மனிதனுக்கேற்ற மார்க்கம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

உலகில் ஏராளமான மதங்கள் உள்ளன. இவற்றில் இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களைப் போன்று அல்லாமல் ஏராளமான தனிச்சிறப்புகளைப் பெற்று, தனித்து விளங்குகின்றது. அவ்வாறான தனிச்சிறப்புகளில் ஒரு விஷயம் குறித்து இந்தக் கட்டுரையில் அறிந்துகொள்ள இருக்கின்றோம்.

மனிதன் உலகத்தில் வாழும்போது நல்லவனாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறான். கடவுள் நம்பிக்கை உள்ளவரானாலும் நாத்திகரானாலும் இந்த உண்மையை யாரும் மறுக்க மாட்டார்கள். இறைவனை மறுக்கும் நாத்திகன், “கடவுள் எதற்கு? உலகத்தில் வாழும் போது நல்லவனாக வாழ்ந்தால் போதும்’ என்று கூறுவான்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், “நாங்கள் கடவுளை நம்புவதே நல்லவர்களாக வாழத்தான்’ என்று கூறுவார்கள். பாவங்களைச் செய்பவர்கள் கூட தாங்கள் செய்வது தவறு என்பதை உணராமல் இருப்பதில்லை. மொத்தத்தில் எல்லா மனிதனிடத்திலும் இந்த உணர்வை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.

وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ‏

فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا

உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக! அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

(அல்குர்ஆன்: 91:7,8)

وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏

(நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?

(அல்குர்ஆன்: 90:10)

நல்லவனாக வாழும் போது கிடைக்கின்ற நன்மைகளையும் தீயவனாக வாழும் அதனால் உலகில் ஏற்படுகின்ற விளைவுகளையும் கண்கூடாகப் பார்க்கின்றோம். நல்ல பாதையில் செல்பவனின் உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக உள்ளது. தீயவழியில் செல்பவனின் உடல், உள்ளம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்தும் கெட்டு உலகில் சீரழிகிறான். எனவே தான் உலகில் நல்லவனாக வாழ வேண்டும் என்ற அடிப்படையை அனைவரும் கூறுகின்றனர்.

ஆனால் இதற்கான சரியான வழியை அநேக மக்கள் அறியாமல் இருக்கின்ற காரணத்தால் இந்த ஆசை பலருக்கு நிறைவேறுவதில்லை. இஸ்லாம் மட்டுமே இதற்குச் சரியான தீர்வைக் கொடுக்கின்றது. இஸ்லாம் அல்லாத வேறு எந்த மதத்திலும் இதற்கான தீர்வைக் காண முடியாது.

எந்த நம்பிக்கை மனிதனிடத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துமோ அந்த நம்பிக்கையை உண்மையாகவும் ஆழமாகவும் ஏற்படுத்தும் வாழ்க்கை நெறிதான் இஸ்லாம்.

பொதுவாக, பெரும்பாலான மதங்கள் இறைநம்பிக்கையைப் போதிக்கின்றன. அது போல் மரணத்திற்குப் பிறகு சொர்க்கம் – நரகம் இருப்பதையும் கூறுகின்றன. இந்த இரண்டும் தான் மனிதன் சீர்பெறுவதற்கு அடிப்படையான விஷயங்கள்.

இந்த இரண்டு விஷயங்களையும் இஸ்லாம் மனித குலத்திற்கு எப்படிப் போதிக்கின்றதோ அதுபோல் வேறு எந்த மதமும் போதிக்கவில்லை.

உண்மையான இறை நம்பிக்கை

கல், மண், மரம், மனிதன் என இறைவனல்லாத இறைவனுடைய படைப்புகளைக் கடவுள் என்று நம்பி, அவற்றுக்கு மனிதனைப் போன்று பலவீனங்கள் இருப்பதாகவும் நம்பினால் அந்த நம்பிக்கை மனிதனிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

எவன் உண்மையான இறைவனோ அவனை இறைவன் என்று ஏற்க வேண்டும். அவனுக்குப் பலவீனங்கள் இல்லை என்றும், அனைத்திற்கும் அதிகாரம் படைத்தவன் என்றும் நம்ப வேண்டும்.

