22) வியாபாரம் – 5
22) வியாபாரம் – 5
உண்டியல் மூலம் பணம் அனுப்புவது கூடுமா?
ஒருவர் வெளிநாட்டிலிருந்து நமது நாட்டிற்குப் பணம் அனுப்பினால் அந்தப் பணத்துக்கு அரசாங்கம் வரி வாங்குகிறது. இந்த வரியைச் செலுத்தாமல் இருப்பதற்காக அரசுக்குத் தெரியாத வகையில் மறைமுகமாக பணத்தை அனுப்புவதற்கு உண்டியல் முறை என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு செய்வதும் இதையே தொழிலாகச் செய்வதும் மார்க்கத்தில் கூடுமா?
நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பும் வகையில் பயன்படுத்த இஸ்லாம் அனுமதிக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி அமைந்த அரசாங்கத்தில் உண்டியல் போன்ற செயல்கள் சட்ட விரோதமாகக் கருதப்படாது. உண்டியல் மூலம் ஒருவர் தனது சொந்தப் பணத்தை அனுப்பினால் அதற்காக மறுமையில் இறைவன் கேள்வி கேட்க மாட்டான். இறைவனிடம் குற்றவாளியாக ஆக மாட்டோம்.
ஆனால் நாம் வாழும் நாட்டில் அது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனால் ஏற்படும் விளைவுகளைச் சுமக்க வேண்டியது வரும். இது போன்ற தொழில்களைச் செய்யும் போது ஏதோ கொலைகாரனைப் போல் அரசாங்கம் நம்மை அடையாளப்படுத்தும். நமது கொளரவத்துக்குப் பங்கம் ஏற்படும்.
சுயமரியாதை இழந்து குற்றவாளிகள் போல் நிற்கும் நிலை ஏற்படும். மேலும் இது போன்ற தொழில் செய்பவர்களின் குடும்பத்துப் பெண்களும் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளாக்கப்படுவார்கள். சமூகத்தில் ஏதோ கேடிகளைப் போல் நம்மை ஆக்கி விடுவார்கள் என்பதைக் கவனிப்பது நல்லது.
சட்டப்படி பணம் அணுப்பாமல் உண்டியல் மூலம் அனுப்புவதற்கு அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறையும் காரணமாக உள்ளது. கொள்ளைக்காரர்களுக்கு நிகராக அநியாய வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாற்பது சதவிகிதம் அறுபது சதவிகிதம் வரி விதித்தால் எல்லோரும் அதில் இருந்து தப்பிக்கவே நினைப்பார்கள். அதுவும் பல வகையான வரிகள் விதிக்கப்படும் நாடுகளில் இந்தியா தான் முன்னனியில் உள்ளது.
நமது நாட்டில் எல்லாச் சட்டமும் மீறப்படுவதற்குக் காரணமே இது போன்ற அரசாங்கத்தின் அநியாயக் கொள்ளைதான். உண்டியல் மூலம் மக்கள் பணம் அனுப்புவதற்கும், கள்ளக் கணக்கு எழுதுவதற்கும் அரசாங்கமே முழுப் பொறுப்பு என்பதையும் மறுக்க முடியாது.
ஆன்லைன் வணிகம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத புது வகை வணிகமாக ஆன்லைன் வணிகள் அமைந்துள்ளது. எனவே இதற்கு நேரடி ஆதாரங்கள் இல்லாவிட்டாலும் இது குறித்து நாம் என்ன முடிவு எடுக்கலாம் என்பதற்கான அடிப்படைகள் இஸ்லாத்தில் தெளிவாக உள்ளன.
நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.
எந்தப் பொருளையும் அதற்கான சந்தைக்கு வருவதற்கு முன்னர் இடைமறித்து வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதை இதிலிருந்து நாம் அறியலாம்.
