்லாஹ் கூறாதது தான் பெரிய பிரச்சனையாகச் சொல்லப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் சொன்னாலும் இவ்வாறு கூறுவதற்கு அனுமதி கிடையாது என்பதே உண்மை.. இதைப் புரிந்து கொள்வதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.
மரணித்தவரை இன்ஷா அல்லாஹ் நான் உயிராக்குவேன் என்று ஒருவர் கூறலாமா?
இன்னாருக்கு நான்கு ஸாலிஹான ஆண் பிள்ளைகள் இன்ஷா அல்லாஹ் பிறக்கும் என்று ஒருவர் கூற அனுமதி உண்டா?
இன்ஷா அல்லாஹ் நாளை இன்னார் செத்து விடுவார் என்று ஒருவர் கூற அனுமதி உண்டா?
நிச்சயம் அனுமதி இல்லை. மனிதனின் கைவசம் உள்ள காரியங்களில் செய்ய வேண்டிய எல்லா முயற்சிகளையும் செய்து விட்டு இன்ஷா அல்லாஹ் நடக்கும் என்று கூற வேண்டுமே தவிர மனிதனின் கைவசம் இல்லாத காரியங்களில் இன்ஷா அல்லாஹ் சொன்னாலும் மேற்கண்டவாறு கூற அனுமதி கிடையாது.
அல்லாஹ் நாடினால் (என்பதைச் சேர்த்தே) தவிர, நாளை நான் இதைச் செய்பவன் என்று எதைப் பற்றியும் கூறாதீர்! நீர் மறந்து விடும் போது உமது இறைவனை நினைப்பீராக! எனது இறைவன் இதை விட சமீபத்தில் வழி காட்டி விடக் கூடும்” என்று கூறுவீராக!
எனவே இன்ஷா அல்லாஹ் சொன்னால் இது போல் பேச அனுமதி உண்டு என்ற கருத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். இது சரி என்று வாதிடக் கூடியவர்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இன்ஷா அல்லாஹ் கூறி விட்டு எதை வேண்டுமானாலும் பேசலாமா? என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும்.
இந்தச் செய்தி பொய் என்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. நீங்கள் இன்ஷா அல்லாஹ் கூறுங்கள் என்று ஒருவர் கூறுகிறார். அந்த ஒருவர் வானவர் என்று ஒரு அறிவிப்பில் தெளிவுபடுத்தப்படுகிறது. இன்ஷா அல்லாஹ் கூறுங்கள் என்று வானவர் நினைவுபடுத்தினால் ஒரு நபியின் கடமை என்ன?
வானவர்கள் சுயமாகப் பேச மாட்டார்கள்: அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததைத் தான் சொல்வார்கள் என்பதால் நபி உடனே அதற்குச் செவி சாய்க்க வேண்டாமா? அப்படி நினைவுபடுத்தியும் ஸ_லைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறவில்லை என்பதும் நபியின் தகுதிக்கு உகந்தது அல்ல. அத்துடன் குறித்த செய்தியில் “மறந்து விட்டார்” என்று மொழி பெயர்த்துள்ளது சரியானது அல்ல.
இந்த இடத்தில் “விட்டு விட்டார்” என்று மொழி பெயர்ப்பதே சரியாகும். மறந்து விட்டார்கள் என்று இவர்கள் பொருள் செய்யும் இடத்தில் நஸிய என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இந்த வார்த்தை மறந்து விட்டார் என்ற பொருளையும் தரும். வேண்டுமென்றே விட்டு விட்டார் என்ற பொருளையும் தரும். பின்வரும் வசனங்களில் இந்த வார்த்தை வேண்டுமேன்றே விட்டுவிடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
அப்படித்தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.
அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் வாசல்களையும் திறந்து விட்டோம்.
இவ்வசனங்களில் மறதி என்று பொருள் கொண்டால் இவர்களைத் தண்டிக்க எந்த வழியும் இல்லை. வேண்டுமென்றே விட்டு விட்டார்கள் என்பது தான் மறதி என்று இங்கே கூறப்படுகிறது. தமிழில் கூட நன்றி மறந்தவன் என்று சொல்வதுண்டு. நினைவு வந்தவுடன் நன்றி செலுத்துவான் என்ற அர்த்தத்தில் இது சொல்லப்படுவதில்லை. வேண்டுமென்றே நன்றி செலுத்தாமல் இருக்கிறான் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது.