இறைவன் என்றால் யார்? அவன் எப்படிபட்டவன்? அவனுடைய அதிகாரங்கள் எவை? அவனுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதைச் சரியாகப் புரிந்தால் தான் அது சரியான இறைநம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையே மனிதனிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது.

இஸ்லாம் இப்படிப்பட்ட தூய இறைநம்பிக்கையை மனிதனுக்குப் போதிக்கின்றது. இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கையைப் போன்று உலகில் வேறு எந்த மதமும் கூறவில்லை. அந்த வகையில் இஸ்லாம் தனித்து நிற்கின்றது.

மனித வாழ்வின் நோக்கம்

அடுத்து, இந்த உலகத்தில் இறைவன் மனித குலத்தை எதற்காகப் படைத்தான்? மனிதன் உலகத்தில் படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? மரணத்திற்குப் பிறகு என்ன நிலை? ஆகிய கேள்விகளுக்கு சரியான பதிலை இஸ்லாம் மட்டுமே கூறுகின்றது.

மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற வழிகாட்டலை இறைவன் மனித குலத்திற்குக் கொடுத்துள்ளான். அந்த வழிகாட்டல் குர்ஆனும் நபிமொழியாகவும் உள்ளது. இவ்விரண்டையும் பேணி வாழ்வதே மனிதப் படைப்பின் நோக்கம்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
مَاۤ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ‏

ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.

(அல்குர்ஆன்: 51:56,57)

இந்த உலகத்தில் மனம்போன போக்கில் வாழாமல் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தால் மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்வில் இறைவன் சொர்க்கம் என்ற சந்தோஷமான வாழ்வைத் தருவான். இறைக் கட்டளையைப் புறக்கணித்து வாழ்ந்தால் நரகம் என்ற கஷ்டமான கடும் நோவினையுள்ள வாழ்வைத் தருவான் என்ற மறுமை நம்பிக்கையை இஸ்லாம் போதிக்கின்றது.

பல சமூக மக்கள் இறைவன் தங்களை ஏன் படைத்தான் என்பதையே புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகள் அவர்களிடத்தில் இல்லை.

இறை நம்பிக்கை, மறுமை நம்பிக்கை ஆகிய இரண்டும் தான் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் முதலில் ஆழமாகப் பதிய வேண்டிய அம்சங்கள். இதுதான் மனித சீர்திருத்தத்திற்கு அஸ்திவாரம்.

மனிதனைச் சீர்படுத்தும் மறுமை நம்பிக்கை

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத ஒருவன் நீதமாக நடக்க நினைக்கின்றான். ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் கட்டுப்படாத இவன், சில லட்சங்களுக்கு அடிபணிந்து நீதம் தவறிவிடுவான். இவனுடைய கொள்கை உறுதியின் விலை சில லட்சங்கள் தான். இன்னும் உறுதி உள்ளவனாக இருந்தால் அதற்குத் தகுந்தாற்போல் விலை கொடுத்தால் சறுகிவிடுவான்.

அல்லது அவனுடைய உயிருக்கோ அவனுடைய குடும்பத்தார்களுக்கோ பாதிப்பு என்றால் அப்போது நீதம் தவறிவிடுவான். இப்படி அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாதவர்களை இந்த உலகத்தில் எப்படியும் வழிகெடுத்து விடலாம்.

ஆனால் ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாக இஸ்லாம் கூறுவது போல் நம்பினால், எந்தப் பொருளையும் கொடுத்து அவனை விலைக்கு வாங்க முடியாது. எப்படிப்பட்ட மிரட்டலுக்கும் அவன் அடிபணிய மாட்டான்.

ஏனென்றால் இந்த உலகம் முழுவதையும் அவன் அற்பமாகக் கருதுகிறான். இந்த உலகத்திற்குப் பின் மறுமை வாழ்வு உள்ளது என்றும் அந்த மறுமை வாழ்க்கை, உலக வாழ்வை விடச் சிறந்தது என்றும் நம்புகிறான். அற்பமானதைப் பெற்று சிறந்ததை இழக்க முன்வரமாட்டான்.