பொருளை உற்பத்தி செய்பவர் அப்பொருளை அதற்கான சந்தைக்கு கொண்டு வந்தால்தான் சந்தை நிலவரம் அவருக்குத் தெரியவரும். அதற்கேற்ப அவர் விலை நிர்ணயம் செய்து அதற்கேற்ற பயனை அவர் அடைய முடியும். ஆனால் சந்தைக்கு வருவதற்கு முன் இடைமறித்து உற்பத்தியாளர்களிடம் பணமுதலைகள் கொள்முதல் செய்வதால் உற்பத்தியாளருக்கு சந்தை நிலவரம் தெரியாமல் போகும். குறைந்த விலைதான் அவருக்குக் கிடைக்கும்.
அது மட்டுமின்றி உற்பத்தியாகும் பொருட்கள் சந்தைக்கு வருவதற்கு முன் கொள்முதல் செய்பவர்கள் விரும்பியவாறு அதிக இலாபம் வைத்து கொள்ளை அடிக்கும் நிலையும் ஏற்படும். இதனால் உற்பத்தி செய்தவருக்கும் நட்டம் ஏற்படுகிறது. நுகர்வோருக்கும் நட்டம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே சந்தைக்கு வருவதற்கு முன்னர் பொருட்களை இடைமறித்து வாங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
உலகின் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு அனைத்துப் பொருட்களையும் ஒருவர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளும்போதும் இதைவிட மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இந்த வகையில் ஆன்லைன் வர்த்தகம் ஒரு மோசடியாக அமைகின்றது.
மக்களுக்கு எதுவும் நேரடியாகக் கிடைக்கக் கூடாது; தன்மூலமாக மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் பதிவு செய்துகொள்கின்றனர். இதன் நோக்கம் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் தாறுமாறாகக் கொள்ளை லாபம் அடிப்பதுதான்.
ஆன்லைனில் பொருட்களை விலை பேசிவிட்டு அதைப் பதுக்கி வைக்கிறார்கள். அதற்குத் தட்டுப்பாடு வந்த உடன் அதற்குரிய விலையைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் தட்டுப்பாடு வந்த உடன் விலையை அதிகப்படுத்தி விற்கிறார்கள். இதுவே விலைவாசி உயர்வதற்கு காரணமாக இருக்கிறது. உள்ளூர்வாசி வெளியூர்வாசிக்கு விற்கக்கூடாது என்கிற ஹதீஸின் அடிப்படையில் இந்த வகையான வியாபாரம் தடை செய்யப்பட்டதாக அமைகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் ஓர் உணவுப் பொருளை வாங்கினால், அது அவரது கைக்கு (முழுமையாக) வந்து சேராதவரை அதை அவர் விற்கக்கூடாது!
எந்தப் பொருளை ஒருவர் விற்பதாக இருந்தாலும் அதைத் தன் பொறுப்பில் அவர் கையகப்படுத்த வேண்டும். அதன் பின்னரே விற்க வேண்டும். ஆனால் ஆன்லைன் மூலம் ஒரு டன் தங்கத்துக்கு பணம் செலுத்தி ஒருவர் பதிவு செய்து கொள்கிறார். அதை அவர் தன் வசப்படுத்துவதில்லை. தனது பொறுப்பில் எடுத்துக் கொள்வதில்லை. மாறாக பெயரை மட்டும் பதிவு செய்து கொள்கிறார். யாரிடமிருந்து பொருளை வாங்குவதாக பதிவு செய்தாரோ அவரது பொறுப்பில்தான் அந்தத் தங்கம் இருக்கும்.
இதைத்தான் மேற்கண்ட ஹதீஸ் தடுக்கின்றது.