எனவே ஒரு மலக்கு சுட்டிக்காட்டியும் இன்ஷா அல்லாஹ் கூறாமல் இருந்தது மறதியில் சேராது. வேண்டுமென்றே விட்டதாகத் தான் ஆகும். ஸ_லைமான் நபி இத்தகைய மாபாதகத்தைச் செய்ய மாட்டார்கள். இன்ஷா அல்லாஹ் என்று கூறுவது பின்னால் தள்ளிப்போடுகின்ற அளவிற்கு கடினமான ஒரு காரியம் அல்ல. இன்ஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் என்று சொன்னவுடனே ஒரு நொடியில் சொல்லி முடித்துவிடலாம். ஞாபகப்படுத்திய அடுத்த நொடியில் யாரும் மறக்கவும் மாட்டார்கள்.
ஒரு பேச்சுக்கு ஸ_லைமான் நபி மறந்து விட்டால் மறதிக்காகத் தண்டிப்பது இறைவனின் பண்பு அல்ல. மறதியாக இன்ஷா அல்லாஹ் சொல்லத் தவறியதற்காக ஒரு குழந்தை கூட பெற முடியாத நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவானா? ஒரு பெண் மட்டும் அரை மனிதனைப் பெற்றெடுக்கும் வகையில் அல்லாஹ் தண்டனை கொடுப்பானா?
அவர் மறதியாக இன்ஷா அல்லாஹ் சொல்லாத் குற்றத்தினாலேயே அவர் நினைத்த படி குழந்தை பிறக்கவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறி இருப்பார்களா?
மறதி ஏற்படுகின்ற விதத்தில் அல்லாஹ் மனிதனைப் படைத்துள்ளான். இஸ்லாம் விதித்த கடமைகளை மறதியாக ஒருவன் விட்டு விட்டால் கூட அல்லாஹ் அவனைத் தண்டிக்க மாட்டான். ஏனென்றால் மறதி என்பது அவனது சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று.
மறந்து விட்ட ஒருவனைத் தண்டிப்பது இறைவனுடைய நீதிக்கு ஏற்றதல்ல. மறதியாகத் தான் சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ்வை விட்டு விட்டார்கள் என்றால் மறதியாகச் செய்ததற்கு தண்டனை தரும் விதமாக அவர்களுக்குப் பிறக்கவிருந்த குழந்தைகளைப் பிறக்கவிடாமல் ஆக்குவது இறைவனுடைய நீதிக்கு ஏற்றதல்லவே?
நாகரிகத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுப்பதே நபிமார்களின் பணியாகும். நாகரீகமுள்ள எந்த மனிதரும் இன்றிரவு என் மனைவியுடன் அல்லது மனைவிகளுடன் உடலுறவு கொள்வேன் என்று பகிரங்கமாகக் கூற மாட்டார். இதுவும் இச்செய்தியில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் ஒரு தடவை நடந்த நிகழ்ச்சி தான். இந்த அனைத்து ஹதீஸ்களும் அபூஹ_ரைரா (ரலி) அவர்களின் வழியாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு அறிவிப்பிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட எண்ணிக்கை கூறப்படுகிறது.
60 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும், 70 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் 90 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் 100 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் 99 பெண்களிடம் உடலுறவு கொள்வேன் என்றும் ஸ_லைமான் நபி கூறியதாக முரண்பட்டு அறிவிக்கப்படுவது இது பொய் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஒரு வாதத்திற்கு ஸூலைமான் நபிக்கு 100 மனைவியர் இருந்ததாக வைத்துக் கொண்டாலும். அவர்களில் குறைந்தது 20 பேராவது மாதவிடாயாக இருந்திருப்பார்கள். அவர்களுடன் உடலுறவும் கொள்ள முடியாது. அவர்களுக்குக் குழந்தையும் தரிக்காது. இதுவும் மேற்கண்ட செய்தியைப் பொய்யாக்குகிறது.
மேலும் எந்த மனிதனுக்கும் நூறு மனைவியுடன் ஒரு இரவில் உடலுறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படவில்லை. இது நடைமுறையில் சாத்தியமாகாத ஒன்றாகும். இது போன்ற காரணங்களை வலுவூட்டும் ஆதாரமாகத் தான் குறிப்பிட்டுள்ளோம். இது பொய் என்பதற்கு முக்கிய காரணம் இஸ்லாத்தின் பல அடிப்படைகளைத் தகர்க்கக் கூடியதாக குறித்த செய்தி அமைந்திருப்பது தான். நம்மை எதிர்ப்பவர்களிடம் அதற்குரிய பதில்களை தான் எதிர்பார்க்கின்றோம்.