சுயநலம் இல்லாமல் எந்த மனிதனும் இல்லை. மனிதன் நல்லது கெட்டதைப் பார்த்து முடிவெடுப்பவனாக இல்லை. தீயதைச் செய்தால் தனக்கு நன்மை ஏற்படும் என்றால் மனிதன் தீயதையே தேர்வு செய்கிறான். நல்லது செய்தால் தனக்கு சிரமம் வரும் என்றால் நன்மையான காரியத்தைப் புறக்கணித்து விடுகிறான். இப்படிப்பட்ட மனிதனை எப்படி திருத்துவது?

வெறுமனே இந்த நன்மையான காரியத்தைச் செய் என்று சொன்னால் அவன் செய்ய மாட்டான். இதை செய். உனக்கு அதைத் தருகிறேன் என்றால் தான் நல்ல காரியத்தைக் கூட அவன் செய்வான். அவனுக்கு தரக்கூடிய பரிசு இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் அந்தப் பரிசுக்காக இந்த உலகத்தை விட்டுப் பிரிய நேர்ந்தால் அதையும் தியாகம் செய்ய முன்வருவான். நல்லவற்றின் பக்கம் நிலைத்து நிற்பான்.

மனிதனின் இந்த சுயநலத்தை அறிந்து வைத்துள்ள இறைவன், “உலகில் நீ நல்லவனாக வாழ்ந்தால் மறுமையில் உனக்கு நல்ல வாழ்க்கை உண்டு’ என்று வாக்களிக்கின்றான். இந்த சுயநலத்தால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த சுயநலம் மனிதனை நல்லவனாக வாழ வைக்கின்றது.

எனவே தான் இஸ்லாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவதை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக வலியுறுத்துகின்றது. அல்லாஹ்வும் இதைக் குர்ஆனில் பல இடங்களில் வலியுறுத்துகின்றான்.

நடந்தேறிய உண்மை

இது வார்த்தை ஜாலமோ, வாய்ப்பேச்சு தத்துவமோ இல்லை. ஏட்டுச்சுரக்காய் கறிக்கு உதவாது என்பதுபோல் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத சித்தாந்தமில்லை.

இந்த நம்பிக்கையை ஏற்றவர்களை தலைசிறந்தவர்களாக மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கு உண்டு.

அரபு மண்ணில் இஸ்லாம் வருவதற்கு முன்னால் அரபுகள் எல்லா தீமைகளையும் செய்து வந்தனர். இணை கற்பித்தல், கொலை, கொள்ளை, விபச்சாரம், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், பெண்ணடிமைத் தனம், ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சதாவும் சண்டையிட்டுக் கொண்டிருத்தல் என எல்லா வழிகேடுகளும் அவர்களிடம் நிறைந்திருந்தது.

இஸ்லாம் கூறுகின்ற அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட பின் அவர்கள் உலகிலேயே தலைசிறந்தவர்களாகவும் மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகவும் மாறினார்கள். இஸ்லாம் அவர்களை உலகையாளும் மன்னர்களாக மாற்றியது. ஒழுக்கம், நேர்மை, நாணயம் என அனைத்து நற்பண்புகளுக்கும் உரியவர்களாக மாறினார்கள். இது மறுக்க முடியாத, வரலாற்றில் நடந்தேறிய உண்மை.

இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் தான் இப்படிப்பட்ட மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது.

இன்றைக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீள முடியாமல் அதற்கு என பிரத்தியேகமாக சிகிச்சை செய்வதைப் பார்க்கின்றோம்.

இருபத்து நான்கு மணி நேரமும் போதையிலே திளைத்திருந்த சமுதாயத்தை எந்த சிகிச்சையும் இல்லாமல் மதுவிலிருந்து முழுமையாக மீட்டெடுத்தது இஸ்லாம். குடம்குடமாக மதுவைப் பருகியவர்கள் தெருக்களில் வந்து அதைக் கொட்டினர். சரியான இறை நம்பிக்கையும் மறுமை நம்பிக்கையும் ஏற்படுத்திய விளைவு தான் இவை.

இந்த நம்பிக்கை தான் மனிதனைப் பக்குவப்படுத்துவதற்கு அடிப்படையானது. இது ஒருவருடைய உள்ளத்தில் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிகின்றதோ அந்த அளவுக்கு அவரிடத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதன் பிறகு அவருக்கு உபதேசம் செய்தால் அந்த உபதேசம் அற்புதமாக வேலை செய்யும்.