வியாபாரத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பிழைக்க வேண்டும். அதிகமான மக்கள் வியாபாரிகளாக இருக்கும்போதுதான் இஷ்டத்துக்கு விலை நிர்ணயம் செய்வது தடுக்கப்படும். ஒவ்வொரு வியாபாரியும் தன் பொறுப்பில் பொருளைக் கையகப்படுத்த வேண்டும் எனும்போது ஒரு அளவுக்கு மேல் இது சாத்தியப்படாது. அனைத்தையும் ஒரு சிலர் கையகப்படுத்த முடியாது. இதனால் ஏராளமான வியாபாரிகள் களத்தில் இருப்பார்கள்.
ஆனால் கையகப்படுத்தாமல் பதிவு செய்து கொள்ளும்போது உலகில் உள்ள அனைத்து தங்கத்தையும் அனைத்து வெள்ளியையும் ஒருவரோ அல்லது மிகச்சிலரோ பதிவு செய்து வைத்துக்கொண்டு மற்ற வியாபாரிகளுக்குக் கிடைக்காமல் செய்துவிட முடியும். இதனால் நுகர்வோருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் இஸ்லாம் இதை தடை செய்கிறது.
பங்கு வர்த்தகம்
ஷேர் மார்க்கெட் எனும் பங்குச்சந்தை உண்மையில் வியாபாரமே அல்ல. அது ஒரு சூதாட்டமும் மோசடியுமாகும். இது பற்றி நாம் விபரமாக அறிந்து கொள்ள வேண்டும்.
ஷேர் மார்க்கெட் என்பது என்ன? ஒரு குறிப்பிட்ட நிறுவனம் ஒரு கோடி ரூபாய் மூலதனத்தில் இயங்கி வருவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஒரு கோடி ரூபாயில் முப்பது லட்சம் ரூபாய் பங்குகளை அந்தக் கம்பெனி சந்தையில் விற்பனை செய்யும். மீதி எழுபது இலட்சம் ரூபாய் மதிப்புடைய பங்குகளைத் தன்வசத்தில் வைத்துக் கொள்ளும். தனது நிறுவனத்தில் பாதிக்கும் குறைவான பங்குகளை சந்தையில் விற்பதால் இது பங்குச் சந்தை எனப்படுகிறது. ஒரு பங்கு என்பது பத்து ரூபாய் என்ற அளவைத் தாண்டக் கூடாது என்பது விதி.
ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு பங்கு வாங்க நினைத்தால் பத்து ரூபாய் மதிப்பில் நூறு பங்குகளை வாங்க வேண்டும். இதை மட்டும் பார்க்கும் போது இதில் எந்தத் தவறும் இல்லாதது போல் தோன்றும். ஆனால் இதற்குள் ஏராளமான அயோக்கியத்தனங்களும் மோசடிகளும் மறைந்து கிடக்கின்றன.
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தில் முப்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பங்குகளை ஒருவர் வாங்கி அதை மற்றவரிடம் அதே விலைக்கு விற்றால் அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் முப்பது லட்சம் ருபாய்க்கு பங்குகளை வாங்கியவர் அதை அறுபது லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். அறுபது லட்சத்துக்கு வாங்கியவர் அதை ஒரு கோடிக்கு விற்கிறார்.
ஒரு கோடிக்கு வாங்கியவர் இரண்டு கோடிக்கு விற்கிறார். இப்படி பல கைகள் மாறுகின்றன. முப்பது லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பங்கு முகமதிப்பு என்றும் இப்போது இரண்டு கோடியாக உயர்ந்து விட்ட மதிப்பு சந்தை மதிப்பு என்றும் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் உண்மையான மதிப்பு ஒரு கோடி தான். அந்தக் கம்பெனியில் உள்ள இருப்புக்களை ஆய்வு செய்தால் ஒரு கோடி தான் தேறும். ஆனால் அந்தக் க
ம்பெனியின் முப்பது சதவிகித பங்குகள் மட்டுமே சந்தை மதிப்பில் இரண்டு கோடியாக ஆக்கப்பட்டுள்ளது. உண்மையில் முப்பது லட்சம் ரூபாய்தான் அந்தக் கம்பெனியில் நமக்கு உள்ளது. அந்தக் கம்பெனி லாபம் தரும் போது முகமதிப்புக்குத் தான் அதாவது முப்பது லட்சம் ரூபாய்க்குத்தான் லாபம் தருவார்கள். இரண்டு கோடிக்கு லாபம் தரமாட்டார்கள். முப்பது லட்சம் ரூபாய்தான் அதன் மதிப்பாக இருக்கும் போது பொய்யான மாயையை ஏற்படுத்தி இரண்டு கோடி ரூபாய்க்கு விற்பதற்கு நிகரான மோசடி வேறு ஒன்றும் இருக்க முடியாது.
