23) ஹஜ்ஜும் உம்ராவும்
ஹஜ்ஜும் உம்ராவும்
ஒரு உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களில் பரிகாரமாகும். பாவம் கலவாத ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
விளக்கம்:
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஹஜ் ஆகும். இந்தக் கடமை மக்காவிலுள்ள கஅபத்துல்லாஹ் ஆலயத்திற்குச் சென்று வர வசதி உள்ளவர்களுக்குக் கடமையாகும். ஒருவர் இந்தக் கடமையை முறைப்படி செய்வதால் அவர் சொர்க்கத்திற்குரியவராக மாறி விடும் பெரும் பாக்கியம் கிடைக்கிறது.
முகஸ்துதிக்காக, மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக இல்லாமல் படைத்தவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் இஸ்லாம் கூறிய அடிப்படையில் ஹஜ் கடமையை நிறைவேற்றினால் அவர் அன்று பிறந்த பாலகன் போல் ஆகி விடுவார் அதாவது எந்தப் பாவமும் செய்யாத குழந்தை போன்று தூய்மையான மனிதராக ஆகி விடுவார்.
இவ்வளவு பெரிய பாக்கியத்தைத் தரும் ஹஜ் எனும் கடமையை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். அத்துடன் அதைத் தூய எண்ணத்துடன் செய்யவும் முயல வேண்டும். அடுத்து, சிறிய ஹஜ் என்று சொல்லப்படும் உம்ரா எனும் வணக்கமும் நமது முந்தைய பாவங்களை இல்லாமல் ஆக்குவதற்கு உதவுகிறது. எனவே உம்ராச் செய்வதற்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.