24) நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர்
24) நபிமார்கள் பிள்ளைகள் பெற்றனர்
என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர்.
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்? என்று தமது பிள்ளைகளிடம் கேட்ட போது உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள் என்றே (பிள்ளைகள்) கூறினர்.
அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும்,நல்லவராகவும் இருப்பார் என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.
உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம் எனக் கூறுவீராக!
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. நான் உன்னைக் கொல்வேன் என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். (தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார்.
அவரது மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் சிரித்தார். அவருக்கு இஸ்ஹாக் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி கூறினோம்.
என் அருமை மகனே! உனது கனவை உனது சகோதரர்களிடம் கூறாதே! அவர்கள் உனக்கு எதிராகக் கடும் சூழ்ச்சி செய்வார்கள். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரி என்று அவர் கூறினார்.
என் மக்களே! ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்! பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் உங்களை நான் காப்பாற்ற முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருக்க வேண்டும் என்றார்.
உங்கள் தந்தையிடம் சென்று எங்கள் தந்தையே! உமது மகன் திருடி விட்டான். அறிந்ததையே சாட்சி கூறுகிறோம். நாங்கள் மறைவானவற்றை அறிவோராக இல்லை என்று கூறுங்கள்!
என் மக்களே! நீங்கள் சென்று யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்றாகத் தேடுங்கள்! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள் என்றார்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன்.
நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர்.
ஸக்கரிய்யாவே! ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை (என இறைவன் கூறினான்)
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம்.
அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள் என்று பதிலளித்தார்.
நபியும் நல்லவருமான இஸ்ஹாக்கைப் பற்றி அவருக்கு நற்செய்தி கூறினோம்.
அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்! என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.