பங்குகளின் மதிப்பை ஏற்றிவிடுவதற்காக பல மோசடிகள் செய்யப்படும். அதாவது முப்பது லட்சம் ரூபாய்க்கு பங்குகளை வெளியிட்ட அந்த நிறுவனம் இதற்கென உள்ள புரோக்கர்கள் மூலம் இந்த நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் நூறு மடங்கு உயரப் போகிறது என்றெல்லாம் பரப்பிவிடுவார்கள். தாங்கள் விற்ற பங்குகளை பினாமிகளின் பெயரால் தாங்களே வாங்கி வைத்துக் கொண்டு தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள்.
இந்தக் கம்பெனியின் பங்குகள் உத்தரவாதமானவை. பாதுகாப்பானவை. எனவே அதை வாங்கியவர்கள் விற்க மாட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்படும். இப்போது முப்பது லட்சம் ரூபாய் பங்குகளை பத்து கோடி ரூபாய்க்கும் கிடைத்தாலும் வாங்குவதற்கு சூதாடிகள் தயாராக இருப்பார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் பினாமி பெயரில் வாங்கிய பங்குகளை மீண்டும் விற்பனை செய்து அந்தக் கம்பெனி கொள்ளை அடித்து விடும்.
அதாவது ஒரு கோடி ரூபாய் மட்டுமே மதிப்புடைய அந்தக் கம்பெனி முப்பது சதவிகித்தை மட்டும் பத்து கோடிக்கு விற்று விடும். புரிவதற்கு எளிதாக சிறிய தொகையைக் குறிப்பிடுகிறோம். ஆயிரம் கோடி முதலீடு என்றால் அதில் முப்பது சதவிகிதம் 300 கோடி தான். 300 கோடி முகமதிப்புள்ள பங்குகள் ஒரு லட்சம் கோடிக்கு விற்கப்பட்டால் இது எவ்வளவு பெரிய கொள்ளை?
நாங்கள் பத்து கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளதால் அந்த அளவுக்கு எங்களுக்கு அந்தக் கம்பெனியில் உரிமை வேண்டும் என்று கேட்டால் பிடரியைப் பிடித்து தள்ளிவிடுவார்கள். இதன் மதிப்பு முப்பது லட்சம் தான் என்பார்கள். ஏன் இப்படி பங்குகளை வாங்குகின்றனர்? மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. கம்பெனிகள் பெரிய அயோக்கியர்கள் என்றால் இவர்கள் சிறிய அயோக்கியர்கள்.
முப்பது லட்சம் பங்குகளை நாம் ஒரு கோடிக்கு வாங்கினாலும் அதை இரண்டு கோடிக்கு விற்கலாம். மதிப்பு ஏறப்போகிறது என்று பில்டப் கொடுக்கும் போது கூடுதல் விலைக்கு அடுத்தவன் தலையில் கட்டலாம் என்ற மோசடி புத்தியின் காரணமாகவே இப்படி வாங்குகிறார்கள். அந்தக் கம்பெனியில் பங்குதாரராக சேர்வதற்காக அல்ல. இது மோசடி என்பதால் இது அப்பட்டமான ஹராமாகும். யாரையும் ஏமாற்றி பொருளீட்டுவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கம்பெனியில் நாம் சேர்ந்தால் நம்முடைய பங்கு ஹலாலான தொழிலில் இடப்பட்டுள்ளதா? அல்லது ஹராமான தொழிலில் இடப்பட்டுள்ளதா? என்பது தெரியாது. ஆகுமான தொழில் என்று உறுதியாகத் தெரியாத வரை அதில் நாம் முதலீடு செய்வது கூடாது.
