23) உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ?
23) உலகம் படைக்கப்பட்ட நாட்கள் 06 அல்லது 07 ?
உலகம் எத்தனை நாட்களில் படைக்கப்பட்டது என்ற கேள்விக்கு 06 நாட்கள் என்று இறைவன் தனது திருமறைக் குர்ஆனில் மிகத் தெளிவாக பதில் தந்துள்ளான்.
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும்,சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.
மேலும்(அல்குர்ஆன்: 7:54, 10:3, 11:7, 57:4, 25:59, 32:04, 50:38) ➚போன்ற வசனங்களிலும் இறைவன் 06 நாட்களில் உலகம் படைக்கப் பட்டதாக குறிப்பிடுகின்றான். வானம், பூமி மற்றும் அதற்கு இடைப்பட்டவை அனைத்தையும் சேர்த்து உலகத்தை மொத்தமாக 06 நாட்களில் இறைவன் படைத்தான் என்று தனது திருமறைக் குர்ஆனில் தெளிவாக குறிப்பிடுகின்றான்.
ஆனால் உலகத்தைப் படைப்பதற்கு இறைவன் 07 நாட்களை எடுத்துக் கொண்டதாக நபியவர்கள் கூறுவதாக முஸ்லிம் என்ற ஹதீஸ் கிரந்தத்தில் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான்.
புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
மேற்கண்ட செய்தியில் இறைவன் உலகத்தைப் படைக்க ஆரம்பித்து
- சனிக்கிழமை பூமியையும்,
- ஞாயிற்றுக்கிழமை மலைகளையும்,
- திங்கட்கிழமை மரங்களையும்,
- செவ்வாய்க் கிழமை உலோகங்களையும்,
- புதன் கிழமை ஒளியையும்,
- வியாழக் கிழமை (மற்ற) உயிரினங்களையும்,
- வெள்ளிக்கிழமை ஆதம் (அலை) அவர்களையும்
படைத்ததாக நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். மேற்கண்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் செய்தி உலகத்தை இறைவன் 07 நாட்களில் படைத்ததாகத் தெரிவிக்கின்றது. ஆனால் வல்லமையும், மகத்துவமும் மிக்க இறைவன் உலகத்தை ஆறு நாட்களில் படைத்ததாக திருக்குர்ஆனின் பல வசனங்கள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன.
குர்ஆன் 06 நாட்களில் உலகம் படைக்கப்பட்டதாகக் கூறும் போது, 07 நாட்களில் உலகத்தை இறைவன் படைத்தான் என்று நபியவர்கள் நிச்சயமாகக் கூற மாட்டார்கள். இறைவனின் வார்த்தைகளுக்கு மாற்றமாக நபியவர்கள் பேச மாட்டார்கள். அப்படியானால் முஸ்லிமில் இடம் பெறும் இந்தச் செய்தியின் நிலை என்னவென்ற கேள்வியெழும்.
இறைவனின் முதன்மை வஹியாக இருக்கின்ற திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பேசவும் மாட்டார்கள், ஒரு வஹிக்கு மாற்றமாக இன்னொரு வஹியை முரண்படும் விதத்தில் இறைவன் இறக்கவும் மாட்டான் என்ற அடிப்படையில் இமாம் முஸ்லிம் அவர்கள் குறித்த செய்தியை தனது நூலில் பதிவு செய்திருந்தாலும், அந்தச் செய்தி நபியவர்கள் சொன்னதல்ல, நபியவர்களில் பெயரால் யாரோ இட்டுக்கட்டியுள்ளார்கள் என்ற முடிவுக்கே நாம் வர வேண்டியுள்ளது.
ஷைகுல் இஸ்லாம் என்று போற்றப்பட்ட இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இந்தச் செய்தி குறித்து தெரிவிக்கும் போது நாம் இதில் என்ன நிலையிலிருக்கின்றோமோ, அதே நிலையில் தான் இமாமவர்களும் இருக்கின்றார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கூறினார்கள்: கண்ணியமும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான்.
புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களைப் பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசிப் படைப்பாக ஆதமைப் படைத்தான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
சனிக்கிழமை படைப்பதைத் துவங்கி வெள்ளிக்கிழமை முடித்திருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.
நூல் : மஜ்மூஉ ஃபதாவா இப்னி தைமியா பாகம் : 4 பக்கம் : 34
உலகம் ஆறு நாட்களில் படைக்கப்பட்டதாக இறைவன் குர்ஆனில் குறிப்பிடும் போது குறித்த செய்தி 07 நாட்களில் உலகத்தை இறைவன் படைத்ததாகக் குறிப்பிடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை குறிப்பிடும் இமாமவர்கள் இது தவிர இந்த செய்தியில் அறிவிப்பாளர் ரீதியாகவும் குறை காண்கின்றார்கள்.