ஒவ்வொரு நாளும் பயிற்சி

இந்த அடிப்படையை மனிதன் மறந்துவிடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் அடிக்கடி இதை நினைவுகூர வைக்கின்றது.

ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழுவதை இஸ்லாம் கட்டாயக் கடமையாக்கியுள்ளது. இந்தத் தொழுகையில் அல்பாத்திஹா அத்தியாயத்தை கண்டிப்பாக ஓத வேண்டும். இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வைப் பற்றியும் மறுமை நாளைப் பற்றியும் இந்த உலகத்தில் வாழும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் நினைவூட்டப்படுகின்றது.

உறக்கத்தை விட்டுவிட்டு அதிகாலைத் தொழுகைக்கு எழுவது சாதாரண விஷயமா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் வியாபார நேரத்தில் கடையை மூடிவிட்டு ஜும்ஆ தொழுகைக்கு வர வேண்டும். இந்தப் பயிற்சிகள் எல்லாம் எதற்காக?

இறைவனுக்காகவும் மறுமைக்காகவும் எதையும் நான் தியாகம் செய்வேன். மற்ற அனைத்தையும் விட எனக்கு இறைக்கட்டளை முக்கியமானது என்ற எண்ணத்தை மனிதனிடத்தில் ஏற்படுத்தி அவனைச் சீர்திருத்துவதற்காகத் தான்.

இறை நினைவு கலந்த வாழ்வு

மேலும் நபி (ஸல்) அவர்கள் இறைவனை எல்லா தருணங்களிலும் நினைக்கும் வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள். சாப்பிடுவதற்கு முன்பு, சாப்பிட்ட பின்பு, மலம் ஜலம் கழிப்பதற்கு முன்பு, பின்பு உறங்குவதற்கு முன்பு, பின்பு இவ்வாறு மனைவியிடத்தில் இல்லறத்தில் ஈடுபடுவது உட்பட அனைத்து சூழ்நிலைகளிலும் இறை சிந்தனையை மனிதனுக்கு இஸ்லாம் ஏற்படுத்துகின்றது.

ஆன்மீகத்தை வாழ்க்கையின் ஏதாவது ஒரு ஓரத்தில் வைத்துவிடாமல் வாழ்க்கை முழுவதிலும் இறை நம்பிக்கை வியாபித்து இருக்கும் வகையில் இஸ்லாம் இறை சிந்தனையை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது. இந்த உலகத்தில் வாழ்வதே இறைவனுக்காகவும் மறுமை வாழ்வுக்காகவும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது. இப்படிப்பட்ட நம்பிக்கை தான் மனிதனைப் பக்குவப்படுத்துகிறது.

மனிதனுடைய யதார்த்த நிலையைப் பாதிக்கும் மரணம் போன்ற சம்பவங்கள் நடக்கும் போது அவனுக்குத் தேவையான பல விஷயங்களை மனிதன் மறந்துவிடுவான். எதை மறந்தாலும் அந்த நேரத்திலும் இறைவனை மறந்துவிடக்கூடாது என்ற அளவுக்கு இஸ்லாம் இறை சிந்தனையை மனிதனிடத்தில் ஏற்படுத்துகின்றது.

இதேபோன்று சந்தோஷ நிலையிலும் இறைவனை முதலில் நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் அளவுக்கு அவனிடத்தில் இறை சிந்தனையை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. இந்த நம்பிக்கை தான் மனிதனிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.

யாரிடத்தில் கோளாறு?

முஸ்லிம் அல்லாத பலர் இஸ்லாத்திற்கு வராமல் தயங்குவதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களும் நம்மைப் போன்று வட்டி, வரதட்சணை, மோசடி போன்ற காரியங்களைச் செய்கிறார்கள். எத்தனை முஸ்லிம்கள் ஐந்து வேளை சரியாகத் தொழுகிறார்கள்? முஸ்லிம்களின் செயல்பாடும் நம்முடைய செயல்பாடும் ஏறத்தாழ ஒன்றாகத் தான் உள்ளது. பிறகு ஏன் நாம் இஸ்லாத்திற்குச் செல்ல வேண்டும் என்று முஸ்லிமல்லாத மக்கள் பலர் நினைக்கின்றனர்.