ஒரு வியாபாரத்தில் கூட்டுச் சேர்பவர்கள் அந்த வியாபாரத்தின் மொத்தக் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு உரிமை பெற்றவர்கள். ஆனால் பங்குகளை வாங்கி கூட்டு சேர்ந்தவர்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாது. எந்தத் தொழிலில் முதலீடு செய்யப்பட்டது? எவ்வளவு செலவானது,? எவ்வளவு இலாபம் வந்தது? என்ற எந்த விபரத்தையும் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. தானும் ஏமாந்து அடுத்தவனையும் ஏமாற்றும் இந்த மோசடியில் முஸ்லிம்கள் அறவே ஈடுபடக் கூடாது.
தரகுத் தொழில் கூடுமா?
பொதுவாக தரகு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. நமக்கு ஒரு வீடு வாடகைக்கோ விலைக்கோ தேவை என்றால் அதற்கேற்ற வீடுகள் எங்கெங்கே உள்ளன என்பதை நாம் அறிந்து வைத்திருக்க முடியாது. நாம் நமது வீட்டை அல்லது ஏதாவது சொத்தை விற்க நினைத்தால் யார் வாங்கும் எண்ணத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் அறிய முடியாது. இதற்காகவே சிலர் முயற்சித்து தகவல்களைத் திரட்டித் தருவதை தமது முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றனர். தரகர்கள் இல்லாவிட்டால் இது போன்ற பல வியாபாரங்கள் தடைபட்டு விடும்.
மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அவசியமானதாக ஆகிவிட்ட தரகுத் தொழிலை முழுமையாக ஆகும் எண்றும் சொல்ல முடியாது. முற்றிலும் கூடாது என்றும் சொல்ல முடியாது. இதில் ஹராமானதும் உண்டு. ஹலாலானதும் உண்டு. ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து அவருக்கு வேண்டிய தகவலைக் கொடுத்து அதற்காக கமிஷன் பெற்றால் அது ஹலாலான தொழிலாகும்.
ஒரு வீட்டை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். தரகரைத் தொடர்பு கொண்டு இது குறித்த தகவலும் ஒத்துழைப்பும் வேண்டும் எனக் கோருகிறீர்கள். அவர் உங்களுக்கு மட்டும் விசுவாசமாக உழைத்து உங்களுக்கு நன்மை செய்யும் வகையில் ஒத்துழைக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் உங்களுக்கு சொத்தை விற்க விரும்பும் நபரிடம் போய் அதிக விலைக்கு தலையில் கட்டி விடுகிறேன்; எனக்கு ஒரு சதவிகிதம் தரவேண்டும் என்று அங்கேயும் பேரம் பேசி உங்களிடம் வந்து குறைந்த விலையில் அமுக்கி விடுகிறேன் எனக்கு ஒரு சதவிகிதம் தர வேண்டும் எனக் கூறினால் இது வடிகட்டிய அயோக்கியத்தனமும் மோசடியுமாகும்.
இப்படி இரு தரப்புக்கும் சாதகமாக உழைப்பதாக சொல்லி ஏமாற்றாமல் ஏதாவது ஒரு தரப்புக்கு மட்டும் விசுவாசமாக நடந்தால் அதில் மோசடி ஏதும் இல்லாததால் அதற்குத் தடை போட முடியாது. ஆனால் நடைமுறையில் இரு பக்கமும் கமிஷன் வாங்கி இருவரையும் ஏமாற்றுவது தான் தற்போது தரகுத் தொழிலின் இலக்கணமாக உள்ளது. இது ஹராமாகும்.
