24) மதுவின் கேடுகள்
மதுவின் கேடுகள்
மது என்றால் என்ன?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
இஸ்லாத்தின் ஆரம்பத்தில் மது
தடை செய்யப்படவில்லை
பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
போதையுடன் தொழக் கூடாது
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார்.
(போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!’ (4:43) என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
மதுவின் நன்மைகளை விட கேடுகள் அதிகம்
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
மது அருந்துவது ஷைத்தானுடைய காரியமாகும்
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
மது படிப்படியாக ஹராமாக்கப்பட்ட்டது
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம் என்று கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.)
எப்போதும் குடி போதையில் இருந்த அம்மக்களுக்கு குடிப்பது முதலில் தடுக்ப்படாகாமல் இருத்தது.
பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின
போதையாக இருக்கும் போது தொழக் கூடாது என்ற கட்டளை ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்டது. (பார்க்க – 4 : 43) தொழகையின் போது போதையாக இருக்கக் கூடாது என்றால் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஐந்து வேளைத் தொழுகையின் போதும் இவ்வாறு நிறுத்துவதால் குடிப் பழக்கம் பெருமளவு குறைந்தது.
பின்னர் குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறபிக்கப்பட்டது. (பார்க்க – 2 : 219)
அதன் பின்னர் அறவே போதை கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்பட்டது. (பார்க்க – 5 : 90,91)
மதுபான வியாபாரம் தடை செய்யப்ப பட்டடுள்ளது
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறியதாவது : மக்கா வெற்றி ஆண்டில் நபி(ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தபோது, ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்துவிட்டார்கள்’ என்று அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
(முழு மது விலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் மதுவிலக்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக் கூடும். எனவே எனவே தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று அதன் மூலம் பயனடைந்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
சிறிது காலம் கூட கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டான். எனவே தம்மிடம் மது வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டி விட்டனர்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ(ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரிடம் இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த மனிதர், “அதை விற்றுவிடச் சொன்னேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)
மதுவுடன் தொடர்புடைய அனைவரும் சமமான குற்றவாளிகள்
மதுவுடன் சம்பந்தப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்து ஒரு மனிதன் மதுவுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
மதுபானத்தை வேறு பொருளாக மாற்றுவது கூடாது
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
மதுவை மருந்தாகவும் கூட பயன்படுத்தக் கூடாது
நபி (ஸல்) அவர்களிடம் தரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள், “மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “அது மருந்தல்ல! நோய்” என்றார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹ‚ஜ்ர்(ரலி)
கலந்து ஊற வைத்து பருகக் கூடாது
ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், உலர்ந்த திராட்சைகளும், பேரீச்சம் பழங்களும் கலந்து ஊறவைக்கப் படுவதற்கும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களும், பேரீச்சச் செங்காய்களும் கலந்து ஊறவைக்கப்படுவதற்கும் தடைவிதித்தார்கள்.
தனித் தனியாக ஊற வைத்து பருகலாம்
உங்களில் பழச்சாற்றை அருந்துகின்றவர், உலர்ந்த திராட்சையைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது பேரீச்சம் பழத்தைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும். அல்லது நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காயைத் தனியாக (ஊறவைத்து) அருந்தட்டும்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நபீத் அருந்துவதற்குரிய கால அளவு
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தோல் பையில் உலர்ந்த திராட்சை ஊறவைக்கப்படும். அதை அன்றைய தினமும் மறுநாளும் அதற்கடுத்த நாளும் அவர்கள் அருந்துவார்கள். மூன்றாவது நாள் மாலையில் தாமும் அருந்துவார்கள்; (யாருக்கேனும்) அருந்தவும் கொடுப்பார்கள். பிறகு (அதில்) ஏதேனும் எஞ்சியிருந்தால் அதைக் கொட்டி விடுவார்கள்.
மது தடைசெய்யப்பட்ட மது ஊறவைக்கப்படும்
பாத்திரங்களை தடைசெய்யப்பட்டது
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுரைக்காய் குடுவை, மண் சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் மற்றும் பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும்,பழுக்காத பச்சை நிறமுள்ள பேரீச்சம் பழங்களை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங்காய்களுடன் ஒன்றாகச் சேர்த்து ஊறவைக்க வேண்டாம் என்றும் தடை செய்தார்கள்.
பாத்திரங்களுக்கான தடை நீக்கப்பட்டது.
ஆனால் போதையூட்டும் அனைத்தும் ஹராம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தோல் பாத்திரம் தவிர வேறெதிலும் பானங்களை ஊற்றிவைக்க வேண்டாமென உங்களுக்கு நான் தடைவிதித்திருந்தேன். இனி, எல்லாப் பாத்திரங்களிலும் (ஊற்றி வைத்து) அருந்திக் கொள்ளுங்கள். போதை தரக்கூடியதை அருந்தாதீர்கள்.
அறிவிப்பவர் ; புரைதா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்.) பாத்திரங்கள் -அல்லது பாத்திரம்- எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை; எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே,) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர் ; புரைதா (ரலி)
எதிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் போதை ஏற்படுத்தினால்
அது ஹராம் ஆகும்
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு “அல்மிஸ்ர்” என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து “பித்உ” எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப்படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று (பொது விதி) கூறினார்கள்.
மது அருந்தும் போது இறைநம்பிக்கை இல்லை
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. (திருடன்) திருடும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. (மது அருந்துபவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோருதல் பின்னர்தான் ஏற்படுகிறது.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
மது அருந்தினால் நாற்பது நாட்களின்
தொழுகை ஏற்கப்படாது
என் சமுதாயத்தில் மது அருந்தும் ஒருவனின் நாற்பது நாட்களின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : நஸாயீ, அஹ்மத்
மது அருந்துபவனின் மறுமை நிலை
ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள ‘ஜைஷான்’ எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒரு வகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக்கூடியதா?’’ என்று கேட்டார்கள். அவர் “ஆம்’’ என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) ‘தீனத்துல் கபாலை’ நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்’’ என்று கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! ‘தீனத்துல் கபால்’ என்பது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்’’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
இவ்வுலகில் மது அருந்தினால்
மறுமையில் மது கிடையாது
4076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
மது அருந்தியவனுக்கு மார்க்கத்தின் தண்டனை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
(குறிப்பு – குற்றங்களுக்குரிய தண்டனைகள் இஸ்லாமிய அரசால் நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும். தனிமனிதர்களுக்கு தண்டனைகளை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது.)
நுஐமான் என்பவர் மது குடித்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரைக் கைகளாலும் பேரித்த மர மட்டையாலும், செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பது பின் அல்ஹாரிஸ் (ரலி)