23) பட்டம், பதவியைத் துறந்தவர்கள்
23) பட்டம், பதவியைத் துறந்தவர்கள்.
12.8.1920 அன்று காங்கிரஸ் தலைவர்கள் முஹம்மதலி, ஷவ்கத் அலி, காந்தி ஆகியோர் கலந்து கொண்ட பிரம்மாண்ட பொதுக் கூட்டம் திருவல்லிக்கேனி கடற் கரையில் நடைபெற்றது. மறுநாள் 13-8-1920 அன்று திருவல்லிக்கேனி ஜும்ஆ மசூதியில் பெரும் திரளாக கூடியிருந்த முஸ்லிம்கள் மத்தியில் காந்தி உரை நிகழ்த்தினார்.
பட்டம் உள்ளவர்கள் பட்டத்தைக் கைவிட வேண்டும்; கௌரவ மாஜிஸ்திரேட்டுகள் தமது பதவி யிலிருந்து விலக வேண்டும்; வழக்கறிஞர்கள் தம் தொழிலை நிறுத்தி விட வேண்டும்; பள்ளிப் பிள்ளைகள் அரசின் படிப்பை உதறித் தள்ள வேண்டும்; தலைவர்கள் மோட்டார் வாகனங்களை ஒதுக்கி விட வேண்டும்.
கதர் ஆடை அணிந்து வெறுங்காலுடன் நடந்து வர வேண்டும். இவற்றையெல்லாம் செய்யாமல் அரசு அலுவலர்களும் சிப்பாய்களும் நம் பின்னால் அணிவகுப்பதையோ உழவர்கள் வரிகொடா இயக்கத்தில் பங்கெடுப்பதையோ கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. எனவே பட்டம் பதவிகளைத் துறந்து வெளியேறுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மறு நாள் 14.8.1920 ஆம் தேதியன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கிலாபத் இயக்க மாநாடு. ஆம்பூர் வந்த தலைவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. முதல் நாள் காந்தி, திருவல்லிக்கேணி மசூதியில் இட்ட கட்டளையை, மறுநாளே முடித்து விட்டு காத்திருந்தார்கள் முஸ்லிம்கள்.
ஆம்பூர் நகரில் கௌரவ மாஜிஸ் திரேட்டுகளாக பணியாற்றி வந்த ஹயாத் பாஷா சாஹிப், மாலிக் அப்துர் ரஹ்மான் சாஹிப், முஹம்மது காசிம் சாஹிப், ஹெச்.என்.செங்கலப்பா ஆகியோர் தமது பதவியின் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு அனுப்பி விட்டு வந்து காந்தியை வரவேற்றனர்.(இந்திய விடுதலை போரும், தமிழக முஸ்லிம்களும் – நா.முகம்மது செரீபு பக்.87)