ஒருவரிடம் நாம் கமிஷன் வாங்கும் போது அவரது பிரதிநிதி என்ற முறையில் செயல்பட வேண்டும். அவருக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் அவருக்காக உழைக்க வேண்டும். அப்படி இல்லாமல் இரு பக்கமும் நாடகம் நடத்தினால் இருவரையும் ஏமாற்றியதாக அமையும். இந்த வருவாய் ஹராமாகும்.
மேலும் தொகைக்கு ஏற்ப கமிஷன் வாங்கினால் அது வாங்குபவருக்கு நட்டத்தை ஏற்படுத்தும். அவருக்கு விசுவாசமாக நடப்பதற்குப் பதிலாக அவருக்கு நட்டத்தை ஏற்படுத்தி விட்டு அவரிடமே கமிஷன் வாங்குவதை இஸ்லாம் அனுமதிக்காது. உதாரணமாக ஒருமாத வடகையைக் கமிஷனாகத் தர வேண்டும் என்று பேரம் பேசி தரகு வேலை பார்த்தால் அதிகக் கமிஷன் கிடைப்பதற்காக அதிக வாடகைக்குப் பேசும் நிலை ஏற்படும்.
இடத்தின் உரிமையாளர் சார்பில் பேசினால் அதில் உரிமையாளருக்கு லாபம் கிடைக்கும். ஆனால் வாடகைக்கு இடம் தேடுபவர் சார்பில் பேசினால் இடம் தேடுபவருக்கு இது நட்டத்தையே ஏற்படுத்தும்.
விற்பவர் சார்பில் கமிஷன் அடிப்படையில் பேசி தரகு வேலை பார்த்து அவரிடம் மட்டும் கமிஷன் வாங்கலாம். வாங்குபவரிடம் கமிஷன் அடிப்படையில் பேசாமல் இடத்தை முடித்துத் தந்தால் இவ்வளவு ரூபாய் என்று பேசினால் அவருக்கு லாபம் தரும் வகையில் குறைத்து பேசி அவருக்கு விசுவாசமாக இருக்க முடியும்.
விலை விஷயத்திலும் வாடகை விஷயத்திலும் தலையிட்டு விலையை ஏற்றிவிடுவது தான் புரோக்கர்களின் பணியாக உள்ளது. வீடுகள் நிலங்கள் போன்றவற்றின் தாறுமாறான விலை உயர்வுக்கு புரோக்கர்கள் தான் காரணமாக உள்ளனர். விலையை ஏற்றிவிடுவதற்காக கமிஷன் வாங்குவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளது.
இடைத் தரகர் வேலை பார்க்கும் போது விலையை அல்லது வாடகையை சந்தை நிலவரத்தை விட அதிகமாகக் கூட்டுவதற்கு முயற்சி செய்தால் அது ஹராமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது தாம் வியாபாரம் செய்வதற்காக எவரும் குறுக்கிடக் கூடாது! (வாங்கும் நோக்கமின்றி) விலையை உயர்த்த வேண்டும் என்பதற்காகவே விலை கேட்காதீர்கள்! (விலையை உயர்த்துவதற்காக ஆளமர்த்தி அதிக விலை கேட்கச் செய்வதும் கூடாது!) கிராமவாசிக்காக நகரவாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!
நாங்கள் (சரக்கு கொண்டுவரும்) வணிகர்களை எதிர்கொண்டு அவர்களிடம் உணவுப் பொருட்களை வாங்குவோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கடைவீதிக்குக் கொண்டு செல்லாமல் (அதே இடத்தில்) விற்பதைத் தடை செய்தார்கள்.