விமர்சனங்களும் விளக்கங்களும்
விமர்சனம் :
உலகத்தை இறைவன் 07 நாட்களில் படைத்ததாக குர்ஆனுக்கு மாற்றமாக இடம் பெற்றுள்ள முஸ்லிமின் செய்தி தொடர்பில் அது குர்ஆனுக்கு முரண்படவில்லை என்று வாதிடும் எதிர்த்தரப்பு அறிஞர்கள் இப்படியானதொரு வாதத்தை முன்வைக்கின்றார்கள்.
மேற்கண்ட செய்தியில் இறைவன் சனிக்கிழமையில் உலகத்தை படைக்க ஆரம்பித்து, வெள்ளிக்கிழமையில் முடித்தான் என்று வந்துள்ளது. இது குர்ஆனுக்கு மாற்றமானதல்ல, காரணம் மேலுள்ள செய்தியில் இறைவன் ஒவ்வொன்றையும் படைத்ததைப் பற்றி நபியவர்கள் கூறும் போது “ஹலக” படைத்தான் என்ற வார்த்தையைக் குறிப்பிடுகின்றார்கள்.
இதே நேரம் வியாழக்கிழமை இறைவன் செய்த காரியத்தைப் பற்றி நபியவர்கள் கூறும் போது பூமியிலே உயிரினங்களை “பரவச் செய்தான்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
“ஹலக” என்பது படைத்தான் என்று பொருள்படும் ஒரு சொல், இதே நேரம் பரவச் செய்தல் என்பதற்கு அரபியில் “பஸ்ஸ” என்று சொல்வார்கள்.
உலகம் படைக்கப்பட்டது தொடர்பில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தியில் 06 நாட்களுக்கு “ஹலக” படைத்தான் என்ற வார்த்தையையும், வியாழக் கிழமை இறைவன் செய்த காரியத்திற்கு மாத்திரம் “பஸ்ஸ” பரவச் செய்தான் என்றும் குறிப்பிடுவதிலிருந்து இறைவன் 06 நாட்களில் தான் உலகத்தை படைத்தான் எ ன்பதைத் தான் நபியவர்களும் குறிப்பிடுகின்றார்கள், வியாழக்கிழமை இறைவன் உயிரினங்களை பூமியில் பரவச் செய்தான் படைக்கவில்லை. என்று வாதிக்கின்றார்கள்.
நமது விளக்கம்
இறைவன் உலகத்தைப் படைத்தமை தொடர்பில் ஒவ்வொரு நாட்களிலும் என்னவெற்றையெல்லாம் படைத்தான் என்பது தொடர்பில் 06 நாட்கள் படைத்தவற்றுக்கு “ஹலக” – படைத்தான் என்ற வார்த்தையையும், வியாழக்கிழமை இறைவன் செய்த காரியத்தைப் பற்றி குறிப்பிடும் போது பூமியில் உயிரினங்களைப் பரவச் செய்தான் “பஸ்ஸ” என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இந்த வாதத்தினால் குறித்த செய்தி நபியவர்கள் சொல்லிய ஹதீஸ் என்ற நிலையை அடைந்து விடாது. காரணம் உலகத்தை இறைவன் 06 நாட்களில் படைத்துள்ளான் என்று குர்ஆன் கூறும் கருத்துக்கு விளக்கமாக இந்தச் செய்தி வருவதாக இருந்தால் இறைவன் செய்த காரியங்கள் 06 நாட்களுடன் நிறைவு பெற்றுவிட்டதாக வந்திருக்கும் ஆனால் இதில் அவ்வாறில்லை.
மாறாக இறைவன் சனிக்கிழமை இதனைச் செய்தான், ஞாயிற்றுக்கிழமை இதனைச் செய்தான் என்று ஒவ்வொரு நாளும் இறைவன் செய்த காரியங்கள் பற்றிய பட்டியல் சொல்லப்படுகின்றது. அந்தப் பட்டியல் வரிசையில் தான் வியாழக்கிழமை பூமியில் உயிரினங்களைப் பரவச் செய்தான் என்றும் கூறப்படுகின்றது.
படைத்தல் வரிசையில் பூமி, மரம், மலைகள் போன்றவற்றையெல்லாம் குறிப்பிட்ட இறைவன் உயிரினங்களைப் படைத்ததை குறிப்பிடவில்லை. இவர்கள் சொல்லும் வாதப்படி சிந்தித்தால் இறைவன் உயிரினங்களைப் படைக்காமலேயெ பரவச் செய்தானா? என்ற சந்தேகம் எழுந்து விடுகின்றனது. இருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக இன்னொரு பிரச்சினையை உண்டாக்கும் விதமாகவே இவர்களின் இந்த அபூர்வ விளக்கம் அமைந்துள்ளது.
