25) சபிக்காதீர்
சபிக்காதீர்
இஸ்லாமியர்களிடம் இஸ்லாம் கூறும் ஒழுக்கத்தினை எதிர்பார்க்க முடிவதில்லை. நடைமுறையில் தான் ஒழுக்கங்களை காணமுடியாது என்று பார்த்தால் பேச்சில் கூட ஒழுக்கத்தை காண்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றன. தெருவோரம் நடந்து சென்றால் இரு சிறுவர்கள் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்க முடிகின்றது அவ்வாறு சண்டையிடும் போது அந்த சின்னஞ்சிறுசுகள் விடும் வார்த்தையைத்தான் கேட்க முடியவில்லை.
அந்தளவிற்கு அநாகரீகமான பண்பாடற்ற வார்த்தைகள் சாரை சாரையாய் குற்றால மழைச்சாரலாய் பொழிகின்றன. வளரும் தலைமுறையிடமிருந்து இந்த அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை எப்படி கேட்க முடிகின்றது. பிஞ்சு உள்ளங்களில் இந்த நஞ்சு கலந்த அம்புகள் எவ்வாறு பாய்ந்தன
இந்த பெருமை? முழுக்க முழுக்க அவர்களது பெற்றோரையே சாரும். அவர்கள் சண்டையிடும் போது பயன்படுத்திய வார்த்தையை தான் மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்களின் வாரிசுகள் வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு இங்கே எழுத சகிக்காத வார்த்தைகளை கொஞ்சமும் யோசிக்காமல் மழை பொழிவதை போல நமது இஸ்லாமிய சமூகம் பொழிந்து தள்ளுகின்றனர். இது போன்ற ஒருஇழி செயலை தனது தோழரிடம் கண்ட போது நபிகளாரின் கண்டிப்பை பாருங்கள்.
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று எமல் தொலைவில்)ரபதா எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக ஒரு ஜோடி ஆடையும் அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமைையும் எசமானரும் ஒரேபோல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள் நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக்கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசிவிட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர் அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர், ஊழியர்களுமாவர் அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தான்.
எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும் அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில் அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஉருர் பின் சுவைத்
தன்னுடைய அடிமையாக இருந்தாலும் வேலையில் ஏதேனும் குறை வைத்துவிட்டால் அதற்காக வசை பாடக்கூடாது என்று நபிகளார் தனது கண்டனத்தை பதிவு செய்கின்றார்கள். ஆனால் தற்போதுள்ள இஸ்லாமிய வியாபாரிகள் தம்மிடம் வேலை செய்யும்வேலையாளிகளை கேட்க சகிக்காத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதை அன்றாட பழக்கமாக்கி கொண்டுள்ளார்கள் இன்னும் சிலர் கருத்து ரீதியாக எதிர் கொள்ளும் போது சரமரியாக திட்டித்தீர்க்கின்றனர்.
ஒருவரையொருவர் தேவையில்லாமல் திட்டி தீர்ப்பதும் தேவையில்லாமல் பிறரை திட்டி வம்புக்கு இழுப்பதும் சர்வ சாதாரண நடைமுறையாகி விட்டது. இது போன்ற தீய சொற்களை நாமே விரும்ப மாட்டோம் எனும் போது நம்மைப்படைத்த எப்போதும் தூய்மையை விரும்புகின்ற இறைவன் எப்படி விரும்புவான்.
அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்)தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.