விலையில் தலையிடுவதாக இருந்தால் விலையை ஏற்றிவிடாமல் ஒரு தரப்பில் மட்டும் கமிஷன் வாங்கிக் கொண்டு சந்தை விலையை ஏற்றிவிடாமல் அந்தத் தரப்புக்கு உழைக்கலாம்.
புரோக்கர் தலையிடாமல் இருவரும் பேசிக் கொள்ளுங்கள் என்று தொடர்பை மட்டும் ஏற்படுத்தி. என்ன விலைக்கு படிந்தாலும் இவ்வளவு ரூபாய் எனக்குக் கமிஷனாகத் தர வேண்டும் என்ற அடிப்படையில் பேசிக் கொண்டால் அப்போது இவரது வேலை தொடர்பு ஏற்படுத்திக் கொடுப்பது மட்டும் தான். எனவே இரு தரப்பிலும் கமிஷன் வாங்கலாம்.
இரவல் மற்றும் அமானிதப் பொருள் காணாமல் போனால்
மற்றவரிடம் நாம் இரவலாகப் பெற்ற பொருள் அல்லது மற்றவர்கள் நம்மிடம் அமானிதமாக ஒப்படைத்த பொருள் காணாமல் போய்விட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். காணாமல் போகும் பொருள்களில் இரவலுக்கும் அமானிதத்துக்கும் ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாது. இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது.
ஒருவர் தனது பொருளைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நம்பிக்கையான மனிதரிடம் கொடுத்து வைக்கிறார். இது அமானிதம் எனப்படும். அமானிதம் பெற்றவருக்கு இதில் ஆதாயம் ஏதும் இல்லை. அவர் உதவி செய்யும் நோக்கில்தான் அமானிதப் பொருளை வாங்கி வைத்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் அப்பொருள் திருடப்பட்டாலோ, தீப்பிடித்து எரிந்து போனாலோ, அல்லது காணாமல் போனாலோ அமானிதமாக வாங்கி வைத்தவர் அதற்குப் பொறுப்பாளராக மாட்டார். அவர் கூறுவது உண்மைதான் என்று ஆய்வு செய்து உண்மை எனத் தெரியவந்தால் அமானிதம் கொடுத்தவர் அதை மன்னித்து விட்டுவிட வேண்டும். நம் கைவசத்தில் அப்பொருள் இருக்கும்போது காணாமல் போனால் அதை எப்படி எடுத்துக் கொள்வோமோ அப்படியே இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இரவல் என்பது இரவல் பெற்றவருடைய தேவைக்காக மற்றவரிடம் கேட்டுப் பெறுவதாகும். அதைப் பயன்படுத்தும் அனுமதியோடு அப்பொருள் அவர் கைவசத்தில் தரப்படுவதால் அதற்கு ஏற்படும் இழப்புகளுக்கு அவர்தான் பொறுப்பாளியாவார். இரவல் பெற்ற பொருள் காணாமல் போனால் அல்லது திருட்டு போனால் அப்பொருளுக்கான நட்ட ஈடு கொடுக்கும் கடமை இரவல் வாங்கியவருக்கு உண்டு.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் இரவல் பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். இன்னொருவனின் கடனுக்குப் பொறுப்பேற்றவர் கடனாளியாவார். (அந்தக் கடனை அவரே தீர்க்க வேண்டும்) கடன்கள் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.
நூல்கள் : திர்மிதி, அபூதாவூத்
கால்நடைகளால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு
எந்த இழப்பாக இருந்தாலும் பொறுப்புகளில் யார் தவறு செய்துள்ளார்கள் என்ற அடிப்படையில்தான் இழப்பீட்டுக்கு பொறுப்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும்.
பர்ரா இப்னு ஆஸிப் அவர்களின் ஓட்டகம் ஒருவருடைய தோட்டத்தில் நுழைந்து அதை நாசப்படுத்தியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொருளுக்குரியவர்கள் பகலில் அதைப் பாதுகாக்க வேண்டுமென்றும், கால்நடைக்குரியவர்கள் இரவில் கால்நடைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்கள்.