பரவச் செய்தான் என்ற வாதத்தை வைத்தால் படைக்காமலேயே எப்படி பரவச் செய்தான் என்ற சந்தேகம் தான் வரும்.
ஆனால் “ஹலக” என்ற வார்த்தை மூலம் ஒவ்வொரு நாளும் இறைவன் செய்த காரியம் என்று குறித்த செய்தியின் கருத்து அமைந்திருப்பதினால், வியாழக்கிழமை பூமியில் உயிரினங்களை பரவச் செய்தான் என்றால் படைத்து பரவச் செய்தான் என்று தான் அனைத்து அறிவாளிகளும் புரிந்து கொள்வார்கள்.
ஆகவே இறைவன் 06 நாட்களில் உலகத்தைப் படைத்தான் என்று தெளிவாக குர்ஆனில் குறிப்பிட்டிருக்கும் போது, 07 நாட்களில் உலகத்தை இறைவன் படைத்தான் என்ற கருத்துப்பட அமைந்திருக்கும் இந்தச் செய்தியை நபியவர்கள் நிச்சயமாக கூறியிருக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கே எந்தவொரு முஃமினும் வர முடியும்.
யாரோ ஒருவர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டிய செய்தி கவனக் குறைவால் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. என்று புரிந்து கொண்டால் சரியாகிவிடும்.
பலவீனமான செய்தி
முஸ்லிமில் இடம் பெறும் குறித்த செய்தி பலவீனமானது ஆகவே இது தொடர்பில் நாம் விவாதிப்பதில் அர்த்தமில்லை என்று சிலர் பேசியும் எழுதியும் வருகின்றார்கள்.
நமது விளக்கம்
இறைவன் ஆறு நாட்களில் உலகத்தைப் படைத்ததாக குர்ஆன் கூறும் செய்திக்கு மாற்றமாக 07 நாட்களில் உலகத்தை இறைவன் படைத்தான் என்று இடம் பெற்றிருக்கின்றது. குர்ஆனுக்கு மாற்றமாக இந்தச் செய்தி இருப்பதினால் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நாம் வாதிடும் போது, குறித்த வாதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் தப்பித்துக் கொள்வதற்காக குறித்த செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானது என்ற வாதத்தை முன்வைக்கின்றார்கள்.
பலவீனம் என்பது அறிவிப்பாளர் ரீதியாக மாத்திரம் தான் வரும் என்ற கருத்தில் இருப்பவர்கள், அறிவிப்பாளரின் பலவீனத்தைக் குறிப்பிட்டு குறித்த செய்தியைப் பலவீனம் என்று சொல்கின்றார்கள். குர்ஆனுக்கு முரணாக அமைந்து விட்டால் பலவீனம் என்பதைத் தாண்டி இட்டுக் கட்டப்பட்டது அதனை ஒருக்காலும் ஆதாரத்திற்கு எடுக்க முடியாது என்பதே நமது நிலையாகும்.
இந்த இடத்தில் முஸ்லிமில் இடம்பெறும் இந்தச் செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானதா? இல்லையா? என்பதல்ல பிரச்சினை. குர்ஆனுக்கு முரணாக இருந்தால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பதுதான் பிரச்சினையாகும்.
இந்தச் செய்தி குர்ஆனுக்கு முரணாக உள்ளதே இதனை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டால், அதற்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு அது அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானது என்று பதில் சொல்கின்றார்கள். சரி ஒரு வாதத்திற்கு இந்தச் செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானது என்று வைத்துக் கொள்வோம்.
இந்தச் செய்தியில் அறிவிப்பாளர் ரீதியாக எந்தக் குறையும் இல்லாவிட்டால் எதிர்த் தரப்பினரின் பார்வையில் இது பலமான ஆதாரப்பூர்வமான செய்தியாக மாறிவிடும். அப்படி மாறினால் 07 நாட்களில் உலகத்தை இறைவன் படைத்தான் என்று குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இந்தச் செய்தி தரும். இப்போது இவர்கள் என்ன செய்வார்கள்?
குர்ஆனுக்கு மாற்றமாக இந்தச் செய்தி இருக்கின்றது என்று மறுப்பார்களா? அல்லது முரண்பட்டாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்ற வழிதவறிய நிலைக்குச் செல்வார்களா? இந்தச் செய்திக்கு எந்த விதமான விளக்கமும் சொல்ல முடியவில்லை என்ற நிலை வந்ததினால் இதனைப் பலவீனம் என்று கூறி காலத்தை கடத்திவிட எண்ணிவிட்டார்கள்.