முஸ்லிம் அல்லாத மக்களுக்காக நமது ஜமாஅத் நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியிலும் இது போன்ற கேள்விகள் அதிகமாக வருகின்றன.

முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் கடைப்பிடிக்காத காரணத்தால் மற்றவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லாத வகையில் வாழ்கின்றனர். முஸ்லிம் பெயர் தாங்கிகள் இவ்வாறு இருப்பதற்கு இஸ்லாத்தில் எந்தக் கோளாறும் இல்லை. இஸ்லாத்தை சரியாகக் கடைப்பிடிக்காத இவர்களிடத்தில் தான் கோளாறு உள்ளது.

ஒரு நோயாளி சரியான மருத்துவரிடம் சென்று நல்ல மருந்தை வாங்கியுள்ளான். ஆனால் அதை அவன் குடிக்கவில்லை. நோயும் குணமாகவில்லை.

வேறு ஒருவன் இந்த நோயாளியைப் பார்த்து, “இவன் மருந்து வாங்கியும் இவனுடைய நோய் குணமாகவில்லை. எனவே இந்த மருந்து சரியில்லை என்று முடிவெடுத்தால் அது தவறான முடிவு என்று கூறுவோம்.

மருந்தில் எந்தக் கோளாறும் இல்லை. அற்புதமான மருந்து என்றாலும் அதைக் குடித்தால் தானே குணம் கிடைக்கும். அதைக் குடிக்காவிட்டால் நோய் எப்படிக் குணமாகும்? இப்படிப்பட்ட மூடனைப் பார்த்தால் அவனைக் குறை சொல்லலாம். மருந்தை எப்படிக் குறை கூற முடியும்?

உண்மை முஸ்லிமாக வாழ்வோம்

முஸ்லிம் அல்லாத மக்கள் கேட்கும் இந்தக் கேள்வியை முஸ்லிம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இஸ்லாத்திற்குப் புறம்பான நம்முடைய நடவடிக்கைகளால் இஸ்லாத்திற்கே கெட்ட பெயர் ஏற்படுகின்றது. பலர் இஸ்லாத்திற்கு வராமல் இருப்பதற்கு இதுவே காரணமாகவும் இருக்கின்றது. இதற்குக் கண்டிப்பாக நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றி படித்துத் தெரிபவர்களை விட, முஸ்லிம்களைப் பார்த்து அதிலிருந்து இஸ்லாத்தை அறிபவர்கள் தான் அதிகமாக உள்ளனர். முஸ்லிம் பெயர் தாங்கிகளைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாத்திற்கு வருவதில்லை. உண்மையான முஸ்லிமைக் காண்பவர்கள் தங்களை இஸ்லாத்திற்குள் உடனே இணைத்துக் கொள்கின்றனர்.

இன்று கிறிஸ்தவர்கள் தங்களின் வழிகெட்ட கொள்கையைப் பரப்புவதற்கு மேற்கொள்ளும் முயற்சியில் நூறில் ஒரு பங்கு கூட நாம் முயற்சி செய்யவில்லை. எனினும் அல்லாஹ் தூய இஸ்லாத்தை மட்டுமே உலகில் அதிவேகமாகப் பரவும் சத்தியக் கொள்கையாக ஆக்கியுள்ளான்.

இத்துடன் நாம் உண்மை முஸ்லிமாக வாழ்ந்து காட்டினால் நாம் வாழும் இந்தியா கூட இஸ்லாமிய நாடாக மாறிவிடும். இது ஆச்சரியப்படும் விஷயமல்ல. 1400 வருட கால இடைவெளியில் இன்றைக்கு உலகில் 72 நாடுகள் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன.

நாம் அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இன்னும் பல நாடுகள் இஸ்லாத்தை தழுவும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி.

 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــًٔــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏

அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும், அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன்: 24:55)

எனவே உண்மை முஸ்லிமாக வாழ்வோம்; ஈருலகிலும் வெற்றி பெறுவோம். நாம் கேட்டதின் படி நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்தித்தவனாக இந்த உரையை முடிக்கிறேன்.