பகல் நேரத்தில் கால்நடைகளால் சேதம் ஏற்படாமலிருக்கும் வகையில் தோட்டத்தின் சொந்தக்காரர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். பகலில் கால்நடைகள் மற்றவர்களின் பயிர்களைச் சேதப்படுத்தினால் கால்நடைகளின் உரிமையாளர்கள் எந்த நட்டஈடும் கொடுக்கத் தேவை இல்லை. ஏனெனில் தோட்டத்தின் உரிமையாளர் பகலில் தனது தோட்டத்தைப் பாதுகாக்கும் கடமையில் தவறியுள்ளார்.
இரவில் தோட்டங்களை அதன் உரிமையாளர்கள் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அவற்றைக் கட்டிப்போட்டு மற்றவர்களின் தோட்டங்களில் மேயாமல் தடுக்கும் கடமை உண்டு. எனவே இரவில் கால்நடைகள் பயிர்களைச் சேதப்படுத்தினால் கால்நடைகளின் உரிமையாளர்கள் அதற்கான இழப்பீட்டை தோட்டத்தின் உரிமையாளருக்கு அளிக்க வேண்டும்.
சிகிச்சையின்போது ஏற்படும் பாதிப்புகளுக்கு இழப்பீடு
மருத்துவ சிகிச்சையின்போது உயிரிழப்புகள் ஏற்படுவதுண்டு. அல்லது உறுப்புகள் ஊனமாவதுண்டு. இதற்காக மருத்துவரைப் பொறுப்பாளியாக்கி இழப்பீடு பெற முடியுமா என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.
4830 – أخبرني عمرو بن عثمان ومحمد بن مصفي قالا حدثنا الوليد عن بن جريج عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه و سلم : من تطبب ولم يعلم منه طب قبل ذلك فهو ضامن
யார் மருத்துவம் தெரியாமல் மருத்துவம் பார்க்கிறாரோ அதற்கு அவர்தான் பொறுப்பு என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
நூல்கள் : நஸாயி, இப்னுமாஜா
மருத்துவம் செய்பவர் எந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கிறாரோ அந்த நோய்க்கான சிகிச்சையைச் சரியாக அறிந்தவராக இருந்து சிகிச்சையின்போது ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அவர் அதற்கு பொறுப்பாளியாக மாட்டார். அவர் எந்த இழப்பீடும் அளிக்கத் தேவையில்லை. ஆனால் மருத்துவம் தெரியாமல் ஒருவர் சிகிச்சை செய்து அதனால் நோயாளியின் உயிருக்கோ, உறுப்புக்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவம் அறியாமல் சிகிச்சை செய்த மருத்துவர் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்.
மருத்துவத்தை அறிந்தவர் என்பதன் பொருள் அவர் மருத்துவ பட்டம் படித்திருக்க வேண்டும் என்பதல்ல. அவர் செய்யும் சிகிச்சை சரியானதாக இருக்க வேண்டும் என்பதுதான்.
நன்கு படித்த மருத்துவர் கையில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்குப் பதிலாக காலில் அறுவை சிகிச்சை செய்தால், அல்லது வலது கண்ணுக்குப் பதிலாக இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்தால் அவரது பட்டம் அவரைக் காப்பாற்றாது. ஒரு நோய்க்கு என்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறியாமல் தேவை இல்லாத ஒரு அறுவை சிகிச்சை செய்கிறார்.
அதனால் நோயாளிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய்க்கு இது தேவையற்றது சம்மந்தமற்றது என்று கண்டுபிடிக்கப்பட்டால் அப்போதும் அவர் இழப்பீடு வழங்க வேண்டும். நோய்க்குள் சம்மந்தமில்லாத மருந்துகளை அவர் எழுதிக் கொடுத்து அதனால் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு மருத்துவர் தான் பொறுப்பாளியாவார்.